Wednesday, December 14, 2011

Chapter 4 - Gyaana Karma Sannyaasa Yoga [21-30]

21.
நிராசீர்யத சித்தாத்மா த்யக்த ஸர்வ பரிக்ரஹ:
சாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்
எந்த ஆசையும் இல்லாமல், மன, உடல் கட்டுப்பாட்டுடன், பேராசையை தொலைத்து, வெறும் சரீர செயலை மட்டுமே செய்வதால், அவன் எந்த பாவத்தையும் சேர்ப்பதில்லை.

22.
யத்ருச்சாலாப ஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:    
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே
பெரு முயற்சி எதுவும் இல்லாமல் தனக்கு எது கிடைக்கின்றதோ அதில் திருப்தி பட்டுக் கொண்டு, எதிர்மறை ஜோடிகள்(முன்பே பார்த்தோம்), பொறாமை இவற்றில் இருந்து விடுபட்டு, வெற்றி/தோல்வி இரண்டையும் சமமாக மனதில் பாவித்து இருப்பதால், அவன் செயல்பட்டாலும் அந்த செயல்களால் அவன் கட்டுப்படாதவன் ஆகிறான்.


23.
க(ग)த ஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநா வஸ்தித சேதஸ:   
யஜ்ஞாயா சரத: கர்ம ஸமக்ரம் பிரவிலீயதே
பற்றில்லாமல் இருப்பவனுக்கு, விடுபட்டவனுக்கு, எவன் மனது ஞானத்தில் நிலை கொண்டுள்ளதோ, எல்லாச் செயல்களையும் ஈஸ்வர அர்ப்பணம் என்றே செய்கிறானோ - அவனுக்கு எல்லா காரியங்களும் நழுவி விடுகின்றன (அந்த செயல்களால் அவனைக் கட்டுப்படுத்த முடிவதில்லை).

24.
ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர் ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்
ப்ரஹ்மைவ தேந க(ग)ந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா 
பிரம்மத்திற்கு அர்ப்பணமாக, பிரம்ம ஹவிர் என்ற பிரம்மம் ஆகிய உருக்கிய நெய்யை, ஹோமத்தில் பிரம்மமாகிய அக்னிக்கு சமர்ப்பிப்பவன், தனது செயல்களில் பிரம்மத்தைக் காண்பவன் எவனோ - அவன் பிரம்மத்தை நிச்சயம் அடைவான். (தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும், எல்லா செயல்களிலும் பிரம்மத்தைக் காண்பவன் பிரம்மத்தை நிச்சயம் அடைவான்).

25.
தைவம் ஏவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸதே
ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோ பஜூஹ்வதி
சில யோகிகள் கடவுளுக்கு வெறுமனே படையல் மட்டும் வைக்கிறார்கள். பிரம்மத்தைப் புரிந்த மற்றவர்கள், பிரம்மம் ஆகிய அக்னியில் பிரம்மத்தையே பிரம்மத்திற்கு படைக்கிறார்கள்.

26.
ஸ்ரோத்ராதீந் ஈந்த்ரியாண் யந்யே ஸம்யமாக்நிஷு ஜுஹ்வதி
சப்தாதீந் விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி 
சிலர் செவி முதலான புலன்களை அடக்குவதன் மூலம், அந்த அக்னிக்கு சமர்ப்பணம் செய்கிறார்கள். மற்றவர்கள் சப்தம் (மந்திர உச்சாடனம்) மற்றும் பிற இந்த்ரிய பொருட்கள் மூலமாக அந்த இந்த்ரிய அக்னிக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

27.
ஸர்வாணீந்த்ரிய கர்மாணி ப்ராண கர்மாணி சாபரே
ஆத்ம ஸம்யமயோகா(ग)க்(ग)நௌ ஜுஹ்வதி ஜ்ஞாந தீபிதே
மற்றும் சிலர் புலன்களின் எல்லா செயல்களையும், ப்ராண சக்தியையும் ஞானத்தால் பற்ற வைக்கப் பட்ட அந்த சுய கட்டுப்பாட்டு யோகம் என்ற அக்னியில் அர்ப்பணிக்கிறார்கள்.

28.
த்ரவ்ய யஜ்ஞாஸ் தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே
ஸ்வாத்யா யஜ்ஞாந யஜ்ஞாச்ச யதய: ஸம்சித வ்ரதா:
சிலர் செல்வங்களையும், தவத்தையும், யோகத்தையும் அர்ப்பணிக்கிறார்கள். சுய கட்டுப்பாடு மற்றும் கடுமையான அனுஷ்டானங்களை அனுசரிக்கும்
முனிவர்கள் வேத பாராயணம் மற்றும் அறிவை அர்ப்பணிக்கிறார்கள்.

29.
அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணே(அ)பாநம் ததாபரே
ப்ராணாபாநக(ग)தீ ருத்த்வா ப்ராணாயாம பராயணா
மற்றும் சிலர் மூச்சை உள் இழுப்பதிலும், சிலர் மூச்சை வெளி இடுவதிலும், சிலர் மூச்சை அடக்குவதிலும் (பிராணாயாமம்) தங்களின் அர்ப்பணிப்பைச் செய்கிறார்கள்.

30.
அபரே நியதா ஹாரா: ப்ராணாந் ப்ராணேஷு ஜுஹ்வதி 
ஸர்வே(அ)ப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞஷபித கல்மஷா:     
சிலர் தங்களின் ஆகாரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம், உயிர்களுக்கெல்லாம் உயிர் மூச்சை அளிக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே யஜ்ஞத்தை அறிந்தவர்கள். இவர்களின் எல்லா பாவங்களும் அந்த யக்னத்தில் அழிந்து விடுகிறது.

விசாரம்
ஈஸ்வரனை அடைய எண்ணுபவர்கள் பல்வேறு விதத்தில் தங்களின் அர்பணிப்பைச் செய்கிறார்கள். செல்வந்தர்கள் செல்வத்தாலும் (கோயில் கட்டுவது, கும்பாபிஷேகம் செய்வது), ஞானிகள் தங்கள் ஞானத்தாலும் (உபன்யாசம் செய்வது), சிலர் புலன் அடக்கி தியானம் செய்தும், சிலர் அந்த புலன் மூலமாகவே ஈஸ்வரனைப் புகழ்ந்து பேசியும், பாடியும் அந்த அர்பணிப்பைச் செய்கிறார்கள். இவர்கள் எல்லோருடைய நோக்கமும் அதன் மூலம் அந்த இறைவனை அடைவது. அந்த அர்ப்பணங்கள் மூலம் அவர்கள் மனம் சுத்தம் அடைந்து, பலன்களில் பற்று விலக்கப்படும் போது அந்த மனம் ஆன்மீகப் பாதையில் செல்கிறது. ஞானம் என்ற ஒன்றை அடைய நினைக்கிறது.

ஞானத்தைப் பெறுவதற்கு ஒரு குரு - ஆசிரியர் அவசியம். அவரைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்.
அந்த குரு பிரம்மத்தை உணர்ந்தவராக இருக்க வேண்டும். இது தான் அவருக்கு இருக்க வேண்டிய தகுதி.
குருவைத் தேடித் போகும் சீடனும் பக்தியுடன், பணிவுடன் செல்ல வேண்டும்.  இது சீடனுக்கு இருக்க வேண்டிய தகுதி.
பகவான் எந்த வழியில் பக்தர்கள் அவரை அடைய நினைத்தாலும், அவர்களை ஏற்றுக் கொள்கிறார்.  பகவான் இப்படிப்பட்ட குரு ரூபத்தில் அவனுக்கு ஞானத்தைப் போதிக்கிறார். இதன் மூலம் அவன் மனதில் உள்ள அறியாமை தொலைகிறது, ஞானம் வருகிறது.

ஞானம் பெற்றவன் எல்லா உயிர்களிலும் பிரம்மத்தைக் காண்கிறான். கடவுளும் பிரம்மம் தான், அற்பப் புல்லும் பிரம்மம் தான். அந்த புல்லும் அவனுக்கு பகவானாகத் தான் தெரியும். அவனும் பிரம்மம், சர்வமும் பிரம்மம்.
இந்த ஞானத்தைப் பெற்றவன் எப்பேர்ப்பட்ட பாபி ஆக இருந்திருந்தாலும், அவனது பாவங்கள் எல்லாம் தொலைக்கின்றான். எப்படி ஒரு விறகு தீயினால் எரிக்கப்படுகிறதோ, அதைப் போல அவனது எல்லாச் செயல்களும் அந்த ஞானம் ஆகிய அக்னியில் எரிக்கப் பட்டு விடுகிறது.  

PS
வரும் 16 ம் தேதி முதல் மார்கழி மாதம். கீதையில் சொன்ன மாதிரி மாதங்களில் ஸ்ரீ கிருஷ்ணர் மார்கழியாக இருக்கிறார். தேவர்களுக்கு இந்த மாதம் ஒரு நாளின் ப்ரஹ்ம முஹூர்த்தத்தைப் போன்றது. ஒரு நாளுக்கு சுமாராக அதிகாலை 4 : 3௦ - 6 : ௦௦ வரை உள்ள சமயம் ப்ரஹ்ம முஹூர்த்தம். ப்ரஹ்ம முஹூர்த்தம் போது செய்யும் பூஜைகளுக்கு பலன் அதிகம். எனவே தான் மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்த மார்கழி மாதத்தில் தெய்வ உபாசனை மட்டுமே செய்கிறோம். 

2 comments:

  1. விசாரம் சிறப்பாக இருக்கு.

    மார்கழி மாதம் பற்றிய குறிப்பு அருமை.
    நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete