Monday, August 1, 2011

Chapter 1 - Arjuna Vishaadha Yoga [21-30]

21-22
அர்ஜுன உவாச:
ஹ்ருஷீகேசம் ததா வாக்யம் இதமாஹ மஹீபதே
சேநயோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபயமே (அ)ச்யுத 
யாவத் ஏதாந் நிரிக்ஷேஹம் யோத்துகாமாந் அவஸ்திதாந்
கைர் மயா ஸஹ யோத்தவ்யம் அஸ்மிந் ரண சமுத்யமே
அர்ஜுனன் சொன்னது:
கிருஷ்ணா!
இங்கு நிற்பவர்கள், போரிடும் ஆசையில் வந்திருப்பவர்கள், யுத்தம் ஆரம்பிக்கும் பொழுது நான் யாருடன் சண்டையிட வேண்டும் என்பதை நான் கண்டு கொள்ள எனது ரதத்தை இரு சேனைகளுக்கும் இடையே நிறுத்துவாயாக.

23
யோத்ஸ்யமாநாந் அவேக்ஷேஹம் ய ஏதேத்ர ஸமாகதா:
தார்தராஷ்ட்ரஸ்ய துர்புத்தேர் யுத்தே ப்ரிய சிகீர்ஷவ:
ஏன் என்றால் - துர்மதியன் ஆன துர்யோதனனை, போரில் யுத்தம் செய்து ப்ரீதி செய்ய நினைக்கும் இங்கு கூடி இருப்பவர்களை நான் பார்க்க விரும்புகிறேன்.

24
ஸஞ்சய உவாச:
ஏவமுக்தோ ஹ்ருஷீகேசோ குடாகேசேன பாரத
சேநயோர் உபயோர் மத்யே ஸ்தாபயித்வா ரதோத்தமம்
ஸஞ்சயன் சொன்னது:
திரிதராஷ்டிரா! அர்ஜுனன் இவ்வாறு சொன்னதும் ஹ்ருஷீகேசன் (கிருஷ்ணர்), அந்த சிறந்த ரதத்தை இரு சேனைகளுக்கும் இடையே நிறுத்தினான்.

25
பீஷ்ம த்ரோண ப்ரமுகத: சர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்
உவாச பார்த பச்யைதாந் ஸமவீதாந் குரூந் இதி
பீஷ்மர், துரோணர் மற்றும் உலகின் பிற அரசர்களின் முன்னே (கிருஷ்ணன்) சொன்னான் - 'அர்ஜுனா! கூடி இருக்கும் இந்த குரு வம்சத்தவரை இப்பொழுது காண்பாயாக'.

26
தத்ரா பஷ்யத் ஸ்திதாந் பார்த: பித்ரூந் அத பிதாமஹாந்
ஆசார்யாந் மாதுலாந் ப்ராத்ரூந் புத்ராந் பௌத்ராந் ஸகீம் ஸ்ததா
உடனே அர்ஜுனன் அங்கே கூடி இருந்த பாட்டனார்கள், தந்தையர்கள், ஆச்சார்யர்கள், தாய் மாமன்கள், சகோதரர்கள், பிள்ளைகள், பேரன்கள், மற்றும் நண்பர்கள் 

27
ச்வசுராந் ஸுஹ்ருதச்சைவ சேநயோர் உபயோர் அபி
தாந் ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வாந் பந்தூந் அவஸ்திதாந்
மாமனார்கள் மற்றும் நல் இதயம் கொண்டவர்கள் - இவர்களை இரு சேனையிலும் கண்டான். குந்தியின் மைந்தன் ஆன அர்ஜுனன் இந்த உறவினர்கள் எல்லோரும் அணி வகுத்து நிற்பதைப் பார்த்து, வருத்தம் நிறைந்த குரலில், ஆழ்ந்த பச்சாதாபத்துடன் இவ்வாறு கூறினான்.

28
அர்ஜுன உவாச:
க்ருபயா பரயாவிஷ்டோ விஷீதந் இதம் அப்ரவீத்
த்ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் கிருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்திதம் 
கிருஷ்ணா! எனது உறவினர்கள் ஆன இவர்கள், யுத்தம் செய்யும் முனைப்புடன்
அணி வகுத்து நிற்பதைப் பார்த்து

29
ஸீதந்தி மம காத்ராணி முகம் ச பரிசுஷ்யதி 
வேபதுச்ச சரீரே மே ரோம ஹர்ஷச்ச ஜாயதே
என் அங்கங்கள் துவள்கிறது, என் வாய் உலர்ந்து விட்டது, என் உடல் நடுங்குகிறது, என் ரோமங்கள் சிலிர்த்து நிற்கிறது.

30
காண்டீவம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத் த்வக் சைவ பரிதஹ்யதே 
ந ச சக்நோம் யவஸ்தாதும்  ப்ரமதீவ ச மே மந: 
காண்டீவம் என் கைகளில் இருந்து நழுவுகிறது, என் தேஹம் எங்கும் எரிகிறது, என்னால் நிற்கக் கூட முடியவில்லை, என் மனம் தடுமாறுகிறது. 

விசாரம்
அர்ஜுனன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் இவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என்பதை தாண்டி, அவர்களிடையே இரு உறவுமுறையும் இருந்தது ஒன்று அத்தையின் பிள்ளை என்ற தாயாதி உறவு, இன்னொன்று மச்சினன் என்ற உறவு.
அர்ஜுனின் தாய் குந்தி. அவளின் பிறப்பின் போது, அவளுக்கு வைக்கப்பட்ட பெயர் ப்ருதா. கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் சஹோதரி. சிறு வயதில் குந்திபோஜனுக்கு தத்து கொடுக்கப்பட்டாள். அதனால் குந்தி என்ற பெயர் வந்தது. கிருஷ்ணருக்கு அவள் அத்தை. கிருஷ்ணரும் அவளை அத்தை என்றே அழைப்பார்.
கிருஷ்ணரின் சஹோதரி சுபத்ரை. அர்ஜுனனின் மனைவி. அதனால் கிருஷ்ணருக்கு அவன் மச்சினன்.

அர்ஜுனன் தனது சாரதியாக ஸ்ரீ கிருஷ்ணரை எப்படி பெற்றான் தெரியுமா? மகாபாரதத்தின் உத்தியோக பர்வாவில் இந்த நிகழ்ச்சி வருகிறது. பாண்டவர்களும், கௌரவர்களும் யுத்தம் என்று முடிவான பின் தங்களின் அணியைப் பலப்படுத்த அவர்களோ, அவர்களைச் சார்ந்தவர்களோ பிறரிடம் தூது சென்றனர். கிருஷ்ணர் மற்றும் அவரின் நாராயண சைந்யத்தை இரு அணியினருமே பெற நினைத்தனர். அவ்வாறு ஆதரவு பெற அர்ஜுனனும், துர்யோதனனும் ஒரே சமயத்தில் கிருஷ்ணரிடம் சென்றனர். கிருஷ்ணர் நித்திரை கொண்டிருந்தார். துர்யோதனன் தான் ராஜா என்ற கர்வத்தில் அவரின் தலை அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான். அர்ஜுனனோ அவரின் பாதத்தின் அருகே வணக்கத்துடன் நின்றான். தூங்கி எழும் போது முதலில் பாதம் பகுதியில் இருப்பது தானே முதலில் தெரியும். அதன் படியே, கிருஷ்ணரும் முதலில் அர்ஜுனனைப் பார்த்தார். பின்பே துர்யோதனனை. இருவரும் கிருஷ்ணரின் ஆதரவை வேண்ட - கிருஷ்ணர் நிராயுதபாணியான தான் ஒரு அணியிலும், தனது நாராயண சைந்யம் மற்றொரு அணியிலும் இருக்கும் என்று கூறினார். தான் முதலில் அர்ஜுனனைப் பார்த்தாலும், வயதில் அவனே சிறியவன் என்றதாலும் முதலில் அவன் விருப்பத்தைக் கேட்டார். துர்யோதனன் மனதில் ஒரு கவலை - எங்கே அர்ஜுனன் நாராயண சைன்யதைக் கேட்டு விடுவானோ என்று. அர்ஜுனன் தனக்கு கிருஷ்ணர் வேண்டும் எனக் கூற அவனுக்கு மகிழ்ச்சி - தனக்கு பலம் வாய்ந்த நாராயண சைந்யம் கிடைத்ததில். பின்னர் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் - 'பார்த்தா! நீ ஏன் என்னைத் தேர்வு செய்தாய்' எனக் கேட்க, அர்ஜுனனும் 'கிருஷ்ணா! எனக்கு நீ மட்டும் இருந்தால் போதும். உலகையே வெல்வேன். நீ எனது சாரதியாக போரில் இருந்து என்னை வழி நடத்த வேண்டும்' எனக் கேட்டான். அதன் படியே கிருஷ்ணரும் அவனுக்குச் சாரதி ஆனார்.
கிருஷ்ணர் மீது கொண்டுள்ள பரிபூர்ண விசுவாசம், பக்தி இதற்கு ஒரு உதாரணம் அர்ஜுனன்.

பாண்டவர்கள், கௌரவர்கள் இருவருமே குரு(Kuru) வம்சத்தைச் சேர்ந்தவர்கள். குரு என்ற ராஜா ஆண்ட ஷேத்ரம் என்பதாலேயே அந்த இடத்திற்கு குருக்ஷேத்ரம் என்ற பெயர் வந்தது. அங்கே மரணம் அடைந்தால் மோக்ஷம் நிச்சயம். அதனால் தானோ என்னவோ பாரதப் போர் அங்கே நடந்தது. 

2 comments:

 1. பகவத் கீதை அர்த்தமுடன் தமிழில் படிப்பது சுகம்.
  அந்த அனுபவத்தை உங்கள் ப்ளாக் வந்த்ததும்
  அறிய முடிந்தது. நல்ல காரியம். தொடர்ந்து சொல்லி
  வாருங்கள்

  ReplyDelete
 2. மாமி
  வருகைக்கு நன்றி. வாரா வாரம் தொடர்ந்து வாங்கோ.

  ReplyDelete