Thursday, January 5, 2012

Chapter 5 - Sannyaasa Yoga [11-19]

11.
காயேன மநஸா புத்த்யா கேவலைர் இந்த்ரியைர் அபி
யோகிந: கர்ம குர்வந்தி ஸங்கம் த்யக்த்வாத்ம சுத்தையே 
யோகிகள் பற்றைத் தொலைத்த பின், தங்கள் உடல், மனம், அறிவு மற்றும் இந்த்ரியங்களால் ஆத்மாவைத் தூய்மைப் படுத்தவே செயல்களைச் செய்கிறார்கள்.

12.
யுக்த: கர்மப(फ)லம் த்யக்த்வா சாந்திம் ஆப்நோதி நைஷ்டிகீம்
அயுக்த: காமகாரேண ப(फ)லே ஸக்தோ நிபத்யதே
ஒருமுகப் படுத்தியவர்கள் கடமையின் பலனை தொலைத்ததனால் எல்லையற்ற அமைதியைப் பெறுகிறார்கள். தடுமாற்றம் கொண்டவர்கள், ஆசையினால் உந்தப்பட்டு, பலனின் மீது பற்று கொண்டு கட்டுண்டு இருக்கிறார்கள்.

13.
ஸர்வ கர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுக(ख)ம் வசீ 
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வந்ந காரயந்
மனதினால் எல்லாச் செயல்களையும் துறந்து விட்டு, சுயக் கட்டுப்பாட்டுடன், சந்ந்யாசிகள் ஒன்பது வாசல் கொண்ட நகரில் (உடலில்) சுகித்து இருக்கிறார்கள். அதன் மூலம் அவர்களும்  செயல்படாமல், அவர்களின் உடலையும், புலன்களையும் செயல்படாமல் வைத்திருக்கிறார்கள்.

14.
ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:
ந கர்மப(फ)ல ஸம்யோகம் ஸ்வபா வஸ்து ப்ரவர்ததே   
உலகிற்காக இறைவன் செயல்படுத்துபவர்களையும், செயல்களையும் படைப்பதில்லை. அதைப் போல செயல்களின் பலன்கள் மீதும் பற்று கொள்ள வைப்பதில்லை. இயற்கையே அவ்வாறு நடந்து கொள்கிறது.

15.
நாதத்தே கஸ்யசித் பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு:
அஜ்ஞாநேந ஆவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ:
இறைவன் எவருடைய அகீர்த்தியையும், கீர்த்தியையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஞானம் அறியாமையால் சூழப்பட்டுள்ளதால் உயிர்கள் எல்லாம் அதில் மூழ்கி உள்ளன.

16.
ஜ்ஞாநேந து தத் அஜ்ஞாநம் யேஷாம் நாசிதம் ஆத்மந:
தேஷாம் ஆதித்யவஜ் ஜ்ஞாநம் ப்ராகாசயதி தத்பரம்
ஆனால் எவருடைய அறியாமை, ஆத்மாவைப் பற்றிய ஞானத்தால் தொலைக்கப்பட்டள்ளதோ, அவர்களுக்கு சூரியனைப் போல ஞானம் பிரம்மத்தைக் காண்பிக்கும்.

17.
தத்புத்தயஸ் ததாத்மாநஸ் தந்நிஷ்டாஸ் தத்பராயணா
கச்சந்த்ய புநரா வ்ருத்திம் ஜ்ஞாந நிர்தூத கல்மஷா:
அவர்களின் சிந்தை அதில் ஆழ்ந்து, அவர்களின் ஆத்மா அதாகி, அதில் நிலை பெற்று, அதையே அடைய வேண்டிய இறுதிக் குறிக்கோளாகக் கொண்டு, அவர்கள் திரும்பி வரவே முடியாத ஒன்றை நோக்கிச் செல்கிறார்கள். அவர்களின் பாவங்கள், ஞானத்தால் தொலைகின்றது. (இங்கே அது என்பது பரப்பிரம்மத்தைக் குறிக்கும்).

18.
வித்யா விநய ஸம்பந்நே ப்ராஹ்மணே கவி ஹஸ்திநி 
சுநி சைவ ஸ்வபாகே ச பண்டிதா: ஸமதர்சிந: 
கல்வியும், வினயமும் கொண்ட ஒரு பிராமணனை ஞானிகள் எப்படிப் பார்ப்பார்களோ, அவ்வாறே அவர்கள் ஒரு பசு, யானை, நாய் மற்றும் பறையனையும் பார்ப்பார்கள்.

19.
இஹைவ தைர்ஜித: ஸர்கோ யேஷாம் ஸாம்யே ஸ்திதம் மந: 
நிர்தோஷம் ஹி ஸமம் ப்ரஹ்ம தஸ்மாத் ப்ரஹ்மணி தே ஸ்திதா:
எவரின் மனதில் சமத்துவம் இருக்கிறதோ அவர் இங்கே (உலகில்) உள்ள எல்லா உயிர்களையும் வென்றவர் ஆகிறார். பிரம்மம் ஆனது மருவற்ற, சமமான ஒன்று. அதனால் அவர்கள் பிரம்மத்தில் நிலை கொள்கிறார்கள்.

விசாரம்
பகவான் உலகில் கர்மத்தையும், கர்த்தாவையும் உருவாக்குவதில்லை. இயற்கை சூழலே அதை உருவாக்குகிறது. பகவானுக்கு எல்லாரும் சமம் தான். யாருக்கு ஞானம் கிடைக்க வேண்டும், கிடைக்க வேண்டாம் என பார்ப்பதில்லை. ஒருவரின் சுற்றம் அவர்கள் இந்த ஞானம் பெறுவதையோ, பெறாததையோ தடுக்கிறது. எப்படி சூரியன் உதித்தவுடன் இருட்டு தொலைகிறதோ, அப்படியே இந்த ஞானம் தோன்றியவுடன் அறியாமை தொலைந்து விடும்.

'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்ற ஒரு சொற்றொடர் உண்டு. அதன் அர்த்தம் - யார் பார்த்தார்களோ, அவர்கள் நம்மிடம் அதை விவரித்து சொல்வதற்கு மீண்டு வந்ததில்லை. மிச்சம் இருப்பவர்கள் பார்த்ததில்லை. இது பிரம்மத்தைக் குறித்து தான் சொல்லப்பட்டது. இதுவே மேலே உள்ள 17 ம் ஸ்லோகத்தில் உள்ளது. எல்லோருக்கும் உள்ளே மனம் என்ற ஒன்று உள்ளது. அது கர்ம பலனை தொலைப்பதனால் புனிதம் ஆகிறது. அப்படி புனிதம் ஆகும் போது ஜீவாத்மா ஆகிறது. அந்த ஜீவாத்மா, ஞானம் பெற்று பிரம்மம் ஒன்றே குறிக்கோள் ஆகி பக்தியுடன் பயணிக்கும் போது, பரமாத்மாவோடு ஒன்றுகிறது.அப்படி பரமாத்மாவோடு கலந்த பின்னர் ஏது ஜனனம்? முக்தி தான் கிடைத்தாயிற்றே. பிரம்மத்தில் நிலை கொள்ளும் போது மனதில் ஆசை தொலையும். காணும் எல்லாவற்றிலும் பிரம்மத்தைக் காண்பதால் சம திருஷ்டி கிடைக்கும். எனவே இந்த பிரம்மத்தைப் பற்றிய ஞானம் பெற வேண்டியது அவசியம். மார்கழி மாதம் ஆண்டாள், ரங்கநாதரோடு கலந்ததும்,  கோகுலத்தில் கோபியர், ராதை கிருஷ்ணருடன் கலப்பதும் இதன் குறியீடு தான்.  ஜீவாத்மா, பரமாத்மா ஒன்றாவது தான் அத்வைதத்தின் சாரமும்.

இந்த சமயத்தில் இன்று வைகுண்ட ஏகாதசியை குறித்து தோன்றியது -  சிலர் சொர்க்க வாசல் என்று சொல்கிறார்கள். அதை சரியாகச் சொல்வது என்றால் பரமபத (வைகுண்ட) வாசல் என்று தான் சொல்ல வேண்டும். சொர்க்கம், நரகம் என்று மரணத்திற்குப் பிந்தைய இரண்டு இடங்கள் உண்டு. சராசரியான ஒருவர் செய்யும் புண்ணிய/பாவங்களைப் பொருத்து சொர்க்கமோ, நரகமோ சித்ரகுப்தன் கணக்கால் கிடைக்கும். அந்த வாசம் முடித்த பின்னர் மீண்டும் பிறப்பு ஏற்படும். கர்ம பலன் பொருத்து அது மனிதனாகவோ, பிற உயிர்களாகவோ இருக்கலாம். கர்ம பலன் முழுதையும் தொலைக்கும் வரை இந்த ஜன்ம/மரண சுழற்சி இருந்து கொண்டே இருக்கும். எப்பொழுது கர்ம பலன் முழுதும் தொலைகிறதோ, அப்பொழுது தான் மீண்டும் பிறக்காத நிலை வரும். பிரம்மத்தை பற்றிய ஞானம் அந்த நிலையைத் தருகிறது. இந்த நிலை தான் முக்தி/மோக்ஷம் ஆகும். இந்த முக்தி கிடைத்த பின் போகும் இடத்தைத் தான் சைவர்கள் கைலாயம் என்றும், வைஷ்ணவர்கள் வைகுண்டம் என்றும் சொல்கிறார்கள். 

1 comment:

  1. //எப்படி சூரியன் உதித்தவுடன் இருட்டு தொலைகிறதோ, அப்படியே இந்த ஞானம் தோன்றியவுடன் அறியாமை தொலைந்து விடும். .//

    அருமையான விளக்கம்.

    ReplyDelete