Tuesday, February 28, 2012

Chapter 6 - Dhyaana Yoga [30-39]

30.
யோ மாம் பச்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பச்யதி
தஸ்யாஹம் ந பிரணச்யாமி ஸ ச மே ந ப்ரணச்யதி
எவன் ஒருவன் என்னை எங்கும் காண்கிறானோ, என்னுள் அனைத்தையும் காண்கிறானோ, அவன் என்னை விட்டுப் பிரிவதில்லை, நானும் அவனை விட்டுப் பிரிந்து இருப்பதில்லை.

31.
ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வம் ஆஸ்தித:
ஸர்வதா வர்தமாநோ(அ)பி ஸ யோகீ மயி வர்த்ததே
எவன் ஒருவன் எல்லா உயிர்களிலும் உறையும் என்னை வணங்கி, இந்த ஐக்யத்தில் நிலை கொண்டு, இருக்கிறானோ - அந்த யோகி அவன் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையை கொண்டிருந்தாலும், அவன் என்னுள் உறைகின்றான்.

32.
ஆத்மௌ பம்யேந ஸர்வத்ர ஸமம் பச்யதி யோ(அ)ர்ஜூந
ஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத:
அர்ஜுனா! எவன் ஒருவன் ஆத்மாவின் தன்மையினால், சுகத்திலும், துக்கத்திலும் எதுவாக இருந்தாலும், எங்குமே சம நிலையைக் காண்பானோ, அவனே உயர்ந்த யோகி எனக் கருதப் படுகிறான்.

33.
அர்ஜுந உவாச:
யோ(அ)யம் யோகஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மதுஸுதந
ஏதஸ்யாஹம் ந பச்யாமி சஞ்சலத்வாத் ஸ்திதம் ஸ்திராம்
அர்ஜுனன் சொன்னது:
கிருஷ்ணா! உன்னால் கற்றுக் கொடுக்கப் பட்ட இந்த சமப் பார்வை கொண்டு நோக்கும் யோகத்தை, மன சஞ்சலத்தினால்  என்னால் அதை ஸ்திரமாக தொடர முடிவதில்லை.

34.
சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோர் இவ ஸுதுஷ்கரம்
கிருஷ்ணா! இந்த மனமானது மிகவும் சஞ்சலத்தோடு, அலை பாய்ந்து,  உறுதியாக, கட்டுப்படாமல் உள்ளது. காற்றைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு கஷ்டமோ, அது போலவே அதைக் கட்டுப்படுத்துவதையும் நான் கஷ்டமாகக் கருதுகிறேன்.

35.
ஸ்ரீ பகவான் உவாச:
அஸம்சயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே
ஸ்ரீ பகவான் சொன்னது:
பலம் பொருந்திய அர்ஜுனா! சந்தேகம் இல்லாமல் மனம் கட்டுப்படுத்துவதற்கு கடினமாகவும், அமைதி இல்லாமலும் தான் இருக்கும். ஆனால் முயற்சியின் மூலமாகவும், வைராக்கியத்தின் மூலமாகவும் இதைக் கட்டுப்படுத்தலாம்.

36.
அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி:
வச்யாத்மநா து யததா சக்யோ(அ)வாப்தும் உபாயத:
தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனுக்கு, இந்த யோகம் அடைவதற்கு கடினம் என நான் எண்ணுகிறேன். ஆனால் தன்னைக் கட்டுப்படுத்தியவனுக்கு, அப்படி முயற்சி செய்பவனுக்கு, இதை (யோகத்தை) தகுந்த வழியில் அடைய முடியும்.

37.
அர்ஜுந உவாச:
அயதி ச்ரத்தயோ பேதோ யோகாச்சலிதம் ஆநஸ:  
அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி
அர்ஜுனன் சொன்னது:
கிருஷ்ணா! மனதில் நம்பிக்கை இருந்தும், எவன் ஒருவனால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லையோ, எவன் மனம் யோகத்தில் இருந்து வழி தவறுகிறதோ, அவன் யோகத்தில் பூரணத்துவம் பெறுவதில் தோல்வி கண்டு இறுதியில் எதை அடைவான்?

38.
கச்சிந் நோபய விப்ரஷ்டச் சிந்நாப்ரம் இவ நச்யதி
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண: பதி
பலம் பொருந்தியவனே! பிரம்மத்தின் பாதையில் தடுமாறி அவன் இரண்டிலும் தோல்வி கண்டு, ஆதரவு எதுவும் இல்லாமல் உடைந்த மேகத்தைப் போல அவன் அழிந்து விட மாட்டானா?

39.
ஏதந் மே ஸம்சயம் க்ருஷ்ண சேத்தும் அர்ஹஸ்ய சேஷத:
த்வதந்ய: ஸம்சயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே
கிருஷ்ணா! எனது இந்த சந்தேகத்தை நீ முற்றிலும் போக்குவாயாக. ஏனென்றால் உன்னை அன்றி வேறு எவராலும் இந்த சந்தேகத்தைப் போக்க முடியாது.

விசாரம்
எந்த ஒரு செயலை நன்றாகச் செய்வதற்கும் இரண்டு காரணிகள் தேவை - ஒன்று சாதனம்/முயற்சி, இன்னொன்று வைராக்கியம்/மன உறுதி. பெரிய சங்கீத வித்வானாக வேண்டும் என்று நினைத்தால் அதற்கு நல்ல பயிற்சியோடு, வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகமும் வேண்டும். பிரம்மத்தை அடையும் முயற்சியிலும் இந்த இரண்டும் தேவைப் படுகிறது.
சென்ற வாரம் பார்த்தோம் - இந்த ஆத்மாவானது எல்லா உயிர்களிலும் இருக்கின்றது, எல்லா உயிர்களும் அந்த பிரம்மத்தின் உள்ளே உறைகின்றது. சுற்றி உள்ள எல்லாமே ஈஸ்வர ரூபமாகப் பார்க்கும் போது, எல்லா நிகழ்வுகளையும் / உயிர்களையும் சமமாகப் பார்க்கும்  பார்வை வரும் போது, பகவான்/பக்தன் என்ற பேதம் தொலைந்து ரெண்டும் ஒன்றாகிறது. மனிதன் தெய்வம் ஆகிறான். இந்த சமப் பார்வை கொண்டவனே சிறந்த யோகி. இப்படிப்பட்ட மன நிலை கொண்ட யோகி, எப்படிப்பட்ட வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தாலும் அவன் தன்னுள்ளே இறைவனைக் கொண்டவன் ஆகிறான். உதாரணம் கண்ணப்ப நாயனார், திருமங்கை ஆழ்வார்.

அர்ஜுனனுக்கு இந்த சமயத்தில் எல்லோருக்குள்ளேயும் தோன்றும் சந்தேகம் தோன்றுகிறது. நாம் இப்படி பிரம்மத்தை நோக்கி செல்ல நினைத்தாலும் நம் மனம் நம்மை விடுவதில்லை. சம்சார வாழ்க்கையோ, இல்லை பிற ஆசைகளோ நம் மனதை அலை பாய வைத்து விடுகிறது. அப்படி தன்னை வெல்ல முடியாமல் அவனால் பிரம்மத்தையும் பெற முடியாமல் இந்த சம்சார உலகில் உள்ள சந்தோசங்களையும் பெற முடியாமல் ஆகி விடுமே. இப்படி ஆகாமல் இருக்க என்ன வழி என்றும்,  இந்த சந்தேகத்தை ஸ்ரீ கிருஷ்ணர் அன்றி வேறு எவராலும் போக்க முடியாது என்றும் அர்ஜுனன் கேட்கின்றான். ஸ்ரீ கிருஷ்ணரின் பதிலை அடுத்து காண்போம்.
 

Wednesday, February 22, 2012

Chapter 6 - Dhyaana Yoga [21-29]

21.
ஸுகம் ஆத்யந்திகம் யத்தத் புத்தி க்ராஹ்யம் அதீந்த்ரியம் 
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதச்சலதி தத்த்வத:
யோகியானவன் இந்த்ரியங்களைத் தாண்டிய, நிர்மலமான அறிவைக் கொண்டு அந்த பரமானந்த நிலையை உணரும் போது, அதில் நிலை கொள்ளும் போது அவன் உண்மை நிலையில் இருந்து அசைவதில்லை.

22.
யாம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத:
யஸ்மிந் ஸ்திதோ ந து:கேந குருணாபி விசால்யதே
இதை அடைந்த உடனே அவன் வேறு எந்த லாபத்தையும் இதை விட உயர்வானதாக எண்ணுவதில்லை. இதில் நிலை கொண்ட பின் அவன் பெரும் துக்கத்திலும் அசைந்து கொடுப்பதில்லை.

23.
தம் வித்யாத் து:க ஸம்யோக வியோகம் யோகா ஸஞ்ஜ்ஞிதம் 
ஸ நிச்சயேந யோக்தவ்யோ யோகோ(அ)நிர்விண்ண சேதஸா 
இது வலிகளின் கட்டில் இருந்து விடுபடும் யோகம் என்ற  பெயரில் அழைக்கப் படட்டும். இதை உறுதியுடன், தளர்வில்லாத மனதுடன் பயிற்சி செய்ய வேண்டும்,

24.
ஸங்கல்ப ப்ரபவாந் காமாம் ஸ்த்யக்த்வா ஸர்வாநசேஷத:  
மனஸைவேந்த்ரியக் க்ராமம் விநியம்ய ஸமந்தத:
சங்கல்பம்(விருப்பம்) என்ற ஒன்றால் எழும் எல்லா ஆசைகளையும் பாரபட்சமின்றி தொலைத்து, எல்லா திசைகளிலும் உள்ள இந்திரியங்களையும் மனதால் முழுவதுமாகக் கட்டுப்படுத்தி,

25.
சநை: சநைருபரமேத் புத்த்யா த்ருதி க்ருஹீதயா
ஆத்ம ஸம்ஸ்தம் மந: க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத்
புத்தியை நிலையாக வைத்திருந்து கொஞ்சம் கொஞ்சமாக
அவன் அந்த அமைதியை அடையட்டும். மனதை பிரம்மத்தில்
நிலை நிறுத்திய பின்னர், அவன் வேறு எதையும் நினைக்காமல் இருக்கட்டும்.

26.
யதோ யதோ நிச்சரதி மநச் சஞ்சலம் அஸ்திரம்
ததஸ்ததோ நியம்யைதத் ஆத்மந்யேவ வசம் நயேத்
எது அலை பாயும், நிலை இல்லாத மனதை தடுமாற வைக்கிறதோ, அதில் இருந்து அவன் மனதைக் கட்டுப்படுத்தி, அதை பிரம்மத்தின் கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே கொண்டு வரட்டும்.

27.
ப்ரசாந்தம் அநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகம் உத்தமம்
உபைதி சாந்தரஜஸம் ப்ரஹ்ம பூதம் அகல்மஷம்
மிகவும் மன அமைதி கொண்ட, ஆசைகள் சாந்தப்படுத்தப் பட்டு எவன் பிரம்மமாகவே ஆனானோ, எவன் பாவங்களில் இருந்து விடுதலை பெற்றானோ, அந்த யோகிக்கு பரமானந்த நிலை நிச்சயம் கிடைக்கும்.

28.
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகத கல்மஷ:
ஸுகேந ப்ரஹ்ம ஸம்ஸ்பர்சம் அத்யந்தம் ஸுகம் அச்நுதே
மனதை இவ்வாறு யோகத்தைப் பயிற்சி செய்வதிலேயே செலுத்தி, பாவங்களில் இருந்து விடுபட்டு, பிரம்மத்தின் தொடர்பால் பரமானந்த நிலையை அந்த யோகி எளிதில் அனுபவிக்கின்றான்.

29.
ஸர்வ பூதஸ்தம் ஆத்மாநம் ஸர்வ பூதாநி சாத்மநி
ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்சந:
மனம் இவ்வாறு யோகத்தினால் பக்குவப்பட்ட உடன், அவன் பிரம்மத்தை எல்லா உயிர்களிலும் உறைவதைக் காண்கிறான். எல்லா உயிர்களும் பிரம்மத்தில் காண்கிறான். அவன் எங்கும் ஒன்றையே (பிரம்மத்தையே) காண்கிறான்.

விசாரம்
பிரம்மத்தை உணர்ந்தவன் பிராமணன். இந்த பிரம்மத்தை உபதேசம் செய்வது பிரம்மோபதேசம் - உபநயனம். உப+நயனம் -
additional eyes.  அதனால் தான் பிரம்மோபதேசம் பெற்ற பிராமணன்
த்விஜா (இரண்டு முறை பிறந்தவன்) என்று அழைக்கப்படுகிறான்.  ஊரைக்  கூட்டி  யஜ்னோபவீதம் போட்டுக் கொள்வது முக்கியம் இல்லை, அந்த  உபநயனம்  நிகழ்ச்சியை ஸ்ரத்தையுடன்  செய்ய வேண்டும். வேதங்கள் இந்த பிரம்மத்தைப் பற்றி கற்றுக் கொடுக்கின்றன. அதை ஒழுங்காகக் கற்றுக் கொள்வதே இந்த உபநயனத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

இந்த பிரம்மம் (ஆத்மா) என்பது என்ன?
ஆதி சங்கரர் காசியில் கங்கையில் ஸ்நானம் செய்ய சிஷ்யர்களுடன் போகும் போது எதிரே சிவபெருமான் சண்டாள ரூபத்தில் தோன்றுவார். ஆதி சங்கரரோ சிவன் என்று தெரியாமல் அவரை விலகிச் செல்லுமாறு கூற, சிவனோ 'எதை விலகச் சொல்கிறாய்? இந்த உடலையா இல்லை அதனுள் உள்ள ஆத்மாவையா? உடல் என்றால் அது ஒரு அழியக் கூடிய மாமிச பிண்டம், ஆத்மா என்றால் அது எல்லோருக்குள்ளும் இருக்கும் பொதுவான ஒன்று. உன்னுள் இருக்கும் ஆத்மா தான் என்னுள்ளும் இருக்கிறது. அப்படி இருக்க நான் எப்படி உன்னில் இருந்து மாறுபட்டவன்' எனக் கேட்பார்.  ஆதி சங்கரரும் தன தவறை உணர்ந்து சிவனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு மணீஷ பஞ்சகம் என்ற ஸ்லோகத்தைப் பாடுவார்.

ஒன்றாய் தோன்றி பலவாய் விரிந்து இருக்கும் இந்த பிரம்மம். ஒன்றாய் இருப்பது பரமாத்மா, பலவாய் விரிந்து இருப்பது ஜீவாத்மா. ஜீவாத்மா பரமாத்வாவில் இருந்து தோன்றியது. இறுதியில் பரமாத்மாவிலேயே கலந்து விடுகிறது. எல்லா உயிர்களின் உள்ளும் இந்த பிரம்மம் (ஜீவாத்மா) தான் உள்ளது.  எல்லா உயிர்களும் பிரம்மத்தில் தான் (பரமாத்மா) உறைகிறது. இப்படி ஒன்றில் இருந்து மற்றொன்று தோன்றினாலும் ரெண்டும் தங்களின் பூரணத்துவத்தை  (completeness ) இழப்பதில்லை. இந்த ஸ்லோகத்தின் அர்த்தமும் இது தான்.
'ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே'

இந்த பிரம்மத்தைப் பற்றி அறிவது/அடைவது  ஒன்று தான் யோகிக்கு குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கு மனப் பயிற்சி வேண்டும், எல்லாவற்றையும் சம திருஷ்டி கொண்டும் பார்க்கும் பார்வை வேண்டும். அதற்கு தான் மேலே சொன்ன பயிற்சி தேவைப் படுகிறது. அந்த பிரம்மத்தை அறிந்த நிலை அடைந்து விட்டால் தான் மனதில் பரமானந்த நிலை தோன்றும். அந்த நிலை அடைந்த பின்னர் எந்தக் கவலையும், ஆசையும் நம்மை அண்டாது. எவன் இந்த நிலையை அடைந்துள்ளனோ, அவனே உண்மையான பிராமணன்

Tuesday, February 14, 2012

Chapter 6 - Dhyaana Yoga [11-20]

11.
சுசௌ தேசே பிரதிஷ்டாப்ய ஸ்திரம் ஆஸநம் ஆத்மந:
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிந குசோத்தரம்  
பவித்திரமான  ஒரு இடத்தில், மிகவும் உயரமாகவோ, தாழ்வாகவோ இருக்காமல்,துணி, தோல் மற்றும் தர்ப்பை புல் இவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, தனக்கென ஒரு உறுதியான ஆசனத்தை அமைத்து,

12.
தத்ரைகாக்ரம் மந: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரியா:
உபவிச்யாஸநே யுஞ்ஜ்யாத் யோகமாத்ம விசுத்தயே
மனதை ஒரு முகப் படுத்தி, மனம் மற்றும் அங்கங்களின்
செயல்களைக் கட்டுப்படுத்தி, அந்த ஆசனத்தில் அமர்ந்து அவன் யோகம் செய்து அவனது ஆத்மாவைப் புனிதப் படுத்திக் கொள்ளட்டும்.

13.
ஸமம் காயசிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர:
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திசச் சாநவ லோகயந்
அவன் தனது உடல், தலை மற்றும் கழுத்தை விறைப்பாக, நேராக வைத்திருந்து, அசையாமல், அக்கம் பக்கம் பார்வையைச் செலுத்தாமல், மூக்கின் நுனியில் பார்வையைச் செலுத்தட்டும்.

14.
பிரசாந்தாத்மா விகதபீர் ப்ரஹ்மசாரி வ்ரதே ஸ்தித:
மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர:
அமைதியான மனதுடன், பயமில்லாமல், பிரம்மச்சரிய விரதத்தில்
உறுதியுடன், மனத்தைக் கட்டுப்படுத்தி, என்னையே நினைத்துக் கொண்டு, நிலையான மனதுடன் என்னையே பிரதான குறியாகக் கொண்டு அவன் அமரட்டும்.

15.
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ: 
சாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாம் அதிகச்சதி
இப்படியாக சதா மனதை சமநிலையில் வைத்திருந்து,  மனதை  அடக்கி,   என்னுள் உறையும் அமைதியைப் பெற்று,  யோகியானவன் இறுதியில் பிறப்பற்ற நிலையான நிர்வாணத்தை அடைகிறான்.

16.
நாத்யச்நதஸ்து  யோகோ(அ)ஸ்தி ந சைகாந்தமநச்நத:
ந சாதி ஸ்வப்ந சீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந
அர்ஜுனா! எவன் ஒருவன் அதிகமாக உண்கிறானோ, எவன் ஒருவன் எதையுமே உண்பதில்லையோ, எவன் ஒருவன் அதிகமாக உறங்குகிறானோ,  எவன்  எப்பொழுதும்  விழித்தே  இருக்கிறானோ  அவனுக்கு யோகம் சாத்தியம் இல்லை.

17. 
யுக்தா ஹார விஹாரஸ்ய யுக்த சேஷ்டஸ்ய கர்மஸு
யுக்த ஸ்வப்நாவ போதஸ்ய யோகோ பவதி து:கஹா
எவன் உண்பதிலும், செயல்களிலும் மிதமாக இருக்கிறானோ,
எவன் தனது செயல்களைச் செய்வதில் மிதமாக இருக்கிறானோ, எவன் உறக்கத்திலும், விழிப்பிலும் மிதமாக இருக்கிறானோ அவனுக்கு யோகமானது வலியைப் போக்கும் காரணி ஆகும். 

18.
யதா விநியதம் சித்தம் ஆத்மந்யேவாவதிஷ்டதே  
நி:ஸ்ப்ருஹ: ஸர்வ காமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா 
எவனது மனம் எப்பொழுது நன்றாக கட்டுப்படுத்தப் பட்டு, பிரம்மம்
ஒன்றிலேயே நிலைத்து  இருக்கின்றதோ, ஆசையைத் தூண்டும் பொருட்களில் இருந்து ஏக்கம் இல்லாமல் விலகி  இருக்கின்றதோ,  அப்பொழுது  அவன்  பிரம்மத்தில் ஒன்றி விட்டவனாகிறான்.

19.
யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகிநோ யத சித்தஸ்ய யுஞ்ஜதோ யோகம் ஆத்மந:
அடக்கிய மனதைக் கொண்ட, பிரம்மத்தில் மூழ்கிய,  பிரம்மத்தைக்  கடைப்பிடிக்கும்  யோகியின் மனது,  காற்றடிக்காத இடத்தில்  வைக்கப்பட்ட  விளக்கானது  எப்படி  நிலையாக  எரியுமோ,  அது போல நிலையானதாக உவமைப்படுத்தப் படுகிறது,

20.
யத்ரோ பரமதே சித்தம் நிருத்தம் யோக ஸேவயா 
யத்ர சைவாத்மநாத்மாநம் பச்யந்நாத்மநி துஷ்யதி
மனமானது யோகப் பயிற்சியின் மூலமாக அடக்கப்படும் போது,  அமைதியை அடைகிறது. பிரம்மத்தைத் தன்னுள் காணும் போது, தன்னில் திருப்தி பெறுகின்றது.
    
விசாரம்
எந்த ஒரு பூஜையோ, ஜபமோ செய்யும் போது வெறும் தரையில் அமர்ந்து செய்யக் கூடாது. முன்பெல்லாம் ரிஷிகள் ஆஜிநம் என்று சொல்லப்படுகிற
தோல் மேல் அமர்ந்து செய்தார்கள். BlackBuck Deer என்று ஒரு மான் இனம் உண்டு. அதன் பெயர் கிருஷ்ணாஜிநம். அந்த தோலில் அமர்ந்து செய்தால் உத்தமம். இல்லையா தரையில் தர்ப்பை பாய் விரித்து அதில் அமர்ந்து செய்யலாம். தர்ப்பைப் புல் energy level, radiation இவற்றை absorb செய்து கொள்ளும் சக்தி பெற்றது. அதனால் தான் க்ரஹனம் சமயத்தில் உணவுப் பொருட்களின் மீது தர்ப்பைப் புல் போட்டு பின்னர் அந்த உணவை உண்ண வைத்துக் கொள்கிறோம். ஹோமத்தின் போது மோதிர விரலில் பவித்ரமாக கட்டிக் கொள்கிறோம், காலின் அருகே போட்டுக் கொள்கிறோம்,

நாம் சொல்லும் ஸ்லோகத்திலேயே பார்க்கிறோம். ஆரம்பத்தில் தியானம் என்று ஒரு பகுதி வருகிறது. சந்தியாவந்தனத்தில் கூட காயத்ரி ஜபம் செய்வதற்கு முன்பு பிராணாயாமம் தியானம் செய்கிறோம். இது ஒரு விதமான மூச்சுப் பயிற்சி. தியானம் செய்யும் போது முதுகெலும்பை நேராக வைத்துக் கொண்டு, நிமிர்ந்து உட்கார்ந்து, கண்ணை மூடிக் கொண்டோ அல்லது மூக்கு நுனியின் மீதோ பார்வையை ஒருமுகப் படுத்தி செய்ய வேண்டும். மனம் அப்போது அலை பாயாமல், எதற்கும் கவலைப்படாமல், பிரம்மச்சர்ய விரதத்துடன் செய்ய வேண்டும். இப்படி யோகம் செய்பவனே பிரம்மத்தைக் குறித்த பாதையில் சென்று மோக்ஷத்தைப் பெற முடியும். உண்ணாமலோ, உறங்காமலோ இருந்து பயன் இல்லை. அதற்காக அவற்றை அதிகமாகச் செய்தும் பலன் இல்லை. எதிலும் மிதமான அளவில் இருக்க வேண்டும்.

காற்றில்லாத இடத்தில் வைக்கப் பட்ட விளக்கு சலனம் இல்லாமல் நிலையாக எரிவதைப் போல அந்த யோகியின் மனமும் சலனம் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு தான் இந்த தியானம். இந்த மன அமைதி, சமநிலை பெற்றால் தான் பிரம்மம் என்ற பேரானந்த நிலையை அடைந்து பிறப்பற்ற நிலையை அடைய முடியும்.