Tuesday, March 12, 2013

Chapter 7 - Jnaana Vijjnaana Yoga [21-30]

21.
யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஸ்ரத்தயார்சிதுமிச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம் யஹம்
எந்த வடிவிலேனும், சிரத்தையுடன் வணங்க எந்த ஒரு பக்தனும் விரும்பினால், நான் அந்த சிரத்தையை தளர்வில்லாததாகவும்,
உறுதியாகவும் ஆக்கும் வடிவை எடுப்பேன்.

22.
ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ் தஸ்யாராத நமீஹதே
லபதே ச தத: காமாந் மயைவ விஹிதாந் ஹிதாந்
அந்த பக்தியுடன், அவன் அந்த வடிவை வணங்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் இருந்து அவன் விரும்பியதை அடைகிறான். என்றாலும் அதை அமைத்துக் கொடுப்பது நானே.

23.
அந்தவத்து ப(फ )லம் தேஷாம் தத்பவத் யல்ப மேதஸாம்
தேவாந் தேவயஜோ யாந்தி மத்பக்தா யாந்தி மாமபி
சிற்றறிவு கொண்ட மக்கள் பெறும் பலன் ஒரு அளவிற்குட்பட்டது. கடவுளை வணங்குபவர்கள் அவர்களை அடைகிறார்கள். ஆனால் என் பக்தர்கள் என்னை அடைகிறார்கள்.

24.
அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:
பரம் பாவமஜாநந்தோ மம ஆவ்யயம் அனுத்தமம்
அறிவற்றவர்கள் அரூபம் ஆன என்னை ஒரு வடிவுக்குள் உள்ள ஒருவனாக எண்ணுகிறார்கள். என் உயர்ந்த, அழிவற்ற உத்தம நிலையை அவர்கள் அறிவதில்லை.

25.
நாஹம் பிரகாச ஸர்வஸ்ய யோகமாயா ஸமாவ்ருத:
மூடோயம் நாபிஜாநாதி லோகோ மாம் அஜம் அவ்யயம்
அவர்களை யோக மாயை சூழப் பட்டுள்ளதால், நான் என் உண்மை வடிவில் அவர்களுக்குத் தெரிவதில்லை. மாயையில் மூழ்கிய இந்த உலகிற்கு, பிறப்பற்ற, அழிவற்ற என்னைத் தெரிவதில்லை.

26.
வேதாஹம் ஸமதீதாநி வர்த்தமாநாநி சார்ஜூந
பவிஷ்யாணி  ச பூதாநி மாம் து வேதந கச்சந
அர்ஜுனா! கடந்த கால, நிகழ் கால மற்றும்  வருங்காலத்திய எல்லா உயிர்களையும் நான் அறிவேன், ஆனால் என்னை யாரும் அறிந்தவர் இல்லை.

27.
இச்சாத் வேஷ ஸமுத்தேந த்வ்ந்த்வ மோஹேந பாரத
ஸர்வ பூதாநி ஸம்மோஹம் ஸர்கே யாந்தி பரந்தப
அர்ஜுனா! பகைவனை அழிப்பவனே! ஜோடியான ஆசை மற்றும் வெறுப்பின் காரணமாக எழும் மயக்கத்தினால், எல்லா உயிர்களும் பிறப்பிலேயே மாயையினால் கட்டுண்டு உள்ளன.

28.
யேஷாம்  த்வந்தகதம் பாபம் ஜநாநாம் புண்ய கர்மணாம்
தே த்வந்த்வ மோஹ நிர்முக்தா பஜந்தே மாம் த்ருடவ்ரதா:
ஆனால் எந்த மனிதர்கள் தங்களின் புண்ணிய செயல்களால், தங்களின் பாவங்களைத் தொலைத்துள்ளனரோ, எவர்கள் இந்த ஜோடியான மாயையில் இருந்து விடுபட்டுள்ளனரோ, அவர்கள் திட உறுதியோடு என்னை வணங்குகிறார்கள்.

29.
ஜரா மரண மோக்ஷாய மாமாச்ரித்ய யதந்தி யே
தே ப்ரஹ்ம தத்விது:க்ருத்ஸ்நம் அத்யாத்மம் கர்ம சாகிலம்
முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றில் இருந்து விடுபட எண்ணுபவர்கள், என்னைச் சரணாகதி அடைவதன் மூலம், பிரம்மத்தை முழுவதும் அறிந்து, அதைக் குறித்த ஞானமும், செயலும் அறிவார்கள்.

30.
ஸாதி பூதாதி தைவம் மாம் ஸாதியஜ்ஞம் ச யே விது:
ப்ரயாண காலே(அ)பி ச மாம் தே விதுர் யுக்த சேதஸ:
எவர் ஒருவர் தனது  இறுதிக் காலத்திலேனும், உறுதியான மனதுடன் என்னை பூத ஞானம், தேவ ஞானம் மற்றும் யாக ஞானம் ஆகியவற்றோடு அறிவரோ - அவரே அறிஞர்; மரணம் அவர்களைப் பாதிப்பதில்லை.

இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே ஞான விஜ்ஞான யோகோ நாம ஸப்தமோ(அ)த்யாய: 

விசாரம்
 ஒருவன் எந்த வடிவில் இறைவனை வேண்டினாலும், அவனது குறிக்கோள் இறைவனை அடைவதே. பகவானும் தன்னைக் குறித்தே அவன் பக்தி செலுத்தியதாகக் கருதி அவன் பக்தியை ஏற்றுக்கொள்கிறார். பக்தர்களில் எத்தனையோ வகை - கஷ்டத்தில் இருப்பவர்கள், செல்வத்தை வேண்டுபவர்கள், ஞானிகள் - ஞானத்தை வேண்டுபவர்கள் என்று. இதில் பகவானின் பிரியத்திற்கு உள்ளானவர்கள் ஞானிகளே.

ஒரு பலனை எதிர்பார்த்து செய்யும்  பக்தனும் பகவானை ஒரு வடிவத்தில் சுருக்கி வேண்டுவர். அவர்கள் உண்மையான பகவானை அறிவதில்லை. பகவானின் எல்லையற்ற சக்தியை அறிவதில்லை. மாயை அவர்கள் கண்ணை மறைக்கின்றது. ஆகையால் அவர்கள் பெறும்  பலனும் ஒரு எல்லைக்குட்பட்டதாக இருக்கும்.

 ஒரு ஞானியான பக்தன், உண்மையான அன்புடன் பகவானை வேண்டுகிறான்.
அதில் ஒரு பிரதி உபகாரம் தேடுவதில்லை.  சுற்றி உள்ள எல்லாவற்றிலும் இறைவனைக் காண்கிறான். எல்லா உயிர்களும் பிறக்கையில் இந்த மாயையைக்
கொண்டுள்ளன தான்.  தங்களின் புண்ணிய கர்மாக்களினால், பாவங்களைத் தொலைத்து ஞானிகள் மாயையை ஒழிக்கிறார்கள்.அத்தகைய ஞானிகள் பகவானை சரண் அடைந்து பிரம்மத்தை அறிகிறார்கள். அவர்களுக்கு ஜன்மம், மரணம், முதுமை, விதி என்ற எந்த பயமும் இல்லை. முக்காலமும் உணர்ந்தவன் இறைவன் என்பதை உணர்ந்தவர்கள். நாமும் ஞாநியாக வேண்டியது அவசியம்.