Monday, August 29, 2011

Chapter 2 - Saankhya Yoga [11-20]

11.
ஸ்ரீ பகவான் உவாச:
அசோச்யாந் அந்வ சோசஸ்த்வம் ப்ரஜ்ஞா வாதாம்ச்ச பாஷஸே
கதாசூநகதா சூம்ச்ச நாநுசோசந்தி பண்டிதா:
ஸ்ரீ பகவான் சொன்னது:
யாருக்காக வருத்தப் படக் கூடாதோ - அவர்களுக்காக நீ வருந்துகிறாய். அறிவு நிறைந்த வார்த்தைகளைப் பேசுகிறாய். அறிவுக் கூர்மை உள்ளவர்கள் உயிரோடு இருப்பவர்களுக்காகவோ, இறந்தவர்களுக்காகவோ வருந்துவதில்லை.

12.
ந த்வேவாஹம் ஜாது நாசம் ந த்வம் நேமே ஜனாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: சர்வே வயம் அத: பரம்
இதற்கு முன் நான் எந்த ஒரு சமயத்திலும் இல்லாதிருந்தேன். இங்குள்ள அரசர்களும் அவ்வாறே. நாம் வருங்காலத்திலும் இல்லாமல் போக மாட்டோம்

13.
தேஹிநோ(அ)ஸ்மின் யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா
ததா தேஹாந்தர ப்ராப்திர் தீரஸ் தத்ர ந முஹ்யதி
இந்த சரீர உடல் எப்படி குழந்தைப் பருவம், வாலிபம், முதுமை என்று கடக்கிறதோ - அது போலவே ஆத்மாவும் கடக்கிறது. இன்னொரு சரீர உடலுக்கு மாறுகிறது. திட மனது உடையவன் இதற்காக வருந்த மாட்டான்.

14.
மாத்ராஸ்பர்சாஸ்து கௌந்தேய சீதோஷ்ண சுக து:கதா:
ஆகமா பாயிநோ(அ)நித்யாஸ் தாம்ஸ்திதி க்ஷஸ்வ பாரத
குந்தியின் பிள்ளையே! வெப்பம், குளிர், இன்பம், துன்பம் இவற்றை தருபவை மீது இந்த உடல் வைத்திருக்கும் தொடர்பிற்கு ஒரு ஆரம்பமும், முடிவும் உள்ளது. அது நிலைத்து இருப்பதல்ல. தைரியமாக இதைப் பொறுத்துக் கொள் அர்ஜுனா!

15.
யம் ஹி ந வ்யதயந்த் யேதே புருஷம் புருஷர்ஷப
ஸம து:க சுகம் தீரம் ஸோ(அ )ம்ருதத்வாய கல்பதே
புருஷர்களிடையே தலைவனாக இருக்கக் கூடியவனே! அந்த திட மனிதனை - எவனை இவை பாதிக்காதோ, எவனுக்கு சுகம், துக்கம் இரண்டும் சமமோ - அவனே மோக்ஷம் பெறுவதற்கு தகுதி பெற்றவன்.

16.
நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:
உபயோர் அபி த்ருஷ்டோ(அ)ந்தஸ் த்வநயோஸ் தத்த்வ தர்சிபி:
இல்லாமல் இருப்பது உண்மை ஆகாது. உண்மையாக இருப்பது இல்லாமல் போகாது. உண்மையை அறிந்தவர்கள் இவை இரண்டையும் அறிவர். அவர்களே இந்த தத்துவத்தைக் கண்டவர்கள்.

17.
அவினாசி து தத் வித்தி யேந ஸர்வம் இதம் ததம்
விநாசம் அவ்யயஸ்யாஸ்ய ந கச்சித் கர்தும் அர்ஹதி
ஆத்மாவாகிய அது அழிவில்லாதது. அது இங்குள்ள எல்லாவற்றிலும் பரந்து விரிந்து உள்ளது. அழிவில்லாத அதற்கு எவராலும் அழிவை ஏற்படுத்த முடியாது.

18.
அந்தவந்த இமே தேஹா நித்யஸ் யோக்தா: சரீரிண:
அநாசிநோ அப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத
சாஸ்வதமான, அழிவில்லாத, கணக்கிட முடியாத இந்த ஆத்மா உறைகின்ற உடலுக்கோ முடிவு என்ற ஒன்று உண்டு. எனவே அர்ஜுனா! நீ யுத்தம் செய்.

19.
ந ஏநம் வேத்தி ஹந்தாரம் யச்சைநம் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே
எவன் ஒருவன் தன்னைக் கொல்பவன் என்றோ,  கொல்லப்படுபவன் என்றோ நினைக்கின்றானோ - இரண்டிலும் அவன் ஒன்றை அறியவில்லை. அவன் கொல்லவும் இல்லை, கொல்லப்படுபவனும் இல்லை

20.
ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந் நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: சாஸ்வதோ(அ)யம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே சரீரே 
அவன் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை. ஒரு முறை உருவான பின், இல்லாமல் போவதும் இல்லை. அவன் பிறப்பில்லாதவன் (அநாதி), சாஸ்வதம் ஆனவன், மாற்றம் இல்லாதவன், பழமையானவன். அவன் உடல் கொல்லப்படும் போதும் ஆத்மாவாகிய அவனிற்கு அழிவில்லை.

விசாரம்
கிருஷ்ணரின் உபதேசம் இதில் இருந்து தான் ஆரம்பம். ஆத்மாவைப் பற்றிய வர்ணனையில் இருந்து ஆரம்பிக்கும்.

பதினாறாம் ஸ்லோகத்தில் சொல்வது வெளிப்படையாகப் புரிவது கொஞ்சம் கஷ்டம் போல இருந்தாலும் அதன் அர்த்தம்:
நம்மைச் சுற்றி உள்ள (சரீர உடல் கொண்ட மனிதர்கள், பொருட்கள்) எல்லாமே சாஸ்வதம் ஆனவை இல்லை. அவை எல்லாவற்றிற்கும் இறுதி, முடிவு என்ற ஒன்று உண்டு. இவை தான் 'இல்லாமல் இருப்பது' என்று சொல்லப்படுகிறது. ஆத்மா என்பதற்கு அப்படி எந்த ஒரு ஆதியோ, அந்தமோ கிடையாது. இது தான் 'உண்மையாக இருப்பதாக'ச் சொல்லப்படுகிறது. இதை உணர்ந்த ஒருவனுக்கு மோக்ஷம் சாத்தியம்.

சுகமோ,  துக்கமோ, வெப்பமோ, குளிரோ எதுவாக இருந்தாலும் அவை நிலைத்து இருக்காது. அதற்கு ஒரு ஆதியும், அந்தமும் உண்டு. தித்திப்பாக இருக்கிறது என்பதற்காக நம்மால் இனிப்பாக சாப்பிட முடியுமா, அதை சமன் செய்ய பிற சுவையும் நம் நாக்கு கேட்கிறதே. அதை போலவே நம் வாழ்கையை சமன் செய்ய சுகமும், துக்கமும் அவசியம். துக்கம் வந்தால் தானே சுகத்தின் அருமை தெரியும். ஒரு ஸ்தித-பிரக்ஞன் - சுகம், துக்கம் இதைப் பற்றிக் கண்டு கொள்ளாதவனே, அவை இரண்டையும் சமமாகப் பார்ப்பவனே இந்த ஆத்மா பற்றிய உண்மையை உணர்ந்தவன் ஆகிறான். அவனுக்கே மோக்ஷம் கிடைக்கிறது.

இஸ்கான் என்று சொல்லப்படும் International Society for Krishna Consciousness (ISCON) கோவில்களில் இந்த பதிமூன்றாம் ஸ்லோகத்தை குறித்த ஒரு படம் அல்லது சிலை வைத்திருப்பார்கள். ஒரு மனித உடல் கர்ப்பத்தில் இருக்கும் சிசு தொடங்கி, பிறந்து, குழந்தையாகத் தவழ்ந்து, பாலகன் ஆகி, பின்னர் வாலிபன் ஆகி, நடுத்தர வயதினன், முதுமை பெற்று கூன் விழுந்து, பின்னர் இறக்கின்றான். அது வரை அவன் சரீர உடலில் இருக்கும் ஆத்மாவானது, பின்னர் வேறு ஒரு உடலை நோக்கி செல்கிறது. நாம் இறப்பினால் வருந்துவது இந்த சரீர உடலின் முடிவிற்குத் தான். கிருஷ்ணர் சொல்வது, நாம் அதை தாண்டி இந்த உடலை ஆத்மாவின் ஒரு கருவியாகக் கருதுவது. 'நிமித்த மாத்ரம் பவ:' என்று பின்னால் ஒரு ஸ்லோகத்தில் வரும். நாம் எல்லாரும் ஒரு நிமித்தமே - கருவியே என்பது இதன் பொருள். இந்த சரீர உடலை ஒரு detached attachment கொண்டு பார்க்கும் ஒரு ஞானத்தை, சரீர உடலை ஆத்மாவை தாங்கும் ஒரு carrier ஆக மட்டும் பார்க்கும் ஒரு நிலையை இந்த இரண்டாம் அத்தியாயம் நமக்கு சொல்லித் தருகிறது.

Monday, August 22, 2011

Chapter 2 - Saankhya Yoga [1-10]

1.
ஸஞ்சய உவாச:
தம் ததா க்ருபயாவிஷ்டம் அஸ்ருபூர்ணா குலேக்ஷணம்
விஷீதந்தம் இதம் வாக்யம் உவாச மதுசூதந:
ஸஞ்சயன் சொன்னது:
மது என்ற அரக்கனைக் கொன்றதால் மதுசூதனா என்று அழைக்கப்படும் கிருஷ்ணர் - மனதில் பரிதாப உணர்வுடன், கவலையுடன், கண்களில் நீர் ததும்ப கலக்கத்துடன் இருந்த அவனை (அர்ஜுனனை) நோக்கி இந்த வார்த்தைகளைச் சொன்னார்.

2.
ஸ்ரீ பகவான் உவாச:
குதஸ்த்வா கஷ்மலம் இதம் விஷமே ஸமுபஸ்திதம்
அநார்ய ஜுஷ்டம் அஸ்வர்க்யம் அகீர்திகரம் அர்ஜுந 
பகவான் சொன்னது
உன் தகுதிக்கு உட்படாத இந்த கலக்கம் மதிப்பில்லாதது. எங்கிருந்து உனக்கு இந்த அபாயகரமான எண்ணம் வந்தது? இது சொர்கத்தின் கதவுகளை உனக்கு மூடி விடுமே அர்ஜுனா?

3.
க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த நைதத் த்வய்யுப பத்யதே
க்ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப
ப்ருதாவின் (குந்தியின்) பிள்ளையான அர்ஜுனா! கோழைத் தனத்திற்கு இடம் கொடுக்காதே. அது உனக்கு ஏற்றதல்ல. இதயத்தில் இருந்து இந்த தகுதி இல்லாத பலவீனத்தை அகற்றி விடு. எதிரிகளை அழிப்பவனே! எழுந்திரு!


4.
அர்ஜுந உவாச:
கதம் பீஷ்மமஹம் ஸாங்க்யே த்ரோணம் ச மதுசூதந
இஷுபி: பிரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிசூதன
அர்ஜுனன் சொன்னது:
மதுசூதனா! எதிரிகளை அழிப்பவனே! வணக்கத்திற்கு உரிய பீஷ்மர் மற்றும் துரோணர் மீது அம்புகளை விட்டு நான் எப்படி யுத்தத்தில் சண்டை இட முடியும்?


5.
குரூந் அஹத்வா ஹி மஹாநுபாவாந் ஸ்ரேயோ போக்தும் பைக்ஷ்யம் அபீஹ லோகே 
ஹத்வார்த காமாம்ஸ்து குரூந் இஹைவ புஞ்சீய போகாந் ருதிர ப்ரதிக்தாந்
மிகவும் உத்தமமான இந்த ஆசார்யர்களைக் கொல்வதைக் காட்டிலும், இந்த உலகில் பிக்ஷை வாங்குவது மேலானது. நான் அவர்களைக் கொன்றாலும், இந்த உலகில் நான் அனுபவிக்கும் எல்லா செல்வங்களும், ஆசைகளும் அவர்களின் ரத்தத்தால் கறை பட்டிருக்கும். 

6.
நசைதத்வித்ம: கதரந்நோ கரீயோ யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு:
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாம: தே(அ)வஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:
நாம் அவர்களை வெல்வதா - இல்லை அவர்கள் நம்மை வெல்வதா? எது சிறந்தது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. யாரைக் கொன்ற பின் நாம் உயிர் வாழ விரும்ப மாட்டோமோ - அந்த திரிதராஷ்ட்ரனின்
பிள்ளைகள் நம் முன்னே நிற்கிறார்கள். 

7.
கார்பண்யதோஷோ பஹதஸ்வபாவ: ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம்மூடசேதா: 
யச்ச்ரேய ஸ்யாந்நிச்சிதம் ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தே(அ)ஹம் சாதி மாம் த்வாம் பிரபந்நம்
என் இதயம் தயை என்ற உணர்வால் சூழப் பட்டுள்ளது. என் மனம் எது கடமை என குழம்பிப் போயுள்ளது. நான் உன்னைக் கேட்கிறேன் - எது எனக்கு நல்லது என நீ உறுதிபட கூறுவாயாக. நான் உன் சிஷ்யன். உன்னைச் சரண் அடைந்த எனக்கு அறிவுரை கூறுவாயாக.

8.
ந ஹி பிரபச்யாமி மமாபநுத்யாத் யச்சோகம் உச்சோஷணம்  இந்த்ரியாணாம்
அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம் ராஜ்யம் சூராணாம் அபி சாதிபத்யம் 
நான் செல்வங்களை அடைந்து, இவ்வுலகின் ஏகாதிபத்தியம் பெற்று, கடவுள்களுக்கே அதிபதி ஆனாலும், அது எனது உணர்வுகளை எரிக்கும் இந்த வருத்தத்தைப் போக்குவதாகத் தெரியவில்லை.

9.
ஸஞ்சய உவாச:
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேசம் குடாகேச பரந்தப:
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ
ஸஞ்சயன் சொன்னது
ஹ்ருஷீகேசனிடம் இவ்வாறு கூறிய எதிரிகளை அழிப்பவன் ஆன அர்ஜுனன், கிருஷ்ணரிடம் 'நான் போர் செய்ய மாட்டேன்' என்று கூறி அமைதி ஆனான்.

10.
தம் உவாச ஹ்ருஷீகேச: ப்ரஹஸந்நிவ பாரத
சேநயோர் உபயோர் மத்யே விஷீதந்தம் இதம் வச:
பாரதா (திரிதராஷ்ட்ரன்)! புன்னகையோடோ என்னவோ, ஸ்ரீ கிருஷ்ணர் இரு சேனைகளின் நடுவே சஞ்சலத்துடன் இருக்கும் அவனை (அர்ஜுனனை) நோக்கி, பின் வரும் இந்த வார்த்தைகளைக் கூறினார். 

விசாரம்
பகவத் கீதையின் ரெண்டாம் அத்தியாயத்தின் பெயர் - ஸாங்க்ய யோகா. நமக்கு தெரிந்த சில கீதோபதேசத்தின் இருப்பிடம். ஆத்மா - அதன் அழிவற்ற தன்மையை (Immortality of the Soul) பற்றி சொல்லும் அத்தியாயம். இதில் கீதையின் சில மூல அறிவுரைகள் உள்ளன. 

ஏற்கனவே போன அத்யாயத்தில் பார்த்த அர்ஜுனனின் குழப்பமான மன நிலையில், அவன் மனதில் பாசம் மற்றும் கடமை - இரண்டுக்கும் இடையில் குழம்பிப் போய் கிருஷ்ணரிடம் அறிவுரை கேட்கின்றான். தான் வெற்றி பெற்றாலும், அது தனது பெரிய தாத்தா மற்றும் ஆச்சார்யரின் ரத்தத்தில் கிடைத்த வெற்றியாக இருக்குமாதலால் அதில் எப்படி சந்தோசம் கொள்ள முடியும் என அவன் எண்ணுகிறான். அப்படி ஒரு வெற்றியினால் கிடைத்த வாழ்வு வாழ்வதற்கு பதில் ஒரு பிச்சைக்காரனாக இருப்பதே மேல் என எண்ணுகிறான். அதே சமயம் தன் கடமையைச் செய்யவில்லையோ என்ற குழப்பமும் வருகிறது. தன்னால் ஸ்வயமாக யோசிக்க முடியாமல் ஸ்ரீ கிருஷ்ணரை சரணாகதி அடைந்து, 'கிருஷ்ணா - எதை நான் செய்ய வேண்டும் என நீயே சொல்' என்கிறான். 

கிருஷ்ணரிடம் சரணாகதி அடைந்தவர்களில் மகாபாரதத்தில் இந்த நிலையில் அர்ஜுனனுக்கு முன்பாக வருபவள் திரௌபதி. ஹஸ்தினாபுர அரச சபையில், யுதிஷ்டிரர் சூதாட்டத்தில் தோற்று, அனைத்தையும் இழந்த பின்னே, திரௌபதி சபையில் துச்சாதநனால் துகில் உரியப்படுகிறாள். அவளும் எவ்வளவோ தன் இரு கரங்களால் போராடிப் பார்த்தாள் - முடியவில்லை. இறுதியில் தனது இரு கைகளையும் மேலே தூக்கி, கிருஷ்ணா நீ தான் காப்பாற்ற வேண்டும் என வேண்ட, ஆடை மேல் ஆடையாக கிருஷ்ணர் அளித்தார். முன்பொரு சமயம் கிருஷ்ணர் கை விரலில் ஒரு சிறு காயம் அடைந்த போது திரௌபதி அதில் துணியால் கட்டு போட்டாள். கிருஷ்ணரும் அவளிடம் இந்த துணியின் ஒவ்வொரு நூலிற்கும் நான் உனக்கு கடன் பட்டுள்ளேன் என்று கூறினார். அதனை இப்படி ஆடைகளாக அளித்து அடைத்தார். அதற்கு பின்னே இங்கே அர்ஜுனன் செய்த total surrender - பரிபூரண சரணாகதி. 

நமக்கும் வாழ்க்கையில் எவ்வளவோ துயரங்கள், வருத்தங்கள், கஷ்டங்கள். நாம் செய்ய வேண்டிய கடமையைச் செய்து விட்டு, கடவுளிடம் சரணாகதி அடைந்து விடுவோம். நம்மை அவன் காப்பான். 

Tuesday, August 16, 2011

Chapter 1 - Arjuna Vishaadha Yoga [41-47]

41.
அதர்மாபி பவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குல ஸ்த்ரிய:
ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர:
கிருஷ்ணா! பக்தியின்மை அதிகரிக்கும் போது, அக்குலத்தில் உள்ள பெண்கள் துஷ்டர்கள் ஆகிறார்கள். வர்ஷ்நேயா! பெண்கள் துஷ்டர்கள் ஆகும் போது அங்கே வர்ணங்களின் கலப்பு ஏற்படுகிறது.

42.
ஸங்கரோ நரகாயைவ குலக்நாநாம் குலஸ்ய ச
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோதக க்ரியா:
வர்ணங்கள் இடையே ஏற்படும் குழப்பம் (கலப்பு), குலங்களை அழிப்பவர்களுக்கு நரகத்தைப் பெற்றுத் தருகிறது. ஏனென்றால் அவர்களின் பித்ருக்களுக்கு அவர்களால் தர்ப்பண பிண்டங்கள் கிடைக்காமல் போகிறது.

43.
தோஷைர் ஏதை: குலக்நாநாம் வர்ணஸங்கர காரகை:
உத்ஸாத்யந்தே ஜாதிதர்மா: குலதர்மாச்ச சாஸ்வதா:
குலங்களை அழிப்பவர்களின் இந்த பாபச் செயல்கள் வர்ணங்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துவதால், அந்த வர்ணம் மற்றும் குலம் ஆதி காலம் முதல் செய்து வரும் சமய தர்மங்கள் அழிகின்றன.

44.
உத்சந்ந குலதர்மாணாம் மனுஷ்யாணாம் ஜனார்தந:
 நரகே நியதம் வாஸோ பவதீத் யநு சுஸ்ரும:
ஜனார்தனா! இப்படி சமய தர்மங்கள் அழிக்கப்பட்ட குலத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு, நரகத்தில் கால வரை இன்றி வசிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்துள்ளோம்.

45.
அஹோ பத மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்
யத்ராஜ்ய ஸுகலோபேந ஹந்தும் ஸ்வஜநம் உத்யதா:
ஐயோ! ராஜ்யத்தின் சுகம் என்னும் பேராசையால் நாம், நமது குல மக்களையே கொல்லும் அளவிற்குத் துணிந்து பெரும் பாபத்தைச் செய்கிறோம்.

46.
யதி மாம் அப்ரதீகாரம் அசஸ்த்ரம் சஸ்த்ரபாணைய:
தார்தராஷ்டிரா ரணே ஹந்யுஸ் தந்மே க்ஷேமதரம் பவேத்
திரிதராஷ்ட்ரனின் பிள்ளைகள் அவர்களின் கையில் ஆயுதங்களுடன், எதிர்ப்பு தெரிவிக்காமல், நிராயுதபாணியாக இருக்கும் என்னைக் கொன்றால் - அதுவே எனக்கு சிறந்ததாக இருக்கும்.       

47.
ஸஞ்சய உவாச:
ஏவ முக்த்வார்ஜுந ஸங்க்யே ரதோபஸ்த உபாவிசத்
விஸ்ருஜ்ய ஸசரம் சாபம் சோக ஸம்விக்ந மானஸ:
ஸஞ்சயன் சொன்னது:
போர்க்களத்தின் மத்தியில் இவ்வாறு பேசிய அர்ஜுனன், தனது வில்லையும், அம்பையும் ஒதுக்கி வைத்து விட்டு, அவன் மனதில் சோகம் பொங்கி எழ ரதத்தின் இருக்கையில் அமர்ந்தான். 


ஹரி ஓம் தத் சத்
ஹரியே பரம்பொருள் - அதுவே உண்மை 
இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு, உபநிஷத்ஸு, பிரம்ம வித்யாயாம், யோக சாஸ்த்ரே, ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுன ஸம்வாதே அர்ஜுன விஷாத யோகோ நாம பிரதமோத்யாய:
இது ஸ்ரீமத் பகவத் கீதை, உபநிஷத், பிரம்மத்தைப் (ஆத்மாவைப்) பற்றிய கல்வி, யோக சாஸ்திரம் (வாழ்க்கையில் செல்ல வேண்டிய பாதையை குறிக்கும் நூல்), ஸ்ரீ கிருஷ்ணர் - அர்ஜுனன் இடையே நடந்த உரையாடல், அர்ஜுன விஷாத யோகம் என்ற முதல் அத்தியாயம்.

விசாரம்
வர்ஷ்நேயா - கிருஷ்ணரின் இன்னொரு பெயர் இது. அவரின் யது குலத்திற்கு வ்ருஷ்ணீ என்ற பெயர் உண்டு. அதன் வழித்தோன்றல் என்பது இதன் அர்த்தம்.

ஒவ்வொரு அத்தியாயம் முடிந்த பிறகு ஒரு முடிவுரையாக 'இதி பகவத் ..' என்ற வாக்கியம் வரும். உபநிஷத் மொத்தம் பதினெட்டு. வேதாந்தம் என்ற அழைக்கப்படும் வேதத்தின் இறுதிப் பகுதியில் வருவது. வேதாந்தம் = வேதம் + அந்தம் (இறுதி). பெரும்பாலும் உரையாடலாக வரும் இது ஆத்ம ஞானத்தைப் போதிப்பது. பகவத் கீதை பதினெட்டு உபநிஷத்களில் ஒன்றில்லா விட்டாலும், அது அவை அனைத்தின் சாரமாகக் கருதப்படுகிறது. It is the cream of the Upanishadhs.

கிருஷ்ணர் - அர்ஜுனன் உரையாடல் ஒரு relaxed environment இல் நடந்த உரையாடல் இல்லை. Eleventh Hour dilemma. போர் செய்யாவிட்டால் அவனுக்கும், பாண்டவர்களுக்கும் ஏற்படும் இழப்பு பெரியது. ராஜ்யமே கிடைக்காமல் போய் விடும். ஒரு do or die situation. சரி போனால் போகட்டும் என்று விடுவதற்கு அவர்கள் சன்யாசிகளும் இல்லை. ராஜ வம்சத்தில் வந்தவர்கள். 

அர்ஜுனனுக்கு இந்த இடத்தில வந்திருக்கும் situational dilemma போலவே நாமும் நமது வாழ்க்கையில் சில நேரங்களில் சூழ்நிலைக் கைதிகள் ஆகி விடுகிறோம்.   
சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அந்த நேரத்தில் மனதில் பட்டதை செய்து விடுகிறோம். தப்பாகும் போது பின்னர் வருந்துகிறோம். ஆனால் காலம் கடந்து விடுகிறது. செய்த தவறை சரி செய்ய முடிவதில்லை.

அர்ஜுனன் - கிருஷ்ணர் என்ற ஒரு friend, philosopher and guide கிடைக்கப் பெற்றான். பகவத் கீதையின் முழுவதையும் உபதேசம் செய்து விட்டு கிருஷ்ணர் அவனிடம் - 'அர்ஜுனா! சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன். நீ உணர்ந்து செய்ய வேண்டியதை செய்' என்று சொன்னார். Unfair advantage எடுத்துக் கொள்ளவில்லை. நமது குறை என்னவென்றால் நமக்கும் இப்படிப்பட்ட ஒரு friend, philosopher and guide கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் நாம் அவர்களின் அறிவுரையைக் கேட்பதில்லை. 

Monday, August 8, 2011

Chapter 1 - Arjuna Vishaadha Yoga [31-40]

31.
நிமித்தாநி ச பஷ்யாமி விபரீதாநி கேசவ
ந ச ஸ்ரேயோ(அ)நு பஷ்யாமி ஹத்வா ஸ்வஜநம் ஆஹவே
கேசவா! நான் கெட்ட சகுனங்களைக் காண்கிறேன். என் உறவினர்களைப் போரில் கொல்வதில் நான் எந்த நன்மையையும் காணவில்லை.

32.
ந காங்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகாநி ச 
கிம் நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகைர் ஜீவிதேந வா 
கிருஷ்ணா! நான் வெற்றியையோ, சுக போகத்தையோ, ராஜ்யத்தையோ விரும்பவில்லை. கிருஷ்ணா! ராஜ்யமோ, சுகபோகமோ ஏன் உயிராலோ என்ன பயன்?

33.
யேஷாம் அர்தே காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா: ஸுகாநி ச 
த இமே(அ)வஸ்திதா யுத்தே ப்ராணாம்ஸ் த்யக்த்வா தநாநி ச
யாருக்காக நாம் ராஜ்ஜியம், சுகம், போகம் இவற்றை விரும்புகிறோமோ, அவர்கள் இங்கே யுத்தத்தில் உயிரையும், செல்வத்தையும் துறந்து நிற்கிறார்கள்.

34.
ஆசார்யா: பிதர: புத்ராஸ் ததைவ ச பிதாமஹா:
மாதுலா: ச்வசுரா: பௌத்ரா: ச்யாலா:  ஸம்பந்திநஸ் ததா: 
ஆசார்யர்கள், தந்தைகள், புத்திரர்கள், பாட்டன்கள், தாய்மாமன்கள், மாமனார்கள், பேரன்கள், மச்சினர்கள், உறவினர்கள்,

35.
ஏதாந் ந ஹந்தும் இச்சாமி க்நதோ(அ)பி மதுஸூதந 
அபி த்ரைலோக்ய ராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ருதே
கிருஷ்ணா! மண்ணிற்காக அவர்களைக் கொல்வது மட்டும் அல்ல - மூவுலகின் ஆளுகை கிடைத்தாலும், அவர்கள் என்னைக் கொன்றாலும், நான் அவர்களைக் கொல்ல விரும்ப மாட்டேன்.

36.
நிஹத்ய தார்தராஷ்ட்ராந்ந: கா ப்ரீதி: ஸ்யாஜ் ஜனார்தந
பாபம் ஏவாஷ்ரயேத் அஸ்மாந் ஹத்வைதாந் ஆததாயிந:
திருதராஷ்டரனின் இந்தப் பிள்ளைகளைக் கொல்வதால் எந்த திருப்தி நமக்குக் கிடைக்கும் ஜனார்தனா? இந்தப் பாவிகளை கொன்ற பாவம் தான் சேரும்.

37.
தஸ்மாந் நார்ஹா வயம் ஹந்தும் தார்தராஷ்ட்ராந் ஸ்வபாந்தவாந் 
ஸ்வஜநம் ஹி கதம் ஹத்வா ஸுகிந ஸ்யாம மாதவ
அதனால் உறவினர்கள் ஆன திருதராஷ்டரனின் இந்தப் பிள்ளைகளை - நம் உறவினர்களை நாம் கொல்லக் கூடாது. மாதவா! நம் உறவினர்களை கொன்று, நாம் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்.

38.
யத்யப்யேதே ந பஷ்யந்தி லோபோ பஹத சேதஸ:
குலக்ஷயக்ருதம் தோஷம் மித்ர த்ரோஹே ச பாதகம்
பேராசை அவர்களின் புத்தியை மழுங்கடித்தாலும், குலம் அழிவதின் தீமையையோ, நண்பர்களிடையே துரோஹம் உண்டாக்குவதன் பாவத்தையோ அவர்கள் காணாவிட்டாலும்,

39.
கதம் ந ஜ்ஞேயம் அஸ்மாபி: பாபாத் அஸ்மாந் நிவர்திதும் 
குலக்ஷயக்ருதம் தோஷம் பிரபஷ்யத்பிர் ஜனார்தந
நாம் ஏன் குலம் அழிவதின் தீமையைக் நன்கு கண்டுணர்ந்து , இந்தப் பாவத்தில் இருந்து விலக கற்றுக் கொள்ளக் கூடாது ஜனார்தனா?


40.
குலக்ஷயே பிரணஷ்யந்தி குல தர்மா: ஸநாதநா:
தர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நம் அதர்மோ(அ)பி பவத்யுத
ஒரு குலம் அழிவதால், காலம் காலமாக அந்தக் குடும்பம் பின்பற்றி வந்த தர்ம அனுஷ்டானங்கள் அழிகிறது. தெய்வீகம் அங்கே அழியும் போது, முழு குடும்பத்தையும் பக்தியின்மை ஆக்கிரமிக்கின்றது.

விசாரம்
அர்ஜுனன் - அவனுக்குப் பல பெயர்கள் உண்டு. கிருஷ்ணருக்கு ரொம்பப் பிரியமான பெயரான பார்த்தன், குந்தியின் பிள்ளையாதலால் கௌந்தேயன், தனுர் (வில்) வித்தையில் சிறந்தவன் என்பதால் தனஞ்சயன், வெற்றியே கண்டதால் விஜயன், ambidexterous என்று சொல்வதைப் போன்று ரெண்டு கைகளாலும் ஒரே சமயத்தில் வில்லை இயக்கத் தெரிந்தவன் என்பதால் சவ்யசாச்சி.

Focussed mind கொண்டவன். துரோணரிடம் பாண்டவர்களும், கௌரவர்களும் சிறு வயதில் வில் வித்தை கற்ற போது, துரோணர் மரக் கிளைகளின் இடையே ஒரு பொம்மையை வைத்து அதன் கண்ணில் அம்பை விட தன் சீடர்களிடம் சொன்னார். ஒவ்வொருவரிடமும் அம்பை விடும் முன்னே அவர்களுக்கு என்ன தெரிகின்றது என்று கேட்டார். மற்றவர்கள் கிளை தெரிகிறது, மரம் தெரிகிறது, பொம்மை தெரிகிறது என்று சொல்ல அர்ஜுனனோ பொம்மையின் கண் தெரிகிறது என்று தனது குறியில் கவனமாக இருந்தான். சரியாக அம்பை அந்தக் கண்ணில் செலுத்தினான்.

திரௌபதி ஸ்வயம்வரத்தில் போட்டி கடினமானது. மேலே உத்தரத்தில் ஒரு மச்ச (மீன்) யந்திரம் சுழன்று கொண்டிருக்கும். இப்பொழுது உள்ள ceiling fan போன்று.  கீழே ஒரு உருளியில் திரவம் இருக்கும். அதில் தெரியும் அந்த யந்திரத்தின் பிம்பத்தைப் பார்த்து அம்புகள் விட வேண்டும். நேராகப் பார்த்து விடக் கூடாது. அதில் அவன் ஒருவனே சரியாக அம்பை விட்டு திரௌபதியை வென்றான்.

அஞ்ஞான வாசத்தில், விராட தேசத்தில் அவன் ப்ருஹன்னளை என்ற நபும்சகன் ஆக மறைந்து வாழ்ந்த போது படை எடுத்து வந்த கௌரவ சேனையை தனி ஒருவனாக நின்று வென்றான்.

இப்படிப்பட்ட திறமைகளைக் கொண்ட அர்ஜுனன் இந்த குருக்ஷேத்ரத்தில், உறவுகள், ஆச்சார்யர்கள், நண்பர்கள் மீது கொண்ட பாசம் ஆகிய மாயையினால் இவ்வாறு கூறுகிறான்.

பொதுவாக நமது ஹிந்து தர்மத்திற்கு சனாதன தர்மம் என்ற பெயர் உண்டு. ஹிந்து என்ற பெயரே மேற்கத்தியவர் வைத்தது தான் - இந்துஸ் நதியின் கரையில் வசிப்பவர்கள் என்பதால். இந்த சனாதனம் என்பதற்கு காலம் காலமாக, பாரம்பரியமான என்று அர்த்தம். முன்பு ஒவ்வொரு குடும்பமும், அவர்களின் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த தர்மங்களை, அனுஷ்டானங்களைப் பாதுகாத்து வந்தார்கள். 40 வது ஸ்லோகத்தில் சொன்ன படி, தெய்வீகம் குறையும் போது மனதில் அசுத்தம் நுழைகிறது. நாளடைவில் அது தெய்வ பக்தியின்மையாகி அந்த குடும்பத்தை அழித்து விடுகிறது. அதை தான் இப்பொழுது காண்கிறோம். முடிந்த வரை, கால அவகாசத்தைப் பொறுத்து குல தர்மங்களைப் பாதுகாக்க வேண்டும்.

Monday, August 1, 2011

Chapter 1 - Arjuna Vishaadha Yoga [21-30]

21-22
அர்ஜுன உவாச:
ஹ்ருஷீகேசம் ததா வாக்யம் இதமாஹ மஹீபதே
சேநயோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபயமே (அ)ச்யுத 
யாவத் ஏதாந் நிரிக்ஷேஹம் யோத்துகாமாந் அவஸ்திதாந்
கைர் மயா ஸஹ யோத்தவ்யம் அஸ்மிந் ரண சமுத்யமே
அர்ஜுனன் சொன்னது:
கிருஷ்ணா!
இங்கு நிற்பவர்கள், போரிடும் ஆசையில் வந்திருப்பவர்கள், யுத்தம் ஆரம்பிக்கும் பொழுது நான் யாருடன் சண்டையிட வேண்டும் என்பதை நான் கண்டு கொள்ள எனது ரதத்தை இரு சேனைகளுக்கும் இடையே நிறுத்துவாயாக.

23
யோத்ஸ்யமாநாந் அவேக்ஷேஹம் ய ஏதேத்ர ஸமாகதா:
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர் யுத்தே ப்ரிய சிகீர்ஷவ:
ஏன் என்றால் - துர்மதியன் ஆன துர்யோதனனை, போரில் யுத்தம் செய்து ப்ரீதி செய்ய நினைக்கும் இங்கு கூடி இருப்பவர்களை நான் பார்க்க விரும்புகிறேன்.

24
ஸஞ்சய உவாச:
ஏவமுக்தோ ஹ்ருஷீகேசோ குடாகேசேன பாரத
சேநயோர் உபயோர் மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம்
ஸஞ்சயன் சொன்னது:
திரிதராஷ்டிரா! அர்ஜுனன் இவ்வாறு சொன்னதும் ஹ்ருஷீகேசன் (கிருஷ்ணர்), அந்த சிறந்த ரதத்தை இரு சேனைகளுக்கும் இடையே நிறுத்தினான்.

25
பீஷ்ம த்ரோண ப்ரமுகத: சர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்
உவாச பார்த பச்யைதாந் ஸமவீதாந் குரூந் இதி
பீஷ்மர், துரோணர் மற்றும் உலகின் பிற அரசர்களின் முன்னே (கிருஷ்ணன்) சொன்னான் - 'அர்ஜுனா! கூடி இருக்கும் இந்த குரு வம்சத்தவரை இப்பொழுது காண்பாயாக'.

26
தத்ரா பஷ்யத் ஸ்திதாந் பார்த: பித்ரூந் அத பிதாமஹாந்
ஆசார்யாந் மாதுலாந் ப்ராத்ரூந் புத்ராந் பௌத்ராந் ஸகீம் ஸ்ததா
உடனே அர்ஜுனன் அங்கே கூடி இருந்த பாட்டனார்கள், தந்தையர்கள், ஆச்சார்யர்கள், தாய் மாமன்கள், சகோதரர்கள், பிள்ளைகள், பேரன்கள், மற்றும் நண்பர்கள் 

27
ச்வசுராந் ஸுஹ்ருதச்சைவ சேநயோர் உபயோர் அபி
தாந் ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வாந் பந்தூந் அவஸ்திதாந்
மாமனார்கள் மற்றும் நல் இதயம் கொண்டவர்கள் - இவர்களை இரு சேனையிலும் கண்டான். குந்தியின் மைந்தன் ஆன அர்ஜுனன் இந்த உறவினர்கள் எல்லோரும் அணி வகுத்து நிற்பதைப் பார்த்து, வருத்தம் நிறைந்த குரலில், ஆழ்ந்த பச்சாதாபத்துடன் இவ்வாறு கூறினான்.

28
அர்ஜுன உவாச:
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந் இதம் அப்ரவீத்
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் கிருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம் 
கிருஷ்ணா! எனது உறவினர்கள் ஆன இவர்கள், யுத்தம் செய்யும் முனைப்புடன்
அணி வகுத்து நிற்பதைப் பார்த்து

29
ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிசுஷ்யதி 
வேபதுச்ச சரீரே மே ரோம ஹர்ஷச்ச ஜாயதே
என் அங்கங்கள் துவள்கிறது, என் வாய் உலர்ந்து விட்டது, என் உடல் நடுங்குகிறது, என் ரோமங்கள் சிலிர்த்து நிற்கிறது.

30
காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத் த்வக் சைவ பரிதஹ்யதே 
ந ச சக்நோம் யவஸ்தாதும்  ப்ரமதீவ ச மே மந: 
காண்டீவம் என் கைகளில் இருந்து நழுவுகிறது, என் தேஹம் எங்கும் எரிகிறது, என்னால் நிற்கக் கூட முடியவில்லை, என் மனம் தடுமாறுகிறது. 

விசாரம்
அர்ஜுனன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் இவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என்பதை தாண்டி, அவர்களிடையே இரு உறவுமுறையும் இருந்தது ஒன்று அத்தையின் பிள்ளை என்ற தாயாதி உறவு, இன்னொன்று மச்சினன் என்ற உறவு.
அர்ஜுனின் தாய் குந்தி. அவளின் பிறப்பின் போது, அவளுக்கு வைக்கப்பட்ட பெயர் ப்ருதா. கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் சஹோதரி. சிறு வயதில் குந்திபோஜனுக்கு தத்து கொடுக்கப்பட்டாள். அதனால் குந்தி என்ற பெயர் வந்தது. கிருஷ்ணருக்கு அவள் அத்தை. கிருஷ்ணரும் அவளை அத்தை என்றே அழைப்பார்.
கிருஷ்ணரின் சஹோதரி சுபத்ரை. அர்ஜுனனின் மனைவி. அதனால் கிருஷ்ணருக்கு அவன் மச்சினன்.

அர்ஜுனன் தனது சாரதியாக ஸ்ரீ கிருஷ்ணரை எப்படி பெற்றான் தெரியுமா? மகாபாரதத்தின் உத்தியோக பர்வாவில் இந்த நிகழ்ச்சி வருகிறது. பாண்டவர்களும், கௌரவர்களும் யுத்தம் என்று முடிவான பின் தங்களின் அணியைப் பலப்படுத்த அவர்களோ, அவர்களைச் சார்ந்தவர்களோ பிறரிடம் தூது சென்றனர். கிருஷ்ணர் மற்றும் அவரின் நாராயண சைந்யத்தை இரு அணியினருமே பெற நினைத்தனர். அவ்வாறு ஆதரவு பெற அர்ஜுனனும், துர்யோதனனும் ஒரே சமயத்தில் கிருஷ்ணரிடம் சென்றனர். கிருஷ்ணர் நித்திரை கொண்டிருந்தார். துர்யோதனன் தான் ராஜா என்ற கர்வத்தில் அவரின் தலை அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான். அர்ஜுனனோ அவரின் பாதத்தின் அருகே வணக்கத்துடன் நின்றான். தூங்கி எழும் போது முதலில் பாதம் பகுதியில் இருப்பது தானே முதலில் தெரியும். அதன் படியே, கிருஷ்ணரும் முதலில் அர்ஜுனனைப் பார்த்தார். பின்பே துர்யோதனனை. இருவரும் கிருஷ்ணரின் ஆதரவை வேண்ட - கிருஷ்ணர் நிராயுதபாணியான தான் ஒரு அணியிலும், தனது நாராயண சைந்யம் மற்றொரு அணியிலும் இருக்கும் என்று கூறினார். தான் முதலில் அர்ஜுனனைப் பார்த்தாலும், வயதில் அவனே சிறியவன் என்றதாலும் முதலில் அவன் விருப்பத்தைக் கேட்டார். துர்யோதனன் மனதில் ஒரு கவலை - எங்கே அர்ஜுனன் நாராயண சைன்யதைக் கேட்டு விடுவானோ என்று. அர்ஜுனன் தனக்கு கிருஷ்ணர் வேண்டும் எனக் கூற அவனுக்கு மகிழ்ச்சி - தனக்கு பலம் வாய்ந்த நாராயண சைந்யம் கிடைத்ததில். பின்னர் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் - 'பார்த்தா! நீ ஏன் என்னைத் தேர்வு செய்தாய்' எனக் கேட்க, அர்ஜுனனும் 'கிருஷ்ணா! எனக்கு நீ மட்டும் இருந்தால் போதும். உலகையே வெல்வேன். நீ எனது சாரதியாக போரில் இருந்து என்னை வழி நடத்த வேண்டும்' எனக் கேட்டான். அதன் படியே கிருஷ்ணரும் அவனுக்குச் சாரதி ஆனார்.
கிருஷ்ணர் மீது கொண்டுள்ள பரிபூர்ண விசுவாசம், பக்தி இதற்கு ஒரு உதாரணம் அர்ஜுனன்.

பாண்டவர்கள், கௌரவர்கள் இருவருமே குரு(Kuru) வம்சத்தைச் சேர்ந்தவர்கள். குரு என்ற ராஜா ஆண்ட ஷேத்ரம் என்பதாலேயே அந்த இடத்திற்கு குருக்ஷேத்ரம் என்ற பெயர் வந்தது. அங்கே மரணம் அடைந்தால் மோக்ஷம் நிச்சயம். அதனால் தானோ என்னவோ பாரதப் போர் அங்கே நடந்தது.