Thursday, January 19, 2012

Chapter 6 - Dhyaana Yoga [1-10]

1.
ஸ்ரீ பகவான் உவாச:
அனாச்ரித: கர்ம ப(फ)லம் கார்யம் கர்ம கரோதி ய:
ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்னிர் ந சாக்ரிய:
ஸ்ரீ பகவான் சொன்னது:
எவன் ஒருவன் தனக்கு விதிக்கப்பட்ட கடமையை, அதன் பலன்களின் மீது பற்றில்லாமல் செய்கின்றானோ அவனே சந்ந்யாசி மற்றும் யோகியே அன்றி எவன் தன்னுள்ளே அக்னி(உத்வேகம்) மற்றும் செயல்லற்று இருப்பவன் அல்லன்.

2.
யம் ஸந்ந்யாஸம் இதி ப்ராஹூர் யோகம் தம் வித்தி பாண்டவ
ந ஹ்ய ஸந்ந்யஸ்த ஸங்கல்போ யோகீ பவதீ கச்சந
அர்ஜுனா! சந்ந்யாசம் என்று அழைக்கப்படும் அந்த யோகத்தைப் பற்றி உனக்கு தெரியுமா? எண்ணங்களைத் தொலைக்காதவன் (கட்டுப்படுத்தாதவன்) யோகி ஆவதில்லை.  

3.
ஆருருக்ஷோர் முநேர் யோகம் கர்ம காரணம் உச்யதே
யோகாரூடஸ்ய தஸ்யைவ சம: காரணம் உச்யதே
யோகத்தை அடைய விரும்பும் ரிஷிகளுக்கு செயல் ஒரு சாதனம். யோகத்தை அடைந்த அதே யோகிக்கு செயலின்மை (கர்மங்களைக் கட்டுபடுத்துதல்) சாதனம் எனப்படுகிறது.

4.
யதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே
ஸர்வ ஸங்கல்ப ஸந்ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே  
எவன் ஒருவன் புலன்களின் மீதோ, செயல்களின் மீதோ பற்றில்லாமல் இருக்கிறானோ, எவன் எண்ணங்களைத் தொலைத்துள்ளானோ, அப்பொழுது அவன் யோகத்தை அடைந்தவன் எனக் கருதப் படுகிறான்.

5.
உத்தரேதாத்மந் ஆத்மாநம் ந ஆத்மாநம் அவஸாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துர் ஆத்மைவ ரிபுராத்மந:
தனது ஆத்மாவின் மூலமே ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ளட்டும், தன்னைத் தாழ்த்திக் கொள்ள வேண்டாம். இந்த ஆத்மா ஒன்றே ஒருவனுக்கு நண்பனும் ஆகும், இந்த ஆத்மா ஒன்றே ஒருவனுக்கு எதிரியும் ஆகும்.

6.
பந்துர் ஆத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித:
அனாத்மநஸ்து சத்ருத்வே வரதேதாத்மைவ சத்ருவத்
எவன் ஒருவன் தனது ஆத்மாவாலேயே தன்னை வெற்றி கொண்டுள்ளானோ, அவனுக்கு ஆத்மாவே அவனது நண்பனாகிறது. எவன் தன்னை வெற்றி கொள்ளவில்லையோ, அவனுக்கு இந்த ஆத்மாவே புற எதிரியை போன்ற நிலையில் எதிரியாக இருந்து விடுகிறது. 

7.
ஜிதாத்மந: ப்ரசாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித:
சீதோஷ்ண ஸுக து:கேஷு ததா மாநாபமாநயோ:
எவன் ஒருவன் தன்னை அடக்கி, அமைதியுடன் இருக்கிறானோ, அவனது ஆத்மாவானது குளிர்/வெப்பம், இன்பம்/துன்பம் மற்றும் மானம்/அவமானங்களில் சமம் ஆகவே இருக்கிறது. 

8.
ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய: 
யுக்த இத்யுச்யதே யோகீ ஸம லோஷ்டாச்ம காஞ்சந:   
எந்த யோகியானவன் ஞானம் மற்றும் விஞ்ஞானத்தில்(பிரம்மத்தைப் பற்றிய அறிவில்) திருப்தி கொண்டுள்ளானோ, எவன் தனது புலன்களை அடக்கி உள்ளானோ, எவனுக்கு ஒரு பிடி மண், கல் மற்றும் தங்கம் சமமோ, அவன் சமாதி (நிர்வாண) நிலையை அடைந்தவன் ஆகிறான்.    

9.
ஸுஹ்ருந் மித்ரார்ய உதாஸீந மத்யஸ்த த்வேஷ்ய பந்துஷு   
ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸம புத்திர் விசிஷ்யதே 
எவன் ஒருவன் நல் இதயம் கொண்டவர்களுக்கும், நண்பர்களுக்கும், எதிரிகளுக்கும், உதாசீனம் செய்பவர்களுக்கும், மத்தியமமாக இருப்பவர்களுக்கும், த்வேஷம் உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும், குனவாங்களுக்கும், பாபிகளுக்கும் சமமாக இருக்கிறானோ, அவனே வெற்றி பெறுவான்.

10.
யோகீ யுஞ்சீத ஸததம் ஆத்மாநம் ரஹஸி ஸ்தித:
ஏகாகீ யத சித்தாத்மா நிராசீர பரிக்ரஹ:
யோகியானவன், தனிமையில், ஏகாந்தமாக, தனது மனதையும், உடலையும் அடக்கி, ஆசை/நிராசையை விலக்கி தனது மனதை நிலையாக வைத்திருக்க எப்பொழுதும் முயற்சி செய்யட்டும்.

விசாரம்
பொதுவாக ஸ்லோகம் சொல்லும் போது ஆரம்பத்தில் தியானம், ந்யாசம் என்று வரும். ந்யாசம் என்பதில் உடலின் பகுதிகளில் இறைவன் எல்லை தெய்வம் போல இருப்பதாக உருவகப் படுத்திக் கொண்டு, பின்பு அந்த இறைவனை மனதில் ஒரு முகப்படுத்தி பின்னர் சொல்ல வேண்டிய ஸ்லோகங்களைச் சொல்கிறோம். மனதை condition படுத்தும் பயிற்சி தான் இது. ஒன்றுமே இல்லையா, சுவாமி உருவத்தைப் பார்த்துக் கொண்டே அந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம். எங்கோ பார்த்துக் கொண்டு வாய் உச்சரிப்பதைக் காட்டிலும் இந்த தியானம் செய்து ஒரு முகப்படுத்தி உச்சரிப்பது நமக்கு ஒரு அமைதியை தருகிறது அல்லவா? இங்கே ஸ்லோகம் சொல்வது என்ற கர்மம், தியானம் செய்ய வழி வகுக்கிறது. கர்ம யோகம், தியான யோகம் செய்வதற்கு ஒரு படிக்கல் ஆகிறது. 

இப்படி மனம் ஒருமுகப்படாவிட்டால் என்னாகும்? மனதில் தோன்றும் ஆசை/நிராசை காரணமாக ஒரு விருப்பு/வெறுப்பு தோன்றுகிறது. அது மனதை (ஆத்மாவை) எதாவது ஒரு செயலைச் செய்ய வைத்து பிரம்மத்தைப் பற்றிய எண்ணத்தை விலக்கி விடுகிறது. மனதை அலை பாய விடாமல் அடக்கினால் அன்றி மன அமைதியையும், முக்தி நிலையையும் அடைய முடியாது. 'தீதும், நன்றும் பிறர் தர வாரா' என்று ஒரு பழமொழி உண்டு. நமக்கு வரும் எல்லா நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே, நமது மனமே காரணம். ஒருவனுக்கு அவனது மனமே நண்பன். சரியாக மனதை அடக்கி வைத்திருக்கவில்லை என்றால் அதுவே அவனது எதிரி. மனதை அடக்கியவன் எல்லாவற்றையும் சமமாகப் பார்ப்பான். அவனே யோகி ஆகிறான் / குறைந்த பக்ஷம் யோகி ஆவதற்கான தகுதி பெறுகிறான். இப்படி மன அமைதி பெற்றவனுக்கு எல்லாப் பொருளும் ஒன்று தான் - மண்ணா, தங்கமா என்று தரம் பார்ப்பதில்லை, நண்பனா, எதிரியா என்று பிரித்துப் பார்ப்பதில்லை.

இப்படி மனதை அடக்கினால் தான் தியானம் என்ற ஒன்று செய்வதற்கு, வழி பிறக்கும். எப்படி தியானம் செய்வது - அதை அடுத்து பார்ப்போம்.

1 comment:

  1. // நமக்கு வரும் எல்லா நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே, நமது மனமே காரணம். ஒருவனுக்கு அவனது மனமே நண்பன். சரியாக மனதை அடக்கி வைத்திருக்கவில்லை என்றால் அதுவே அவனது எதிரி. //

    அருமை.

    ReplyDelete