Saturday, November 26, 2011

Chapter 4 - Gyaana Karma Sannyaasa Yoga [1-10]

1.
ஸ்ரீ பகவான் உவாச:
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாந் அஹம் அவ்யயம்
விவஸ்வாந் மநவே ப்ராஹம் அநுர் இக்ஷ்வாகவே(அ)ப்ரவீத்
ஸ்ரீ பகவான் சொன்னது:
அழிவில்லாத இந்த யோகத்தை நான் விவஸ்வானுக்கு கற்றுக் கொடுத்தேன். அவன் அதை மனுவிற்கு கற்றுக் கொடுத்தான். மனு அது இக்ஷ்வாகுவிற்கு கற்றுக் கொடுத்தான்.

2.
ஏவம் பரம்பரா ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது:
ஸகாலே நேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப
இதை, வழி வழியாக வழங்கப் பட்டு வந்ததை ராஜ ரிஷிகளும் அறிவார்கள். எதிரிகளை அழிப்பவனே (பரந்தபா) ! இந்த யோகம் ஒரு நீண்ட காலமாக இங்கே தொலைந்து போய் உள்ளது.

3.
ஸ ஏவாயம் மயா தே(அ)த்ய யோக: ப்ரோக்த: புராதந: 
பக்தோ(அ)ஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேதத் உத்தமம் 
அதே, பரம ரகஸ்யமான புராதன யோகத்தை உனக்கு நான் இன்று கற்றுக் கொடுத்துள்ளேன். ஏனென்றால் நீ எனது பக்தன் மற்றும் நண்பன்.

4.
அர்ஜுன உவாச:
அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:
கதம் ஏதத் விஜாநீயாம் த்வம் ஆதௌ ப்ரோக்தவாந் இதி
அர்ஜுனன் சொன்னது:
உனது பிறப்போ பிந்தையது. அதற்கு முந்தய பிறப்பு சூர்யக் கடவுளான விவஸ்வான் உடையது. நீ இதை அவருக்கு ஆரம்பத்தில் கற்றுக் கொடுத்தாய் என்பதை நான் எப்படி புரிந்து கொள்ள முடியும்.

5.
ஸ்ரீ பகவான் உவாச:
பஹூநிமே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப
ஸ்ரீ பகவான் சொன்னது:
அர்ஜுனா! எனது, மற்றும் உனது பல பிறப்புகள் கடந்து விட்டன. பரந்தபா! நான் அவை எல்லாவற்றையும் அறிவேன், ஆனால் நீ அறிய மாட்டாய்.

6.
அஜோ(அ)பி ஸந்நவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோ(அ)பி ஸந்
ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாம் யாத்ம மாயயா
நான் பிறப்பற்றவனாக (அநாதி), அழிவற்றவனாக இருந்தாலும், எல்லா உயிர்களுக்கும் அதிபதியாக இருந்தாலும், இயற்கை விதியை என் ஆளுகையில் கொண்டு நான் எனது மாயையினால் பிறக்கின்றேன்.

7.
யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத
அப்யுக்தாநம் அதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம் யஹம்   
எங்கெல்லாம் தர்மத்தில் குறைபாடு உண்டாகின்றதோ, எங்கெல்லாம் அதர்மத்தின் உயர்வு ஏற்படுகின்றதோ, அர்ஜுனா! அங்கெல்லாம் நான் அவதாரிக்கின்றேன்.

8.
பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் 
தர்ம ஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே
தர்மத்தை பரிபாலனம் செய்யும் நல்லவர்களை ரட்சிக்க, கொடியவர்களை அழிக்க, தர்மத்தை ஸம்ஸ்தாபிக்க (ஆழமாக வேரூன்ற), நான் யுகம், யுகமாக தோன்றுகிறேன்.

9.
ஜந்ம கர்ம ச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோ(அ)ர்ஜுந
எனது தெய்வீக பிறப்பு, மற்றும் செயல்களை அதன் உண்மையான வடிவில் அவன் அறிகிறானோ, அவன் இந்த உடலைத் துறந்த பின்னால் மீண்டும் பிறப்பதில்லை. அர்ஜுனா! அவன் என்னிடம் வருகின்றான்.

10.
வீத ராக பய க்ரோதா மந்மயா மாம் உபாச்ரிதா:
பஹவோ ஜ்ஞாந தபஸா பூதா மத்பாவம் ஆகதா:
பற்று, பயம், குரோதம் இவற்றைத் துறந்து, என்னுள் ஆழ்ந்து (என் நினைவாகவே இருந்து), என்னைச் சரண் அடைந்து, ஞானம் என்னும் அக்னியில் புனிதம் அடைந்து, அதிகமானவர்கள் என்னை அடைந்துள்ளார்கள்.

விசாரம்
எல்லாருக்கும் தோன்றக் கூடிய சந்தேகம் இங்கே அர்ஜுனனுக்கும் தோன்றி உள்ளது. அர்ஜுனனும், கிருஷ்ணரும் சம காலத்தியவர், நண்பர்கள், உறவினர்கள் எல்லாம். நம்முடைய நெருங்கிய நண்பர் ஒருவர், நான் தான் பெரிய ஞானி, சூர்ய, சந்திரர்களுக்கெல்லாம் நான் தான் ஞானம் கற்றுக் கொடுத்தேன் என்றால் நாம் உடனே நம்புவோமா என்ன? இங்கும் அது போலவே அர்ஜுனன் சந்தேகம் கொள்கிறான். ஸ்ரீ கிருஷ்ணரும், அதைப் போக்குகிறார். தனது எல்லா பிறப்புகளும், தனது நினைவில் உள்ளதாகவும், அதுவே அர்ஜுனனுக்கு இல்லை என்றும் கூறுகிறார். இந்த ஞானம் கடந்து வந்த பாதை, பரம்பொருளில் இருந்து, சூரியனுக்கு, அவனில் இருந்து மனுவிற்கு, மனுவில் இருந்து இக்ஷ்வாகுவிற்கு. அர்ஜுனன் இந்த இக்ஷ்வாகு குலத்தில் தான் பிறந்தவன். நடுவில் பல காலம் விட்டுப் போயிருந்த இந்த ஞானத்தை மீண்டும் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார்.

 பரம்பொருளான அந்த புருஷர், இயற்கை விதியை மீறாமல், அநாதியாக (ஆரம்பமே இல்லாதவராக இருந்தும்), அழிவில்லாதவராக (இறுதி இல்லதவராக இருந்தும்) மாயையினால் இங்கு அவதாரம் செய்வதற்கான காரணங்களைக் கூறுகிறார். இந்த இரண்டு ஸ்லோகங்களையும் (7  - 8 ) ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பாராயணம் செய்யும் ஒன்று தான். எங்கெல்லாம் தர்மத்திற்கு குறைபாடு ஏற்படுகிறதோ, அதர்மம் தழைக்கிறதோ, அங்கெல்லாம் அவரின் அவதாரம் நடக்கிறது. தர்மப் படி நடப்பவர்களை ரட்சிக்க, அதர்மம் செய்யும் துஷ்டர்களை அழிக்க, தர்மத்தை மேலும் வேரூன்ற வைக்க யுகம் யுகமாக தான் வருவதாகக் கூறுகிறார்.
இதில் ஸம்ஸ்தாபனம் என்ற சொல் முக்கியமானது. ஸ்தாபனம் என்றால் foundation. ஆரம்பத்தில் செய்வது. தர்மம் ஆரம்பத்தில் தோன்றியது தான். ஆனால் நாளாவட்டத்தில், அது குறைய ஆரம்பிக்கும். ஒரு கட்டடத்தில் natural wear and tear காரணமாக சில குறைப்பாடுகள் ஏற்படும் போது அதை பழுது பார்க்கிறோம் - அது மாதிரி இங்கே தர்மத்திற்கும் ஒரு overhaul தேவைப் படுகிறது. அப்படிப்பட்ட சமயத்தில் மீண்டும் தர்மத்தை வேரூன்ற, ஆழமாக ஸ்தாபிக்க வேண்டி உள்ளது, அந்த ஆழமான ஸ்தாபனம் தான் ஸம்ஸ்தாபனம்.
இப்படி மீண்டும், மீண்டும் ஸம்ஸ்தாபனம் செய்யத் தான் அவரும் தசாவதாரமும் செய்ய வேண்டி வந்தது.
தசாவதாரத்தில் உள்ள எல்லா அவதாரத்திலும் இந்த 3 condition களும் நிறைவேறுவதைப் பார்க்கலாம்.
மச்சம் - பிரளயத்தில், நல்லவர்களை ரட்சிக்க, கேட்டவர்களை அழிக்க
கூர்மம் - பாற்கடலைக் கடையும் போது, தேவர்களை ரட்சிக்க, அசுரர்களை அழிக்க
வராகம் - பூமாதேவியைக் கவர்ந்து சென்ற ஹிரண்யாக்ஷனை அழிக்க, பூமாதேவியை ரட்சிக்க
நரசிம்ஹம் - பிரஹலாதனை ரட்சிக்க, ஹிரண்யகசிபுவை அழிக்க, ப்ரஹலாதனை ரட்சிக்க
வாமனம் - இங்கே அழிப்பதற்கு பதிலாக மோக்ஷம் அளிக்க என்று கொள்ளலாம் - மகாபலி சக்ரவர்த்திக்கு மோக்ஷம் அளித்து, அவரை பாதாள லோகத்திற்கு அனுப்பியது
பரசுராமர் - 21 தலைமுறை ஷத்ரிய அரசர்களை அழித்தது
ராமர் - ராவணனை வதம் செய்தது, சீதையைக் காப்பாற்றியது
பலராமர் - க்ருஷ்ணரோடு செய்த தர்ம ரக்ஷணம்
கிருஷ்ணர் - பல அசுரர்களை அழித்தது, பாண்டவர்களைக்  காப்பற்றியது
கல்கி - கலியுகத்தில் மீண்டும் தர்ம ஸம்ஸ்தாபனம்.


இந்த உண்மையைப் புரிந்தவர்கள், மனதில் அந்த பரம்பொருள் ஒன்றைக் குறித்தே த்யானத்தில் இருப்பவர்கள். பந்தபாசம், பயம், குரோதம் இவற்றை விட்டு, ஞானம் பெற்று அந்த பகவானை இவர்கள் சரண் அடையும் போது, அவர்களுக்கு மறு பிறப்பு என்ற ஒரு நிலை இல்லாத மோக்ஷம் கிடைக்கின்றது.  இதுவே இறைவனை அடையும் வழியும் ஆகும்.

Tuesday, November 1, 2011

Chapter 3 - Karma Yoga [31-43]

31.
யே மே மதம் இதம் நித்யம் அனுஷ்டந்தி மாநவா:
ஷ்ரத்தாவந்தோ(அ)நஸூயந்தோ முச்யந்தே தே(அ)பி கர்மபி:
எவர்கள் எனது இந்த அறிவுரையை தினமும் ஷ்ரத்தையுடன், எந்த தடுமாற்றமும் இல்லாமல் அனுஷ்டிக்கிறார்களோ அவர்களும் கர்மத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

32.
யே த்வேதத் அப்யஸூயந்தோ நாநுதிஷ்டந்தி மே மதம்
ஸர்வஜ் ஞாந விமூடாம்ஸ்தாந் வித்தி நஷ்டாந் அசேதஸ: 
ஆனால் எவர்கள் எனது அறிவுரையில் நம்பிக்கை இல்லாமல், அதைக் கடைப்பிடிக்காமல், எல்லா ஞானத்திலும் சூன்யமாக (மயக்கத்தில்) இருந்து, பகுத்தறிய முடியாதவர்களாக இருப்பார்களோ, அவர்கள் அழியவே விதிக்கப்பட்டவர்கள் என்பதை அறிவாயாக.

33.
ஸத்ருசம் சேஷ்டதே ஸ்வஸ்யா: பிரக்ருதேர் ஞாநவாந் அபி
ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி நிக்ரஹ: கிம் கரிஷ்யதி
சான்றோனும் இயற்கையின் பிரகாரமே நடந்து கொள்கிறான். எல்லா உயிர்களும் அந்த இயற்கையின் பிரகாரமே நடந்து கொள்கின்றன. கட்டுபாட்டால் என்ன செய்ய முடியும்.

34.
இந்த்ரியஸ் யேந்த்ரியஸ் யார்தே ராக த்வேஷௌ வ்யவஸ்திதௌ
தயோர்ந வசம்ஆகச்சேத் தௌ ஹ்யஸ்ய பரிபந்தி நௌ
இந்த்ரியங்கள் மேலுள்ள ஆசை, நிராசை எல்லாமே அந்த இந்த்ரியங்களிலேயே உறைகின்றன. எவருமே இதன் கட்டுப்பாட்டில் வர வேண்டாம். ஏனென்றால் இவை தான் அவனின் எதிரிகள்.

35.
ஸ்ரேயாந் ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத் ஸ்வநுஷ்டிதாத்  
ஸ்வதர்மே நிதநம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:
கீர்த்தி என்பது இல்லாமல் போனாலும், தனது சொந்த கடமையே, நன்றாக நிறைவேற்றப்பட்ட மற்றவனின் கடமையை விட மேலானது. தன் சொந்த கடமையில் கிடைக்கும் மரணம் மேலானது. மற்றவனின் கடமை அதன் உள்ளே அச்சத்தைக் கொண்டுள்ளது.

36.
அர்ஜுந உவாச:
அத கேந பிரயுக்தோ(அ)யம் பாபம் சரதி பூருஷ:
அநிச்சந்நபி வார்ஷ்ணேய ப(फ)லாதிவ நியோஜித:
அர்ஜுனன் சொன்னது:
வர்ஷ்நேயா! ஒரு வேளை தனது விருப்பத்திற்கு மாறாக, வேறு வழி இல்லாமல், கட்டாயப்படுத்தப் பட்டாலும், எதனால் உந்தப்பட்டு மனிதன் பாபம் செய்கிறான்? 

37.
ஸ்ரீ பகவான் உவாச:
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுண ஸமுத்பவ:
மஹாசநோ மஹா பாப்மா வித்த்யேநம் இஹ வைரிணம்
பகவான் சொன்னது:
பாவமே நிறைந்த, அனைத்தையும் விழுங்கும் - ரஜோ குணத்தில் பிறந்த காமம் (ஆசை), குரோதம் இவை தான் இந்த உலகில் உள்ள எதிரிகள்.

38.
தூமே நாவ்ரியதே வஹ்நிர் யதா தர்ஷோ மலேந ச
யதோல்பேநாவ்ருதோ க(ग)ர்பஸ் ததா தேநேதம் ஆவ்ருதம் 
எப்படி அக்னி புகையாலும், ஒரு கண்ணாடி தூசியினாலும், கர்ப்பத்தில் உள்ள சிசு அதில் உள்ள திரவத்தாலும் சூழப்பட்டுள்ளதோ, அதைப் போல இங்குள்ள எல்லாமே அதால் சூழப்பட்டுள்ளது.

39.
ஆவ்ருதம் ஜ்ஞாநமே தேந ஜ்ஞாநிநோ நித்ய வைரிணா 
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாந லேந ச
அர்ஜுனா! அறிவு அதன் நித்ய எதிரியான - ஆசை என்ற வடிவில் உள்ள, அக்னியைப் போல திருப்தி படுத்த முடியாத ஒன்றால் சூழப் பட்டுள்ளது.  

40.
இந்த்ரியாணி மநோ புத்திர் அஸ்யாதிஷ்டாநம் உச்யதே 
ஏதைர் விமோஹயத்யேஷ ஜ்ஞாநம் ஆவ்ருத்ய தேஹிநம் 
புலன்கள், மனம், அறிவு அதன் இருப்பிடம். அவனது அறிவை மழுங்கடித்து,  உடல் பலம் கொண்டவர்களையும் மயக்கி விடுகிறது.

41.
தஸ்மாத்த்வம் இந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாந விஜ்ஞாந நாசநம்
பரத குலத்தில் சிறந்தவனே! ஆகையால் புலன்களை முதலில் அடக்கி நீ இந்த பாவத்தை கொண்ட ஆசையைக் கொல்வாயாக. இது(ஆசை) ஞானத்தையும், விஜ்ஞானத்தையும் (உணர்ந்து தெரிந்து கொள்வது) அழிக்கக் கூடியது. 

42.
இந்த்ரியாணி பராண் யாஹூர் இந்த்ரியேப்ய: ப்ரம்ம ந:
மநஸஸ்து பரா புத்திர் யோ புத்தே: பரதஸ்து ஸ: 
இந்த்ரியங்கங்கள் உடலை விட உயர்ந்தது.
மனம் இந்திரியங்கங்களை விட உயர்ந்தது.
அறிவு மனதை விட உயர்ந்தது.
இந்த அறிவை விட உயர்ந்தவன் எவனோ அவனே பரப்ரஹ்மம். 

43.
ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநம் ஆத்மநா 
ஜஹி ச(श)த்ரும் மஹாபாஹோ காம ரூபம் துராஸதம்
அர்ஜுனா! பெருந்தோள் கொண்டவனே! அறிவை விட உயர்ந்த அந்த பரப்ரஹ்மத்தை அறிந்து கொண்டு, புலன்களை அந்த ப்ரஹ்மத்தினால் அடக்கி, வெற்றி கொள்வதற்கு கடினமான, ஆசை என்ற வடிவில் உள்ள இந்த எதிரியைக் கொல்வாயக.

இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே கர்ம யோகோ நாம த்ருதீயோத்யாய:  
இது ஸ்ரீமத் பகவத் கீதை, உபநிஷத், பிரம்மத்தைப் (ஆத்மாவைப்) பற்றிய கல்வி, யோக சாஸ்திரம் (வாழ்க்கையில் செல்ல வேண்டிய பாதையை குறிக்கும் நூல்), ஸ்ரீ கிருஷ்ணர் - அர்ஜுனன் இடையே நடந்த உரையாடல், கர்ம யோகம் என்ற மூன்றாம் அத்தியாயம்.

விசாரம்
கிருஷ்ணரின் யது குலத்திற்கு வ்ருஷ்ணீ குலம் என்ற பெயரும் உண்டு. அதன் மூலமாக அவருக்கு வர்ஷ்ணீயா என்ற பெயர் வந்தது.

எல்லா சாஸ்திரமும் காமம், குரோதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தத் தான் சொல்கின்றன. உதாரணமாக சொன்னால் தான் புரியும் என்பதால் தான் காப்பியங்கள் மூலம் அதை நமக்கு உணர்த்துகின்றன. சனாதன தர்மத்தில் உள்ள ரெண்டு காப்பியங்கள் - ராமாயணம், மகாபாரதம். இரண்டிலுமே கெட்டவர்கள் அழிவிற்கு மூலக் காரணம் இந்த ஆசை மற்றும் குரோதம் தான். ராவணன் சீதை மேல் வைத்த ஆசை அவன் அழிவிற்கு காரணம், கூனி ஸ்ரீ ராமர் மேல் கொண்ட த்வேஷம், கைகேயின் உள்ளே ராஜமாதா ஆகும் ஆசையைத் தூண்டி விட்டு அவளைக் கெடுத்தது. சூர்பனகை ராம லக்ஷ்மணர் மேலே கொண்ட ஆசை அவள் மூக்கைப் பங்கப் படுத்தியது. துர்யோதனன் சிறு வயதிலிருந்தே பாண்டவர் மேல் கொண்ட த்வேஷம், அவர்களின் ராஜ்ஜியம் மேலே கொண்ட ஆசை அவன் அழிவிற்கு காரணம் ஆனது. இருந்தும் நம் மனதில் இந்த ஆசை போகிறதா? இல்லையே. வில்லி பாரதம் என்று ஒரு நூல் - வில்லிபுத்தூர் ஆழ்வார் எழுதினது. ஆசையைப் பற்றி சொல்லும் போது - மனது ஒரு பொருளுக்கு ஆசைப் படுகிறது. அதை எளிதாகவோ, இல்லை கஷ்டப்பட்டோ அடைந்த உடனே இவ்வளவு தானா என்று நினைத்து அதற்கு அடுத்த உயர்ந்த பொருளை ஆசைப் பட ஆரம்பித்து விடுகிறது. இந்த ஆசை நிராசை ஆகும் போது அது குரோதத்தை உண்டு பண்ணுகிறது. ஒரு எதிரி நம்மை அதை விட கெடுதல் செய்யும் அடுத்த எதிரியிடம் தள்ளி விடுவதைப் போல. Greed begets anger; anger begets doom. ஏதோ க்ஷண நேரத்தில் தோன்றிய குரோதம் எத்தனையோ மக்களின் வாழ்கையை சீரழிப்பதை நாம் பார்த்துக் கொண்டுள்ளோம். அப்படியும் புத்தி வராமல் யானை தன் தலையில் மண்ணை அள்ளி போடுவது போல கெடுத்துக் கொள்கிறோம். அந்த ஆசையும், குரோதமும் நம் அறிவை மயக்கி, நம்மை அழித்து விடுகிறது.
சரி இதில் இருந்து எப்படி தப்புவது. அதையும் கிருஷ்ணர் உபதேசிக்கிறார்.
இந்த ஆசை புலன்களில் இருக்கிறது, அதனால் தான் புலன் அடக்கம் முக்கியம். அந்தப் புலனை அடக்க மனதை அடக்க வேண்டும். முன்பே பார்த்தோம் - மனம் ஒரு குரங்கு. கயிறு உதாரணத்தில் சொன்ன மாதிரி மனதை அடக்க வேண்டும். அப்படி மனதை அடக்க, அதை அடக்க வேண்டுமே என்று அறிவு உணர வேண்டும். இந்த அறிவு எப்படி/எப்பொழுது வரும் என்றால், சதா ப்ரஹ்மத்தைப் பற்றியே நினைத்து கொண்டிருக்கும் சாதனத்தால் (practise) தான் வரும். ஸ்ரீ கிருஷ்ணரும் அர்ஜுனனை இப்படி செய்யச் சொல்கிறார்.