Tuesday, July 26, 2011

Chapter 1 - Arjuna Vishaadha Yoga [11-20]

11.
அயநேஷுச ஸர்வேஷு யதாபாகம் அவஸ்திதா:
பீஷ்மம் ஏவாபி ரக்ஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி
ஆகையினால் நீங்கள் எல்லோரும், சேனையின் பல்வேறு அணிகளில் உள்ள உங்களின் நிலைகளில் இருந்து பீஷ்மரை மட்டும் காப்பாற்றுங்கள்.

12.
தஸ்ய ஸஞ்சநயந் ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:
சிம்ஹநாதம் வினத்யோச்சை: ஸங்கம் தத்மௌ ப்ரதாபவாந்
கௌரவர்களிடையே வயதில் பெரியவரும், அவனின் பெருமதிப்பிற்குரிய பெரிய பாட்டனாரும் ஆன பீஷ்மர், துர்யோதனனை உற்சாகப்படுத்த இப்பொழுது சிம்ஹ கர்ஜனை செய்து தன்னுடைய சங்கை ஊதினார்.

13.
தத: சங்காச்ச பேர்யச்ச பணவாநக கோமுகா:
ஸஹ சைவாப்ய ஹந்யந்த ஸ சப்தஸ் துமுலோ பவத்
அதனைத் தொடர்ந்து சங்குகளும், பேரிகைகளும், முரசுகளும், பசுவின் கொம்புகளும் திடீர் என கௌரவர்களின் பக்கமிருந்து முழங்கின. அதன் சப்தம் பெரிதாக இருந்தது.

14.
தத: ஸ்வேதைர் ஹயைர் யுக்தே மஹதி ஸ்யந்தநே ஸ்திதௌ
மாதவ: பாண்டவச்சைவ திவ்யௌ சங்கௌ பிரதக்மது:
அதன் பின்னர் மாதவனான கிருஷ்ணனும், பாண்டு புத்திரனாகிய அர்ஜுனனும், வெள்ளைக் குதிரைகளால் பூட்டப்பட்ட தங்களின் பெரிய ரதத்தில் இருந்து கொண்டு தங்களின் புனித சங்குகளை முழங்கினார்கள்.

15.
பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேஷோ தேவதத்தம் தநஞ்சய:
பௌண்ட்ரம் தத்மௌ மஹாசங்கம் பீமகர்மா வ்ருகோதர:
ஹ்ருஷீகேசன் பாஞ்சஜன்யம் என்ற சங்கையும், அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கையும், கடுமையான செயல்களைச் செய்யும் பீமன் பவுண்ட்ரம் என்ற தனது சிறந்த சங்கையும் முழங்கினார்கள்.

16.
அநந்தவிஜயம் ராஜா குந்தீ புத்ரோ யுதிஷ்டிர:
நகுல: ஸஹதேவச்ச சுகோஷ மணிபுஷ்பகௌ
குந்தியின் புத்திரரான யுதிஷ்டிரர் அனந்தவிஜயம் என்ற சங்கையும், நகுலன் மற்றும் சகாதேவன் சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் முழங்கினார்கள்.

17.
காச்யச்ச பரமேஷ்வாஸ: சிகண்டீ மஹாரதா: 
த்ருஷ்டத்யும்நோ விராடச்ச சாத்யகிச்சாபராஜித: 
காசி ராஜா, சிறந்த வில்லாளன் ஆன சிகண்டீ, மகாரதன் ஆன திருஷ்டத்யும்னன், விராடன், வெற்றி கொள்ள முடியாத சாத்யகி,

18.
த்ருபதோ த்ரௌபதேயாச்ச ஸர்வச: பருதிவீ பதே 
சௌபத்ரச்ச மஹாபாஹூ சங்காந் தத்மு: ப்ருதக் ப்ருதக்
துருபதன், திரௌபதியின் புத்திரர்கள், பெருந் தோள்களை உடைய சுபத்ரையின் புத்திரன் அபிமன்யு - அனைவரும் தத்தமது சங்குகளை முழங்கினார்கள் ஜகத்தின் அதிபதியே!

19.
ஸ கோஷோ தார்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாதி வ்யதாரயத்  
நபச்ச ப்ருதிவீம் சைவ துமுலோப்யநு நாதயந்  
இந்த கோஷங்கள் எல்லாம் திரிதராஷ்ட்ரனின் அணியான கௌரவ சேனையின் இதயத்தைத் துளைத்தது, வானும், மண்ணும் அதிர்ந்தது.

20.
அத வ்யவஸ்திதாந் த்ருஷ்ட்வா தார்தராஷ்ட்ராந் கபித்வஜ:  
ப்ரவ்ருத்தே சஸ்த்ர ஸ்ம்பாதே தநுர் உத்யம்ய பாண்டவ: 
ஜகத்தின் அதிபதியே! திரிதராஷ்ட்ரனின் அணியில் உள்ளவர்கள் அணி வகுத்து நிற்பதைப் பார்த்து, யுத்தம் ஆரம்பம் ஆவதற்கு முன்பு, குரங்கைத் தனது கொடியாகக் கொண்டுள்ள பாண்டுவின் புத்திரனான அர்ஜுனன் தனது வில்லை ஏந்தி கிருஷ்ணனிடம் பின் வருவனவற்றைக் கூறினான்.


விசாரம்
பாண்டவர்களின் கொடியில் இருப்பது அனுமன். அவரைத் தான் சஞ்சயன், குரங்கு என்று சொல்கிறான். பாண்டவர்கள் வன வாசம் செய்யும் போது, பீமன் சௌகந்திக புஷ்பத்தைத் தேடித் போகும் போது அனுமனைச் சந்திப்பான். அவரை அடையாளம் கண்ட பின்னர் அவரிடம் ஆசி வாங்குவான். இருவருமே வாயு குமாரர்கள் இல்லையா? அனுமன் பாண்டவர்களின் கொடியில் இருந்து அவர்களைக் காத்தார். 

மகாபாரத யுத்தம் ஆரம்பத்தில் பாண்டவர், கௌரவர் இடையே யுத்த தர்மம் பற்றிய ஒரு உடன்பாடு இருந்தது. யுத்தம் செய்யும் போது அது 'battle of equals' ஆக இருக்க வேண்டும் - சம அந்தஸ்தில் உள்ளவரிடையே சண்டை இருக்க வேண்டும் (குதிரைப்படை - குதிரைப்படை, யானைப்படை - யானைப்படை, தேர்ப்படை - தேர்ப்படை, மற்றும் காலாட்படை - காலாட்படை), பெண், குழந்தைகளைக் காயப்படுத்தக் கூடாது, அவர்களோடு போர் செய்யக் கூடாது, இரவினில் போர் செய்யக் கூடாது, ஒருவருக்கு ஒருவர் என்று தான் யுத்தம் இருக்க வேண்டும், போரில் காயம் பட்டோ, அல்லது விலகியோ செல்பவரைத் தாக்கக் கூடாது என்று பல விதிகள். இவை எல்லாம் பின் பற்றினார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். த்ரேதா யுகத்தில் நடந்த ராமாயண யுத்தத்தில் ராம ராவண சண்டையின் போது ராவணன் தனது ஆயுதங்கள் எல்லாம் தொலைத்து நிற்கின்றான். கம்பர் கூட அழகாகச் சொல்லுவார் - 'கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று. ஒரு ethics இருந்தது அதில். ராமர் சூழ்நிலையை சாதகம் ஆக்கிக் கொள்ளவில்லை. ஆனால் துவாபர யுகத்தில் நடந்த மகாபாரத யுத்தத்தில் ஓரளவு free for all என்று தான் சொல்ல வேண்டும். விதிமீறல்களைப் பார்ப்போம்:
பீஷ்மரை வீழ்த்த பத்தாம் நாள் யுத்தத்தில் அர்ஜுனன், கிருஷ்ணரின் உபதேசப்படி சிகண்டி என்ற நகும்சகனை முன்னிறுத்தி வீழ்த்துவது,
பதிமூன்றாம் நாள் யுத்தத்தில் பத்ம (சக்கர) வியூகத்தில் சிக்கிய அபிமன்யுவை கௌரவ சேனையின் துரோணர், அஸ்வத்தாமா, கர்ணன், க்ருதவர்மா, கிருபாசாரியார் ஒரே சமயத்தில் போரிடுவது, 
பதினான்காம் நாள் யுத்தத்தில் கை இழந்த பூரிஸ்ரவசை கொலை செய்யும் சாத்யகி, 
பதினைந்தாம் நாள் யுத்தத்தில் துரோணரை அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் என்று சொல்லி வீழ்த்துவது
பதினாறாம் நாள் யுத்தத்தில் இரவிலும் நடக்கும் கடோத்கஜன் வதம்,
பதினேழாம் நாள் கர்ணன் தனது ரதத்தை, சேறில் இருந்து தூக்கும் போது கொல்லும் அர்ஜுனன்,
பீமன் துர்யோதனின் தொடைக்குக் கீழே கதையால் தாக்கி வீழ்த்துவது, 
அன்று இரவு அஸ்வத்தாமன் தூங்கும் பாண்டவ சேனையை எரித்துக் கொல்வது
இறுதி நாளன்று அஸ்வத்தாமன் கர்ப்பிணியான உத்திரை மீது பிரம்மாஸ்திரம் ஏவி சிசுவான பரீக்ஷிதைக் கொல்லப் பார்ப்பது.

இது தவறு தான். அனால் இதை எல்லாம் நியாயப்படுத்த கிருஷ்ணர் துர்யோதனனிடம் சொன்னதை எடுத்துக் கொள்ளலாம். தான் வீழ்த்தப்பட்டவுடன் அவன் கிருஷ்ணரை இகழ்வான். அவர் செய்தது தர்மமா எனக் கேட்பான். அதற்கு பதிலாக கிருஷ்ணர் - 'அதர்மம் செய்பவனிடம் தர்மப்படி யுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை' என்பார். இந்த தர்மத்தைப் பற்றிய அளவுகோல் மாற்றம் ராமாயண, மகாபாரத யுத்தத்தில் காணக் கிடைப்பது. தற்போது கலி யுகத்தில் கேட்கவே வேண்டாம். Rat race தான்.

Monday, July 18, 2011

Chapter 1 - Arjuna Vishaadha Yoga [1-10]

முதல் அத்தியாயத்தின் பெயர் அர்ஜுன விஷாத யோகா. விஷாத என்றால் மனக்லேசம், சம்சயம், dilemma என்று பொருள் கொள்ளலாம்.


1.
திருதராஷ்டிர உவாச :
தர்மஷேத்ரே குருஷேத்ரே ஸம வேதா யுயுத்த்ஸவ:
மாமஹா: பாண்டவாச்சைவ கிம் அகுர்வத ஸஞ்சய
திருதராஷ்டிரன் சொன்னது:
சஞ்சயா! 
புனித ஷேத்திரம் ஆன குருஷேத்ரத்தில் யுத்தம் செய்யும் ஆவலுடன் கூடியிருக்கும் பாண்டுவின் புத்திரர்களும், என் புத்திரர்களும் என்ன செய்தார்கள்?

2.
ஸஞ்சய உவாச:
த்ரிஷ்ட்வாது பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதன ஸ்ததா
ஆசார்யம் உபஸங்கம்ய ராஜா வசநம் அப்ரவீத்
சஞ்சயன் சொன்னது:
பாண்டவர்கள் யுத்த வியூகத்தில் அணிவகுத்து நிற்பதைப் பார்த்த ராஜா துர்யோதனன் தனது ஆசார்யரான துரோணரிடம் சென்று இவ்வாறு கூறினார்.

3.
பஷ்யைதாம் பாண்டுபுத்ராணாம் ஆச்சார்ய மஹதீம் சமூம் 
வ்யூடாம் த்ருபத புத்ரேண தவ சிஷ்யேன தீமதா
துருபதனின் புத்திரனின் கீழ் உங்களின் சிறந்த சீடர்களான பாண்டு புத்திரர்களின் சேனை அணி வகுத்து நிற்பதைப் பாருங்கள் குருவே!

4.
அத்ர சூரா மகேஷ்வாஸா பீமார்ஜுன ஸமா யுதி
யுயுதாநோ விராடச்ச த்ருபதச்ச மஹா  ரத:
இங்கே நாயகர்கள், வில்லாளர்கள், யுத்தத்தில் பீமன், அர்ஜுனன், யுயுதானா, விராடா, துருபதாவிற்கு சமமான மஹா ரதர்கள் இருக்கிறார்கள்.

5.
த்ரிஷ்டகேதுச் சேகிதாந: காசி ராஜச்ச வீர்யவான் 
புருஜித் குந்திபோஜச்ச ஷைப்யச்ச நரபுங்கவ:
திரிஷ்டகேது , சேகிதானா, வீரரான காசி ராஜா, புருஜித், குந்திப்போஜா, சைப்யா போன்ற சிறந்தவர்கள் இருக்கிறார்கள்.

6.
யூதாமந்யுச்ச விக்ராந்த உத்தமௌஜாச்ச வீர்யவான்
சௌபத்ரோ த்ரௌபதேயாச்ச சர்வ ஏவ மஹாரதா:
பலசாலியான யூதாமன்யு, வீரனான உத்தமௌஜஸ், சுபத்ரை புத்திரனான அபிமன்யு, திரௌபதியின் புத்திரர்களான மஹா ரதர்கள் இருக்கிறார்கள்.

7.
அஸ்மாகம் து விசிஷ்டா யே தாந் நிபோத த்விஜோத்தம
நாயகா மம சைன்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்தம்  தாந் ப்ரவீமி தே
பிராமணர்களில் சிறந்தவரானவரே! (த்விஜோத்தமரே), எனது சேனையின் தலைவர்களும், நம்முள்ளே தலை சிறந்தவர்களும் ஆனவர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இதை தாங்கள் தெரிய வேண்டும் என்பதற்காகக் கூறுகிறேன்.

8.
பவாந் பீஷ்மச்ச கர்ணச்ச க்ருபச்ச ஸமிதிஞ்சய:
அஸ்வத்தாமா விகர்ணச்ச சௌமதத்திஸ் ததைவ ச
நீங்கள், பீஷ்மர், கர்ணன், போரில் வெல்லுபவரான கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன், விகர்ணன், சோமதத்தனின் புத்திரனான ஜெயத்ரதன் 

9.
அந்யே பஹவ: சூரா மதர்தே த்யக்த ஜீவிதா:
நாநா சஸ்திர ப்ரஹரணா சர்வே இத விஷாரதா:
மற்றும் பல நாயகர்கள், எனக்காகத் தங்களின் உயிரைக் கொடுத்தவர்கள், பல்வேறு படை பலங்களுடன், ஆயுதங்களுடன் யுத்தத்தில் தேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

10.
அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபி ரக்ஷிதம் 
பர்யாப்தம் த்விதம் ஏதேஷாம் பலம் பீமாபி ரக்ஷிதம்
பீஷ்மரின் தலைமையில் அணி வகுத்து நிற்கும் நமது சேனை போதுமானதாக இல்லை. பீமனின் தலைமையில் அணி வகுத்து நிற்கும் அவர்களின் சேனை போதுமானதாக உள்ளது.

விசாரம்
பகவத் கீதையின் முதல் ஸ்லோகம் திருதராஷ்டிரன் மூலம் சொல்லப்பட்டதாக ஆரம்பிக்கின்றது. மகாபாரத யுத்தம் நடப்பதற்கு முழு காரணம் என்னைப் பொறுத்த வரை திருதராஷ்டிரன் தான். 'புத்திரா, தனம், ராஜ்யம் - சர்வத்வம் மாயயா க்ருதம்' என்று சாஸ்திரம் சொல்கிறது - புத்திரர்கள், செல்வம் (மனைவி உட்பட), மண் (ராஜாவிற்கு ராஜ்ஜியம், சாதாரண மனிதனுக்கு அவன் வீடு) இவற்றின் மீது ஒரு அளவிற்கு மேல் பாசம் வைக்கக் கூடாது. இதை அவன் மறந்தான். தன் பிள்ளை துர்யோதனன் பல தவறுகளைச் செய்தும் புத்திர பாசம் அவனைத் தடுத்தது. மற்ற சபை பெரியவர்களிடம் அதிகாரம் இல்லை. அவர்களுக்கு துர்யோதனன் செய்வது தவறு என்று தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. திருதராஷ்டிரனிடம் அதிகாரம் இருந்ததால் அவன் சூதாட்டம் நடக்காமல் தடுத்திருக்கலாம். செய்யவில்லை. வனவாசம் முடிந்து கிருஷ்ணர் தூது வந்த போது பாண்டவர்களுக்கு ராஜ்யத்தைக் கொடுத்திருக்கலாம். செய்யவில்லை. துர்யோதனன் ஊசி முனை நிலம் கூட தர மாட்டேன் என்று கிருஷ்ணரை சிறைப் பிடிக்க முயன்று, கிருஷ்ணர் தனது விஸ்வரூப தரிசனத்தைக் காட்டியபோது அவன் தன் பிள்ளையைக் கண்டிக்கவில்லை. இவ்வளவும் செய்யாமல் போரில் என்ன நடந்தது என்று தனது தேரோட்டி மற்றும் செயலரான சஞ்சயனிடம் கேட்கின்றான்.

யுத்த பூமியில் கௌரவ சேனையின் பலம் பாண்டவர்களின் சேனையை விட 11:7 என்ற கணக்கில் பலம் மிக்கதாக இருந்தது. ஆனாலும் துர்யோதனனுக்குத் திருப்தி இல்லை. தனது குருவான துரோணரிடம், 'குருவே! நமது படை போதுமானதாக இல்லையே' என்று கூறுகிறான். 

இப்போரில் கௌரவ சேனையின் படைத்தளபதி பீஷ்மர், துரோணர், கிருபாச்சரியார், சல்யன் இவர்களுக்கெல்லாம் பாண்டவர்களின் நியாயம் தெரிந்து தான் இருந்தது. இருந்து என்ன செய்ய - முதல் மூவருக்கும் ஹஸ்தினாபுரத்தின் மீது இருந்த செஞ்சோற்றுக்கடன், சல்யன் தந்திரத்தால் ஏமாற்றப்பட்டு கௌரவர்களுக்கு யுத்தம் செய்ய வேண்டிய நிலை. தங்களின் விதியைத் தெரிந்தே அவர்கள் கௌரவர்களுக்காகப் போர் செய்தனர்.

Wednesday, July 13, 2011

Bhagavath Gita - Dhyaana Shloka

1.
ஓம் பார்த்தாய பிரதிபோதிதாம் பகவதா நாராயணேனஸ்வயம்
வ்யாசேன க்ரதிதாம் புராண முனினா மத்யே மகாபாரதம்
அத்வைதாம்ருத வர்ஷிநீம் பகவதீம் அஷ்டாதஸாத்யாயினீம்
அம்ப த்வாம் அணுசந்ததாமி பகவத் கீதே பவத் வேஷிநீம்

ஓம் பகவத் கீதையே! எதனால் பார்த்தன் ஸ்ரீமன் நாராயணனால் அறிவூட்டப் பட்டானோ, ஆதி முனிவரான வேத வியாசரால் மகாபாரதத்தின் உள்ளே எழுதப் பட்டதோ, தெய்வீகத் தாயே! மறு பிறவியை அழிப்பவளே! அத்வைதத்தின் அமிர்த மழையை பொழிபவளே! பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டதுமான கீதையே! பரிவான தாயே! உன்னை குறித்து தியானிக்கின்றேன்.


2.
நமோஸ்து தே வியாச விஷால புத்தே புல்லா அரவிந்தாயத பத்ர நேத்ர:
யேன த்வயா பாரத தைல பூர்ண: பிரஜ்வாலிதோ ஞானமய பிரதீபா:

வியாசரே! பரந்த அறிவும், முழுதும் மலர்ந்த தாமரை மலரின் இதழ்களைப் போன்ற கண்களையும் கொண்டவரே! தங்களால் ஞானம் என்னும் விளக்கு, மகாபாரதம் என்னும் எண்ணையால் நிரப்பப்பட்டு ஏற்றப்பட்டுள்ளது. உங்களுக்கு எனது வணக்கங்கள்.

3.
பிரபண்ண பாரிஜாதாய தோத்திர வேத்ரைக பாணயே
ஞான முத்ராய கிருஷ்ணாய கீதா அம்ரித துஹே நமஹா:

தன்னைச் சரண் அடைந்தவர்களுக்கு பாரிஜாத மரமாகவோ, கல்பதருவாகவோ இருந்து, அவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் கிருஷ்ணரே! சாட்டையை ஒரு கையில் வைத்திருப்பவரும், தேவ ஞானம் என்று முத்திரையை தன்னுள்ளே கொண்டவரும். பகவத் கீதை என்னும் அமிர்தப் பாலைக் கறப்பவரும் ஆன கிருஷ்ணரே! உங்களுக்கு எனது வணக்கங்கள்.


4.
சர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபால நந்தனா:
பார்த்தோ வத்ஸ சுதீர் போக்தா துக்தம் கீதாம்ரிதம் மஹத்

எல்லா உபநிஷத்களும் - பசுக்கள்; பால் கறப்பவர் - கிருஷ்ணர் என்ற இடையர் சிறுவன்; கன்று - பார்தனாகிய அர்ஜுனன்; தெளிந்த அறிவை உடைய மக்கள் - அதைப் பருகுபவர்கள்; அந்தப் பால் - கீதையின் அமிர்தம்.


5.
வஸுதே வஸுதம் தேவம் கம்ச சாணூர மர்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

உலகிற்கே ஆசிரியராக இருப்பவரும், வசுதேவரின் புத்திரர் ஆனவரும், கம்சன் மற்றும் சாணூரன் ஆகியோரைக் கொன்றவரும், தேவகியின் பரம ஆனந்தம் ஆகத் திகழ்பவரும் ஆன கிருஷ்ணரே! உங்களை வணங்குகிறேன்.


6.
பீஷ்ம துரோண ததா ஜயத்ரத ஜலா காந்தார நீலோத்பலா
சல்ய க்ராஹவதீ கிருபேண வஹநீ கர்ணேன வேலாகுலா
அஸ்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதனா வர்திணீ
சோதீர்ண கலு பாண்டவை ரணனதீ கைவர்தக: கேசவ:

கேசவனைச் சாரதியாகக் கொண்டு யுத்தம் என்ற ஆற்றைப் பாண்டவர்கள் தாண்டினார்கள். இந்த ஆற்றின் கரைகளாக பீஷ்மரும், துரோணரும் இருந்தார்கள், நீராக ஜெயத்ரதன் இருந்தான், அதன் நீலத் தாமரையாக காந்தாரன் சகுனி இருந்தான், அதன் முதலையாக சல்யன் இருந்தான், அதன் சுழல் ஆக கிருபாச்சாரியார் இருந்தார், அதன் வேகமாக கர்ணன் இருந்தான், கொடிய முதலைகளாக விகர்ணனும் அஸ்வத்தாமனும் இருந்தார்கள், அதன் புதைகுழியாக துர்யோதனன் இருந்தான்.


7.
பாரா சர்ய வச: சரோஜம் அமலம் கீதார்த்த கந்தோட் கடம்
நாணா க்யாநக கேசரம் ஹரிகதா சம்போதனா போதிதம்
லோகே சஜ்ஜன ஷட் பதைர் அகரஹ: பேபீயமாணம் முதா:
பூயாத் பாரத பங்கஜம் கலிமலா பிரத்வம்சின ஸ்ரேயசீ:

வியாசரின் வார்த்தைகள் என்னும் குளத்தில் பிறந்ததும், கீதையின் அர்த்தம் என்னும் சுகந்தத்தில் மணப்பதும், பல கதைகளை அதன் தண்டாகவும் (ஆதாரமாகவும்), காளியின் தவறுகளைப் போக்கிய ஹரியின் உபன்யாசத்தால் முழுதும் மலர்ந்ததாகவும், உலகில் உள்ள நல்ல மனிதர்கள் என்னும் தேனீக்களால் பருகி இன்பப்படுவதும் ஆன இந்த மகாபாரதம் என்னும் தாமரை தினம்தோறும் நமக்கு நன்மையை அளிக்கட்டும்.


8.
மூகம் கரோதி வாசாலம் பண்கும் லண்கயதே கிரிம்
யத் கிருபா தமஹம் வந்தே பரமானந்த மாதவம்

பரம ஆனந்தத்தின் ஆதாரமான, எவரின் கருணை ஊமையை சொற்பொழிவாற்ற வைக்குமோ, முடவரை மலையைத் தாண்ட வைக்குமோ , அந்த மாதவனை வணங்குகிறேன்.


9.
யம் பிரம்மா வருணேந்திர ருத்ர மருத: ஸ்துன்வந்தி திவ்யை: ஸ்தவை:
வேதை: சாங்க பத கிரமோபநிஷதைர் காயந்தி யம் சாமக:
த்யானா வஸ்தித தத்கதேன மனசா பஷ்யந்தி யம் யோகினோ
யச்யாந்தம் ந விது: சுரா சுரகனா தேவாய தஸ்மை நமஹா:

பிரம்மன், இந்திரன், வருணன், ருத்ரன் மற்றும் மருதர்களால் புனித பாசுரங்களால் புகழப் படுபவரை, சாம வேதம் பாடுபவர்களால், வேதம் மற்றும் அதன் அங்கமான பதம் மற்றும் க்ரம முறைகளில், உபநிஷத்களில் பாடப் படுபவரை, தியானம் மூலம் தங்களின் மனதை அவர் மீது செலுத்திய யோகிகளால் பார்க்கப் படுபவரை, தேவர்களாலும், அசுரர்களாலும் எவருடைய இறுதியைக் காண முடியாதோ அவரை - அந்தக் கடவுளை நான் வணங்குகிறேன்.

Monday, July 4, 2011

GIta Mahatmiyam - 2

ஒலி வடிவில் கேட்க




12.
த்ரி பாகம் பாடமானஸ்து கங்கா ஸ்நான பலம் லபேத்
ஷடம்சம் ஜபமானஸ்து சோம யாக பலம் லபேத்
மூன்றில் ஒரு பகுதியைப் பாராயணம் செய்யும் ஒருவருக்கு புனித நதியாம் கங்கையில் ஸ்நானம் செய்த பலன் கிட்டும்.
ஆறில் ஒரு பகுதியைப் பாராயணம் செய்பவருக்கு சோம யாகம் செய்த பலன் கிட்டும்.

13.
ஏக அத்தியாயம் து யோ நித்யம் படதே பக்தி சம்யுத:
ருத்ர லோகம் அவாப்நோதி கணோ பூத்வா வசீசிரம்
ஒரு அத்தியாயத்தைப் பரம பக்தியோடும், சிரத்தையோடும் படிப்பவர்கள், ருத்ர லோகத்தை அடைந்து, பரமசிவனின் சேவகனாகிய கணம் என்ற பதவியைப் பெற்று, அங்கே பல்லாண்டு வாழ்வார்கள்.

14.
அத்தியாயம் ஸ்லோக பாடம் வா நித்யம் யஹ் படதே நர:
ஸ யாதி நரதாம் யாவன் மந்வந்திரம் வசுந்தரே
பூமியே! ஒருவர் தினமும் ஒரு அத்தியாயம் படித்தாலோ, அல்லது ஒரு ஸ்லோகம் படித்தாலோ அவர் மந்வந்திரம் காலத்தின் (71 மஹா யுகங்கள் / 3084488000 வருடங்கள் ) இறுதி வரை சரீர உடலுடன் இருப்பார்.

15-16
கீதா யஹ் ஸ்லோக தசகம் சப்த பஞ்ச சதுஸ்தயம்
த்வுத்ரீநேகம் ததர் தம்வா ஷ்லோகாநாம் யஹ் படேன்நர:
சந்திரலோகம் அவாப்னோதி வர்ஷானாம் ஆயுதம் துருவம்
கீதா பாட சமாயுக்தோ ம்ரிதோ மானுஷடாம் வ்ரஜேத்
கீதையின் பத்து, ஏழு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று அல்லது பாதி ஸ்லோகத்தை உபாசிப்பவர்கள் சந்திர லோகத்தை அடைந்து அங்கே பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்வார்கள். கீதையை நித்ய பாராயணம் செய்யும் வழக்கம் உடையவர்கள் இறந்த பிறகும் மற்றொரு மானிடப் பிறவி எடுத்து மீண்டும் ஜனிப்பார்கள்.

17.
கீதா அப்யாசம் புன க்ரித்வா லபதே முக்திம் உத்தமாம்
கீதேத் யுச்சார சம்யுக்தோ ம்ரிய மானோ கதிம் லபேத்
கீதையை மீண்டும், மீண்டும் பாராயணம் செய்வதன் மூலம் ஒருவர் மோக்ஷம் அடைகிறார். இறக்கும் தருவாயில் கீதா என்ற வார்த்தையை உச்சரிப்பதால் ஒருவர் மோக்ஷத்தை அடைகிறார்.

18.
கீதார்த்த ஸ்ரவணா சக்தோ மஹா பாப யுடோபி வா 
வைகுந்தம் சமவாப்நோதி விஷ்ணுனா சஹ மோடதே 
ஒருவர் பாவத்தில் மூழ்கி இருந்தாலும், கீதையின் சாராம்சத்தைக் கேட்பதற்கு 
உரிய முயற்சியை எடுப்பவர்கள் வைகுண்டம் சென்று விஷ்ணுவுடன் மகிழ்ந்து இருப்பார்கள்.

19.
கீதார்த்தம் த்யாயதே நித்யம் க்ரித்வா கர்மாணி பூரிஷ:
ஜீவன் முக்தா ஸ விஜ்னேயோ தேஹாந்தே பரமம் பதம்.
கீதையின் பொருளைக் குறித்து தினமும் தியானிப்பவர்கள், பல சத்காரியங்கள் செய்து மரணத்தின் பின்னே சிறந்த கதியை (பரமபதம்) அடைவார்கள். அப்படிப்பட்ட ஒருவரையே உண்மையான ஜீவன் முக்தாவாகக் கருத வேண்டும். 

20.
கீதாம் ஆஸ்ரித்ய பகவோ பூபுஜோ ஜனகாதயா
நிர்தூத கல்மஷா லோகே கீதா யாதாஹ் பரம் பதம்
இவ்வுலகில் கீதையில் சரண் அடைந்த பலர், ஜனகரைப்* போன்ற மன்னர்களும், மற்றவர்களும் உயர்ந்த கதியான பரமபதம் அடைந்து, எல்லாப் பாவங்களில் இருந்தும் தங்களைச் சுத்தப் படுத்திக் கொண்டார்கள்.
(*  ஜனகரின் காலம் த்ரேதா யுகம். பகவத் கீதையின் காலமோ த்வாபர யுகம். இங்கே குறிக்கப்படுவது அஷ்டவக்ர கீதை ஆகும். அஷ்டவக்ரர் (உடலில் அஷ்டகோணலுடன் பிறந்தவர்), பாண்டித்தியம் பெற்று, ஜனக மகாராஜாவிற்கு உபதேசம் செய்தார். அது அஷ்ட வக்ர கீதை என்று அழைக்கப் படுகிறது.

21.
கீதா யஹ் படனம் க்ரித்வா மஹாத்மியம் நைவ யஹ் படேத்
வ்ரிதா பாடோ பவேத் தஸ்ய ஷ்ரம ஏவ ஹ்யுதா ஹ்ரிதா: 
பகவத் கீதையை பாராயணம் செய்த பின்னர் இந்த மகாத்மியத்தை ஒருவர் படிக்காமல் விட்டால், அதன் பலனை ஒருவர் தொலைக்கின்றார். பாராயணம் செய்த முயற்சி மட்டுமே இருக்கும்.
இது பக்தர்களின் மனதுள் ஒரு பக்தி மற்றும் ஷ்ரத்தையை விதைக்கவே. பகவத் கீதை கடவுளின் வாக்கியம் - வெறும் தத்துவ நூல் அல்ல. எனவே இதைப் பாராயணம் செய்யும் போது தகுந்த பக்தியும், கவனமும் அவசியம்.

22.
ஏதன் மஹாத்மிய சம்யுக்தம் கீதா அப்யாசம் கரோதி யஹ்
ஸ தத் பலம் அவாப்நோதி துர்லபம் கதிம் ஆப்னுயாத்
கீதா மஹாத்மியம் உடன் கீதையைப் பாராயணம் செய்யும் ஒருவர், மேலே குறிப்பிட்டுள்ள பலன்களை அடைந்து, பிற வழிகளில் அடைய முடியாத நற் கதியைப் பெறுவார்.

23.
சுத உவாச:
மஹாத்மியம் ஏதத் கீதாயாஹ் மையா ப்ரோக்தம் சனாதனம்
கீதாந்தே ச படேத்யஸ்து யதுக்தம் தத் பலம் லபேத்
சுதர் சொன்னது:
என்றும் நிலைத்து இருக்கக் கூடிய, என்னால் உரைக்கப்பட்ட இந்த கீதா மஹாத்மியத்தை கீதையைப் பாராயணம் செய்த பின்னர் படிக்க வேண்டும். அதன் மூலம் இதில் குறிப்பிடப்பட்டுள்ள பலன்களை அடையலாம்.

இதி ஸ்ரீ வராஹ புராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம் சம்பூர்ணம்

ஓம் சாந்தி சாந்தி சாந்தி: