Tuesday, February 14, 2012

Chapter 6 - Dhyaana Yoga [11-20]

11.
சுசௌ தேசே பிரதிஷ்டாப்ய ஸ்திரம் ஆஸநம் ஆத்மந:
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிந குசோத்தரம்  
பவித்திரமான  ஒரு இடத்தில், மிகவும் உயரமாகவோ, தாழ்வாகவோ இருக்காமல்,துணி, தோல் மற்றும் தர்ப்பை புல் இவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, தனக்கென ஒரு உறுதியான ஆசனத்தை அமைத்து,

12.
தத்ரைகாக்ரம் மந: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரியா:
உபவிச்யாஸநே யுஞ்ஜ்யாத் யோகமாத்ம விசுத்தயே
மனதை ஒரு முகப் படுத்தி, மனம் மற்றும் அங்கங்களின்
செயல்களைக் கட்டுப்படுத்தி, அந்த ஆசனத்தில் அமர்ந்து அவன் யோகம் செய்து அவனது ஆத்மாவைப் புனிதப் படுத்திக் கொள்ளட்டும்.

13.
ஸமம் காயசிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர:
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திசச் சாநவ லோகயந்
அவன் தனது உடல், தலை மற்றும் கழுத்தை விறைப்பாக, நேராக வைத்திருந்து, அசையாமல், அக்கம் பக்கம் பார்வையைச் செலுத்தாமல், மூக்கின் நுனியில் பார்வையைச் செலுத்தட்டும்.

14.
பிரசாந்தாத்மா விகதபீர் ப்ரஹ்மசாரி வ்ரதே ஸ்தித:
மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர:
அமைதியான மனதுடன், பயமில்லாமல், பிரம்மச்சரிய விரதத்தில்
உறுதியுடன், மனத்தைக் கட்டுப்படுத்தி, என்னையே நினைத்துக் கொண்டு, நிலையான மனதுடன் என்னையே பிரதான குறியாகக் கொண்டு அவன் அமரட்டும்.

15.
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ: 
சாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாம் அதிகச்சதி
இப்படியாக சதா மனதை சமநிலையில் வைத்திருந்து,  மனதை  அடக்கி,   என்னுள் உறையும் அமைதியைப் பெற்று,  யோகியானவன் இறுதியில் பிறப்பற்ற நிலையான நிர்வாணத்தை அடைகிறான்.

16.
நாத்யச்நதஸ்து  யோகோ(அ)ஸ்தி ந சைகாந்தமநச்நத:
ந சாதி ஸ்வப்ந சீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந
அர்ஜுனா! எவன் ஒருவன் அதிகமாக உண்கிறானோ, எவன் ஒருவன் எதையுமே உண்பதில்லையோ, எவன் ஒருவன் அதிகமாக உறங்குகிறானோ,  எவன்  எப்பொழுதும்  விழித்தே  இருக்கிறானோ  அவனுக்கு யோகம் சாத்தியம் இல்லை.

17. 
யுக்தா ஹார விஹாரஸ்ய யுக்த சேஷ்டஸ்ய கர்மஸு
யுக்த ஸ்வப்நாவ போதஸ்ய யோகோ பவதி து:கஹா
எவன் உண்பதிலும், செயல்களிலும் மிதமாக இருக்கிறானோ,
எவன் தனது செயல்களைச் செய்வதில் மிதமாக இருக்கிறானோ, எவன் உறக்கத்திலும், விழிப்பிலும் மிதமாக இருக்கிறானோ அவனுக்கு யோகமானது வலியைப் போக்கும் காரணி ஆகும். 

18.
யதா விநியதம் சித்தம் ஆத்மந்யேவாவதிஷ்டதே  
நி:ஸ்ப்ருஹ: ஸர்வ காமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா 
எவனது மனம் எப்பொழுது நன்றாக கட்டுப்படுத்தப் பட்டு, பிரம்மம்
ஒன்றிலேயே நிலைத்து  இருக்கின்றதோ, ஆசையைத் தூண்டும் பொருட்களில் இருந்து ஏக்கம் இல்லாமல் விலகி  இருக்கின்றதோ,  அப்பொழுது  அவன்  பிரம்மத்தில் ஒன்றி விட்டவனாகிறான்.

19.
யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகிநோ யத சித்தஸ்ய யுஞ்ஜதோ யோகம் ஆத்மந:
அடக்கிய மனதைக் கொண்ட, பிரம்மத்தில் மூழ்கிய,  பிரம்மத்தைக்  கடைப்பிடிக்கும்  யோகியின் மனது,  காற்றடிக்காத இடத்தில்  வைக்கப்பட்ட  விளக்கானது  எப்படி  நிலையாக  எரியுமோ,  அது போல நிலையானதாக உவமைப்படுத்தப் படுகிறது,

20.
யத்ரோ பரமதே சித்தம் நிருத்தம் யோக ஸேவயா 
யத்ர சைவாத்மநாத்மாநம் பச்யந்நாத்மநி துஷ்யதி
மனமானது யோகப் பயிற்சியின் மூலமாக அடக்கப்படும் போது,  அமைதியை அடைகிறது. பிரம்மத்தைத் தன்னுள் காணும் போது, தன்னில் திருப்தி பெறுகின்றது.
    
விசாரம்
எந்த ஒரு பூஜையோ, ஜபமோ செய்யும் போது வெறும் தரையில் அமர்ந்து செய்யக் கூடாது. முன்பெல்லாம் ரிஷிகள் ஆஜிநம் என்று சொல்லப்படுகிற
தோல் மேல் அமர்ந்து செய்தார்கள். BlackBuck Deer என்று ஒரு மான் இனம் உண்டு. அதன் பெயர் கிருஷ்ணாஜிநம். அந்த தோலில் அமர்ந்து செய்தால் உத்தமம். இல்லையா தரையில் தர்ப்பை பாய் விரித்து அதில் அமர்ந்து செய்யலாம். தர்ப்பைப் புல் energy level, radiation இவற்றை absorb செய்து கொள்ளும் சக்தி பெற்றது. அதனால் தான் க்ரஹனம் சமயத்தில் உணவுப் பொருட்களின் மீது தர்ப்பைப் புல் போட்டு பின்னர் அந்த உணவை உண்ண வைத்துக் கொள்கிறோம். ஹோமத்தின் போது மோதிர விரலில் பவித்ரமாக கட்டிக் கொள்கிறோம், காலின் அருகே போட்டுக் கொள்கிறோம்,

நாம் சொல்லும் ஸ்லோகத்திலேயே பார்க்கிறோம். ஆரம்பத்தில் தியானம் என்று ஒரு பகுதி வருகிறது. சந்தியாவந்தனத்தில் கூட காயத்ரி ஜபம் செய்வதற்கு முன்பு பிராணாயாமம் தியானம் செய்கிறோம். இது ஒரு விதமான மூச்சுப் பயிற்சி. தியானம் செய்யும் போது முதுகெலும்பை நேராக வைத்துக் கொண்டு, நிமிர்ந்து உட்கார்ந்து, கண்ணை மூடிக் கொண்டோ அல்லது மூக்கு நுனியின் மீதோ பார்வையை ஒருமுகப் படுத்தி செய்ய வேண்டும். மனம் அப்போது அலை பாயாமல், எதற்கும் கவலைப்படாமல், பிரம்மச்சர்ய விரதத்துடன் செய்ய வேண்டும். இப்படி யோகம் செய்பவனே பிரம்மத்தைக் குறித்த பாதையில் சென்று மோக்ஷத்தைப் பெற முடியும். உண்ணாமலோ, உறங்காமலோ இருந்து பயன் இல்லை. அதற்காக அவற்றை அதிகமாகச் செய்தும் பலன் இல்லை. எதிலும் மிதமான அளவில் இருக்க வேண்டும்.

காற்றில்லாத இடத்தில் வைக்கப் பட்ட விளக்கு சலனம் இல்லாமல் நிலையாக எரிவதைப் போல அந்த யோகியின் மனமும் சலனம் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கு தான் இந்த தியானம். இந்த மன அமைதி, சமநிலை பெற்றால் தான் பிரம்மம் என்ற பேரானந்த நிலையை அடைந்து பிறப்பற்ற நிலையை அடைய முடியும்.

1 comment:

  1. //உண்ணாமலோ, உறங்காமலோ இருந்து பயன் இல்லை. அதற்காக அவற்றை அதிகமாகச் செய்தும் பலன் இல்லை. எதிலும் மிதமான அளவில் இருக்க வேண்டும்.//

    விளக்கம்,எளிதாக புரியும் படி இருக்கு. நன்றி.

    ReplyDelete