Thursday, March 15, 2012

Chapter 7 - Jnaana Vijjnaana Yoga [1-10]

1.
பகவான் உவாச
மய்யா ஸக்தமநா: பார்த யோகம் யுஞ்ஜந் மதாச்ரய:
அஸம்சயம் ஸமக்ரம் மாம் யதா ஜ்ஞாஸ்யஸி தச்ச்ருணு  
ஸ்ரீ பகவான் சொன்னது
அர்ஜுனா! எந்த ஒரு குழப்பமும் இல்லாமல், மனதை என்னில் நிலைப் படுத்தி, யோகத்தைப் பின்பற்றி, என்னைச் சரண் அடைந்து என்னை நீ எவ்வாறு அறிந்து கொள்வது என்பதைக் கேட்பாயாக.

2.
நம் தே(அ)ஹம் ஸவிஜ்ஞாநம்  இதம் வக்ஷ்யாம்ய சேஷத:
யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூயோ(அ)ந்யஜ் ஜ்ஞாதவ்யம் அவசிஷ்யதே
நான் உனக்கு இந்த ஞானத்தையும், நேரடி அனுபவத்துடன் கலந்ததாகிய விஞ்ஞானத்தையும் உனக்கு முழுவதும் விவரிக்கின்றேன். இதைத் தெரிந்து கொண்ட பின்னர், இங்கே வேறு எதுவும் தெரிந்து கொள்வதற்கு மீதம் இல்லை.

3.
மநுஷ்யாணாம் சஹஸ்ரேஷு கச்சித் யததி ஸித்தயே
யததாம் அபி ஸித்தாநாம் கச்சிந் மாம் வேத்தி தத்தவத:
ஆயிரக்கணக்கான மனிதர்களில், ஒருவர் பூர்ணத்துவத்தை அடைய விழைகிறார். அப்படி வெற்றிகரமாக விழைபவர்களிலும், ஒருவர் மட்டுமே என்னை முழுவதுமாக அறிந்துள்ளார்.

4.
பூமிராபோ(அ)நலோ வாயு: கம் மநோ புத்திர் ஏவ ச
அஹங்கார இதீயம் மேபிந்நா பிரக்ருதிர் அஷ்டதா
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி மற்றும் அஹங்காரம் என்று எனது இயல்பு எட்டு வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளது.

5.
அபரேயம் இதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம்
ஜீவபூதாம் மஹா பாஹோ யயேதம் தார்யதே ஜகத்
பலம் பொருந்திய அர்ஜுனா! இவை தாழ்ந்த பிரக்ருதி (இயற்கை). இதை எனது உயர்ந்த பிரக்ருதியில் - எது ஜீவ நாடியாக இருந்து, இந்த உலகைத் தாங்குகின்றதோ, அதில் இருந்து வேறுபட்டு இருப்பதை நீ அறிந்து கொள்வாயாக.

6.
ஏதத்யோநீநி பூதாநி ஸர்வாணீத்ய உபதாரய
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: ப்ரபவ: ப் ரலயஸ்ததா
இந்த இரண்டும் (உயர்ந்த மற்றும் தாழ்ந்த பிரக்ருதிகள்) எல்லா உயிர்களுக்கும் ஆதாரமானது. ஆகையால் நானே இந்த ஜகத் முழுமைக்கும் ஆதி மற்றும் அந்தம் ஆகின்றேன்.

7.
மத்த: பரதரம் நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்சய
மயி ஸர்வம் இதம் ப்ரோதம் ஸூத்ரே  மணிகணா இவ
அர்ஜுனா! என்னை விட உயர்ந்தது எதுவுமே இல்லை. இவை எல்லாமே, ஒரு ஆரத்தில் (மாலையில்) கட்டப்பட்டுள்ள ரத்தினங்களின் கலவையைப் போன்றது.

8.
ரஸோ(அ)ஹம் அப்ஸு கௌந்தேய பிரபாஸ்மி சசி ஸூர்யயோ:
ப்ரணவ: ஸர்வ வேதேஷு சப்த: கே பௌருஷம் ந் ருஷு
அர்ஜுனா! நான் நீரில் சுவை, சந்திரன் மற்றும் சூரியனில் நான் ஒளி, வேதங்களில் நான் பிரணவ மந்திரம், ஆகாயத்தில் நான் சப்தம், மனிதர்களில் நான் ஆண்மையாக இருக்கின்றேன்.

9.
புண்யோ கந்த: ப்ருதிவ்யாம் ச தேஜஸ்சாஸ்மி விபாவசௌ
ஜீவநம் ஸர்வ பூதேஷு தபச்சாஸ்மி  தபஸ்விஷு
நிலத்தில் நான் சுகந்த நறுமணம், அக்னியில் நான் தேஜஸ், உயிர்களில் நான் ஜீவன், தபஸ்விக்களில் நான் எளிமை.

10.
பீஜம் மாம் ஸர்வ பூதாநாம் வித்தி பார்த ஸநாதநம்
புத்திர் புத்திமதாம் அஸ்மி தேஜஸ் தேஜஸ் விநாமஹம்
அர்ஜுனா! எல்லா உயிர்களுக்கும் நானே சாஸ்வதமான ஆதார விதை, அறிவாளிகளின் அறிவு நானே, ஒளிமயமான எல்லாப் பொருட்களிலும் ஆன ஒளி நானே.

விசாரம்
ஞானம் என்பது அறிவு. அந்த அறிவை உணர்ந்து தெரிந்து கொள்ளும் போது அது விஞ்ஞானம் ஆகிறது. அக்னி சுடும் என்பது ஞானம். அப்படி சுடும் என்பதை அக்னியில் கையை வைத்து சுட்டுக் கொள்ளும் போது, அப்படி உணர்ந்து தெரிந்து கொள்ளும் போது அது விஞ்ஞானம் ஆகிறது. அதனால் தான் செயல் முறையில் நிரூபிக்கப்பட்ட எதுவுமே  விஞ்ஞானம் எனப்படுகிறது. பிரம்மத்திலும் அப்படித் தான். முதலில் பிரம்மத்தைப் பற்றிய ஞானம், பின்பு அதை உணர்ந்து தெரிந்து கொள்வது. சனாதன தர்மத்தில் உள்ள சாஸ்திரங்கள் எல்லாமே ஸ்ருதி (காதால் கேட்டு தெரிந்து கொள்வது), ஸ்ம்ருதி (உணர்ந்து தெரிந்து கொள்வது) என்று ரெண்டு வகைப்படும். இப்படி பரப்ரம்மத்தை உணர்ந்து தெரிந்து கொண்ட ஒருவனுக்கு, அதன் பின்னர் தெரிந்து கொள்வதற்கு வேறு ஒன்றுமே உலகில் இல்லை.

ஆயிரக்கணக்கான மனித ஜீவன்களில், ஒருவனுக்கே இப்படி பிரம்மத்துடன் ஐக்கியம் ஆவதற்குரிய பாக்கியம் கிட்டுகிறது. அப்படி பாக்கியம் கிட்டுபவர்களிலும், ஒருவருக்கே இந்த பிரம்மத்தை உணர்ந்து அறிந்து கொள்ளும் பெரும் பாக்கியம் கிடைக்கின்றது.

பகவான் தன்னை அனைத்திலும் ஊடுருவிய, எல்லை இல்லாத ஒரு நிலையாக தன்னை விவரிக்கின்றார். பஞ்சபூதங்கள், மனம், அறிவு, அஹங்காரம் என்ற கீழ் நிலை இயற்கை குணங்களாகவும், உலகையே தாங்கும், ஆட்டுவிக்கும், ஆதி முதல் அந்த நிலையாகிய  உயர் நிலை இயற்கை குணங்களாகவும் இருக்கின்றார்.  அவரை விட உயர்ந்தது எதுவுமே இல்லை. அவரை ஒரு ஆரமாக உருவகப்படுத்திக் கொண்டால், அந்த மாலையில் உள்ள மணிகளாக மற்ற எல்லா இருக்கின்றன. எல்லாவற்றிலும் பகவான் ஆதாரமாக இருக்கின்றார்.

இதை இப்படியும் பார்க்கலாம். பகவான் இருக்கிறார் என்ற தெளிவு இருப்பது ஞானம். அப்படி இருப்பவரை, நாம் காணும் எல்லாப் பொருட்களிலும்  மூலாதாரமாகப்  பார்க்கும் போது அந்த ஞானம் விஞ்ஞானம் ஆகிறது.

No comments:

Post a Comment