Monday, July 18, 2011

Chapter 1 - Arjuna Vishaadha Yoga [1-10]

முதல் அத்தியாயத்தின் பெயர் அர்ஜுன விஷாத யோகா. விஷாத என்றால் மனக்லேசம், சம்சயம், dilemma என்று பொருள் கொள்ளலாம்.


1.
திருதராஷ்டிர உவாச :
தர்மஷேத்ரே குருஷேத்ரே ஸம வேதா யுயுத்த்ஸவ:
மாமஹா: பாண்டவாச்சைவ கிம் அகுர்வத ஸஞ்சய
திருதராஷ்டிரன் சொன்னது:
சஞ்சயா! 
புனித ஷேத்திரம் ஆன குருஷேத்ரத்தில் யுத்தம் செய்யும் ஆவலுடன் கூடியிருக்கும் பாண்டுவின் புத்திரர்களும், என் புத்திரர்களும் என்ன செய்தார்கள்?

2.
ஸஞ்சய உவாச:
த்ரிஷ்ட்வாது பாண்டவாநீகம் வ்யூடம் துர்யோதன ஸ்ததா
ஆசார்யம் உபஸங்கம்ய ராஜா வசநம் அப்ரவீத்
சஞ்சயன் சொன்னது:
பாண்டவர்கள் யுத்த வியூகத்தில் அணிவகுத்து நிற்பதைப் பார்த்த ராஜா துர்யோதனன் தனது ஆசார்யரான துரோணரிடம் சென்று இவ்வாறு கூறினார்.

3.
பஷ்யைதாம் பாண்டுபுத்ராணாம் ஆச்சார்ய மஹதீம் சமூம் 
வ்யூடாம் த்ருபத புத்ரேண தவ சிஷ்யேன தீமதா
துருபதனின் புத்திரனின் கீழ் உங்களின் சிறந்த சீடர்களான பாண்டு புத்திரர்களின் சேனை அணி வகுத்து நிற்பதைப் பாருங்கள் குருவே!

4.
அத்ர சூரா மகேஷ்வாஸா பீமார்ஜுன ஸமா யுதி
யுயுதாநோ விராடச்ச த்ருபதச்ச மஹா  ரத:
இங்கே நாயகர்கள், வில்லாளர்கள், யுத்தத்தில் பீமன், அர்ஜுனன், யுயுதானா, விராடா, துருபதாவிற்கு சமமான மஹா ரதர்கள் இருக்கிறார்கள்.

5.
த்ரிஷ்டகேதுச் சேகிதாந: காசி ராஜச்ச வீர்யவான் 
புருஜித் குந்திபோஜச்ச ஷைப்யச்ச நரபுங்கவ:
திரிஷ்டகேது , சேகிதானா, வீரரான காசி ராஜா, புருஜித், குந்திப்போஜா, சைப்யா போன்ற சிறந்தவர்கள் இருக்கிறார்கள்.

6.
யூதாமந்யுச்ச விக்ராந்த உத்தமௌஜாச்ச வீர்யவான்
சௌபத்ரோ த்ரௌபதேயாச்ச சர்வ ஏவ மஹாரதா:
பலசாலியான யூதாமன்யு, வீரனான உத்தமௌஜஸ், சுபத்ரை புத்திரனான அபிமன்யு, திரௌபதியின் புத்திரர்களான மஹா ரதர்கள் இருக்கிறார்கள்.

7.
அஸ்மாகம் து விசிஷ்டா யே தாந் நிபோத த்விஜோத்தம
நாயகா மம சைன்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்தம்  தாந் ப்ரவீமி தே
பிராமணர்களில் சிறந்தவரானவரே! (த்விஜோத்தமரே), எனது சேனையின் தலைவர்களும், நம்முள்ளே தலை சிறந்தவர்களும் ஆனவர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இதை தாங்கள் தெரிய வேண்டும் என்பதற்காகக் கூறுகிறேன்.

8.
பவாந் பீஷ்மச்ச கர்ணச்ச க்ருபச்ச ஸமிதிஞ்சய:
அஸ்வத்தாமா விகர்ணச்ச சௌமதத்திஸ் ததைவ ச
நீங்கள், பீஷ்மர், கர்ணன், போரில் வெல்லுபவரான கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன், விகர்ணன், சோமதத்தனின் புத்திரனான ஜெயத்ரதன் 

9.
அந்யே பஹவ: சூரா மதர்தே த்யக்த ஜீவிதா:
நாநா சஸ்திர ப்ரஹரணா சர்வே இத விஷாரதா:
மற்றும் பல நாயகர்கள், எனக்காகத் தங்களின் உயிரைக் கொடுத்தவர்கள், பல்வேறு படை பலங்களுடன், ஆயுதங்களுடன் யுத்தத்தில் தேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

10.
அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபி ரக்ஷிதம் 
பர்யாப்தம் த்விதம் ஏதேஷாம் பலம் பீமாபி ரக்ஷிதம்
பீஷ்மரின் தலைமையில் அணி வகுத்து நிற்கும் நமது சேனை போதுமானதாக இல்லை. பீமனின் தலைமையில் அணி வகுத்து நிற்கும் அவர்களின் சேனை போதுமானதாக உள்ளது.

விசாரம்
பகவத் கீதையின் முதல் ஸ்லோகம் திருதராஷ்டிரன் மூலம் சொல்லப்பட்டதாக ஆரம்பிக்கின்றது. மகாபாரத யுத்தம் நடப்பதற்கு முழு காரணம் என்னைப் பொறுத்த வரை திருதராஷ்டிரன் தான். 'புத்திரா, தனம், ராஜ்யம் - சர்வத்வம் மாயயா க்ருதம்' என்று சாஸ்திரம் சொல்கிறது - புத்திரர்கள், செல்வம் (மனைவி உட்பட), மண் (ராஜாவிற்கு ராஜ்ஜியம், சாதாரண மனிதனுக்கு அவன் வீடு) இவற்றின் மீது ஒரு அளவிற்கு மேல் பாசம் வைக்கக் கூடாது. இதை அவன் மறந்தான். தன் பிள்ளை துர்யோதனன் பல தவறுகளைச் செய்தும் புத்திர பாசம் அவனைத் தடுத்தது. மற்ற சபை பெரியவர்களிடம் அதிகாரம் இல்லை. அவர்களுக்கு துர்யோதனன் செய்வது தவறு என்று தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. திருதராஷ்டிரனிடம் அதிகாரம் இருந்ததால் அவன் சூதாட்டம் நடக்காமல் தடுத்திருக்கலாம். செய்யவில்லை. வனவாசம் முடிந்து கிருஷ்ணர் தூது வந்த போது பாண்டவர்களுக்கு ராஜ்யத்தைக் கொடுத்திருக்கலாம். செய்யவில்லை. துர்யோதனன் ஊசி முனை நிலம் கூட தர மாட்டேன் என்று கிருஷ்ணரை சிறைப் பிடிக்க முயன்று, கிருஷ்ணர் தனது விஸ்வரூப தரிசனத்தைக் காட்டியபோது அவன் தன் பிள்ளையைக் கண்டிக்கவில்லை. இவ்வளவும் செய்யாமல் போரில் என்ன நடந்தது என்று தனது தேரோட்டி மற்றும் செயலரான சஞ்சயனிடம் கேட்கின்றான்.

யுத்த பூமியில் கௌரவ சேனையின் பலம் பாண்டவர்களின் சேனையை விட 11:7 என்ற கணக்கில் பலம் மிக்கதாக இருந்தது. ஆனாலும் துர்யோதனனுக்குத் திருப்தி இல்லை. தனது குருவான துரோணரிடம், 'குருவே! நமது படை போதுமானதாக இல்லையே' என்று கூறுகிறான். 

இப்போரில் கௌரவ சேனையின் படைத்தளபதி பீஷ்மர், துரோணர், கிருபாச்சரியார், சல்யன் இவர்களுக்கெல்லாம் பாண்டவர்களின் நியாயம் தெரிந்து தான் இருந்தது. இருந்து என்ன செய்ய - முதல் மூவருக்கும் ஹஸ்தினாபுரத்தின் மீது இருந்த செஞ்சோற்றுக்கடன், சல்யன் தந்திரத்தால் ஏமாற்றப்பட்டு கௌரவர்களுக்கு யுத்தம் செய்ய வேண்டிய நிலை. தங்களின் விதியைத் தெரிந்தே அவர்கள் கௌரவர்களுக்காகப் போர் செய்தனர்.

No comments:

Post a Comment