Monday, September 19, 2011

Chapter 2 - Saankhya Yoga [41-50]

41.
வ்யவஸா யாத்மிகா புத்திர் ஏகேஹ குருநந்தந
பஹூ ஷாகா ஹ்யநந்தாச்ச புத்தயோ (அ)வ்யவஸாயிநாம் 
கு(k)ரு வம்சத்தின் கொழுந்தே! இங்கே ஒரு ஒன்றுபட்ட(focussed) உறுதி உள்ளது. உறுதி இல்லாதவர்களின் எண்ணங்கள் பல கிளைகளைக் கொண்ட முடிவில்லாத ஒன்றாக உள்ளது.

42. 
யாம் இமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்ய விபச்சித: 
வேதவாத ரதா: பார்த நாந்யத் அஸ்தீதி வாதிந:
அறிவற்றவர்கள் பேசும் வார்த்தைகள், மலரைப் போன்ற அலங்காரச் சொற்களைக் கொண்டது. அர்ஜுனா! அவர்கள் வேதத்தின் மந்திரங்களை மட்டுமே புகழ்ந்து, வேறு ஒன்றுமே இல்லை என்று சொல்பவர்கள். 

43.
காமாத் மாந: ஸ்வர்கபரா ஜன்ம கர்ம ப(फ)லப்ரதாம்
க்ரியா விஷேஷ பஹூலாம் போக ஐஸ்வர்யகதிம் ப்ரதி
ஆசைகளை அதிகம் கொண்டு, ஸ்வர்கமே தங்களின் லட்சியமாக அவர்கள் வைத்துள்ளார்கள். அவர்கள் பேசும் வார்த்தைகள் ஒருவரின் செயல்களே அவர்களின் (மறு)பிறப்பைத் தரும் வெகுமதி என்று சத்தியம் செய்கிறது.  அவர்கள் பல சுகம், செல்வம் மற்றும் பதவி பெறுவதற்கு வேண்டிய குறிப்பிட்ட செயல்களை விவரிக்கிறார்கள்.

44.
போக ஐஸ்வர்ய பிரஸக்தாநாம் தயா பஹ்ருத சேதஸாம்
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே 
சுகம் மற்றும் செல்வம் ஆகியவற்றின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள், இந்த உபதேசங்களால் ஈர்க்கப் படுகிறாகள். இவர்களுடைய புத்தி, தியானம் மற்றும் சமாதி நிலையில் நிலைத்து நிற்க முடியாது.

45.
த்ரை குண்ய விஷயா வேதா நிஸ்த்ரை குண்யோ பவார்ஜுந
நிர்த்வந்த்வோ நித்ய ஸத்த்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவாந்
வேதங்கள் இயற்கையின் மூன்று குணங்களை விவரிக்கின்றது. அர்ஜுனா! நீ இந்த மூன்று குணங்களுக்கும் மேலாக இரு. நேர்மறையான ஜோடிகளை (வெப்பம்-குளிர், சுகம்-துக்கம் போன்றவை) விலக்கி, சத்வ குணம் ஒன்றையே  கொண்டு, பொருள் சேர்த்தல், அதைக் காப்பாற்றுதல் போன்ற எண்ணங்களில் இருந்து விலகி இருந்து, ஆத்மாவை வெற்றி கொண்டவனாக இரு. 

46.
யாவா நர்த உதபாநே ஸர்வத :ஸம்ப்லு தோதகே
தாவாந் ஸர்வேஷு வேதேஷு ப்ராமணஸ்ய விஜாநத:
வெள்ளம் சூழ்ந்த இடத்தில் எப்படி ஒரு நீர் அணைக்கட்டின் பயன் இருக்குமோ, அப்படியே வேதமும் (அதன் ஞானமும்) ஆத்மாவை அறிந்த பிராமணனுக்கு இருக்கும். 

47.
கர்மண்யேவாதிகாரஸ்தே மா ப(फ)லேஷு கதாசந
மா கர்மப(फ)ல ஹேதுர்பூர் மா தே ஸங்கோ(அ)ஸ்தவ கர்மணி
செயலைச் செய்வதற்கு மட்டுமே உனக்கு விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலன்களின் மீது உரிமை எடுத்துக் கொள்ள அல்ல. உனது குறிக்கோள் அந்தச் செயல்களின் பலன்கள் மீது இருக்க வேண்டாம். அதே சமயம் உனது பற்றுதல் செயலின்மை மீதும் இருக்க வேண்டாம். 

48.
யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்சய 
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே
அர்ஜுனா!. பற்றுகளை விலக்கி, வெற்றி / தோல்வியை சமமாகப் பாவித்து யோகத்தில் உறுதியாக இருந்து செயலைச் செய். மனதின் சம நிலைப்பாடே யோகம் எனப்படுகிறது. 

49.
தூரேண ஹ்யவரம் கர்ம புத்தி யோகாத் தநஞ்ஜய
புத்தௌ சரணம் அந்விச்ச க்ருபணா: ப(फ)ல ஹேதவ:
அர்ஜுனா! புத்தி யோகத்தை விட மிகவும் தாழ்ந்த நிலையில் செயல் இருக்கின்றது. நீ அந்த அறிவில் சரணம் அடை. பலன்களே குறிக்கோளாகக் கொண்டவர்கள் மிகவும் கீழானவர்கள். 

50.
புத்தி யுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருத துஷ்க்ருதே
தஸ்மாத் யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஷலம்
சம நிலை கொண்ட மனதுடன் கூடிய அறிவைக் கொண்டு ஒருவன் இந்த வாழ்கையின் நல்ல மற்றும் தீய செயல்களைத் தொலைக்கின்றான். அதனால் உன்னை யோகத்தில் ஈடுபடுத்திக் கொள். யோகம் என்பது செயலில் வித்தகனாக இருப்பது. 

விசாரம்
முன்பே பார்த்தோம் பகவத் கீதை மற்றும் உபநிஷத்கள் வேதாந்தம் என்ற பகுதியில் வருபவை. வேதம் + அந்தம் - அதாவது வேதத்தின் இறுதிப் பகுதியில் வருவதால் வேதாந்தம். வேதத்தில் முற் பகுதி கர்ம காண்டம் எனப் படுகிறது. அதில் ஒரு பலனை அடைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று வரும். உதாரணமாக புத்திர காமேஷ்டி யாகம், அஸ்வமேத யாகம் - இதெல்லாம் புத்திர பாக்கியம், சாம்ராஜ்ய பாக்கியம் வேண்டி அதற்குரிய நியதிகளைப் பின்பற்றி செய்யப்படுகிறது. இப்படிப் பட்ட செல்வங்களைப்/ பலன்களைப் பெறும் ஆசை உள்ளவர்கள் இந்த செயல்களைச் செய்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் இங்கே வேதத்தைக் குறைவாகச் சொல்லவில்லை. ஆனால் அந்த கர்மம் / பலன்கள் இதிலேயே இருக்காமல் அதற்கு அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்கிறார். இப்படி ஒரு செயலைச் செய்தால் என்ன பலன் என்று பார்த்து பார்த்து செய்தால் மனம் தியானம் மற்றும் சமாதி நிலையை எப்படி எட்டும் என்கிறார். 

வேதத்தில் மூன்று குணங்கள் விவரிக்கப் படுகிறது - சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ். (பின்னால் இதை குறித்த ஒரு அத்தியாயமே உள்ளது, அதில் விரிவாகப் பார்க்கலாம்). சத்வ குணத்தில் இருந்தால் நேர்மறை ஜோடிகளான குளிர்/வெப்பம், சுகம்/துக்கம், வெற்றி/தோல்வி, கீர்த்தி/அகீர்த்தி, புகழ்ச்சி/இகழ்ச்சி எதுவுமே மனதை பாதிக்காது. இப்படிப்பட்ட மன நிலை கொண்ட ஒருவனுக்கே ஆத்மாவை வெற்றி கொண்டு தன் வசப்படுத்த முடியும். இத்தகைய அறிவைக் கொண்ட யோகத்தைத் தான் அர்ஜுனன் தன் மனதில் கொண்டு இங்கே செயலில் (போரில்) ஸ்ரீ கிருஷ்ணர் ஈடுபட வைக்கின்றார். 

பகவத் கீதை உபதேசம் என்ற உடனே நமக்கு எல்லாருக்கும் ஞாபகம் வருவது இந்த 47 வது ஸ்லோகம் - 'கடமைச் செய், பலனை எதிர்பார்க்காதே' என்னும் அர்த்தத்தைக் கொண்டது. சிலர் என்ன நினைக்கிறார்கள் - சரி பலன் இல்லாவிட்டால் நாம் செயலே செய்ய வேண்டாம் என்று. அதனால் தான் அந்த ஸ்லோகத்தின் கடைசிப் பகுதியில் அதற்காக செயலில் ஈடுபடாமல் இருந்து விடாதே என்று கூறுகிறது. 

இங்கே இரண்டு அர்த்தம் கொள்ளலாம் - ஒன்று அதன் பலன்களில் இஷ்டப்படாமல் கடமையை நிஷ்காமமாகச் செய்வது. இன்னொன்று தன்னால் தான் இந்த செயல் செய்யப்பட்டது, தான் இல்லை என்றால் இந்த செயலே நடந்திருக்காது என்ற எண்ணத்தைத் தொலைப்பது. 
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் அம்பாளின் குணத்தைப் பற்றி வரும் போது நிஷ்காமா என்று வரும். நாம் வாழ்க்கையில் மூன்று விதமான கடமைகளைச் செய்கிறோம் - தனக்காகச் செய்வது, தன் குடும்பத்திற்குச் செய்வது, மூன்றாவது பூர்த்த கர்மா எனப்படும் சமூக சேவை. நமது எல்லாச் செயலுமே இந்த மூன்றில் ஒன்றிலோ, இல்லை இரண்டிலோ, இல்லை எல்லாவற்றின் கீழோ வரும். தனக்காகச் செய்ய வேண்டியது பிடிக்கின்றதோ இல்லையோ செய்து தான் ஆக வேண்டும். மற்ற  இரண்டிலும் நமக்கு ஒரு choice இருக்கலாம், இல்லாமல் போகலாம். சில சமயம் நமக்குப் பிடிக்காமல் இருந்தாலும் செய்தே ஆக வேண்டும். இப்படி பற்றில்லாமல் ஒரு detached attachment கொண்டு செய்வது தான் நிஷ்காம கர்மா. 
இரண்டாவது பலனின் கீர்த்தியில் பெருமைப் பட்டுக் கொள்ளக் கூடாது. சிலர் என்ன நினைக்கின்றோம் - 'ஆகா நான் இல்லைனா இந்த வேலையே நடந்திருக்காது' என்று. நாம் அந்தச் செயலைச் செய்யா விட்டாலும் அந்தச் செயல் விதிக்கப் பட்டிருந்தால் அது வேறு யார் மூலம் ஆவது நடந்து விடும். நாம் அந்தச் செயலை செய்யும் ஒரு நிமித்தம் / கருவி மட்டும் தான். இந்த தான் என்ற எண்ணம் நீங்கி விட்டால் செயலின் பலனில் ஒரு ஆசை வராது. தான் இல்லாவிட்டால் வேறு யாரோ செய்யப் போகிறார்கள். நமக்கு அதைச் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதை நன்றாகச் செய்வோம் என்று மட்டும் நினைக்க வேண்டும். 

2 comments:

  1. நிஷ்காம்ய கர்மா/ காம்ய கர்மா பத்தின தெளிவு ஒரு மனுஷ்யனுக்கு வந்துட்டாலே போதும் அண்ணா, அதுக்கு அப்புறம் ஆத்ம சாதனைக்கான பாதை தன்னால தெரிய ஆரம்பிக்கும்!! தொடர்ந்து கொண்டு போங்கோ!!

    ReplyDelete