Thursday, January 19, 2012

Chapter 6 - Dhyaana Yoga [1-10]

1.
ஸ்ரீ பகவான் உவாச:
அனாச்ரித: கர்ம ப(फ)லம் கார்யம் கர்ம கரோதி ய:
ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்னிர் ந சாக்ரிய:
ஸ்ரீ பகவான் சொன்னது:
எவன் ஒருவன் தனக்கு விதிக்கப்பட்ட கடமையை, அதன் பலன்களின் மீது பற்றில்லாமல் செய்கின்றானோ அவனே சந்ந்யாசி மற்றும் யோகியே அன்றி எவன் தன்னுள்ளே அக்னி(உத்வேகம்) மற்றும் செயல்லற்று இருப்பவன் அல்லன்.

2.
யம் ஸந்ந்யாஸம் இதி ப்ராஹூர் யோகம் தம் வித்தி பாண்டவ
ந ஹ்ய ஸந்ந்யஸ்த ஸங்கல்போ யோகீ பவதீ கச்சந
அர்ஜுனா! சந்ந்யாசம் என்று அழைக்கப்படும் அந்த யோகத்தைப் பற்றி உனக்கு தெரியுமா? எண்ணங்களைத் தொலைக்காதவன் (கட்டுப்படுத்தாதவன்) யோகி ஆவதில்லை.  

3.
ஆருருக்ஷோர் முநேர் யோகம் கர்ம காரணம் உச்யதே
யோகாரூடஸ்ய தஸ்யைவ சம: காரணம் உச்யதே
யோகத்தை அடைய விரும்பும் ரிஷிகளுக்கு செயல் ஒரு சாதனம். யோகத்தை அடைந்த அதே யோகிக்கு செயலின்மை (கர்மங்களைக் கட்டுபடுத்துதல்) சாதனம் எனப்படுகிறது.

4.
யதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே
ஸர்வ ஸங்கல்ப ஸந்ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே  
எவன் ஒருவன் புலன்களின் மீதோ, செயல்களின் மீதோ பற்றில்லாமல் இருக்கிறானோ, எவன் எண்ணங்களைத் தொலைத்துள்ளானோ, அப்பொழுது அவன் யோகத்தை அடைந்தவன் எனக் கருதப் படுகிறான்.

5.
உத்தரேதாத்மந் ஆத்மாநம் ந ஆத்மாநம் அவஸாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துர் ஆத்மைவ ரிபுராத்மந:
தனது ஆத்மாவின் மூலமே ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ளட்டும், தன்னைத் தாழ்த்திக் கொள்ள வேண்டாம். இந்த ஆத்மா ஒன்றே ஒருவனுக்கு நண்பனும் ஆகும், இந்த ஆத்மா ஒன்றே ஒருவனுக்கு எதிரியும் ஆகும்.

6.
பந்துர் ஆத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித:
அனாத்மநஸ்து சத்ருத்வே வரதேதாத்மைவ சத்ருவத்
எவன் ஒருவன் தனது ஆத்மாவாலேயே தன்னை வெற்றி கொண்டுள்ளானோ, அவனுக்கு ஆத்மாவே அவனது நண்பனாகிறது. எவன் தன்னை வெற்றி கொள்ளவில்லையோ, அவனுக்கு இந்த ஆத்மாவே புற எதிரியை போன்ற நிலையில் எதிரியாக இருந்து விடுகிறது. 

7.
ஜிதாத்மந: ப்ரசாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித:
சீதோஷ்ண ஸுக து:கேஷு ததா மாநாபமாநயோ:
எவன் ஒருவன் தன்னை அடக்கி, அமைதியுடன் இருக்கிறானோ, அவனது ஆத்மாவானது குளிர்/வெப்பம், இன்பம்/துன்பம் மற்றும் மானம்/அவமானங்களில் சமம் ஆகவே இருக்கிறது. 

8.
ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய: 
யுக்த இத்யுச்யதே யோகீ ஸம லோஷ்டாச்ம காஞ்சந:   
எந்த யோகியானவன் ஞானம் மற்றும் விஞ்ஞானத்தில்(பிரம்மத்தைப் பற்றிய அறிவில்) திருப்தி கொண்டுள்ளானோ, எவன் தனது புலன்களை அடக்கி உள்ளானோ, எவனுக்கு ஒரு பிடி மண், கல் மற்றும் தங்கம் சமமோ, அவன் சமாதி (நிர்வாண) நிலையை அடைந்தவன் ஆகிறான்.    

9.
ஸுஹ்ருந் மித்ரார்ய உதாஸீந மத்யஸ்த த்வேஷ்ய பந்துஷு   
ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸம புத்திர் விசிஷ்யதே 
எவன் ஒருவன் நல் இதயம் கொண்டவர்களுக்கும், நண்பர்களுக்கும், எதிரிகளுக்கும், உதாசீனம் செய்பவர்களுக்கும், மத்தியமமாக இருப்பவர்களுக்கும், த்வேஷம் உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும், குனவாங்களுக்கும், பாபிகளுக்கும் சமமாக இருக்கிறானோ, அவனே வெற்றி பெறுவான்.

10.
யோகீ யுஞ்சீத ஸததம் ஆத்மாநம் ரஹஸி ஸ்தித:
ஏகாகீ யத சித்தாத்மா நிராசீர பரிக்ரஹ:
யோகியானவன், தனிமையில், ஏகாந்தமாக, தனது மனதையும், உடலையும் அடக்கி, ஆசை/நிராசையை விலக்கி தனது மனதை நிலையாக வைத்திருக்க எப்பொழுதும் முயற்சி செய்யட்டும்.

விசாரம்
பொதுவாக ஸ்லோகம் சொல்லும் போது ஆரம்பத்தில் தியானம், ந்யாசம் என்று வரும். ந்யாசம் என்பதில் உடலின் பகுதிகளில் இறைவன் எல்லை தெய்வம் போல இருப்பதாக உருவகப் படுத்திக் கொண்டு, பின்பு அந்த இறைவனை மனதில் ஒரு முகப்படுத்தி பின்னர் சொல்ல வேண்டிய ஸ்லோகங்களைச் சொல்கிறோம். மனதை condition படுத்தும் பயிற்சி தான் இது. ஒன்றுமே இல்லையா, சுவாமி உருவத்தைப் பார்த்துக் கொண்டே அந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம். எங்கோ பார்த்துக் கொண்டு வாய் உச்சரிப்பதைக் காட்டிலும் இந்த தியானம் செய்து ஒரு முகப்படுத்தி உச்சரிப்பது நமக்கு ஒரு அமைதியை தருகிறது அல்லவா? இங்கே ஸ்லோகம் சொல்வது என்ற கர்மம், தியானம் செய்ய வழி வகுக்கிறது. கர்ம யோகம், தியான யோகம் செய்வதற்கு ஒரு படிக்கல் ஆகிறது. 

இப்படி மனம் ஒருமுகப்படாவிட்டால் என்னாகும்? மனதில் தோன்றும் ஆசை/நிராசை காரணமாக ஒரு விருப்பு/வெறுப்பு தோன்றுகிறது. அது மனதை (ஆத்மாவை) எதாவது ஒரு செயலைச் செய்ய வைத்து பிரம்மத்தைப் பற்றிய எண்ணத்தை விலக்கி விடுகிறது. மனதை அலை பாய விடாமல் அடக்கினால் அன்றி மன அமைதியையும், முக்தி நிலையையும் அடைய முடியாது. 'தீதும், நன்றும் பிறர் தர வாரா' என்று ஒரு பழமொழி உண்டு. நமக்கு வரும் எல்லா நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே, நமது மனமே காரணம். ஒருவனுக்கு அவனது மனமே நண்பன். சரியாக மனதை அடக்கி வைத்திருக்கவில்லை என்றால் அதுவே அவனது எதிரி. மனதை அடக்கியவன் எல்லாவற்றையும் சமமாகப் பார்ப்பான். அவனே யோகி ஆகிறான் / குறைந்த பக்ஷம் யோகி ஆவதற்கான தகுதி பெறுகிறான். இப்படி மன அமைதி பெற்றவனுக்கு எல்லாப் பொருளும் ஒன்று தான் - மண்ணா, தங்கமா என்று தரம் பார்ப்பதில்லை, நண்பனா, எதிரியா என்று பிரித்துப் பார்ப்பதில்லை.

இப்படி மனதை அடக்கினால் தான் தியானம் என்ற ஒன்று செய்வதற்கு, வழி பிறக்கும். எப்படி தியானம் செய்வது - அதை அடுத்து பார்ப்போம்.

Tuesday, January 10, 2012

Chapter 5 - Sannyaasa Yoga [20-29]

20.
ந ப்ரஹ்ருஷ்யேத் ப்ரியம் ப்ராப்ய நோத்விஜேத் ப்ராப்ய சாப்ரியம்
ஸ்திரபுத்திர் அஸம்மூடோ ப்ரஹ்மவித் ப்ரஹ்மணி ஸ்தித:
பிரம்மத்தில் லயித்திருந்து, நிலையான புத்தியுடன், கலங்காமல் உள்ள பிரம்மத்தை அறிந்தவர் நல்லது கிடைக்கும் போது மகிழாமலும், கெட்டது கிடைக்கும் போது வருந்தாமலும் இருப்பார்.

21.
பாஹ்யஸ் பர்சேஷ்வ ஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத் ஸுகம்
ஸ ப்ரஹ்ம யோக யுக்தாத்மா ஸுகம் அக்ஷயம் அஸ்நுதே
தன்னை வெளித் தொடர்புகளில் இருந்து விலக்கி வைத்திருப்பதன் மூலம் அவர் பிரம்மத்தில் மகிழ்ச்சியைக் காண்கிறார். பிரம்மத்தைக் குறித்து தான் த்யானிப்பதில் இருந்து அவர் எல்லையில்லாத பேரானந்தத்தை அடைகிறார்.

22.
யே ஹி ஸம்ஸ்பர்சஜா போகா து:க யோநய ஏவ தே
ஆத்யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே புத:
அர்ஜுனா! தொடர்புகளின் மூலம் ஜனிக்கும் எல்லா ஆனந்தமும் வலியை உண்டு பண்ணக் கூடியவையே. ஏன் என்றால் அவைகளுக்கு ஒரு ஆதியும், அந்தமும் உள்ளன. அறிவுள்ளவர்கள் அதில் ஆனந்தப்பட மாட்டார்கள்.

23.
சக்நோதீஹைவ ய: ஸோடும் ப்ராக்ஷரீர விமோக்ஷணாத்
காமக்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர:
எவன் ஒருவன், இந்த உடல் விமோசனம் (மரணம்) பெறுவதற்கு முன்பே, ஆசை மற்றும் கோபம் இவற்றால் தோன்றும் உணர்வைத் தாங்கும் சக்தியைக் கொண்டுள்ளானோ - அவனே யோகி, அவனே சுகமாக இருக்கும் மனிதன்.

24.
யோ(அ)ந்த: ஸுகோ(அ)ந்தராராமஸ் ததாந்தர் ஜ்யோதிர் ஏவ ய:
ஸ யோகீ ப்ரஹ்ம நிர்வாணம் ப்ரஹ்மபூதோ(அ)திகச்சதி
எவன் ஒருவன் தன்னுள்ளே ஆனந்தமாக இருக்கிறானோ, எவன் தன் உள்ளே சுகித்து இருக்கிறானோ, எவன் தன்னுள்ளே ஜோதி ஸ்வரூபமாக ஒளிர்கிறானோ அத்தகைய யோகி ஆனவன் மோக்ஷம் என்ற பரிபூரண நிர்வாண நிலையை அடைந்து அவனே பிரம்மம் ஆகிறான்.    

25.
லபந்தே ப்ரஹ்ம நிர்வாணம் ருஷய: க்ஷீணகல்மஷா:
சிந்ந த்வைதா யதாத்மாந: ஸர்வ பூதஹிதே ரதா:
ரிஷிகள் தங்களின் பாவங்களைத் தொலைத்து,  பரிபூரண நிர்வாண நிலையாகிய மோக்ஷத்தை அடைந்து, த்வைத நிலையை (சுகம்/துக்கம், ஜனனம்/மரணம், போன்ற எதிர்மறை இரட்டை நிலைகளை) விட்டொழித்து, தங்களைக் கட்டுப்படுத்தி, லோகத்தில் உள்ள எல்லா உயிர்களின் க்ஷேமத்திலேயே குறியாக இருப்பார்கள்.

26.
காம க்ரோத வியுக்தாநாம் யதி நாம் யதசேதஸாம்
அபிதோ ப்ரஹ்ம நிர்வாணம் வர்ததே விதிதாத்மநாம்
எவர்கள் ஆசை மற்றும் கோபம் இவற்றில் இருந்து விடுபட்டுள்ளார்களோ, எவர்கள் தங்களின் எண்ணங்களைக் கட்டுக்குள் கொண்டுள்ளார்களோ, எவர்கள் பிரம்மத்தை உணர்ந்துள்ளார்களோ, அப்படி தங்களைக் கட்டுப்படுத்திய சாதுக்களுக்கு பரிபூரண நிர்வாணம் ஆகிய மோக்ஷ நிலை அவர்களைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் உள்ளது.

27.
ஸ்பர்சாந் க்ருத்வா பஹிர் பாஹ்யாம் ச்சக்ஷச் சைவாந் தரே ப்ருவோ:
ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா நாஸாப் யந்தர சாரிநௌ
வெளித் தொடர்புகள் எல்லாவற்றையும் மூடி, பார்வையை புருவத்தின் இடையே நிலைத்து, மூக்கின் வழியே உள்வாங்கும் / வெளியேறும் மூச்சை சமப்படுத்தி,

28.
யதேந்த்ரிய மநோ புத்திர் முநிர் மோக்ஷ பராயண:
விகதேச்சாபய க்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ:
இந்திரியங்கள், மனம், அறிவு இவற்றை அடக்கி, மோக்ஷம் ஒன்றையே உன்னதக் குறிக்கோள் ஆகக் கொண்டு, ஆசை, பயம், கோபம் இவற்றை விலக்கிய முனிவர்கள் எப்பொழுதுமே விடுபட்டவர்கள் ஆகிறார்கள்.

29.
போக்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வ லோக மகேஷ்வரம்
ஸுஹ்ருதம் ஸர்வ பூதாநாம் ஜ்ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி
எவன் ஒருவன் என்னை எல்லா யக்ஞம், மற்றும் தவத்தை அனுபவிப்பவனாகக் எண்ணுகிறானோ (அவற்றை எனக்கு அர்ப்பணிக்கின்றானோ), எல்லா உலகிற்கும் அதிபதியாக, எல்லா உயிர்களுக்கும் நண்பனாக என்னை எண்ணுகிறானோ, அவனுக்கு அமைதி உண்டாகட்டும்.

இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே ஸந்ந்யாஸயோகோ நாம பஞ்சமோ(அ)த்யாய:   


விசாரம்
'வைஷ்ணவ ஜனதோ' என்று ஒரு பாடல் இருக்கிறது - காந்திஜிக்கு மிகவும் பிடித்தமானது, அதோடு DK பட்டம்மாள் தான் நினைவுக்கு வருவார். அந்த பாடல் ஒரு உண்மையான வைஷ்ணவனின் தகுதியைக் கூறுகிறது. அவன் நெற்றியில் உள்ள தென்கலை/வடகலை திருமண்ணைக் கொண்டு அவன் வைஷ்ணவன் ஆவதில்லை. எவன் மற்றவரின் துயரைத் தன துயராகக் கொண்டு, அதைப் போக்க எண்ணுகிறானோ, லோக க்ஷேமத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளானோ - அவனே வைஷ்ணவன். Theoretically இது வைஷ்ணவர்களைக் குறித்தாலும், உண்மையில் இது எல்லோருக்கும் பொருந்தக் கூடியது தான். 


சனாதன தர்மத்தில் சொல்லப்படும் மந்திரங்களில் ஒரு social wellbeing கணக்கில் கொள்ளப்படுகிறது. தான், தனது குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்ளாமல், உலகம் முழுவதும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு சொல்லப்படும் ஸ்லோகம்:
1. காலே வர்ஷது பர்ஜன்ய ,
பிருத்வி சஸ்ய ஷாலினி ,
தேசோ யாம் க்ஷோப ரஹித ,
சஜ்ஜன சந்து நிர்பய.

மழை காலத்தில், மழை நேரத்திலும், அமோகமாகவும் பெய்யட்டும்,
பூமி பயிர்களால் நன்கு சூழப்படட்டும்
தேசம் பிரச்சனைகள் இன்றி சுபமாக இருக்கட்டும்
நல்ல மக்கள் பயம் இன்றி இருக்கட்டும்

2. ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபால்யநந்தாம் ,
ந்யாயேன மார்கேன மஹீம் மஹீசாம்,
கோ ப்ராஹ்மநேப்யோ சுபம் அஸ்து நித்யம்,
லோகா சமஸ்தா சுகினோ பவந்து.

தேசத்தின் ராஜாவுக்கு மங்களமே உண்டாகட்டும்
எவர் மக்களை நன்றாகக் காத்து, நேர்மையான வழியில் செல்லட்டும்
பசுக்களும் (செல்வங்கள்), பிராம்மணர்களும் தினமும் சுப வாழ்வு வாழட்டும்
லோகம் முழுவதும் சுகமாக இருக்கட்டும்

3. அபுத்ர புத்ரின சந்து,
புத்ரின சந்து பௌத்ரின,
அதன சதன,
சந்து ஜீவந்து சரத சதம்.

புத்திரர்கள் (புத்திரிகளையும் சேர்த்து தான்) இல்லாதவர்களுக்கு மக்கட் செல்வம் உண்டாகட்டும்,
புத்திரர்கள் உள்ளவர்களுக்கு பௌத்திரர்கள் (பேரன்/பேத்திகள்) உண்டாகட்டும்
ஏழையோ, பணக்காரனோ மக்கள் நூறு இலையுதிர் காலங்கள் காணட்டும்.

4. சர்வத்ர சுகின சந்து,
சர்வே சந்து நிராமயா,
சர்வே பத்ராணி பச்யந்து,
மா கச்சித் துக்க பாக் பவேத்.

மக்கள் எங்குமே சுகமாக இருக்கட்டும்,
எல்லா மக்களும் வியாதி இல்லாமல் இருக்கட்டும்,
எல்லா மக்களும் பத்திரமாக உணரட்டும்
எவருமே, எங்குமே துக்கம் இல்லாமல் இருக்கட்டும்.

5. ஓம் சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது,
ஓம் சர்வேஷாம் ஷாந்திர் பவது
ஓம் சர்வேஷாம் பூர்ணம் பவது
ஓம் சர்வேஷாம் மங்களம் பவது

எங்கும் வசதி இருக்கட்டும்
எங்கும் அமைதி இருக்கட்டும்
எங்கும் உபரி இருக்கட்டும்
எங்கும் நல்லதே நடக்கட்டும்

6. சர்வத்ர சுகின சந்து,
சர்வே சந்து நிராமயா,
சர்வே பத்ராணி பச்யந்து,
மா கச்சித் துக்க பாக் பவேத்.

மக்கள் எங்குமே சுகமாக இருக்கட்டும்,
எல்லா மக்களும் வியாதி இல்லாமல் இருக்கட்டும்,
எல்லா மக்களும் பத்திரமாக உணரட்டும்
எவருமே, எங்குமே துக்கம் இல்லாமல் இருக்கட்டும்.

7. ஓம் சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது,
ஓம் சர்வேஷாம் ஷாந்திர் பவது
ஓம் சர்வேஷாம் பூர்ணம் பவது
ஓம் சர்வேஷாம் மங்களம் பவது

எங்கும் வசதி இருக்கட்டும்
எங்கும் அமைதி இருக்கட்டும்
எங்கும் உபரி இருக்கட்டும்
எங்கும் நல்லதே நடக்கட்டும்

ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி

எங்கும் சாந்தி நிலவட்டும்.

ஆசை, பயம், கோபம் இவற்றை விட்டு, உடலையும், மனதையும் கட்டுப்படுத்தி, லோக க்ஷேமத்தை மட்டுமே எண்ணி, பிரம்மத்தை குறித்து தியானம் செய்வது தான் அதனை அடையும் வழி. அந்த தியானத்தின் பலனையும் முன்பே சொன்ன மாதிரி லோக அதிபதி ஈஸ்வரனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும். அந்த தியானம் செய்ய அவசியமானது பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி. அது குறித்து அடுத்து பார்ப்போம்.

Thursday, January 5, 2012

Chapter 5 - Sannyaasa Yoga [11-19]

11.
காயேன மநஸா புத்த்யா கேவலைர் இந்த்ரியைர் அபி
யோகிந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்ம சுத்தையே 
யோகிகள் பற்றைத் தொலைத்த பின், தங்கள் உடல், மனம், அறிவு மற்றும் இந்த்ரியங்களால் ஆத்மாவைத் தூய்மைப் படுத்தவே செயல்களைச் செய்கிறார்கள்.

12.
யுக்த: கர்மப(फ)லம் த்யக்த்வா சாந்திம் ஆப்நோதி நைஷ்டிகீம்
அயுக்த: காமகாரேண ப(फ)லே ஸக்தோ நிபத்யதே
ஒருமுகப் படுத்தியவர்கள் கடமையின் பலனை தொலைத்ததனால் எல்லையற்ற அமைதியைப் பெறுகிறார்கள். தடுமாற்றம் கொண்டவர்கள், ஆசையினால் உந்தப்பட்டு, பலனின் மீது பற்று கொண்டு கட்டுண்டு இருக்கிறார்கள்.

13.
ஸர்வ கர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுக(ख)ம் வசீ 
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந்
மனதினால் எல்லாச் செயல்களையும் துறந்து விட்டு, சுயக் கட்டுப்பாட்டுடன், சந்ந்யாசிகள் ஒன்பது வாசல் கொண்ட நகரில் (உடலில்) சுகித்து இருக்கிறார்கள். அதன் மூலம் அவர்களும்  செயல்படாமல், அவர்களின் உடலையும், புலன்களையும் செயல்படாமல் வைத்திருக்கிறார்கள்.

14.
ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:
ந கர்மப(फ)ல ஸம்யோகம் ஸ்வபா வஸ்து ப்ரவர்ததே   
உலகிற்காக இறைவன் செயல்படுத்துபவர்களையும், செயல்களையும் படைப்பதில்லை. அதைப் போல செயல்களின் பலன்கள் மீதும் பற்று கொள்ள வைப்பதில்லை. இயற்கையே அவ்வாறு நடந்து கொள்கிறது.

15.
நாதத்தே கஸ்யசித் பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு:
அஜ்ஞாநேந ஆவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ:
இறைவன் எவருடைய அகீர்த்தியையும், கீர்த்தியையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஞானம் அறியாமையால் சூழப்பட்டுள்ளதால் உயிர்கள் எல்லாம் அதில் மூழ்கி உள்ளன.

16.
ஜ்ஞாநேந து தத் அஜ்ஞாநம் யேஷாம் நாசிதம் ஆத்மந:
தேஷாம் ஆதித்யவஜ் ஜ்ஞாநம் ப்ராகாசயதி தத்பரம்
ஆனால் எவருடைய அறியாமை, ஆத்மாவைப் பற்றிய ஞானத்தால் தொலைக்கப்பட்டள்ளதோ, அவர்களுக்கு சூரியனைப் போல ஞானம் பிரம்மத்தைக் காண்பிக்கும்.

17.
தத்புத்தயஸ் ததாத்மாநஸ் தந்நிஷ்டாஸ் தத்பராயணா
கச்சந்த்ய புநரா வ்ருத்திம் ஜ்ஞாந நிர்தூத கல்மஷா:
அவர்களின் சிந்தை அதில் ஆழ்ந்து, அவர்களின் ஆத்மா அதாகி, அதில் நிலை பெற்று, அதையே அடைய வேண்டிய இறுதிக் குறிக்கோளாகக் கொண்டு, அவர்கள் திரும்பி வரவே முடியாத ஒன்றை நோக்கிச் செல்கிறார்கள். அவர்களின் பாவங்கள், ஞானத்தால் தொலைகின்றது. (இங்கே அது என்பது பரப்பிரம்மத்தைக் குறிக்கும்).

18.
வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி 
சுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா: ஸமதர்சிந: 
கல்வியும், வினயமும் கொண்ட ஒரு பிராமணனை ஞானிகள் எப்படிப் பார்ப்பார்களோ, அவ்வாறே அவர்கள் ஒரு பசு, யானை, நாய் மற்றும் பறையனையும் பார்ப்பார்கள்.

19.
இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந: 
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:
எவரின் மனதில் சமத்துவம் இருக்கிறதோ அவர் இங்கே (உலகில்) உள்ள எல்லா உயிர்களையும் வென்றவர் ஆகிறார். பிரம்மம் ஆனது மருவற்ற, சமமான ஒன்று. அதனால் அவர்கள் பிரம்மத்தில் நிலை கொள்கிறார்கள்.

விசாரம்
பகவான் உலகில் கர்மத்தையும், கர்த்தாவையும் உருவாக்குவதில்லை. இயற்கை சூழலே அதை உருவாக்குகிறது. பகவானுக்கு எல்லாரும் சமம் தான். யாருக்கு ஞானம் கிடைக்க வேண்டும், கிடைக்க வேண்டாம் என பார்ப்பதில்லை. ஒருவரின் சுற்றம் அவர்கள் இந்த ஞானம் பெறுவதையோ, பெறாததையோ தடுக்கிறது. எப்படி சூரியன் உதித்தவுடன் இருட்டு தொலைகிறதோ, அப்படியே இந்த ஞானம் தோன்றியவுடன் அறியாமை தொலைந்து விடும்.

'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்ற ஒரு சொற்றொடர் உண்டு. அதன் அர்த்தம் - யார் பார்த்தார்களோ, அவர்கள் நம்மிடம் அதை விவரித்து சொல்வதற்கு மீண்டு வந்ததில்லை. மிச்சம் இருப்பவர்கள் பார்த்ததில்லை. இது பிரம்மத்தைக் குறித்து தான் சொல்லப்பட்டது. இதுவே மேலே உள்ள 17 ம் ஸ்லோகத்தில் உள்ளது. எல்லோருக்கும் உள்ளே மனம் என்ற ஒன்று உள்ளது. அது கர்ம பலனை தொலைப்பதனால் புனிதம் ஆகிறது. அப்படி புனிதம் ஆகும் போது ஜீவாத்மா ஆகிறது. அந்த ஜீவாத்மா, ஞானம் பெற்று பிரம்மம் ஒன்றே குறிக்கோள் ஆகி பக்தியுடன் பயணிக்கும் போது, பரமாத்மாவோடு ஒன்றுகிறது.அப்படி பரமாத்மாவோடு கலந்த பின்னர் ஏது ஜனனம்? முக்தி தான் கிடைத்தாயிற்றே. பிரம்மத்தில் நிலை கொள்ளும் போது மனதில் ஆசை தொலையும். காணும் எல்லாவற்றிலும் பிரம்மத்தைக் காண்பதால் சம திருஷ்டி கிடைக்கும். எனவே இந்த பிரம்மத்தைப் பற்றிய ஞானம் பெற வேண்டியது அவசியம். மார்கழி மாதம் ஆண்டாள், ரங்கநாதரோடு கலந்ததும்,  கோகுலத்தில் கோபியர், ராதை கிருஷ்ணருடன் கலப்பதும் இதன் குறியீடு தான்.  ஜீவாத்மா, பரமாத்மா ஒன்றாவது தான் அத்வைதத்தின் சாரமும்.

இந்த சமயத்தில் இன்று வைகுண்ட ஏகாதசியை குறித்து தோன்றியது -  சிலர் சொர்க்க வாசல் என்று சொல்கிறார்கள். அதை சரியாகச் சொல்வது என்றால் பரமபத (வைகுண்ட) வாசல் என்று தான் சொல்ல வேண்டும். சொர்க்கம், நரகம் என்று மரணத்திற்குப் பிந்தைய இரண்டு இடங்கள் உண்டு. சராசரியான ஒருவர் செய்யும் புண்ணிய/பாவங்களைப் பொருத்து சொர்க்கமோ, நரகமோ சித்ரகுப்தன் கணக்கால் கிடைக்கும். அந்த வாசம் முடித்த பின்னர் மீண்டும் பிறப்பு ஏற்படும். கர்ம பலன் பொருத்து அது மனிதனாகவோ, பிற உயிர்களாகவோ இருக்கலாம். கர்ம பலன் முழுதையும் தொலைக்கும் வரை இந்த ஜன்ம/மரண சுழற்சி இருந்து கொண்டே இருக்கும். எப்பொழுது கர்ம பலன் முழுதும் தொலைகிறதோ, அப்பொழுது தான் மீண்டும் பிறக்காத நிலை வரும். பிரம்மத்தை பற்றிய ஞானம் அந்த நிலையைத் தருகிறது. இந்த நிலை தான் முக்தி/மோக்ஷம் ஆகும். இந்த முக்தி கிடைத்த பின் போகும் இடத்தைத் தான் சைவர்கள் கைலாயம் என்றும், வைஷ்ணவர்கள் வைகுண்டம் என்றும் சொல்கிறார்கள்.