Monday, August 22, 2011

Chapter 2 - Saankhya Yoga [1-10]

1.
ஸஞ்சய உவாச:
தம் ததா க்ருபயாவிஷ்டம் அஸ்ருபூர்ணா குலேக்ஷணம்
விஷீதந்தம் இதம் வாக்யம் உவாச மதுசூதந:
ஸஞ்சயன் சொன்னது:
மது என்ற அரக்கனைக் கொன்றதால் மதுசூதனா என்று அழைக்கப்படும் கிருஷ்ணர் - மனதில் பரிதாப உணர்வுடன், கவலையுடன், கண்களில் நீர் ததும்ப கலக்கத்துடன் இருந்த அவனை (அர்ஜுனனை) நோக்கி இந்த வார்த்தைகளைச் சொன்னார்.

2.
ஸ்ரீ பகவான் உவாச:
குதஸ்த்வா கஷ்மலம் இதம் விஷமே ஸமுபஸ்திதம்
அநார்ய ஜுஷ்டம் அஸ்வர்க்யம் அகீர்திகரம் அர்ஜுந 
பகவான் சொன்னது
உன் தகுதிக்கு உட்படாத இந்த கலக்கம் மதிப்பில்லாதது. எங்கிருந்து உனக்கு இந்த அபாயகரமான எண்ணம் வந்தது? இது சொர்கத்தின் கதவுகளை உனக்கு மூடி விடுமே அர்ஜுனா?

3.
க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த நைதத் த்வய்யுப பத்யதே
க்ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப
ப்ருதாவின் (குந்தியின்) பிள்ளையான அர்ஜுனா! கோழைத் தனத்திற்கு இடம் கொடுக்காதே. அது உனக்கு ஏற்றதல்ல. இதயத்தில் இருந்து இந்த தகுதி இல்லாத பலவீனத்தை அகற்றி விடு. எதிரிகளை அழிப்பவனே! எழுந்திரு!


4.
அர்ஜுந உவாச:
கதம் பீஷ்மமஹம் ஸாங்க்யே த்ரோணம் ச மதுசூதந
இஷுபி: பிரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிசூதன
அர்ஜுனன் சொன்னது:
மதுசூதனா! எதிரிகளை அழிப்பவனே! வணக்கத்திற்கு உரிய பீஷ்மர் மற்றும் துரோணர் மீது அம்புகளை விட்டு நான் எப்படி யுத்தத்தில் சண்டை இட முடியும்?


5.
குரூந் அஹத்வா ஹி மஹாநுபாவாந் ஸ்ரேயோ போக்தும் பைக்ஷ்யம் அபீஹ லோகே 
ஹத்வார்த காமாம்ஸ்து குரூந் இஹைவ புஞ்சீய போகாந் ருதிர ப்ரதிக்தாந்
மிகவும் உத்தமமான இந்த ஆசார்யர்களைக் கொல்வதைக் காட்டிலும், இந்த உலகில் பிக்ஷை வாங்குவது மேலானது. நான் அவர்களைக் கொன்றாலும், இந்த உலகில் நான் அனுபவிக்கும் எல்லா செல்வங்களும், ஆசைகளும் அவர்களின் ரத்தத்தால் கறை பட்டிருக்கும். 

6.
நசைதத்வித்ம: கதரந்நோ கரீயோ யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு:
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாம: தே(அ)வஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:
நாம் அவர்களை வெல்வதா - இல்லை அவர்கள் நம்மை வெல்வதா? எது சிறந்தது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. யாரைக் கொன்ற பின் நாம் உயிர் வாழ விரும்ப மாட்டோமோ - அந்த திரிதராஷ்ட்ரனின்
பிள்ளைகள் நம் முன்னே நிற்கிறார்கள். 

7.
கார்பண்யதோஷோ பஹதஸ்வபாவ: ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம்மூடசேதா: 
யச்ச்ரேய ஸ்யாந்நிச்சிதம் ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தே(அ)ஹம் சாதி மாம் த்வாம் பிரபந்நம்
என் இதயம் தயை என்ற உணர்வால் சூழப் பட்டுள்ளது. என் மனம் எது கடமை என குழம்பிப் போயுள்ளது. நான் உன்னைக் கேட்கிறேன் - எது எனக்கு நல்லது என நீ உறுதிபட கூறுவாயாக. நான் உன் சிஷ்யன். உன்னைச் சரண் அடைந்த எனக்கு அறிவுரை கூறுவாயாக.

8.
ந ஹி பிரபச்யாமி மமாபநுத்யாத் யச்சோகம் உச்சோஷணம்  இந்த்ரியாணாம்
அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம் ராஜ்யம் சூராணாம் அபி சாதிபத்யம் 
நான் செல்வங்களை அடைந்து, இவ்வுலகின் ஏகாதிபத்தியம் பெற்று, கடவுள்களுக்கே அதிபதி ஆனாலும், அது எனது உணர்வுகளை எரிக்கும் இந்த வருத்தத்தைப் போக்குவதாகத் தெரியவில்லை.

9.
ஸஞ்சய உவாச:
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேசம் குடாகேச பரந்தப:
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ
ஸஞ்சயன் சொன்னது
ஹ்ருஷீகேசனிடம் இவ்வாறு கூறிய எதிரிகளை அழிப்பவன் ஆன அர்ஜுனன், கிருஷ்ணரிடம் 'நான் போர் செய்ய மாட்டேன்' என்று கூறி அமைதி ஆனான்.

10.
தம் உவாச ஹ்ருஷீகேச: ப்ரஹஸந்நிவ பாரத
சேநயோர் உபயோர் மத்யே விஷீதந்தம் இதம் வச:
பாரதா (திரிதராஷ்ட்ரன்)! புன்னகையோடோ என்னவோ, ஸ்ரீ கிருஷ்ணர் இரு சேனைகளின் நடுவே சஞ்சலத்துடன் இருக்கும் அவனை (அர்ஜுனனை) நோக்கி, பின் வரும் இந்த வார்த்தைகளைக் கூறினார். 

விசாரம்
பகவத் கீதையின் ரெண்டாம் அத்தியாயத்தின் பெயர் - ஸாங்க்ய யோகா. நமக்கு தெரிந்த சில கீதோபதேசத்தின் இருப்பிடம். ஆத்மா - அதன் அழிவற்ற தன்மையை (Immortality of the Soul) பற்றி சொல்லும் அத்தியாயம். இதில் கீதையின் சில மூல அறிவுரைகள் உள்ளன. 

ஏற்கனவே போன அத்யாயத்தில் பார்த்த அர்ஜுனனின் குழப்பமான மன நிலையில், அவன் மனதில் பாசம் மற்றும் கடமை - இரண்டுக்கும் இடையில் குழம்பிப் போய் கிருஷ்ணரிடம் அறிவுரை கேட்கின்றான். தான் வெற்றி பெற்றாலும், அது தனது பெரிய தாத்தா மற்றும் ஆச்சார்யரின் ரத்தத்தில் கிடைத்த வெற்றியாக இருக்குமாதலால் அதில் எப்படி சந்தோசம் கொள்ள முடியும் என அவன் எண்ணுகிறான். அப்படி ஒரு வெற்றியினால் கிடைத்த வாழ்வு வாழ்வதற்கு பதில் ஒரு பிச்சைக்காரனாக இருப்பதே மேல் என எண்ணுகிறான். அதே சமயம் தன் கடமையைச் செய்யவில்லையோ என்ற குழப்பமும் வருகிறது. தன்னால் ஸ்வயமாக யோசிக்க முடியாமல் ஸ்ரீ கிருஷ்ணரை சரணாகதி அடைந்து, 'கிருஷ்ணா - எதை நான் செய்ய வேண்டும் என நீயே சொல்' என்கிறான். 

கிருஷ்ணரிடம் சரணாகதி அடைந்தவர்களில் மகாபாரதத்தில் இந்த நிலையில் அர்ஜுனனுக்கு முன்பாக வருபவள் திரௌபதி. ஹஸ்தினாபுர அரச சபையில், யுதிஷ்டிரர் சூதாட்டத்தில் தோற்று, அனைத்தையும் இழந்த பின்னே, திரௌபதி சபையில் துச்சாதநனால் துகில் உரியப்படுகிறாள். அவளும் எவ்வளவோ தன் இரு கரங்களால் போராடிப் பார்த்தாள் - முடியவில்லை. இறுதியில் தனது இரு கைகளையும் மேலே தூக்கி, கிருஷ்ணா நீ தான் காப்பாற்ற வேண்டும் என வேண்ட, ஆடை மேல் ஆடையாக கிருஷ்ணர் அளித்தார். முன்பொரு சமயம் கிருஷ்ணர் கை விரலில் ஒரு சிறு காயம் அடைந்த போது திரௌபதி அதில் துணியால் கட்டு போட்டாள். கிருஷ்ணரும் அவளிடம் இந்த துணியின் ஒவ்வொரு நூலிற்கும் நான் உனக்கு கடன் பட்டுள்ளேன் என்று கூறினார். அதனை இப்படி ஆடைகளாக அளித்து அடைத்தார். அதற்கு பின்னே இங்கே அர்ஜுனன் செய்த total surrender - பரிபூரண சரணாகதி. 

நமக்கும் வாழ்க்கையில் எவ்வளவோ துயரங்கள், வருத்தங்கள், கஷ்டங்கள். நாம் செய்ய வேண்டிய கடமையைச் செய்து விட்டு, கடவுளிடம் சரணாகதி அடைந்து விடுவோம். நம்மை அவன் காப்பான். 

No comments:

Post a Comment