Tuesday, March 12, 2013

Chapter 7 - Jnaana Vijjnaana Yoga [21-30]

21.
யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஸ்ரத்தயார்சிதுமிச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம் யஹம்
எந்த வடிவிலேனும், சிரத்தையுடன் வணங்க எந்த ஒரு பக்தனும் விரும்பினால், நான் அந்த சிரத்தையை தளர்வில்லாததாகவும்,
உறுதியாகவும் ஆக்கும் வடிவை எடுப்பேன்.

22.
ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ் தஸ்யாராத நமீஹதே
லபதே ச தத: காமாந் மயைவ விஹிதாந் ஹிதாந்
அந்த பக்தியுடன், அவன் அந்த வடிவை வணங்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் இருந்து அவன் விரும்பியதை அடைகிறான். என்றாலும் அதை அமைத்துக் கொடுப்பது நானே.

23.
அந்தவத்து ப(फ )லம் தேஷாம் தத்பவத் யல்ப மேதஸாம்
தேவாந் தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி
சிற்றறிவு கொண்ட மக்கள் பெறும் பலன் ஒரு அளவிற்குட்பட்டது. கடவுளை வணங்குபவர்கள் அவர்களை அடைகிறார்கள். ஆனால் என் பக்தர்கள் என்னை அடைகிறார்கள்.

24.
அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:
பரம் பாவமஜாநந்தோ மம ஆவ்யயம் அனுத்தமம்
அறிவற்றவர்கள் அரூபம் ஆன என்னை ஒரு வடிவுக்குள் உள்ள ஒருவனாக எண்ணுகிறார்கள். என் உயர்ந்த, அழிவற்ற உத்தம நிலையை அவர்கள் அறிவதில்லை.

25.
நாஹம் பிரகாச ஸர்வஸ்ய யோகமாயா ஸமாவ்ருத:
மூடோயம் நாபிஜாநாதி லோகோ மாம் அஜம் அவ்யயம்
அவர்களை யோக மாயை சூழப் பட்டுள்ளதால், நான் என் உண்மை வடிவில் அவர்களுக்குத் தெரிவதில்லை. மாயையில் மூழ்கிய இந்த உலகிற்கு, பிறப்பற்ற, அழிவற்ற என்னைத் தெரிவதில்லை.

26.
வேதாஹம் ஸமதீதாநி வர்த்தமாநாநி சார்ஜூந
பவிஷ்யாணி  ச பூதாநி மாம் து வேதந கச்சந
அர்ஜுனா! கடந்த கால, நிகழ் கால மற்றும்  வருங்காலத்திய எல்லா உயிர்களையும் நான் அறிவேன், ஆனால் என்னை யாரும் அறிந்தவர் இல்லை.

27.
இச்சாத் வேஷ ஸமுத்தேந த்வ்ந்த்வ மோஹேந பாரத
ஸர்வ பூதாநி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரந்தப
அர்ஜுனா! பகைவனை அழிப்பவனே! ஜோடியான ஆசை மற்றும் வெறுப்பின் காரணமாக எழும் மயக்கத்தினால், எல்லா உயிர்களும் பிறப்பிலேயே மாயையினால் கட்டுண்டு உள்ளன.

28.
யேஷாம்  த்வந்தகதம் பாபம் ஜநாநாம் புண்ய கர்மணாம்
தே த்வந்த்வ மோஹ நிர்முக்தா பஜந்தே மாம் த்ருடவ்ரதா:
ஆனால் எந்த மனிதர்கள் தங்களின் புண்ணிய செயல்களால், தங்களின் பாவங்களைத் தொலைத்துள்ளனரோ, எவர்கள் இந்த ஜோடியான மாயையில் இருந்து விடுபட்டுள்ளனரோ, அவர்கள் திட உறுதியோடு என்னை வணங்குகிறார்கள்.

29.
ஜரா மரண மோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே
தே ப்ரஹ்ம தத்விது:க்ருத்ஸ்நம் அத்யாத்மம் கர்ம சாகிலம்
முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றில் இருந்து விடுபட எண்ணுபவர்கள், என்னைச் சரணாகதி அடைவதன் மூலம், பிரம்மத்தை முழுவதும் அறிந்து, அதைக் குறித்த ஞானமும், செயலும் அறிவார்கள்.

30.
ஸாதி பூதாதி தைவம் மாம் ஸாதியஜ்ஞம் ச யே விது:
ப்ரயாண காலே(அ)பி ச மாம் தே விதுர் யுக்த சேதஸ:
எவர் ஒருவர் தனது  இறுதிக் காலத்திலேனும், உறுதியான மனதுடன் என்னை பூத ஞானம், தேவ ஞானம் மற்றும் யாக ஞானம் ஆகியவற்றோடு அறிவரோ - அவரே அறிஞர்; மரணம் அவர்களைப் பாதிப்பதில்லை.

இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே ஞான விஜ்ஞான யோகோ நாம ஸப்தமோ(அ)த்யாய: 

விசாரம்
 ஒருவன் எந்த வடிவில் இறைவனை வேண்டினாலும், அவனது குறிக்கோள் இறைவனை அடைவதே. பகவானும் தன்னைக் குறித்தே அவன் பக்தி செலுத்தியதாகக் கருதி அவன் பக்தியை ஏற்றுக்கொள்கிறார். பக்தர்களில் எத்தனையோ வகை - கஷ்டத்தில் இருப்பவர்கள், செல்வத்தை வேண்டுபவர்கள், ஞானிகள் - ஞானத்தை வேண்டுபவர்கள் என்று. இதில் பகவானின் பிரியத்திற்கு உள்ளானவர்கள் ஞானிகளே.

ஒரு பலனை எதிர்பார்த்து செய்யும்  பக்தனும் பகவானை ஒரு வடிவத்தில் சுருக்கி வேண்டுவர். அவர்கள் உண்மையான பகவானை அறிவதில்லை. பகவானின் எல்லையற்ற சக்தியை அறிவதில்லை. மாயை அவர்கள் கண்ணை மறைக்கின்றது. ஆகையால் அவர்கள் பெறும்  பலனும் ஒரு எல்லைக்குட்பட்டதாக இருக்கும்.

 ஒரு ஞானியான பக்தன், உண்மையான அன்புடன் பகவானை வேண்டுகிறான்.
அதில் ஒரு பிரதி உபகாரம் தேடுவதில்லை.  சுற்றி உள்ள எல்லாவற்றிலும் இறைவனைக் காண்கிறான். எல்லா உயிர்களும் பிறக்கையில் இந்த மாயையைக்
கொண்டுள்ளன தான்.  தங்களின் புண்ணிய கர்மாக்களினால், பாவங்களைத் தொலைத்து ஞானிகள் மாயையை ஒழிக்கிறார்கள்.அத்தகைய ஞானிகள் பகவானை சரண் அடைந்து பிரம்மத்தை அறிகிறார்கள். அவர்களுக்கு ஜன்மம், மரணம், முதுமை, விதி என்ற எந்த பயமும் இல்லை. முக்காலமும் உணர்ந்தவன் இறைவன் என்பதை உணர்ந்தவர்கள். நாமும் ஞாநியாக வேண்டியது அவசியம்.

Wednesday, September 12, 2012

Chapter 7 - Jnaana Vijjnaana Yoga [11-20]

11.
ப(फ)லம்  ப(फ)லவதாம் சாஹம் காம ராக விவர்ஜிதம்
தர்மா விருத்தோ பூதேஷு காமோ(அ)ஸ்மி பரதர்ஷப
அர்ஜுனா! பலமானவற்றில் நான் ஆசையற்ற மற்றும் பற்றற்ற பலமாக இருக்கிறேன். எல்லா உயிர்களிலும் நான் தர்மத்திற்கு எதிரியாக இல்லாத ஆசையாக இருக்கிறேன்.

12.
யே சைவ ஸாத்த்விகா பாவா ராஜ ஸாஸ்தாம் அஸாச்ச யே 
மத்த ஏவேதி தாந்வித்தி ந த்வஹம் தேஷு தே  மயி
எவையெல்லாம் (பொருளோ/உயிரோ) சத்வ/ரஜஸ்/தமோ குணத்தோடு  உள்ளனவோ - அவை எல்லாமே என்னுள் இருந்து தொடங்கியவையே. அவை என்னுள் உள்ளன ஆனால் நான் அவற்றில் இல்லை.

13.
த்ரிபிர் குண மயைர் பாவைர்  ஏபி: ஸர்வமிதம் ஜகத்
மோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய: பரமவ்யயம்
இயற்கையின் மூன்று குணங்கள் ஆகிய இவற்றால் மயங்கிய எல்லாமே, இந்த உலகம் முழுதுமே நான் இவற்றில் இருந்து தனித்து, அழிவற்று இருப்பவன் என்பதை அறியாமல் உள்ளது.

14.
தைவீ  ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே பிரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே
இத்தகைய குணங்களால் ஆன, என்னைப் பற்றிய இந்த தெய்வீக மாயையானது கடப்பதற்கு கடினமானது. என்னைச் சரண் அடைந்தவர்கள் மட்டுமே இதைக் கடக்கிறார்கள்.

15.
ந மாம் துஷ்க்ருதிநோ மூடா: பிரபத்யந்தே நராதமா:
மாயயா பஹ்ருத ஜ்ஞாநா ஆஸுரம் பாவமாச்ரிதா:
மனிதர்களில் கீழான பாவம் செய்பவர்களும், மாயையில் உள்ளவர்களும் என்னை அடைய விரும்பாதவர். எவர் அறிவு மாயையால் அழிக்கப்பட்டுள்ளதோ, அவர் அசுர வழியை பின் பற்றுவார்.

16.
சதுர்விதா பஜந்தே மாம் ஜ நா: ஸு க்  ருதிநோ (அ)ர்ஜூந
ஆர்தோ ஜிஜ்ஞாஸுர் அர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப
அர்ஜுனா! நான்கு விதமான குணவான்கள் என்னை வணங்குவார்கள். பரதர்களின் தலைவனே! அவர்கள் - துக்கித்து இருப்பவர்கள், ஞானத்தை விழைபவர்கள், செல்வத்தை விழைபவர்கள், மற்றும் ஞானிகள் (சான்றோர்கள்).

17.
தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏக பக்திர் விசிஷ்யதே
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ(அ)த்யர்தம் அஹம் ஸ ச மம ப்ரிய:
இவர்களில், எப்பொழுதுமே பரப்ரம்மத்தைக் குறித்து உறுதியுடன், பற்றுடன் இருக்கும் சான்றோர்களே சிறந்தவர்கள். ஏனென்றால் நான் சான்றோனின் மிகுதியான அன்பிற்கு பாத்திரமானவன். அது போலவே அவனும் என் அன்பிற்குரியவன்.

18.
உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்
ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம்
இவர்கள் எல்லோருமே சிறந்தவர்கள் தான். ஆனால் நான் சான்றோனை என்னுள் ஒருவனாகவே கருதுகிறேன். ஏனென்றால் அவனே என்னை உறுதியாக மனதில் எண்ணி, என்னையே அடைய வேண்டிய ஒன்றாக மனதில் நிலை நிறுத்தி உள்ளான்.

19.
பஹூநாம் ஜந்ம நாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே
வாஸுதேவ: ஸர்வம் இதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:
பல பிறப்பிற்குப் பின், சான்றோன் எல்லாமே வசுதேவம் என்று உணர்ந்து என்னை அடைகிறான். அப்படிப்பட்ட ஒரு மகாத்மாவை காண்பது அரிது.

20.
காமைஸ் தைஸ்தைர் ஹ்ருத ஜ்ஞாநா: ப்ரபத்யந்தே(அ)ந்யதேவதா:
தம் தம் நியமம் ஆஸ்தாய ப்ரக்ருத்யா நியதா; ஸ்வயா:
எவனது அறிவு, ஏதோ ஆசையினால் குடி கொண்டுள்ளதோ - அவன் பிற தேவர்களிடம் செல்கிறான். தங்கள் இயற்கை குணங்களுக்கு ஏற்ப ஏதோ நியமங்களை கடைப்பிடிக்கிறான்.  


விசாரம்
இந்த அத்தியாயத்தின் பெயர் ஞான விஞ்ஞான யோகம். Science என்பதை விஞ்ஞானம் என்று கூறுகிறோம். ஒரு விஷயத்தை practical ஆக நிருபிக்கப்பட்டால் அதை scientifically proven என்று சொல்கிறோம். இது போல இந்த யோகம் பகவான் குறித்த ஞானம் எப்படி அவரை உணர்ந்து தெரிந்து கொள்ளும் போது விஞ்ஞானம் ஆகிறது என்பதைக் கூறுகிறது.

எப்படி உணர்ந்து தெரிந்து கொள்ளும் நிலையை அடைவது? பார்க்கும் எல்லாவற்றிலும் ஈஸ்வர ரூபமாகப் பார்க்கும் போது இந்த உணர்வு கிடைக்கும். இந்த உலகில் இருக்கும் எல்லாமே பகவானால் உண்டாக்கப்பட்டவை, அவையே பகவானும் ஆகும். ஒரு பூமாலையில் எப்படி பல்வேறு புஷ்பங்கள் தொடுக்கப்பட்டுள்ளதோ, அதே மாதிரி எல்லா பொருட்களுமே ஈஸ்வரனோடு சம்பந்தப்பட்டவையே, அவனால் உருவாக்கப்பட்டவையே. வெளியில் தெரியும், தெரியாத பொருட்கள் எல்லாமே அவன் ரூபம் தான். அவனே அதன் சாரம். ஆனால் இதை உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு இயற்கையின் மூன்று குணங்களான - சத்வம், தமஸ் மற்றும் ரஜோ குணங்கள் மாயையாக இருந்து நம் கண்ணை மறைக்கின்றது. நம்மை ஈஸ்வரனை மறக்கச் செய்கிறது. இந்த மாயையை
எப்படி விலக்க முடியும் என்றால் அதற்கும் ஈஸ்வர கடாக்ஷம் வேண்டும்.

இறைவனை வேண்டுபவர்களை பொதுவாக 4 வகை கொண்டு பிரிக்கலாம் - ரொம்ப கஷ்டத்தில் இருப்பவர்கள், பொருட் செல்வம் வேண்டுபவர்கள், ஞானம் வேண்டுபவர்கள், மற்றும் ஞானிகள். முதலாவது பிரிவில் - கஷ்டத்தில் இருப்பவர்கள் ஏதோ உடல் உபாதையினால் வேண்டுபவர்கள் என்று கொள்ளலாம். இரண்டாவது பிரிவில் - வறுமையினாலோ, இல்லை இருக்கும் செல்வத்தில் திருப்தி இல்லாததாலோ வேண்டுபவர்களாக கொள்ளலாம். பெரும்பான்மையான பக்தர்கள் இந்த இரண்டு பிரிவில் வருபவர்கள் தான். ஞானம் வேண்டுபவர்கள் இறை ஞானம் அடைய முயற்சி செய்பவர்கள். அந்த நிலை அடைவது என்பதே தெய்வ சங்கல்பம் இருந்தால் தான் முடியும். லௌகீக வாழ்க்கைக்கு வேண்டிய ஞானம் வேண்டுபவர்கள் கூட இரண்டாவது பிரிவில் வந்து விடுவார்கள். இதை எல்லாம் தாண்டி நான்காவது பிரிவான ஞானி என்ற நிலையை அடைய ஒருவன் அந்த பிரம்மத்தைக் குறித்த பக்தியும், ஸ்ரத்தையும் கொண்டிருக்க வேண்டும். அந்த பக்தியும், ஸ்ரத்தையும் எல்லாவற்றையும் ஈஸ்வர ரூபமாகப் பார்த்து, பகவானை உணர்ந்து தெரிந்து கொள்ளும் போது தான் வரும். பிரம்மத்தை அடைவதையே குறிக்கோளாகக் கொண்டு, அதையே நினைத்துக் கொண்டு, இப்படி பல ஜென்மங்களைக் கடந்த பின்னரே அவனால் அந்த பிரம்மத்தை அடைய முடியும். அந்த உயரிய நிலையில் தான் அவன் மகாத்மா ஆகிறான். காண்பதற்கு அரியவன் ஆகிறான்.

முதல் இரண்டு பிரிவில் இருப்பவர்கள் மாயையினால் கட்டுண்டு இருக்கிறார்கள். நாமும் அந்த மாயை என்பதை விலக்கி, குறைந்த பக்ஷம் மூன்றாம் நிலையையாவது அடைய முயற்சிப்போம்.

Thursday, March 15, 2012

Chapter 7 - Jnaana Vijjnaana Yoga [1-10]

1.
பகவான் உவாச
மய்யா ஸக்தமநா: பார்த யோகம் யுஞ்ஜந் மதாச்ரய:
அஸம்சயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ருணு  
ஸ்ரீ பகவான் சொன்னது
அர்ஜுனா! எந்த ஒரு குழப்பமும் இல்லாமல், மனதை என்னில் நிலைப் படுத்தி, யோகத்தைப் பின்பற்றி, என்னைச் சரண் அடைந்து என்னை நீ எவ்வாறு அறிந்து கொள்வது என்பதைக் கேட்பாயாக.

2.
நம் தே(அ)ஹம் ஸவிஜ்ஞாநம்  இதம் வக்ஷ்யாம்ய சேஷத:
யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூயோ(அ)ந்யஜ் ஜ்ஞாதவ்யம் அவசிஷ்யதே
நான் உனக்கு இந்த ஞானத்தையும், நேரடி அனுபவத்துடன் கலந்ததாகிய விஞ்ஞானத்தையும் உனக்கு முழுவதும் விவரிக்கின்றேன். இதைத் தெரிந்து கொண்ட பின்னர், இங்கே வேறு எதுவும் தெரிந்து கொள்வதற்கு மீதம் இல்லை.

3.
மநுஷ்யாணாம் சஹஸ்ரேஷு கச்சித் யததி ஸித்தயே
யததாம் அபி ஸித்தாநாம் கச்சிந் மாம் வேத்தி தத்தவத:
ஆயிரக்கணக்கான மனிதர்களில், ஒருவர் பூர்ணத்துவத்தை அடைய விழைகிறார். அப்படி வெற்றிகரமாக விழைபவர்களிலும், ஒருவர் மட்டுமே என்னை முழுவதுமாக அறிந்துள்ளார்.

4.
பூமிராபோ(அ)நலோ வாயு: கம் மநோ புத்திர் ஏவ ச
அஹங்கார இதீயம் மேபிந்நா பிரக்ருதிர் அஷ்டதா
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி மற்றும் அஹங்காரம் என்று எனது இயல்பு எட்டு வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளது.

5.
அபரேயம் இதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்
ஜீவபூதாம் மஹா பாஹோ யயேதம் தார்யதே ஜகத்
பலம் பொருந்திய அர்ஜுனா! இவை தாழ்ந்த பிரக்ருதி (இயற்கை). இதை எனது உயர்ந்த பிரக்ருதியில் - எது ஜீவ நாடியாக இருந்து, இந்த உலகைத் தாங்குகின்றதோ, அதில் இருந்து வேறுபட்டு இருப்பதை நீ அறிந்து கொள்வாயாக.

6.
ஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீத்ய உபதாரய
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப் ரலயஸ்ததா
இந்த இரண்டும் (உயர்ந்த மற்றும் தாழ்ந்த பிரக்ருதிகள்) எல்லா உயிர்களுக்கும் ஆதாரமானது. ஆகையால் நானே இந்த ஜகத் முழுமைக்கும் ஆதி மற்றும் அந்தம் ஆகின்றேன்.

7.
மத்த: பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்சய
மயி ஸர்வம் இதம் ப்ரோதம் ஸூத்ரே  மணிகணா இவ
அர்ஜுனா! என்னை விட உயர்ந்தது எதுவுமே இல்லை. இவை எல்லாமே, ஒரு ஆரத்தில் (மாலையில்) கட்டப்பட்டுள்ள ரத்தினங்களின் கலவையைப் போன்றது.

8.
ரஸோ(அ)ஹம் அப்ஸு கௌந்தேய பிரபாஸ்மி சசி ஸூர்யயோ:
ப்ரணவ: ஸர்வ வேதேஷு சப்த: கே பௌருஷம் ந் ருஷு
அர்ஜுனா! நான் நீரில் சுவை, சந்திரன் மற்றும் சூரியனில் நான் ஒளி, வேதங்களில் நான் பிரணவ மந்திரம், ஆகாயத்தில் நான் சப்தம், மனிதர்களில் நான் ஆண்மையாக இருக்கின்றேன்.

9.
புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச தேஜஸ்சாஸ்மி விபாவசௌ
ஜீவநம் ஸர்வ பூதேஷு தபச்சாஸ்மி  தபஸ்விஷு
நிலத்தில் நான் சுகந்த நறுமணம், அக்னியில் நான் தேஜஸ், உயிர்களில் நான் ஜீவன், தபஸ்விக்களில் நான் எளிமை.

10.
பீஜம் மாம் ஸர்வ பூதாநாம் வித்தி பார்த ஸநாதநம்
புத்திர் புத்திமதாம் அஸ்மி தேஜஸ் தேஜஸ் விநாமஹம்
அர்ஜுனா! எல்லா உயிர்களுக்கும் நானே சாஸ்வதமான ஆதார விதை, அறிவாளிகளின் அறிவு நானே, ஒளிமயமான எல்லாப் பொருட்களிலும் ஆன ஒளி நானே.

விசாரம்
ஞானம் என்பது அறிவு. அந்த அறிவை உணர்ந்து தெரிந்து கொள்ளும் போது அது விஞ்ஞானம் ஆகிறது. அக்னி சுடும் என்பது ஞானம். அப்படி சுடும் என்பதை அக்னியில் கையை வைத்து சுட்டுக் கொள்ளும் போது, அப்படி உணர்ந்து தெரிந்து கொள்ளும் போது அது விஞ்ஞானம் ஆகிறது. அதனால் தான் செயல் முறையில் நிரூபிக்கப்பட்ட எதுவுமே  விஞ்ஞானம் எனப்படுகிறது. பிரம்மத்திலும் அப்படித் தான். முதலில் பிரம்மத்தைப் பற்றிய ஞானம், பின்பு அதை உணர்ந்து தெரிந்து கொள்வது. சனாதன தர்மத்தில் உள்ள சாஸ்திரங்கள் எல்லாமே ஸ்ருதி (காதால் கேட்டு தெரிந்து கொள்வது), ஸ்ம்ருதி (உணர்ந்து தெரிந்து கொள்வது) என்று ரெண்டு வகைப்படும். இப்படி பரப்ரம்மத்தை உணர்ந்து தெரிந்து கொண்ட ஒருவனுக்கு, அதன் பின்னர் தெரிந்து கொள்வதற்கு வேறு ஒன்றுமே உலகில் இல்லை.

ஆயிரக்கணக்கான மனித ஜீவன்களில், ஒருவனுக்கே இப்படி பிரம்மத்துடன் ஐக்கியம் ஆவதற்குரிய பாக்கியம் கிட்டுகிறது. அப்படி பாக்கியம் கிட்டுபவர்களிலும், ஒருவருக்கே இந்த பிரம்மத்தை உணர்ந்து அறிந்து கொள்ளும் பெரும் பாக்கியம் கிடைக்கின்றது.

பகவான் தன்னை அனைத்திலும் ஊடுருவிய, எல்லை இல்லாத ஒரு நிலையாக தன்னை விவரிக்கின்றார். பஞ்சபூதங்கள், மனம், அறிவு, அஹங்காரம் என்ற கீழ் நிலை இயற்கை குணங்களாகவும், உலகையே தாங்கும், ஆட்டுவிக்கும், ஆதி முதல் அந்த நிலையாகிய  உயர் நிலை இயற்கை குணங்களாகவும் இருக்கின்றார்.  அவரை விட உயர்ந்தது எதுவுமே இல்லை. அவரை ஒரு ஆரமாக உருவகப்படுத்திக் கொண்டால், அந்த மாலையில் உள்ள மணிகளாக மற்ற எல்லா இருக்கின்றன. எல்லாவற்றிலும் பகவான் ஆதாரமாக இருக்கின்றார்.

இதை இப்படியும் பார்க்கலாம். பகவான் இருக்கிறார் என்ற தெளிவு இருப்பது ஞானம். அப்படி இருப்பவரை, நாம் காணும் எல்லாப் பொருட்களிலும்  மூலாதாரமாகப்  பார்க்கும் போது அந்த ஞானம் விஞ்ஞானம் ஆகிறது.

Thursday, March 8, 2012

Chapter 6 - Dhyaana Yoga [40-47]

40.
ஸ்ரீ பகவான் உவாச
பார்த நைவேஹ நாமுத்ர விநாசஸ்தஸ்ய வித்யதே
ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி
ஸ்ரீ பகவான் சொன்னது
அர்ஜுனா! இந்த உலகிலும், மறு உலகிலும் எவன் நல்லதே செய்கிறானோ - அழிவு என்பதே அவனுக்கு இல்லை, அவன் எப்பொழுதும் வருத்தப்படுவதில்லை.

41.
ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாந் உஷித்வா சாச்வதீ: ஸமா:
சுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோ(அ)பிஜாயதே
புண்ணியம் செய்தவர்களின் உலகை அடைந்து, அங்கே பல வருடங்களாக நிலைத்தது  வசிக்கும் அவன், யோகத்தில் இருந்து தவறினாலும் பவித்ரமான, செல்வம் உள்ள இல்லத்தில் மறு ஜன்மம் எடுப்பான்.

42.
அதவா யோகிநாம் ஏவ குலே பவதி தீமதாம்
ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ருசம்
அல்லது அவன் அறிவாளிகளான யோகிகளின் குடும்பத்திலும் பிறக்கலாம். உண்மையில் இது போன்ற ஒரு ஜன்மம் பெறுவது இவ்வுலகில் மிகவும் கடினம்.

43.
தத்ர புத்தி ஸம்யோகம் லபதே பௌர்வ தேஹிகம்
யததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குருநந்தந
அர்ஜுனா! அங்கே அவன் தனது முந்தய சரீரத்தில் பெற்ற ஞானத்துடன் தொடர்பு பெற்று, முன்பை விட சிறந்ததாக பூர்ணத்துவத்தை பெற முயற்சிப்பான்.

44.
பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவசோ(அ)பி ஸ:
ஜிஜ்ஞா ஸுரபி யோகஸ்ய சப்த ப்ரஹ்மாதி வர்த்ததே    
அந்த முந்தைய பயிற்சியினால், அவன் மீண்டும் ஜன்மம் பெற்றுள்ளான். அவன் வெறுமனே யோகத்தை அறிய முற்பட்டால் கூட அவன் பிரம்மம் என்ற சப்தத்தை கடந்து விடுகிறான்.

45.
பிரயத்நாத்  யதமானஸ்து யோகீ ஸ ம் சுத்த கில்பிஷ:
அநேக ஜந்ம ஸம்ஸித்தஸ் ததோ யாதி பராம் கதிம்
மிகவும் கடினமாக முயற்சி செய்யும் யோகி, பாவங்கள் அனைத்தையும் தொலைத்து, பல ஜன்மங்களில் படிப்படியாக பூர்ணத்துவத்தை அடைந்து உயர்ந்த நிலையை அடைகிறான்.

46.
தபஸ்விப்யோ(அ)திகோ யோகீ ஜ்ஞாநிப்யோ(அ)பி மதோ(அ)திக:
கர்மிப்யச்சாதிகோ யோகீ தஸ்மாத் யோகீ பவார்ஜுந:
அர்ஜுனா! யோகியானவன் தபஸ்விகளை விடவும், ஞானிகளை விடவும் உயர்ந்தவன், அவன் கர்மங்களைச் செய்யும் மனிதரை விடவும் உயர்ந்தவன். எனவே நீயும் ஒரு யோகியாக இரு.

47.
யோகிநாம் அபி ஸர்வேஷாம் மத் கதேநாந்தர் ஆத்மநா
ச்ரத்தாவாந் பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத:
அந்த யோகிகளில், எவன் ஒருவன் முழு நம்பிக்கையுடன், தன்னுடைய அந்தராத்மாவை என்னுள்ளே கலந்து, என்னை வணங்குகிறானோ, அவனே என்னால் சிறந்த பக்தனாகக் கருதப்படுகிறான்.

இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே த்யாந யோகோ நாம ஷஷ்டோ(அ)த்யாய:  

விசாரம்
சனாதன தர்மத்திற்கும், பிற தர்மத்திற்கும் உள்ள வித்யாசம், மறு பிறவி என்பதைக் குறித்தது. ஹிந்து தர்மம் முந்தைய ஜன்மத்தின் கர்ம பலனைப் பொறுத்து, மறு ஜன்மம் உண்டு என்கிறது. ஒரு சமயம் காஞ்சி பரமாச்சார்யாள் முன் ஒரு வெள்ளைக்கார பெண் வந்து மறு ஜன்மம் குறித்து விளக்குமாறு கேட்டாராம். பரமாச்சார்யாள் அவரை அருகில் உள்ள பிரசவ ஆஸ்பத்திரிகள் சென்று அன்று அங்கே பிறந்த குழந்தைகளைக் கண்டு வருமாறு அனுப்பினாராம். அப்பெண் சென்று திரும்பி அவரைக் காண வந்த சமயம், அவர் அப்பெண்ணிடம் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில பிறந்த குழந்தைகள் - ஆனால் சில குழந்தைகள் பணக்காரக் குடும்பத்திலும், சில ஏழைக் குடும்பத்திலும், சில அங்க ஹீனமாகவும் சில நன்றாகவும் எதனால் இப்படி பிறந்துள்ளன என்றாராம். அப்பெண் விடை தெரியாது இருக்கவே, ஆசார்யாள் கர்ம பலன் என்ற ஒன்றின் அர்த்தத்தை விளக்கினாராம். முந்தைய ஜன்மாவில் நாம் செய்த செயல்களில் பலனைப் பொறுத்தே இந்த ஜன்மம் அமைகிறது. முன்பு புண்ணியம் செய்தால், இந்த ஜன்மாவில் நல்ல நிலைமை கிடைக்கிறது, இல்லையேல் கஷ்டப்பட வேண்டி உள்ளது என்றாராம்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் இதையே இங்கே விளக்குகிறார். அர்ஜுனன் அவரிடம் (சென்ற வாரம் விளக்கிய) சந்தேகத்தைக் கேட்ட போது இதைக் குறிப்பிடுகிறார். பிரம்மத்தை அறிய யோகத்தைப் பின்பற்றுபவன், அந்த ஜன்மாவில் ஏதேனும் காரணத்தினால் அதை அடைய முடியாமல் போனாலும், அவன் முயற்சி வீண் ஆவதில்லை. அவன் மறு ஜன்மாவில், ஒரு உயர்ந்த குடியில் பிறக்கின்றான். அவன் சிறிது முயற்சி செய்தாலும் கூட அவன் பிரம்மத்தை அடையும் முயற்சியில் வெற்றி பெற்று விடுகிறான். இப்படிப்பட்ட யோகி யானவன் சிறந்த முனிவர்களை விடவும், ஞானியை விடவும், கர்ம யோகத்தைச் செய்பவர்களை விடவும் சிறந்த யோகியாகி விடுகிறான். அர்ஜுனனை இப்படிப்பட்ட யோகியாக வேண்டும் என பகவான் விரும்புகிறார்.
இப்படிப்பட்ட யோகியானவன், பகவான் மீது பரிபூரண நம்பிக்கை கொண்டு, தன்னை அவருள்ளே கலக்கும் போது, அந்த பகவானே விரும்பும் சிறந்த பக்தன் ஆகிறான். அத்வைத தத்துவமும் இது தானே.

எனவே இந்த ஜன்மாவில் வெற்றி பெறுவோமோ, மாட்டோமோ - அதைப் பற்றிக் கவலைப் படாமல் நேர்மையான வழியில் நடந்து, பாவ காரியங்களைச் செய்யாமல் இருப்போம். இந்த ஜன்மாவில் இல்லாவிட்டாலும், பிந்தைய ஜன்மாவிலாவது நம் முயற்சி வெற்றி பெறலாம். தவறு செய்தால் நமக்கு பின்னால் தண்டனை கிடைக்கும் என்ற பயம், நம்மை தவறு செய்ய விடாமல் தடுக்கும்.

Tuesday, February 28, 2012

Chapter 6 - Dhyaana Yoga [30-39]

30.
யோ மாம் பச்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பச்யதி
தஸ்யாஹம் ந பிரணச்யாமி ஸ ச மே ந ப்ரணச்யதி
எவன் ஒருவன் என்னை எங்கும் காண்கிறானோ, என்னுள் அனைத்தையும் காண்கிறானோ, அவன் என்னை விட்டுப் பிரிவதில்லை, நானும் அவனை விட்டுப் பிரிந்து இருப்பதில்லை.

31.
ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வம் ஆஸ்தித:
ஸர்வதா வர்தமாநோ(அ)பி ஸ யோகீ மயி வர்த்ததே
எவன் ஒருவன் எல்லா உயிர்களிலும் உறையும் என்னை வணங்கி, இந்த ஐக்யத்தில் நிலை கொண்டு, இருக்கிறானோ - அந்த யோகி அவன் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை கொண்டிருந்தாலும், அவன் என்னுள் உறைகின்றான்.

32.
ஆத்மௌ பம்யேந ஸர்வத்ர ஸமம் பச்யதி யோ(அ)ர்ஜூந
ஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத:
அர்ஜுனா! எவன் ஒருவன் ஆத்மாவின் தன்மையினால், சுகத்திலும், துக்கத்திலும் எதுவாக இருந்தாலும், எங்குமே சம நிலையைக் காண்பானோ, அவனே உயர்ந்த யோகி எனக் கருதப் படுகிறான்.

33.
அர்ஜுந உவாச:
யோ(அ)யம் யோகஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மதுஸுதந
ஏதஸ்யாஹம் ந பச்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதம் ஸ்திராம்
அர்ஜுனன் சொன்னது:
கிருஷ்ணா! உன்னால் கற்றுக் கொடுக்கப் பட்ட இந்த சமப் பார்வை கொண்டு நோக்கும் யோகத்தை, மன சஞ்சலத்தினால்  என்னால் அதை ஸ்திரமாக தொடர முடிவதில்லை.

34.
சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோர் இவ ஸுதுஷ்கரம்
கிருஷ்ணா! இந்த மனமானது மிகவும் சஞ்சலத்தோடு, அலை பாய்ந்து,  உறுதியாக, கட்டுப்படாமல் உள்ளது. காற்றைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கஷ்டமோ, அது போலவே அதைக் கட்டுப்படுத்துவதையும் நான் கஷ்டமாகக் கருதுகிறேன்.

35.
ஸ்ரீ பகவான் உவாச:
அஸம்சயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே
ஸ்ரீ பகவான் சொன்னது:
பலம் பொருந்திய அர்ஜுனா! சந்தேகம் இல்லாமல் மனம் கட்டுப்படுத்துவதற்கு கடினமாகவும், அமைதி இல்லாமலும் தான் இருக்கும். ஆனால் முயற்சியின் மூலமாகவும், வைராக்கியத்தின் மூலமாகவும் இதைக் கட்டுப்படுத்தலாம்.

36.
அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி:
வச்யாத்மநா து யததா சக்யோ(அ)வாப்தும் உபாயத:
தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனுக்கு, இந்த யோகம் அடைவதற்கு கடினம் என நான் எண்ணுகிறேன். ஆனால் தன்னைக் கட்டுப்படுத்தியவனுக்கு, அப்படி முயற்சி செய்பவனுக்கு, இதை (யோகத்தை) தகுந்த வழியில் அடைய முடியும்.

37.
அர்ஜுந உவாச:
அயதி ச்ரத்தயோ பேதோ யோகாச்சலிதம் ஆநஸ:  
அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி
அர்ஜுனன் சொன்னது:
கிருஷ்ணா! மனதில் நம்பிக்கை இருந்தும், எவன் ஒருவனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லையோ, எவன் மனம் யோகத்தில் இருந்து வழி தவறுகிறதோ, அவன் யோகத்தில் பூரணத்துவம் பெறுவதில் தோல்வி கண்டு இறுதியில் எதை அடைவான்?

38.
கச்சிந் நோபய விப்ரஷ்டச் சிந்நாப்ரம் இவ நச்யதி
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி
பலம் பொருந்தியவனே! பிரம்மத்தின் பாதையில் தடுமாறி அவன் இரண்டிலும் தோல்வி கண்டு, ஆதரவு எதுவும் இல்லாமல் உடைந்த மேகத்தைப் போல அவன் அழிந்து விட மாட்டானா?

39.
ஏதந் மே ஸம்சயம் க்ருஷ்ண சேத்தும் அர்ஹஸ்ய சேஷத:
த்வதந்ய: ஸம்சயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே
கிருஷ்ணா! எனது இந்த சந்தேகத்தை நீ முற்றிலும் போக்குவாயாக. ஏனென்றால் உன்னை அன்றி வேறு எவராலும் இந்த சந்தேகத்தைப் போக்க முடியாது.

விசாரம்
எந்த ஒரு செயலை நன்றாகச் செய்வதற்கும் இரண்டு காரணிகள் தேவை - ஒன்று சாதனம்/முயற்சி, இன்னொன்று வைராக்கியம்/மன உறுதி. பெரிய சங்கீத வித்வானாக வேண்டும் என்று நினைத்தால் அதற்கு நல்ல பயிற்சியோடு, வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகமும் வேண்டும். பிரம்மத்தை அடையும் முயற்சியிலும் இந்த இரண்டும் தேவைப் படுகிறது.
சென்ற வாரம் பார்த்தோம் - இந்த ஆத்மாவானது எல்லா உயிர்களிலும் இருக்கின்றது, எல்லா உயிர்களும் அந்த பிரம்மத்தின் உள்ளே உறைகின்றது. சுற்றி உள்ள எல்லாமே ஈஸ்வர ரூபமாகப் பார்க்கும் போது, எல்லா நிகழ்வுகளையும் / உயிர்களையும் சமமாகப் பார்க்கும்  பார்வை வரும் போது, பகவான்/பக்தன் என்ற பேதம் தொலைந்து ரெண்டும் ஒன்றாகிறது. மனிதன் தெய்வம் ஆகிறான். இந்த சமப் பார்வை கொண்டவனே சிறந்த யோகி. இப்படிப்பட்ட மன நிலை கொண்ட யோகி, எப்படிப்பட்ட வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தாலும் அவன் தன்னுள்ளே இறைவனைக் கொண்டவன் ஆகிறான். உதாரணம் கண்ணப்ப நாயனார், திருமங்கை ஆழ்வார்.

அர்ஜுனனுக்கு இந்த சமயத்தில் எல்லோருக்குள்ளேயும் தோன்றும் சந்தேகம் தோன்றுகிறது. நாம் இப்படி பிரம்மத்தை நோக்கி செல்ல நினைத்தாலும் நம் மனம் நம்மை விடுவதில்லை. சம்சார வாழ்க்கையோ, இல்லை பிற ஆசைகளோ நம் மனதை அலை பாய வைத்து விடுகிறது. அப்படி தன்னை வெல்ல முடியாமல் அவனால் பிரம்மத்தையும் பெற முடியாமல் இந்த சம்சார உலகில் உள்ள சந்தோசங்களையும் பெற முடியாமல் ஆகி விடுமே. இப்படி ஆகாமல் இருக்க என்ன வழி என்றும்,  இந்த சந்தேகத்தை ஸ்ரீ கிருஷ்ணர் அன்றி வேறு எவராலும் போக்க முடியாது என்றும் அர்ஜுனன் கேட்கின்றான். ஸ்ரீ கிருஷ்ணரின் பதிலை அடுத்து காண்போம்.
 

Wednesday, February 22, 2012

Chapter 6 - Dhyaana Yoga [21-29]

21.
ஸுகம் ஆத்யந்திகம் யத்தத் புத்தி க்ராஹ்யம் அதீந்த்ரியம் 
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதச்சலதி தத்த்வத:
யோகியானவன் இந்த்ரியங்களைத் தாண்டிய, நிர்மலமான அறிவைக் கொண்டு அந்த பரமானந்த நிலையை உணரும் போது, அதில் நிலை கொள்ளும் போது அவன் உண்மை நிலையில் இருந்து அசைவதில்லை.

22.
யாம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத:
யஸ்மிந் ஸ்திதோ ந து:கேந குருணாபி விசால்யதே
இதை அடைந்த உடனே அவன் வேறு எந்த லாபத்தையும் இதை விட உயர்வானதாக எண்ணுவதில்லை. இதில் நிலை கொண்ட பின் அவன் பெரும் துக்கத்திலும் அசைந்து கொடுப்பதில்லை.

23.
தம் வித்யாத் து:க ஸம்யோக வியோகம் யோகா ஸஞ்ஜ்ஞிதம் 
ஸ நிச்சயேந யோக்தவ்யோ யோகோ(அ)நிர்விண்ண சேதஸா 
இது வலிகளின் கட்டில் இருந்து விடுபடும் யோகம் என்ற  பெயரில் அழைக்கப் படட்டும். இதை உறுதியுடன், தளர்வில்லாத மனதுடன் பயிற்சி செய்ய வேண்டும்,

24.
ஸங்கல்ப ப்ரபவாந் காமாம் ஸ்த்யக்த்வா ஸர்வாநசேஷத:  
மனஸைவேந்த்ரியக் க்ராமம் விநியம்ய ஸமந்தத:
சங்கல்பம்(விருப்பம்) என்ற ஒன்றால் எழும் எல்லா ஆசைகளையும் பாரபட்சமின்றி தொலைத்து, எல்லா திசைகளிலும் உள்ள இந்திரியங்களையும் மனதால் முழுவதுமாகக் கட்டுப்படுத்தி,

25.
சநை: சநைருபரமேத் புத்த்யா த்ருதி க்ருஹீதயா
ஆத்ம ஸம்ஸ்தம் மந: க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத்
புத்தியை நிலையாக வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக
அவன் அந்த அமைதியை அடையட்டும். மனதை பிரம்மத்தில்
நிலை நிறுத்திய பின்னர், அவன் வேறு எதையும் நினைக்காமல் இருக்கட்டும்.

26.
யதோ யதோ நிச்சரதி மநச் சஞ்சலம் அஸ்திரம்
ததஸ்ததோ நியம்யைதத் ஆத்மந்யேவ வசம் நயேத்
எது அலை பாயும், நிலை இல்லாத மனதை தடுமாற வைக்கிறதோ, அதில் இருந்து அவன் மனதைக் கட்டுப்படுத்தி, அதை பிரம்மத்தின் கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே கொண்டு வரட்டும்.

27.
ப்ரசாந்தம் அநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகம் உத்தமம்
உபைதி சாந்தரஜஸம் ப்ரஹ்ம பூதம் அகல்மஷம்
மிகவும் மன அமைதி கொண்ட, ஆசைகள் சாந்தப்படுத்தப் பட்டு எவன் பிரம்மமாகவே ஆனானோ, எவன் பாவங்களில் இருந்து விடுதலை பெற்றானோ, அந்த யோகிக்கு பரமானந்த நிலை நிச்சயம் கிடைக்கும்.

28.
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகத கல்மஷ:
ஸுகேந ப்ரஹ்ம ஸம்ஸ்பர்சம் அத்யந்தம் ஸுகம் அச்நுதே
மனதை இவ்வாறு யோகத்தைப் பயிற்சி செய்வதிலேயே செலுத்தி, பாவங்களில் இருந்து விடுபட்டு, பிரம்மத்தின் தொடர்பால் பரமானந்த நிலையை அந்த யோகி எளிதில் அனுபவிக்கின்றான்.

29.
ஸர்வ பூதஸ்தம் ஆத்மாநம் ஸர்வ பூதாநி சாத்மநி
ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்சந:
மனம் இவ்வாறு யோகத்தினால் பக்குவப்பட்ட உடன், அவன் பிரம்மத்தை எல்லா உயிர்களிலும் உறைவதைக் காண்கிறான். எல்லா உயிர்களும் பிரம்மத்தில் காண்கிறான். அவன் எங்கும் ஒன்றையே (பிரம்மத்தையே) காண்கிறான்.

விசாரம்
பிரம்மத்தை உணர்ந்தவன் பிராமணன். இந்த பிரம்மத்தை உபதேசம் செய்வது பிரம்மோபதேசம் - உபநயனம். உப+நயனம் -
additional eyes.  அதனால் தான் பிரம்மோபதேசம் பெற்ற பிராமணன்
த்விஜா (இரண்டு முறை பிறந்தவன்) என்று அழைக்கப்படுகிறான்.  ஊரைக்  கூட்டி  யஜ்னோபவீதம் போட்டுக் கொள்வது முக்கியம் இல்லை, அந்த  உபநயனம்  நிகழ்ச்சியை ஸ்ரத்தையுடன்  செய்ய வேண்டும். வேதங்கள் இந்த பிரம்மத்தைப் பற்றி கற்றுக் கொடுக்கின்றன. அதை ஒழுங்காகக் கற்றுக் கொள்வதே இந்த உபநயனத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இந்த பிரம்மம் (ஆத்மா) என்பது என்ன?
ஆதி சங்கரர் காசியில் கங்கையில் ஸ்நானம் செய்ய சிஷ்யர்களுடன் போகும் போது எதிரே சிவபெருமான் சண்டாள ரூபத்தில் தோன்றுவார். ஆதி சங்கரரோ சிவன் என்று தெரியாமல் அவரை விலகிச் செல்லுமாறு கூற, சிவனோ 'எதை விலகச் சொல்கிறாய்? இந்த உடலையா இல்லை அதனுள் உள்ள ஆத்மாவையா? உடல் என்றால் அது ஒரு அழியக் கூடிய மாமிச பிண்டம், ஆத்மா என்றால் அது எல்லோருக்குள்ளும் இருக்கும் பொதுவான ஒன்று. உன்னுள் இருக்கும் ஆத்மா தான் என்னுள்ளும் இருக்கிறது. அப்படி இருக்க நான் எப்படி உன்னில் இருந்து மாறுபட்டவன்' எனக் கேட்பார்.  ஆதி சங்கரரும் தன தவறை உணர்ந்து சிவனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு மணீஷ பஞ்சகம் என்ற ஸ்லோகத்தைப் பாடுவார்.

ஒன்றாய் தோன்றி பலவாய் விரிந்து இருக்கும் இந்த பிரம்மம். ஒன்றாய் இருப்பது பரமாத்மா, பலவாய் விரிந்து இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மா பரமாத்வாவில் இருந்து தோன்றியது. இறுதியில் பரமாத்மாவிலேயே கலந்து விடுகிறது. எல்லா உயிர்களின் உள்ளும் இந்த பிரம்மம் (ஜீவாத்மா) தான் உள்ளது.  எல்லா உயிர்களும் பிரம்மத்தில் தான் (பரமாத்மா) உறைகிறது. இப்படி ஒன்றில் இருந்து மற்றொன்று தோன்றினாலும் ரெண்டும் தங்களின் பூரணத்துவத்தை  (completeness ) இழப்பதில்லை. இந்த ஸ்லோகத்தின் அர்த்தமும் இது தான்.
'ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே'

இந்த பிரம்மத்தைப் பற்றி அறிவது/அடைவது  ஒன்று தான் யோகிக்கு குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கு மனப் பயிற்சி வேண்டும், எல்லாவற்றையும் சம திருஷ்டி கொண்டும் பார்க்கும் பார்வை வேண்டும். அதற்கு தான் மேலே சொன்ன பயிற்சி தேவைப் படுகிறது. அந்த பிரம்மத்தை அறிந்த நிலை அடைந்து விட்டால் தான் மனதில் பரமானந்த நிலை தோன்றும். அந்த நிலை அடைந்த பின்னர் எந்தக் கவலையும், ஆசையும் நம்மை அண்டாது. எவன் இந்த நிலையை அடைந்துள்ளனோ, அவனே உண்மையான பிராமணன்

Tuesday, February 14, 2012

Chapter 6 - Dhyaana Yoga [11-20]

11.
சுசௌ தேசே பிரதிஷ்டாப்ய ஸ்திரம் ஆஸநம் ஆத்மந:
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிந குசோத்தரம்  
பவித்திரமான  ஒரு இடத்தில், மிகவும் உயரமாகவோ, தாழ்வாகவோ இருக்காமல்,துணி, தோல் மற்றும் தர்ப்பை புல் இவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, தனக்கென ஒரு உறுதியான ஆசனத்தை அமைத்து,

12.
தத்ரைகாக்ரம் மந: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரியா:
உபவிச்யாஸநே யுஞ்ஜ்யாத் யோகமாத்ம விசுத்தயே
மனதை ஒரு முகப் படுத்தி, மனம் மற்றும் அங்கங்களின்
செயல்களைக் கட்டுப்படுத்தி, அந்த ஆசனத்தில் அமர்ந்து அவன் யோகம் செய்து அவனது ஆத்மாவைப் புனிதப் படுத்திக் கொள்ளட்டும்.

13.
ஸமம் காயசிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர:
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திசச் சாநவ லோகயந்
அவன் தனது உடல், தலை மற்றும் கழுத்தை விறைப்பாக, நேராக வைத்திருந்து, அசையாமல், அக்கம் பக்கம் பார்வையைச் செலுத்தாமல், மூக்கின் நுனியில் பார்வையைச் செலுத்தட்டும்.

14.
பிரசாந்தாத்மா விகதபீர் ப்ரஹ்மசாரி வ்ரதே ஸ்தித:
மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர:
அமைதியான மனதுடன், பயமில்லாமல், பிரம்மச்சரிய விரதத்தில்
உறுதியுடன், மனத்தைக் கட்டுப்படுத்தி, என்னையே நினைத்துக் கொண்டு, நிலையான மனதுடன் என்னையே பிரதான குறியாகக் கொண்டு அவன் அமரட்டும்.

15.
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ: 
சாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாம் அதிகச்சதி
இப்படியாக சதா மனதை சமநிலையில் வைத்திருந்து,  மனதை  அடக்கி,   என்னுள் உறையும் அமைதியைப் பெற்று,  யோகியானவன் இறுதியில் பிறப்பற்ற நிலையான நிர்வாணத்தை அடைகிறான்.

16.
நாத்யச்நதஸ்து  யோகோ(அ)ஸ்தி ந சைகாந்தமநச்நத:
ந சாதி ஸ்வப்ந சீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந
அர்ஜுனா! எவன் ஒருவன் அதிகமாக உண்கிறானோ, எவன் ஒருவன் எதையுமே உண்பதில்லையோ, எவன் ஒருவன் அதிகமாக உறங்குகிறானோ,  எவன்  எப்பொழுதும்  விழித்தே  இருக்கிறானோ  அவனுக்கு யோகம் சாத்தியம் இல்லை.

17. 
யுக்தா ஹார விஹாரஸ்ய யுக்த சேஷ்டஸ்ய கர்மஸு
யுக்த ஸ்வப்நாவ போதஸ்ய யோகோ பவதி து:கஹா
எவன் உண்பதிலும், செயல்களிலும் மிதமாக இருக்கிறானோ,
எவன் தனது செயல்களைச் செய்வதில் மிதமாக இருக்கிறானோ, எவன் உறக்கத்திலும், விழிப்பிலும் மிதமாக இருக்கிறானோ அவனுக்கு யோகமானது வலியைப் போக்கும் காரணி ஆகும். 

18.
யதா விநியதம் சித்தம் ஆத்மந்யேவாவதிஷ்டதே  
நி:ஸ்ப்ருஹ: ஸர்வ காமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா 
எவனது மனம் எப்பொழுது நன்றாக கட்டுப்படுத்தப் பட்டு, பிரம்மம்
ஒன்றிலேயே நிலைத்து  இருக்கின்றதோ, ஆசையைத் தூண்டும் பொருட்களில் இருந்து ஏக்கம் இல்லாமல் விலகி  இருக்கின்றதோ,  அப்பொழுது  அவன்  பிரம்மத்தில் ஒன்றி விட்டவனாகிறான்.

19.
யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகிநோ யத சித்தஸ்ய யுஞ்ஜதோ யோகம் ஆத்மந:
அடக்கிய மனதைக் கொண்ட, பிரம்மத்தில் மூழ்கிய,  பிரம்மத்தைக்  கடைப்பிடிக்கும்  யோகியின் மனது,  காற்றடிக்காத இடத்தில்  வைக்கப்பட்ட  விளக்கானது  எப்படி  நிலையாக  எரியுமோ,  அது போல நிலையானதாக உவமைப்படுத்தப் படுகிறது,

20.
யத்ரோ பரமதே சித்தம் நிருத்தம் யோக ஸேவயா 
யத்ர சைவாத்மநாத்மாநம் பச்யந்நாத்மநி துஷ்யதி
மனமானது யோகப் பயிற்சியின் மூலமாக அடக்கப்படும் போது,  அமைதியை அடைகிறது. பிரம்மத்தைத் தன்னுள் காணும் போது, தன்னில் திருப்தி பெறுகின்றது.
    
விசாரம்
எந்த ஒரு பூஜையோ, ஜபமோ செய்யும் போது வெறும் தரையில் அமர்ந்து செய்யக் கூடாது. முன்பெல்லாம் ரிஷிகள் ஆஜிநம் என்று சொல்லப்படுகிற
தோல் மேல் அமர்ந்து செய்தார்கள். BlackBuck Deer என்று ஒரு மான் இனம் உண்டு. அதன் பெயர் கிருஷ்ணாஜிநம். அந்த தோலில் அமர்ந்து செய்தால் உத்தமம். இல்லையா தரையில் தர்ப்பை பாய் விரித்து அதில் அமர்ந்து செய்யலாம். தர்ப்பைப் புல் energy level, radiation இவற்றை absorb செய்து கொள்ளும் சக்தி பெற்றது. அதனால் தான் க்ரஹனம் சமயத்தில் உணவுப் பொருட்களின் மீது தர்ப்பைப் புல் போட்டு பின்னர் அந்த உணவை உண்ண வைத்துக் கொள்கிறோம். ஹோமத்தின் போது மோதிர விரலில் பவித்ரமாக கட்டிக் கொள்கிறோம், காலின் அருகே போட்டுக் கொள்கிறோம்,

நாம் சொல்லும் ஸ்லோகத்திலேயே பார்க்கிறோம். ஆரம்பத்தில் தியானம் என்று ஒரு பகுதி வருகிறது. சந்தியாவந்தனத்தில் கூட காயத்ரி ஜபம் செய்வதற்கு முன்பு பிராணாயாமம் தியானம் செய்கிறோம். இது ஒரு விதமான மூச்சுப் பயிற்சி. தியானம் செய்யும் போது முதுகெலும்பை நேராக வைத்துக் கொண்டு, நிமிர்ந்து உட்கார்ந்து, கண்ணை மூடிக் கொண்டோ அல்லது மூக்கு நுனியின் மீதோ பார்வையை ஒருமுகப் படுத்தி செய்ய வேண்டும். மனம் அப்போது அலை பாயாமல், எதற்கும் கவலைப்படாமல், பிரம்மச்சர்ய விரதத்துடன் செய்ய வேண்டும். இப்படி யோகம் செய்பவனே பிரம்மத்தைக் குறித்த பாதையில் சென்று மோக்ஷத்தைப் பெற முடியும். உண்ணாமலோ, உறங்காமலோ இருந்து பயன் இல்லை. அதற்காக அவற்றை அதிகமாகச் செய்தும் பலன் இல்லை. எதிலும் மிதமான அளவில் இருக்க வேண்டும்.

காற்றில்லாத இடத்தில் வைக்கப் பட்ட விளக்கு சலனம் இல்லாமல் நிலையாக எரிவதைப் போல அந்த யோகியின் மனமும் சலனம் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு தான் இந்த தியானம். இந்த மன அமைதி, சமநிலை பெற்றால் தான் பிரம்மம் என்ற பேரானந்த நிலையை அடைந்து பிறப்பற்ற நிலையை அடைய முடியும்.