11.
அயநேஷுச ஸர்வேஷு யதாபாகம் அவஸ்திதா:
பீஷ்மம் ஏவாபி ரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி
ஆகையினால் நீங்கள் எல்லோரும், சேனையின் பல்வேறு அணிகளில் உள்ள உங்களின் நிலைகளில் இருந்து பீஷ்மரை மட்டும் காப்பாற்றுங்கள்.
12.
தஸ்ய ஸஞ்சநயந் ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:
சிம்ஹநாதம் வினத்யோச்சை: ஸங்கம் தத்மௌ ப்ரதாபவாந்
கௌரவர்களிடையே வயதில் பெரியவரும், அவனின் பெருமதிப்பிற்குரிய பெரிய பாட்டனாரும் ஆன பீஷ்மர், துர்யோதனனை உற்சாகப்படுத்த இப்பொழுது சிம்ஹ கர்ஜனை செய்து தன்னுடைய சங்கை ஊதினார். 13.
தத: சங்காச்ச பேர்யச்ச பணவாநக கோமுகா:
ஸஹ சைவாப்ய ஹந்யந்த ஸ சப்தஸ் துமுலோ பவத்
அதனைத் தொடர்ந்து சங்குகளும், பேரிகைகளும், முரசுகளும், பசுவின் கொம்புகளும் திடீர் என கௌரவர்களின் பக்கமிருந்து முழங்கின. அதன் சப்தம் பெரிதாக இருந்தது. 14.
தத: ஸ்வேதைர் ஹயைர் யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ
மாதவ: பாண்டவச்சைவ திவ்யௌ சங்கௌ பிரதக்மது:
அதன் பின்னர் மாதவனான கிருஷ்ணனும், பாண்டு புத்திரனாகிய அர்ஜுனனும், வெள்ளைக் குதிரைகளால் பூட்டப்பட்ட தங்களின் பெரிய ரதத்தில் இருந்து கொண்டு தங்களின் புனித சங்குகளை முழங்கினார்கள்.15.
பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேஷோ தேவதத்தம் தநஞ்சய:
பௌண்ட்ரம் தத்மௌ மஹாசங்கம் பீமகர்மா வ்ருகோதர:
ஹ்ருஷீகேசன் பாஞ்சஜன்யம் என்ற சங்கையும், அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கையும், கடுமையான செயல்களைச் செய்யும் பீமன் பவுண்ட்ரம் என்ற தனது சிறந்த சங்கையும் முழங்கினார்கள்.
16.
அநந்தவிஜயம் ராஜா குந்தீ புத்ரோ யுதிஷ்டிர:
நகுல: ஸஹதேவச்ச சுகோஷ மணிபுஷ்பகௌ
குந்தியின் புத்திரரான யுதிஷ்டிரர் அனந்தவிஜயம் என்ற சங்கையும், நகுலன் மற்றும் சகாதேவன் சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் முழங்கினார்கள்.
17.
காச்யச்ச பரமேஷ்வாஸ: சிகண்டீ மஹாரதா:
த்ருஷ்டத்யும்நோ விராடச்ச சாத்யகிச்சாபராஜித:
காசி ராஜா, சிறந்த வில்லாளன் ஆன சிகண்டீ, மகாரதன் ஆன திருஷ்டத்யும்னன், விராடன், வெற்றி கொள்ள முடியாத சாத்யகி,
18.
த்ருபதோ த்ரௌபதேயாச்ச ஸர்வச: பருதிவீ பதே
சௌபத்ரச்ச மஹாபாஹூ சங்காந் தத்மு: ப்ருதக் ப்ருதக்
துருபதன், திரௌபதியின் புத்திரர்கள், பெருந் தோள்களை உடைய சுபத்ரையின் புத்திரன் அபிமன்யு - அனைவரும் தத்தமது சங்குகளை முழங்கினார்கள் ஜகத்தின் அதிபதியே!
19.
நபச்ச ப்ருதிவீம் சைவ துமுலோப்யநு நாதயந்
இந்த கோஷங்கள் எல்லாம் திரிதராஷ்ட்ரனின் அணியான கௌரவ சேனையின் இதயத்தைத் துளைத்தது, வானும், மண்ணும் அதிர்ந்தது.
20.
அத வ்யவஸ்திதாந் த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ:
ப்ரவ்ருத்தே சஸ்த்ர ஸ்ம்பாதே தநுர் உத்யம்ய பாண்டவ:
ஜகத்தின் அதிபதியே! திரிதராஷ்ட்ரனின் அணியில் உள்ளவர்கள் அணி வகுத்து நிற்பதைப் பார்த்து, யுத்தம் ஆரம்பம் ஆவதற்கு முன்பு, குரங்கைத் தனது கொடியாகக் கொண்டுள்ள பாண்டுவின் புத்திரனான அர்ஜுனன் தனது வில்லை ஏந்தி கிருஷ்ணனிடம் பின் வருவனவற்றைக் கூறினான்.
விசாரம்
பாண்டவர்களின் கொடியில் இருப்பது அனுமன். அவரைத் தான் சஞ்சயன், குரங்கு என்று சொல்கிறான். பாண்டவர்கள் வன வாசம் செய்யும் போது, பீமன் சௌகந்திக புஷ்பத்தைத் தேடித் போகும் போது அனுமனைச் சந்திப்பான். அவரை அடையாளம் கண்ட பின்னர் அவரிடம் ஆசி வாங்குவான். இருவருமே வாயு குமாரர்கள் இல்லையா? அனுமன் பாண்டவர்களின் கொடியில் இருந்து அவர்களைக் காத்தார்.
மகாபாரத யுத்தம் ஆரம்பத்தில் பாண்டவர், கௌரவர் இடையே யுத்த தர்மம் பற்றிய ஒரு உடன்பாடு இருந்தது. யுத்தம் செய்யும் போது அது 'battle of equals' ஆக இருக்க வேண்டும் - சம அந்தஸ்தில் உள்ளவரிடையே சண்டை இருக்க வேண்டும் (குதிரைப்படை - குதிரைப்படை, யானைப்படை - யானைப்படை, தேர்ப்படை - தேர்ப்படை, மற்றும் காலாட்படை - காலாட்படை), பெண், குழந்தைகளைக் காயப்படுத்தக் கூடாது, அவர்களோடு போர் செய்யக் கூடாது, இரவினில் போர் செய்யக் கூடாது, ஒருவருக்கு ஒருவர் என்று தான் யுத்தம் இருக்க வேண்டும், போரில் காயம் பட்டோ, அல்லது விலகியோ செல்பவரைத் தாக்கக் கூடாது என்று பல விதிகள். இவை எல்லாம் பின் பற்றினார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். த்ரேதா யுகத்தில் நடந்த ராமாயண யுத்தத்தில் ராம ராவண சண்டையின் போது ராவணன் தனது ஆயுதங்கள் எல்லாம் தொலைத்து நிற்கின்றான். கம்பர் கூட அழகாகச் சொல்லுவார் - 'கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று. ஒரு ethics இருந்தது அதில். ராமர் சூழ்நிலையை சாதகம் ஆக்கிக் கொள்ளவில்லை. ஆனால் துவாபர யுகத்தில் நடந்த மகாபாரத யுத்தத்தில் ஓரளவு free for all என்று தான் சொல்ல வேண்டும். விதிமீறல்களைப் பார்ப்போம்:
பீஷ்மரை வீழ்த்த பத்தாம் நாள் யுத்தத்தில் அர்ஜுனன், கிருஷ்ணரின் உபதேசப்படி சிகண்டி என்ற நகும்சகனை முன்னிறுத்தி வீழ்த்துவது,
பதிமூன்றாம் நாள் யுத்தத்தில் பத்ம (சக்கர) வியூகத்தில் சிக்கிய அபிமன்யுவை கௌரவ சேனையின் துரோணர், அஸ்வத்தாமா, கர்ணன், க்ருதவர்மா, கிருபாசாரியார் ஒரே சமயத்தில் போரிடுவது,
பதினான்காம் நாள் யுத்தத்தில் கை இழந்த பூரிஸ்ரவசை கொலை செய்யும் சாத்யகி,
பதினைந்தாம் நாள் யுத்தத்தில் துரோணரை அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் என்று சொல்லி வீழ்த்துவது
பதினாறாம் நாள் யுத்தத்தில் இரவிலும் நடக்கும் கடோத்கஜன் வதம்,
பதினேழாம் நாள் கர்ணன் தனது ரதத்தை, சேறில் இருந்து தூக்கும் போது கொல்லும் அர்ஜுனன்,
பீமன் துர்யோதனின் தொடைக்குக் கீழே கதையால் தாக்கி வீழ்த்துவது,
அன்று இரவு அஸ்வத்தாமன் தூங்கும் பாண்டவ சேனையை எரித்துக் கொல்வது
இறுதி நாளன்று அஸ்வத்தாமன் கர்ப்பிணியான உத்திரை மீது பிரம்மாஸ்திரம் ஏவி சிசுவான பரீக்ஷிதைக் கொல்லப் பார்ப்பது.
இது தவறு தான். அனால் இதை எல்லாம் நியாயப்படுத்த கிருஷ்ணர் துர்யோதனனிடம் சொன்னதை எடுத்துக் கொள்ளலாம். தான் வீழ்த்தப்பட்டவுடன் அவன் கிருஷ்ணரை இகழ்வான். அவர் செய்தது தர்மமா எனக் கேட்பான். அதற்கு பதிலாக கிருஷ்ணர் - 'அதர்மம் செய்பவனிடம் தர்மப்படி யுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என்பார். இந்த தர்மத்தைப் பற்றிய அளவுகோல் மாற்றம் ராமாயண, மகாபாரத யுத்தத்தில் காணக் கிடைப்பது. தற்போது கலி யுகத்தில் கேட்கவே வேண்டாம். Rat race தான்.
No comments:
Post a Comment