Thursday, March 8, 2012

Chapter 6 - Dhyaana Yoga [40-47]

40.
ஸ்ரீ பகவான் உவாச
பார்த நைவேஹ நாமுத்ர விநாசஸ்தஸ்ய வித்யதே
ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி
ஸ்ரீ பகவான் சொன்னது
அர்ஜுனா! இந்த உலகிலும், மறு உலகிலும் எவன் நல்லதே செய்கிறானோ - அழிவு என்பதே அவனுக்கு இல்லை, அவன் எப்பொழுதும் வருத்தப்படுவதில்லை.

41.
ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாந் உஷித்வா சாச்வதீ: ஸமா:
சுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோ(அ)பிஜாயதே
புண்ணியம் செய்தவர்களின் உலகை அடைந்து, அங்கே பல வருடங்களாக நிலைத்தது  வசிக்கும் அவன், யோகத்தில் இருந்து தவறினாலும் பவித்ரமான, செல்வம் உள்ள இல்லத்தில் மறு ஜன்மம் எடுப்பான்.

42.
அதவா யோகிநாம் ஏவ குலே பவதி தீமதாம்
ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ருசம்
அல்லது அவன் அறிவாளிகளான யோகிகளின் குடும்பத்திலும் பிறக்கலாம். உண்மையில் இது போன்ற ஒரு ஜன்மம் பெறுவது இவ்வுலகில் மிகவும் கடினம்.

43.
தத்ர புத்தி ஸம்யோகம் லபதே பௌர்வ தேஹிகம்
யததே ச ததோ பூய: ஸம்ஸித்தௌ குருநந்தந
அர்ஜுனா! அங்கே அவன் தனது முந்தய சரீரத்தில் பெற்ற ஞானத்துடன் தொடர்பு பெற்று, முன்பை விட சிறந்ததாக பூர்ணத்துவத்தை பெற முயற்சிப்பான்.

44.
பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவசோ(அ)பி ஸ:
ஜிஜ்ஞா ஸுரபி யோகஸ்ய சப்த ப்ரஹ்மாதி வர்த்ததே    
அந்த முந்தைய பயிற்சியினால், அவன் மீண்டும் ஜன்மம் பெற்றுள்ளான். அவன் வெறுமனே யோகத்தை அறிய முற்பட்டால் கூட அவன் பிரம்மம் என்ற சப்தத்தை கடந்து விடுகிறான்.

45.
பிரயத்நாத்  யதமானஸ்து யோகீ ஸ ம் சுத்த கில்பிஷ:
அநேக ஜந்ம ஸம்ஸித்தஸ் ததோ யாதி பராம் கதிம்
மிகவும் கடினமாக முயற்சி செய்யும் யோகி, பாவங்கள் அனைத்தையும் தொலைத்து, பல ஜன்மங்களில் படிப்படியாக பூர்ணத்துவத்தை அடைந்து உயர்ந்த நிலையை அடைகிறான்.

46.
தபஸ்விப்யோ(அ)திகோ யோகீ ஜ்ஞாநிப்யோ(அ)பி மதோ(அ)திக:
கர்மிப்யச்சாதிகோ யோகீ தஸ்மாத் யோகீ பவார்ஜுந:
அர்ஜுனா! யோகியானவன் தபஸ்விகளை விடவும், ஞானிகளை விடவும் உயர்ந்தவன், அவன் கர்மங்களைச் செய்யும் மனிதரை விடவும் உயர்ந்தவன். எனவே நீயும் ஒரு யோகியாக இரு.

47.
யோகிநாம் அபி ஸர்வேஷாம் மத் கதேநாந்தர் ஆத்மநா
ச்ரத்தாவாந் பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத:
அந்த யோகிகளில், எவன் ஒருவன் முழு நம்பிக்கையுடன், தன்னுடைய அந்தராத்மாவை என்னுள்ளே கலந்து, என்னை வணங்குகிறானோ, அவனே என்னால் சிறந்த பக்தனாகக் கருதப்படுகிறான்.

இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே த்யாந யோகோ நாம ஷஷ்டோ(அ)த்யாய:  

விசாரம்
சனாதன தர்மத்திற்கும், பிற தர்மத்திற்கும் உள்ள வித்யாசம், மறு பிறவி என்பதைக் குறித்தது. ஹிந்து தர்மம் முந்தைய ஜன்மத்தின் கர்ம பலனைப் பொறுத்து, மறு ஜன்மம் உண்டு என்கிறது. ஒரு சமயம் காஞ்சி பரமாச்சார்யாள் முன் ஒரு வெள்ளைக்கார பெண் வந்து மறு ஜன்மம் குறித்து விளக்குமாறு கேட்டாராம். பரமாச்சார்யாள் அவரை அருகில் உள்ள பிரசவ ஆஸ்பத்திரிகள் சென்று அன்று அங்கே பிறந்த குழந்தைகளைக் கண்டு வருமாறு அனுப்பினாராம். அப்பெண் சென்று திரும்பி அவரைக் காண வந்த சமயம், அவர் அப்பெண்ணிடம் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில பிறந்த குழந்தைகள் - ஆனால் சில குழந்தைகள் பணக்காரக் குடும்பத்திலும், சில ஏழைக் குடும்பத்திலும், சில அங்க ஹீனமாகவும் சில நன்றாகவும் எதனால் இப்படி பிறந்துள்ளன என்றாராம். அப்பெண் விடை தெரியாது இருக்கவே, ஆசார்யாள் கர்ம பலன் என்ற ஒன்றின் அர்த்தத்தை விளக்கினாராம். முந்தைய ஜன்மாவில் நாம் செய்த செயல்களில் பலனைப் பொறுத்தே இந்த ஜன்மம் அமைகிறது. முன்பு புண்ணியம் செய்தால், இந்த ஜன்மாவில் நல்ல நிலைமை கிடைக்கிறது, இல்லையேல் கஷ்டப்பட வேண்டி உள்ளது என்றாராம்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் இதையே இங்கே விளக்குகிறார். அர்ஜுனன் அவரிடம் (சென்ற வாரம் விளக்கிய) சந்தேகத்தைக் கேட்ட போது இதைக் குறிப்பிடுகிறார். பிரம்மத்தை அறிய யோகத்தைப் பின்பற்றுபவன், அந்த ஜன்மாவில் ஏதேனும் காரணத்தினால் அதை அடைய முடியாமல் போனாலும், அவன் முயற்சி வீண் ஆவதில்லை. அவன் மறு ஜன்மாவில், ஒரு உயர்ந்த குடியில் பிறக்கின்றான். அவன் சிறிது முயற்சி செய்தாலும் கூட அவன் பிரம்மத்தை அடையும் முயற்சியில் வெற்றி பெற்று விடுகிறான். இப்படிப்பட்ட யோகி யானவன் சிறந்த முனிவர்களை விடவும், ஞானியை விடவும், கர்ம யோகத்தைச் செய்பவர்களை விடவும் சிறந்த யோகியாகி விடுகிறான். அர்ஜுனனை இப்படிப்பட்ட யோகியாக வேண்டும் என பகவான் விரும்புகிறார்.
இப்படிப்பட்ட யோகியானவன், பகவான் மீது பரிபூரண நம்பிக்கை கொண்டு, தன்னை அவருள்ளே கலக்கும் போது, அந்த பகவானே விரும்பும் சிறந்த பக்தன் ஆகிறான். அத்வைத தத்துவமும் இது தானே.

எனவே இந்த ஜன்மாவில் வெற்றி பெறுவோமோ, மாட்டோமோ - அதைப் பற்றிக் கவலைப் படாமல் நேர்மையான வழியில் நடந்து, பாவ காரியங்களைச் செய்யாமல் இருப்போம். இந்த ஜன்மாவில் இல்லாவிட்டாலும், பிந்தைய ஜன்மாவிலாவது நம் முயற்சி வெற்றி பெறலாம். தவறு செய்தால் நமக்கு பின்னால் தண்டனை கிடைக்கும் என்ற பயம், நம்மை தவறு செய்ய விடாமல் தடுக்கும்.

No comments:

Post a Comment