51.
கர்மஜம் புத்தியுக்தா ஹி ப(फ)லம் த்யக்த்வா மநீஷிண:
ஜந்ம பந்த விநிர்முக்தா: பதம் கச்சந்த்ய நாமயம்
அறிவுள்ளவர்கள் ஞானத்தைப் பெற்று, தங்கள் செயல்களின் பலன்களை துறந்து, (மறு) பிறப்பு என்ற தளையில் இருந்து விடுபட்டு, எந்த ஒரு தீங்கிற்கும் அப்பால் உள்ள இடத்திற்குச் செல்வார்கள்.
52.
யதா தே மோஹகலிலம் புத்திர் வ்யதிதரிஷ்யதி
ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச
உனது அறிவு, மாயை என்னும் குழப்பத்தைத் தாண்டும் போது, நீ இது வரை கேட்டதையும், கேட்கப் போவதையும் குறித்து எந்த விதமான வேதனையும் கொள்ளாது.
53.
ஸ்ருதி விப்ரதி பந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிச்சலா
ஸமாதா வசலா புத்திஸ் ததா யோகம் அவாப்ஸ்யஸி
உனது அறிவு எதைக் கேட்டும் கலங்காமல், எப்பொழுது பிரம்மத்தில் உறுதியாக இருக்குமா, அப்பொழுது நீ யோகத்தை அடைவாய்.
54.
அர்ஜுந உவாச
ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேசவ
ஸ்திததீ : கிம் ப்ரபாஷேத கீமாஸீத வ்ரஜேத கிம்
அர்ஜுனன் சொன்னது:
கிருஷ்ணா: ஸ்தித பிரஜ்ஞன் எனப்படும் கலங்காத அறிவும், பிரம்மத்தில் கலந்தவனும் ஆன அவனைப் பற்றிய விளக்கம் என்ன? கலங்காத அறிவைக் கொண்ட ஒருவன் எவ்வாறு பேசுவான்? எப்படி உட்காருவான்? எப்படி நடப்பான்?
55.
ஸ்ரீ பகவான் உவாச
ப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த மநோகதாந்
ஆத்மந்யேவ ஆத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ் ததோச்யதே
ஸ்ரீ பகவான் சொன்னது:
அர்ஜுனா! ஒருவன் மனதில் இருந்து எல்லா ஆசைகளையும் விலக்கி, தன் அளவில் அவன் திருப்தி அடைந்து இருக்கும் போது, அவன் உறுதியான அறிவைக் கொண்ட ஸ்தித பிரஜ்ஞன் ஆகிறான்.
56.
து:கேஷ்வநுத் விக்நமநா: ஸுகேஷு விகதஸ் ப்ருஹ:
வீதராக பய க்ரோத: ஸ்திததீர் முநிர் உச்யதே
எவனுடைய மனம் கஷ்டம் ஏற்படும் போது கலங்காமல் இருக்குமோ, எவன் சுக போகங்களின் பின்னே செல்ல மாட்டானோ, எவன் பற்று, பயம், கோபம் இவற்றில் இருந்து விடுபட்டுள்ளானோ, அவன் ஸ்தித அறிவைக் கொண்ட முனிவன் ஆகிறான்.
57.
ய: ஸர்வத்ரா நபிஸ்நேஹஸ் தத்தத் ப்ராப்ய சுபாசுபம்
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா பிரதிஷ்டிதா
நல்லதோ, கெட்டதோ எதைச் சந்தித்தாலும் எவன் எங்குமே பற்றில்லாமல் இருக்கிறானோ, எவன் சந்தோசப்படவோ, வெறுக்கவோ இல்லையோ அவன் அறிவு கலங்காமல் இருக்கும்.
58.
யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோ (அ)ங்காநீவ ஸர்வச:
இந்த்ரியாண் இந்த்ரியார்தே(அ)ப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா பிரதிஷ்டிதா:
தனது அங்கங்களை எல்லாம் எல்லாப் பக்கங்களிலும் ஒடுக்கிக் கொள்ளும் ஒரு ஆமையைப் போல எவன் தனது புலன்களை லௌகீக வஸ்துக்களில் இருந்து விலக்கிக் கொள்கிறானோ, அவன் அறிவு ஸ்திரமாக இருக்கும்.
59.
விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:
ரஸ வர்ஜம் ரஸோ(அ)ப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே
லௌகீக வஸ்துக்கள் ஸ்திதப்ரஜ்ஞன் ஆன ஒருவனிடம் இருந்து விலகிச் செல்கின்றன. ஆனால் இவனிடம் அந்த ஏக்கம் தங்கி உள்ளது. அந்த ஏக்கமும் பரமாத்மாவைக் கண்ட உடன் விலகி விடுகிறது.
60.
யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபச்சித:
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:
அர்ஜுனா! அறிவுள்ள மனிதன் ஒருவன், தனது புலன்களை அடக்க முயற்சி செய்தாலும் இந்த கலங்க அடிக்கும் ஆசைகள், அவன் மனதை கொள்ளை அடித்துச் சென்று விடுகின்றன.
61.
தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:
வசே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா பிரதிஷ்டிதா
அவன் புலன்களை அடக்கிய பின்னர், என்னைக் குறித்த தியானத்தில் அமர வேண்டும். அவன் புலன்கள் அடக்கப் படும் போது அவன் அறிவு ஸ்திரமாக இருக்கும்.
விசாரம்
இந்த பலன்களின் மீதுள்ள ஆசைகளைத் துறப்பது எப்படி என்று பார்ப்போம். தீய செயல்களை செய்தால் அது பாவம், அதற்கான தண்டனை கிடைக்கும் என்று நாம் அதைச் செய்வதில்லை. செய்யவும் கூடாது. அதை விடுவோம்.
ஒரு நல்ல காரியம் செய்கிறோம். உதாரணமாக ஈஸ்வரனைக் குறித்து ஒரு ஸ்லோகத்தை பாராயணம் செய்கிறோம். ஒரு ஸ்லோகம் சொல்லும் போது அதற்கென ஒரு ப(फ)லஸ்ருதி இருக்கும். இந்தப் பலன் அந்த ஸ்லோகத்தை சொன்ன அவனுக்கு தனிப்பட்ட பலன் கொடுக்கும், கூடவே அந்த சமூகத்திற்கும் பலன் கொடுக்கும். மழை நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு காட்டாமல் எல்லாருக்கும் பெய்வது மாதிரி இந்த பலனும் சமூகத்தில் எல்லோருக்கும் கிடைக்கும். ஒரு சைக்கிள் ஓட்டும் போது pedal செய்வதை நிறுத்தினாலும் முந்தய momentum கொண்டு அது சில தூரம் போவது மாதிரி, கஷ்ட காலத்திலும் முன்பு செய்த புண்ணிய பலன்கள் நம்மை முன்னே செல்ல உதவி செய்யும். இந்த பலஸ்ருதி எதனால் இருக்கிறது என்றால், ஆரம்பத்தில் ஒருவன் இந்த ஸ்லோகத்தின் மீது ஈடுபாடு கொண்டு ஸ்ரத்தையுடன் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான். இந்த தனிப்பட்ட பலன் மீது ஆசை கொள்ளாமல், நாம் அந்த பலனை ஈஸ்வரனுக்கே அர்ப்பணம் செய்து விட்டால், அந்த மன நிலையை நம்முள் கொண்டால், நாளாவட்டத்தில் அதை எல்லா செயல்களுக்கும் விரிவுபடுத்தி நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளலாம். அதனால் நாம் ஈஸ்வரனுக்குச் செய்யும் எல்லா பூஜையின் பலன்களை அவனுக்கே அர்ப்பணம் செய்வது பலன்களின் மீது ஆசை கொள்வதை விடும் முதல் படி.
ஸ்தித பிரஜ்ஞன் பற்றிய விளக்கத்தை அர்ஜுனன் கேட்க இங்கே ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார். நம் மனம் நாம் செய்யும் கடமையின் பலன் மீது உள்ள ஆசையைத் துறக்கும் போது ஜந்ம பந்தத்தில் இருந்து விடுபட்டு மோக்ஷத்தை, மறு பிறப்பிலாத நிலையை அடையலாம் என்கிறார். அப்படிப்பட்ட மன நிலையைக் கொண்டவன் எந்த ஒரு விஷயத்தாலும் சந்தோசம்/துக்கம், கொள்ள மாட்டான் என்பதைப் பார்த்தோம். நமது மனது ஒரு குரங்கைப் போன்றது - எல்லாவற்றின் மீதும் ஆசை கொள்ளும். அது நிராசை ஆனால் அதனால் கோவப்படும். அந்த ஆசையின் காரணமாக துஷ்ட காரியங்கள் செய்யத் தூண்டுகிறது. சரி இதை எப்படி அடக்குவது. ஒரு உதாரணம் பார்ப்போம் - ஒரு குரங்கை ஒரு நூறு அடி நீள கயிற்றால் கட்டி வைப்போம். அந்த குரங்கும் 100 அடி வட்டத்தில் உள்ள பரப்பளவில் சுற்ற முடிகிறது. அதற்கு வெளியே போனால் கயிற்றின் சுருக்கு அதை நெரிக்கும். சில மணி நேரங்களில் அந்த குரங்கு அந்த 100 அடி பரப்பளவிற்கு தன்னைச் சமாதானப் படுத்திக் கொள்கிறது. இப்பொழுது, அந்த கயிற்றின் நீளத்தை 50, 25, 10, 1 அடி என்று குறைத்துக் கொண்டே வருவோம். குரங்கும் அந்த குறைந்த பரப்பளவிற்கு வேறு வழி இல்லாமல் ஏற்றுக் கொள்கிறது. இந்த கயிறு என்பது நமது ஆசையைப் போன்றது. நாமும் நமது ஆசையை வயது ஏற ஏற ஒவ்வொன்றாக குறைத்துக் கொண்டே வருவோம். ஒரு சமயத்தில் இந்த material world மீது உள்ள ஆசை முற்றிலும் போய் விடும். கிடைத்ததை வைத்து திருப்தி கொண்டு, ஆசை, கோபம் இவற்றை நீக்கும் போது நாமும் அந்த பிறப்பற்ற நிலையை அடையலாம். அதுவே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment