Monday, September 26, 2011

Chapter 2 - Saankhya Yoga [51-61]

51.
கர்மஜம் புத்தியுக்தா ஹி ப(फ)லம் த்யக்த்வா மநீஷிண:
ஜந்ம பந்த விநிர்முக்தா: பதம் கச்சந்த்ய நாமயம்
அறிவுள்ளவர்கள் ஞானத்தைப் பெற்று, தங்கள் செயல்களின் பலன்களை துறந்து, (மறு) பிறப்பு என்ற தளையில் இருந்து விடுபட்டு, எந்த ஒரு தீங்கிற்கும் அப்பால் உள்ள இடத்திற்குச் செல்வார்கள்.

52.
யதா தே மோஹகலிலம் புத்திர் வ்யதிதரிஷ்யதி
ததா கந்தாஸி நிர்வேதம் ஸ்ரோதவ்யஸ்ய ஸ்ருதஸ்ய ச
உனது அறிவு, மாயை என்னும் குழப்பத்தைத் தாண்டும் போது, நீ இது வரை கேட்டதையும், கேட்கப் போவதையும் குறித்து எந்த விதமான வேதனையும் கொள்ளாது.

53.
ஸ்ருதி விப்ரதி பந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிச்சலா 
ஸமாதா வசலா புத்திஸ் ததா யோகம் அவாப்ஸ்யஸி
உனது அறிவு எதைக் கேட்டும் கலங்காமல், எப்பொழுது பிரம்மத்தில் உறுதியாக இருக்குமா, அப்பொழுது நீ யோகத்தை அடைவாய்.

54.
அர்ஜுந உவாச
ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேசவ
ஸ்திததீ : கிம் ப்ரபாஷேத கீமாஸீத வ்ரஜேத கிம்
அர்ஜுனன் சொன்னது:
கிருஷ்ணா: ஸ்தித பிரஜ்ஞன் எனப்படும் கலங்காத அறிவும், பிரம்மத்தில் கலந்தவனும் ஆன அவனைப் பற்றிய விளக்கம் என்ன? கலங்காத அறிவைக் கொண்ட ஒருவன் எவ்வாறு பேசுவான்? எப்படி உட்காருவான்? எப்படி நடப்பான்?

55.
ஸ்ரீ பகவான் உவாச
ப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த மநோகதாந்  
ஆத்மந்யேவ ஆத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ் ததோச்யதே
ஸ்ரீ பகவான் சொன்னது:
அர்ஜுனா! ஒருவன் மனதில் இருந்து எல்லா ஆசைகளையும் விலக்கி, தன் அளவில் அவன் திருப்தி அடைந்து இருக்கும் போது, அவன் உறுதியான அறிவைக் கொண்ட ஸ்தித பிரஜ்ஞன் ஆகிறான். 

56.
து:கேஷ்வநுத் விக்நமநா:  ஸுகேஷு விகதஸ் ப்ருஹ:
வீதராக பய க்ரோத: ஸ்திததீர் முநிர் உச்யதே
எவனுடைய மனம் கஷ்டம் ஏற்படும் போது கலங்காமல் இருக்குமோ, எவன் சுக போகங்களின் பின்னே செல்ல மாட்டானோ, எவன் பற்று, பயம், கோபம் இவற்றில் இருந்து விடுபட்டுள்ளானோ, அவன் ஸ்தித அறிவைக் கொண்ட முனிவன் ஆகிறான். 

57.
ய: ஸர்வத்ரா நபிஸ்நேஹஸ் தத்தத் ப்ராப்ய சுபாசுபம் 
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா பிரதிஷ்டிதா
நல்லதோ, கெட்டதோ எதைச் சந்தித்தாலும் எவன் எங்குமே பற்றில்லாமல் இருக்கிறானோ, எவன் சந்தோசப்படவோ, வெறுக்கவோ இல்லையோ அவன் அறிவு கலங்காமல் இருக்கும்.

58.
யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோ (அ)ங்காநீவ ஸர்வச:
இந்த்ரியாண் இந்த்ரியார்தே(அ)ப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா பிரதிஷ்டிதா:
தனது அங்கங்களை எல்லாம் எல்லாப் பக்கங்களிலும் ஒடுக்கிக் கொள்ளும் ஒரு ஆமையைப் போல எவன் தனது புலன்களை லௌகீக வஸ்துக்களில் இருந்து விலக்கிக் கொள்கிறானோ, அவன் அறிவு ஸ்திரமாக இருக்கும். 

59.
விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:
ரஸ வர்ஜம் ரஸோ(அ)ப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே  
லௌகீக வஸ்துக்கள் ஸ்திதப்ரஜ்ஞன் ஆன ஒருவனிடம் இருந்து விலகிச் செல்கின்றன. ஆனால் இவனிடம் அந்த ஏக்கம் தங்கி உள்ளது. அந்த ஏக்கமும் பரமாத்மாவைக் கண்ட உடன் விலகி விடுகிறது.

60.
யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபச்சித:
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:
அர்ஜுனா! அறிவுள்ள மனிதன் ஒருவன், தனது புலன்களை அடக்க முயற்சி செய்தாலும் இந்த கலங்க அடிக்கும் ஆசைகள், அவன் மனதை கொள்ளை அடித்துச் சென்று விடுகின்றன.

61.
தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:
வசே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா பிரதிஷ்டிதா
அவன் புலன்களை அடக்கிய பின்னர், என்னைக் குறித்த தியானத்தில் அமர வேண்டும். அவன் புலன்கள் அடக்கப் படும் போது அவன் அறிவு ஸ்திரமாக இருக்கும்.

விசாரம் 
இந்த பலன்களின் மீதுள்ள ஆசைகளைத் துறப்பது எப்படி என்று பார்ப்போம். தீய செயல்களை செய்தால் அது பாவம், அதற்கான தண்டனை கிடைக்கும் என்று நாம் அதைச் செய்வதில்லை. செய்யவும் கூடாது. அதை விடுவோம். 

ஒரு நல்ல காரியம் செய்கிறோம். உதாரணமாக ஈஸ்வரனைக் குறித்து ஒரு ஸ்லோகத்தை பாராயணம் செய்கிறோம். ஒரு ஸ்லோகம் சொல்லும் போது அதற்கென ஒரு ப(फ)லஸ்ருதி இருக்கும். இந்தப் பலன் அந்த ஸ்லோகத்தை சொன்ன அவனுக்கு தனிப்பட்ட பலன் கொடுக்கும், கூடவே அந்த சமூகத்திற்கும் பலன் கொடுக்கும். மழை நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு காட்டாமல் எல்லாருக்கும் பெய்வது மாதிரி இந்த பலனும் சமூகத்தில் எல்லோருக்கும் கிடைக்கும். ஒரு சைக்கிள் ஓட்டும் போது pedal செய்வதை நிறுத்தினாலும் முந்தய momentum கொண்டு அது சில தூரம் போவது மாதிரி, கஷ்ட காலத்திலும் முன்பு செய்த புண்ணிய பலன்கள் நம்மை முன்னே செல்ல உதவி செய்யும். இந்த பலஸ்ருதி எதனால் இருக்கிறது என்றால், ஆரம்பத்தில் ஒருவன் இந்த ஸ்லோகத்தின் மீது ஈடுபாடு கொண்டு ஸ்ரத்தையுடன் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான். இந்த தனிப்பட்ட பலன் மீது ஆசை கொள்ளாமல், நாம் அந்த பலனை ஈஸ்வரனுக்கே அர்ப்பணம் செய்து விட்டால், அந்த மன நிலையை நம்முள் கொண்டால், நாளாவட்டத்தில் அதை எல்லா செயல்களுக்கும் விரிவுபடுத்தி நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ளலாம். அதனால் நாம் ஈஸ்வரனுக்குச் செய்யும் எல்லா பூஜையின் பலன்களை அவனுக்கே அர்ப்பணம் செய்வது பலன்களின் மீது ஆசை கொள்வதை விடும் முதல் படி.

ஸ்தித பிரஜ்ஞன் பற்றிய விளக்கத்தை அர்ஜுனன் கேட்க இங்கே ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார். நம் மனம் நாம் செய்யும் கடமையின் பலன் மீது உள்ள ஆசையைத் துறக்கும் போது ஜந்ம பந்தத்தில் இருந்து விடுபட்டு மோக்ஷத்தை, மறு பிறப்பிலாத நிலையை அடையலாம் என்கிறார். அப்படிப்பட்ட மன நிலையைக் கொண்டவன் எந்த ஒரு விஷயத்தாலும் சந்தோசம்/துக்கம், கொள்ள மாட்டான் என்பதைப் பார்த்தோம். நமது மனது ஒரு குரங்கைப் போன்றது -  எல்லாவற்றின் மீதும் ஆசை கொள்ளும். அது நிராசை ஆனால் அதனால் கோவப்படும். அந்த ஆசையின் காரணமாக துஷ்ட காரியங்கள் செய்யத் தூண்டுகிறது. சரி இதை எப்படி அடக்குவது. ஒரு உதாரணம் பார்ப்போம் -  ஒரு குரங்கை ஒரு நூறு அடி நீள கயிற்றால் கட்டி வைப்போம். அந்த குரங்கும் 100 அடி வட்டத்தில் உள்ள பரப்பளவில் சுற்ற முடிகிறது. அதற்கு வெளியே போனால் கயிற்றின் சுருக்கு அதை நெரிக்கும். சில மணி நேரங்களில் அந்த குரங்கு அந்த 100 அடி பரப்பளவிற்கு தன்னைச் சமாதானப் படுத்திக் கொள்கிறது. இப்பொழுது, அந்த கயிற்றின் நீளத்தை 50, 25, 10, 1 அடி என்று  குறைத்துக் கொண்டே வருவோம். குரங்கும் அந்த குறைந்த பரப்பளவிற்கு வேறு வழி இல்லாமல் ஏற்றுக் கொள்கிறது. இந்த கயிறு என்பது நமது ஆசையைப் போன்றது. நாமும் நமது ஆசையை வயது ஏற ஏற ஒவ்வொன்றாக குறைத்துக் கொண்டே வருவோம். ஒரு சமயத்தில் இந்த material world மீது உள்ள ஆசை முற்றிலும் போய் விடும். கிடைத்ததை வைத்து திருப்தி கொண்டு, ஆசை, கோபம் இவற்றை நீக்கும் போது நாமும் அந்த பிறப்பற்ற நிலையை அடையலாம். அதுவே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

Monday, September 19, 2011

Chapter 2 - Saankhya Yoga [41-50]

41.
வ்யவஸா யாத்மிகா புத்திர் ஏகேஹ குருநந்தந
பஹூ ஷாகா ஹ்யநந்தாச்ச புத்தயோ (அ)வ்யவஸாயிநாம் 
கு(k)ரு வம்சத்தின் கொழுந்தே! இங்கே ஒரு ஒன்றுபட்ட(focussed) உறுதி உள்ளது. உறுதி இல்லாதவர்களின் எண்ணங்கள் பல கிளைகளைக் கொண்ட முடிவில்லாத ஒன்றாக உள்ளது.

42. 
யாம் இமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய விபச்சித: 
வேதவாத ரதா: பார்த நாந்யத் அஸ்தீதி வாதிந:
அறிவற்றவர்கள் பேசும் வார்த்தைகள், மலரைப் போன்ற அலங்காரச் சொற்களைக் கொண்டது. அர்ஜுனா! அவர்கள் வேதத்தின் மந்திரங்களை மட்டுமே புகழ்ந்து, வேறு ஒன்றுமே இல்லை என்று சொல்பவர்கள். 

43.
காமாத் மாந: ஸ்வர்கபரா ஜன்ம கர்ம ப(फ)லப்ரதாம்
க்ரியா விஷேஷ பஹூலாம் போக ஐஸ்வர்யகதிம் ப்ரதி
ஆசைகளை அதிகம் கொண்டு, ஸ்வர்கமே தங்களின் லட்சியமாக அவர்கள் வைத்துள்ளார்கள். அவர்கள் பேசும் வார்த்தைகள் ஒருவரின் செயல்களே அவர்களின் (மறு)பிறப்பைத் தரும் வெகுமதி என்று சத்தியம் செய்கிறது.  அவர்கள் பல சுகம், செல்வம் மற்றும் பதவி பெறுவதற்கு வேண்டிய குறிப்பிட்ட செயல்களை விவரிக்கிறார்கள்.

44.
போக ஐஸ்வர்ய பிரஸக்தாநாம் தயா பஹ்ருத சேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே 
சுகம் மற்றும் செல்வம் ஆகியவற்றின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள், இந்த உபதேசங்களால் ஈர்க்கப் படுகிறாகள். இவர்களுடைய புத்தி, தியானம் மற்றும் சமாதி நிலையில் நிலைத்து நிற்க முடியாது.

45.
த்ரை குண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுந
நிர்த்வந்த்வோ நித்ய ஸத்த்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவாந்
வேதங்கள் இயற்கையின் மூன்று குணங்களை விவரிக்கின்றது. அர்ஜுனா! நீ இந்த மூன்று குணங்களுக்கும் மேலாக இரு. நேர்மறையான ஜோடிகளை (வெப்பம்-குளிர், சுகம்-துக்கம் போன்றவை) விலக்கி, சத்வ குணம் ஒன்றையே  கொண்டு, பொருள் சேர்த்தல், அதைக் காப்பாற்றுதல் போன்ற எண்ணங்களில் இருந்து விலகி இருந்து, ஆத்மாவை வெற்றி கொண்டவனாக இரு. 

46.
யாவா நர்த உதபாநே ஸர்வத :ஸம்ப்லு தோதகே
தாவாந் ஸர்வேஷு வேதேஷு ப்ராமணஸ்ய விஜாநத:
வெள்ளம் சூழ்ந்த இடத்தில் எப்படி ஒரு நீர் அணைக்கட்டின் பயன் இருக்குமோ, அப்படியே வேதமும் (அதன் ஞானமும்) ஆத்மாவை அறிந்த பிராமணனுக்கு இருக்கும். 

47.
கர்மண்யேவாதிகாரஸ்தே மா ப(फ)லேஷு கதாசந
மா கர்மப(फ)ல ஹேதுர்பூர் மா தே ஸங்கோ(அ)ஸ்தவ கர்மணி
செயலைச் செய்வதற்கு மட்டுமே உனக்கு விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலன்களின் மீது உரிமை எடுத்துக் கொள்ள அல்ல. உனது குறிக்கோள் அந்தச் செயல்களின் பலன்கள் மீது இருக்க வேண்டாம். அதே சமயம் உனது பற்றுதல் செயலின்மை மீதும் இருக்க வேண்டாம். 

48.
யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்சய 
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே
அர்ஜுனா!. பற்றுகளை விலக்கி, வெற்றி / தோல்வியை சமமாகப் பாவித்து யோகத்தில் உறுதியாக இருந்து செயலைச் செய். மனதின் சம நிலைப்பாடே யோகம் எனப்படுகிறது. 

49.
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தி யோகாத் தநஞ்ஜய
புத்தௌ சரணம் அந்விச்ச க்ருபணா: ப(फ)ல ஹேதவ:
அர்ஜுனா! புத்தி யோகத்தை விட மிகவும் தாழ்ந்த நிலையில் செயல் இருக்கின்றது. நீ அந்த அறிவில் சரணம் அடை. பலன்களே குறிக்கோளாகக் கொண்டவர்கள் மிகவும் கீழானவர்கள். 

50.
புத்தி யுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருத துஷ்க்ருதே
தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஷலம்
சம நிலை கொண்ட மனதுடன் கூடிய அறிவைக் கொண்டு ஒருவன் இந்த வாழ்கையின் நல்ல மற்றும் தீய செயல்களைத் தொலைக்கின்றான். அதனால் உன்னை யோகத்தில் ஈடுபடுத்திக் கொள். யோகம் என்பது செயலில் வித்தகனாக இருப்பது. 

விசாரம்
முன்பே பார்த்தோம் பகவத் கீதை மற்றும் உபநிஷத்கள் வேதாந்தம் என்ற பகுதியில் வருபவை. வேதம் + அந்தம் - அதாவது வேதத்தின் இறுதிப் பகுதியில் வருவதால் வேதாந்தம். வேதத்தில் முற் பகுதி கர்ம காண்டம் எனப் படுகிறது. அதில் ஒரு பலனை அடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று வரும். உதாரணமாக புத்திர காமேஷ்டி யாகம், அஸ்வமேத யாகம் - இதெல்லாம் புத்திர பாக்கியம், சாம்ராஜ்ய பாக்கியம் வேண்டி அதற்குரிய நியதிகளைப் பின்பற்றி செய்யப்படுகிறது. இப்படிப் பட்ட செல்வங்களைப்/ பலன்களைப் பெறும் ஆசை உள்ளவர்கள் இந்த செயல்களைச் செய்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் இங்கே வேதத்தைக் குறைவாகச் சொல்லவில்லை. ஆனால் அந்த கர்மம் / பலன்கள் இதிலேயே இருக்காமல் அதற்கு அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்கிறார். இப்படி ஒரு செயலைச் செய்தால் என்ன பலன் என்று பார்த்து பார்த்து செய்தால் மனம் தியானம் மற்றும் சமாதி நிலையை எப்படி எட்டும் என்கிறார். 

வேதத்தில் மூன்று குணங்கள் விவரிக்கப் படுகிறது - சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ். (பின்னால் இதை குறித்த ஒரு அத்தியாயமே உள்ளது, அதில் விரிவாகப் பார்க்கலாம்). சத்வ குணத்தில் இருந்தால் நேர்மறை ஜோடிகளான குளிர்/வெப்பம், சுகம்/துக்கம், வெற்றி/தோல்வி, கீர்த்தி/அகீர்த்தி, புகழ்ச்சி/இகழ்ச்சி எதுவுமே மனதை பாதிக்காது. இப்படிப்பட்ட மன நிலை கொண்ட ஒருவனுக்கே ஆத்மாவை வெற்றி கொண்டு தன் வசப்படுத்த முடியும். இத்தகைய அறிவைக் கொண்ட யோகத்தைத் தான் அர்ஜுனன் தன் மனதில் கொண்டு இங்கே செயலில் (போரில்) ஸ்ரீ கிருஷ்ணர் ஈடுபட வைக்கின்றார். 

பகவத் கீதை உபதேசம் என்ற உடனே நமக்கு எல்லாருக்கும் ஞாபகம் வருவது இந்த 47 வது ஸ்லோகம் - 'கடமைச் செய், பலனை எதிர்பார்க்காதே' என்னும் அர்த்தத்தைக் கொண்டது. சிலர் என்ன நினைக்கிறார்கள் - சரி பலன் இல்லாவிட்டால் நாம் செயலே செய்ய வேண்டாம் என்று. அதனால் தான் அந்த ஸ்லோகத்தின் கடைசிப் பகுதியில் அதற்காக செயலில் ஈடுபடாமல் இருந்து விடாதே என்று கூறுகிறது. 

இங்கே இரண்டு அர்த்தம் கொள்ளலாம் - ஒன்று அதன் பலன்களில் இஷ்டப்படாமல் கடமையை நிஷ்காமமாகச் செய்வது. இன்னொன்று தன்னால் தான் இந்த செயல் செய்யப்பட்டது, தான் இல்லை என்றால் இந்த செயலே நடந்திருக்காது என்ற எண்ணத்தைத் தொலைப்பது. 
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பாளின் குணத்தைப் பற்றி வரும் போது நிஷ்காமா என்று வரும். நாம் வாழ்க்கையில் மூன்று விதமான கடமைகளைச் செய்கிறோம் - தனக்காகச் செய்வது, தன் குடும்பத்திற்குச் செய்வது, மூன்றாவது பூர்த்த கர்மா எனப்படும் சமூக சேவை. நமது எல்லாச் செயலுமே இந்த மூன்றில் ஒன்றிலோ, இல்லை இரண்டிலோ, இல்லை எல்லாவற்றின் கீழோ வரும். தனக்காகச் செய்ய வேண்டியது பிடிக்கின்றதோ இல்லையோ செய்து தான் ஆக வேண்டும். மற்ற  இரண்டிலும் நமக்கு ஒரு choice இருக்கலாம், இல்லாமல் போகலாம். சில சமயம் நமக்குப் பிடிக்காமல் இருந்தாலும் செய்தே ஆக வேண்டும். இப்படி பற்றில்லாமல் ஒரு detached attachment கொண்டு செய்வது தான் நிஷ்காம கர்மா. 
இரண்டாவது பலனின் கீர்த்தியில் பெருமைப் பட்டுக் கொள்ளக் கூடாது. சிலர் என்ன நினைக்கின்றோம் - 'ஆகா நான் இல்லைனா இந்த வேலையே நடந்திருக்காது' என்று. நாம் அந்தச் செயலைச் செய்யா விட்டாலும் அந்தச் செயல் விதிக்கப் பட்டிருந்தால் அது வேறு யார் மூலம் ஆவது நடந்து விடும். நாம் அந்தச் செயலை செய்யும் ஒரு நிமித்தம் / கருவி மட்டும் தான். இந்த தான் என்ற எண்ணம் நீங்கி விட்டால் செயலின் பலனில் ஒரு ஆசை வராது. தான் இல்லாவிட்டால் வேறு யாரோ செய்யப் போகிறார்கள். நமக்கு அதைச் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதை நன்றாகச் செய்வோம் என்று மட்டும் நினைக்க வேண்டும். 

Tuesday, September 13, 2011

Chapter 2 - Saankhya Yoga [31-40]

31.
ஸ்வதர்மம் அபி சாவேக்ஷ்ய ந விகம்பிதும் அர்ஹஸி
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோ (அ)ந்யத் க்ஷத்ரியஸ்ய ந வித்யதே
மேலும் உனது கடமையைக் கருத்தில் கொண்டு, நீ தடுமாறக் கூடாது. ஒரு க்ஷத்ரியனுக்கு தர்மத்திற்காகச் செய்யப்படும் யுத்தத்திற்கு மேலாக வேறு ஒன்றும் இல்லை.

32.
யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்க த்வாரம் அபாவ்ருதம்
ஸுகீந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தம் ஈத்ருஷம்
அர்ஜுனா! இப்படிப்பட்ட யுத்தத்தில் போர் புரிய அழைக்கப்பட்ட க்ஷத்ரியர்கள், அது சுவர்க்கத்தின் வாயிற் கதவாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். 

33.
அத சேத்த்வம் இமம் தர்ம்யம் ஸங்க்ராமம் ந கரிஷ்யஸி
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபம் அவாப்ஸ்யஸி
ஆனால் ஒரு வேளை நீ இந்த தர்ம யுத்தத்தில் போர் செய்யவில்லை என்றால், அப்பொழுது நீ உனது கடமையை தவறி, புகழை இழந்து, பாபத்தைச் சேர்ப்பாய்.

34.
அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தே(அ)வ்யயாம்
ஸம்பாவிதஸ்ய சா கீர்திர் மரணாத் அதிரிச்யதே
மக்களும் உனது இந்த நீங்கா இழிவை மறக்காமல் இருப்பார்கள். புகழப்பட்ட ஒருவனுக்கு, இழிவு மரணத்தை விடக் கொடுமையானது.

35.
பயாத் ரணாத் உபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்
சிறந்த மஹா ரதர்கள் நீ பயத்தினால் போரில் இருந்து விலகியதாக எண்ணுவார்கள். உன்னைப் பற்றி உயர்வாக நினைக்கும் அவர்கள், இனி உன்னை குறைவாக மதிப்பிடுவார்கள்.

36.
அவாச்ய வாதாம்ச்ச பஹூந் வதிஷ்யந்தி தவாஹிதா:
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்
உனது பலத்தைக் கேலி செய்து உன் எதிரிகள் உன்னை பார்த்து திட்டுவார்கள். இதை விட வேறு என்ன வலி மிக்கதாக இருக்க முடியும்?

37.
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்கம் ஜித்வா வா போக்ஷ்யஸே மஹீம் 
தஸ்மாத் உத்திஷ்ட கௌந்தேய யுத்தாய க்ருத நிச்சய:
ஒரு வேளை நீ வென்றால் உனக்கு சுவர்க்கம் கிடைக்கும். வெற்றி பெற்றவனாக நீ உலகை அனுபவிக்கலாம். அதனால் குந்தியின் புத்திரனே! போர் செய்ய உறுதி கொள்.

38.
ஸுக து:கே ஸமே க்ருத்வா லாபாலாபௌ ஜயாஜயௌ
ததோ யுத்தாய யுஜ்யஸ்வ நைவம் பாபம் அவாப்ஸ்யஸி
சுகமோ, துக்கமோ, லாபமோ, நஷ்டமோ, வெற்றியோ, தோல்வியோ - இதை சமம் ஆக பாவித்து, யுத்தத்திற்காக போர் செய். நீ பாவத்தைச் சேர்க்க மாட்டாய்.

39.
ஏஷா தே(அ)பிஹிதா ஸாங்க்யே புத்திர்யோகே த்விமாம் ஸ்ருணு
புத்த்யா யுக்தோ யயா பார்த கர்ம பந்தம் ப்ரஹாஸ்யஸி 
உனக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட இது சாங்க்யம் என்பதைக் குறித்த அறிவாகும். இனி யோகம் குறித்த அறிவை நீ கேள். இதன் மூலம் அர்ஜுனா! நீ கர்மத்தினால் எழும் பந்தத்தை உதறி விட முடியும்

40.
நேஹா பிக்ரம நாசோ(அ)ஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே 
ஸ்வல்பம் அப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்
இதனால் எந்த ஒரு செயல் இழப்பும் ஏற்படாது. எந்த ஒரு தீங்கும் இல்லை. இதைக் குறித்த சிறிய ஞானமும் ஒருவனை அவனது பெரும் அச்சத்தில் இருந்து காப்பாற்றும்.

விசாரம்
புருஷ சூக்தத்தில் நான்கு வர்ணங்களின் தோற்றம் பற்றி வருகிறது. பிரக்ருதியின் (இயற்கையின்) படைப்பில் புருஷாவின் (கடவுளின்)  முகத்தில் இருந்து பிராமண வர்ணம், தோளில் இருந்து க்ஷத்ரிய வர்ணம், தொடையில் இருந்து வைஷ்ய வர்ணம், பாதத்தில் இருந்து சூத்ர வர்ணம் என்று தோன்றியதாம். இது அந்த காலத்திய division of labour. அதில் க்ஷத்ரியனுக்கு சமூகத்தைக் காக்கும் பொறுப்பு. தர்மத்தை காக்க வேண்டியது அவனது கடமை.
அதர்மத்திற்காக போர் செய்யக் கூடாது - அதற்காக நியாயத்திற்காக போர் செய்யாமல் விடவும் கூடாது. அப்படி தர்மத்திற்காக யுத்தம் செய்து அவனுக்கு மரணம் சம்பவித்தால் அதை விட அவனுக்கு வேறு பெருமை எதுவும் கிடையாது. அவன் போரில் புற முதுகு காட்டினால் அதை விடவேறு சிறுமை அவனுக்கு இல்லை.

ஸ்ரீ கிருஷ்ணர் ஆத்மாவைப் பற்றிய அறிவிற்கு அடுத்து - குல தர்மத்தை நிலை நாட்டும் இந்த அவசியத்தை விளக்குகிறார். அர்ஜுனன் ஒன்றும் சந்நியாசி இல்லை. ராஜ வம்சத்தில் வந்தவன். அவனுக்கு தனது குலப் பெருமையை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது. துர்யோதனனோ எப்பொழுது, எப்படி பாண்டவர்களின் நிலத்தை அபகரிக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுது அர்ஜுனன் போர் செய்ய தயங்கினால் அவன் கௌரவர்களின் படை பலத்தைக் கண்டு அஞ்சி தான் இப்படி பின் வாங்கினான் என்று எதிரிகள் அவனைக் கேலி செய்வார்கள். இது வரை பாராட்டப்பட்ட அர்ஜுனனுக்கு இதை விட வேறு என்ன இழிவு இருக்க முடியும். அவமானம் மரணத்தை விடக் கொடுமையானதே.

சென்ற வாரம் ஸ்தித பிரக்யன் என்ற ஒருவனைப் பற்றி பார்த்தோம். ஜனனம், மரணம் இரண்டையும் சமமாகப் பாவிப்பவன் அவன். அவன் அதை மட்டும் அல்ல - சுகம்-துக்கம், மானம்-அவமானம், வெற்றி-தோல்வி இதையும் சமமாகப் பாவிப்பான். இப்படி ஒரு நிலையை அடைய என்ன வேண்டும்? நாம் செய்யும் கர்மாக்களின் பலன்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் - அதற்காக கர்மாவே செய்யக் கூடாது என்று அர்த்தம் இல்லை. கர்மாவைச் செய்யாமல் சோம்பேறியாக இருந்தால் கடமை தவறியவன் ஆகிறோம். முன்பு பார்த்தோமே உடலைக் குறித்த detached attachment - அது இங்கே நம் கர்மாவின் மீதும் வேண்டும். ஆத்மா உறைய ஒரு கருவியாக உடல் இருக்கிறது. அது போலவே கர்மா என்ற ஒன்றைச் செய்ய கர்த்தா என்ற கருவி அவசியப்படுகிறது. இதைக் குறித்த அறிவு கர்ம யோகமாக அடுத்து வருவது. 

Tuesday, September 6, 2011

Chapter 2 - Saankhya Yoga [21-30]

21.
வேதாவிநாசிநம் நித்யம் ய ஏநம் அஜம் அவ்யயம்
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்
அந்த ஆத்மாவானது அழிக்க முடியாதது, நிரந்தரமானது, பிறப்பில்லாதது, குறைவே இல்லாதது என்பதை அறிந்த ஒருவன் எவ்வாறு கொல்பவன், அல்லது கொல்லப்பட்டவன் ஆவான் அர்ஜுனா!

22.
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோ(அ)பராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணாநி அந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ
எப்படி மனிதன் ஒரு பழைய உடையைக் களைந்து புதிய உடையைப் போட்டுக் கொள்கிறானோ, அப்படியே ஆத்மாவும் பழைய உடலைக் களைந்து, புதிய உடலில் நுழைகின்றது.

23.
நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:
ந சைநம் க்லேத யந்த்யாபோ ந சோஷயதி மாருத:
அந்த ஆத்மாவை ஆயுதத்தால் வெட்ட முடியாது, அக்னியினால் எரிக்க முடியாது, நீரினால் நனைக்க முடியாது, காற்றினால் உலர்த்த முடியாது

24.
அச்சேத்யோ(அ)யம் அதாஹ்யோ(அ)யம் அக்லேத்யோ(அ)சோஷ்ய ஏவ ச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுர் அசலோ(அ)யம் ஸநாதந:
இந்தப் பரம்பொருளை வெட்டவோ, எரிக்கவோ, ஈரப்படுதவோ, உலர்த்தவோ முடியாது. அது சாஸ்வதம் ஆனது, அனைத்திலும் ஊடுருவி இருப்பது, நிலையானது, புராதனமானது, அசைக்க முடியாதது

25.
அவ்யக்தோ(அ)யம் அசிந்த்யோ(அ)யம் அவிகார்யோ(அ)யம் உச்யதே
தஸ்மாத் ஏவம் விதித்வைநம் நாநுசோசிதும் அர்ஹசி
இது எழுதப்படாதது, நினைக்க முடியாதது, மாற்றம் இல்லாதது. அதனால் இது இப்படித் தான்  என்று அறிந்த பின்னர் நீ வருந்தக் கூடாதது.

26.
அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்
ததாபி த்வம் மஹாபாஹோ நைநம் சோசிதும் அர்ஹசி
பெருந்தோள் கொண்டவனே! ஒரு வேளை நீ இதை மீண்டும் மீண்டும் பிறந்து, இறக்கும் ஒன்றாக நினைத்துக் கொண்டாலும் நீ அதற்காக வருத்தப் படக் கூடாது.

27.
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர் த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச  
தஸ்மாத் அபரிஹார்யே(அ)ர்தே ந த்வம் சோசிதும் அர்ஹசி
பிறந்த எல்லாவற்றிற்கும் இறப்பு என்ற ஒன்று நிச்சயமானது. அப்படியே இறந்த ஒன்றிற்கு பிறப்பு என்பதும் நிச்சயமானது. நிச்சயம் ஆன இது குறித்து நீ வருத்தப்படக் கூடாது.

28.
அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தம் அத்யாநி பாரத
அவ்யக்த நிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா
உயிர்கள் ஆரம்பத்தில் விளக்க முடியாததாக உள்ளது. அர்ஜுனா! அவை அவற்றின் நடுப் பிராயத்தில் விளக்க முடிபவை ஆக உள்ளன. மீண்டும் அவற்றின் இறுதியில் விளக்க முடியாதவை ஆகி விடுகின்றன. இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?

29.
ஆச்சர்யவத் பஷ்யதி கச்சித் ஏநம் ஆச்சர்யவத் வததி ததைவ சாந்ய:
ஆச்சர்யவச்சைநம் அந்ய: ஸ்ருணோதி ஸ்ருத்வா(அ)ப்யேநம் வேத ந சைவ கச்சித்
ஒருவன் இந்த ஆத்மாவை அதிசயமாகப் பார்கிறான், இன்னொருவன் இதை அதிசயமாகப் பேசுகிறான், இன்னொருவன் இதை அதிசயமாகக் கேட்கின்றான். இருந்தும் இதை எல்லாம் கேட்டும், ஒருவனும் இதைப் புரிந்து கொள்வதில்லை.

30.
தேஹீ நித்யம் அவத்யோ(அ)யம் தேஹே ஸர்வஸ்ய பாரத
தஸ்மாத் ஸர்வாணி பூதாநி ந த்வம் சோசிதும் அர்ஹசி
அர்ஜுனா! எல்லோரின் உடலிலும் உள்ளே உறைந்திருக்கும் இந்த ஆத்மாவானது அழிக்க முடியாதது. எனவே எந்த ஒரு படைப்பிற்காகவும் நீ வருத்தப்படக் கூடாது.

விசாரம்
சென்ற வாரம் பார்த்ததைப் போல இதிலும் ஸ்ரீ கிருஷ்ணர் ஆத்மா பற்றிய விளக்கத்தைத் தொடர்கின்றார். 

அர்ஜுனன் கௌரவர் சேனையில் உள்ள ஆச்சார்யர் துரோணர், க்ருபாசாரியார்,    பீஷ்மர் மற்றும் பிற நண்பர்களை / உறவினர்களை சரீர உடலில் காண்கின்றான். ஸ்ரீ கிருஷ்ணர் அவனது கண்ணோட்டத்தை மாற்றி அந்த சரீர உடல் உள்ளே இருக்கும் ஆத்மாவைக் காண வைக்கின்றார். அந்த ஆத்மாவிற்கு அழிவு என்ற ஒன்று இல்லாத போது அர்ஜுனன் எப்படி அவர்களை அழித்தவன்/கொல்பவன் ஆவான். அதைப் போல அர்ஜுனன் உடல் உள்ளேயும் ஆத்மா இருக்கிறது. அவன் ஒரு வேளை போரில் கொல்லப்பட்டாலும் அவன் எப்படி கொல்லப்பட்டவன் ஆவான்? அவர்களின் உள்ளே இருக்கும் ஆத்மா இன்னொரு உடலினில் செல்லப் போகிறதே? பிறகு ஏது அழிவு?
இதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் அவன் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சியைக் களைய முயற்சிக்கிறார். அர்ஜுனனுக்கு இதில் இருக்கும் சந்தேகங்களைப் போக்கி பின்னர் அவனைப் போருக்குத் தயார் செய்கிறார். 

சென்ற வாரம் பார்த்த விஷயம் - சரீர உடலை ஒரு detatched attachment கொண்டு பார்ப்பது. இந்த சரீர உடல் இந்த ஆத்மாவைத் தாங்கி நிற்கும் ஒரு கருவி/ நிமித்தம் - அவ்வளவு தான். இந்த உடல் நாம் பிறப்பதற்கு முன்பாக என்னவாக இருந்தது? நம்மால் சொல்ல முடியாது. அது பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருந்திருக்கும். உறுதியாகத் தெரியாது. நாம் சரீர உடலைத் தாங்கி இருக்கும் போது அதற்கு ஒரு உருவம் கிடைக்கிறது. நாம் பாலகனாக, குமாரனாக, மத்திய வயது உடையவனாக, கிழவனாக ஆகும் போது அந்த அந்த நிலைக்கான உடல் இருக்கிறது. அந்தந்த வயதிற்கு ஏற்ற கூன், நரை விழுகிறது. இறந்த பின்னர் இந்த உடல் என்னவாக ஆகிறது? அதுவும் தெரியாது. எரித்தால் ஆறு கைப்பிடி, புதைத்தால் ஆறடி. மீண்டும் பஞ்ச பூதத்தில் கலக்கின்றது. இதைத் தான் 28 ம் ஸ்லோகம் விளக்குகிறது.

இந்த ஆத்மாவை நன்கு அறிந்தவர் என்று யாரும் இல்லை. குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து யானை இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்று கற்பனையில் இருப்பதைப் போல இருக்கிறோம். இத்தகைய ஆத்மா என்ற ஒன்றை நன்கு உணர்ந்த ஒருவன் அதிசயப் பிறவி. அவ்வளவு கடினமானது. அப்பேர்ப்பட்ட ஒருவனே பிறப்பு குறித்து சந்தோஷிக்காமலும், இறப்பு குறித்து துக்கப்படாமலும் இருப்பான். அவனே ஸ்திதப் பிரக்யன்.