Thursday, October 27, 2011

Chapter 3 - Karma Yoga [21-30]

21.
யத் யத் ஆசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததே வேதரோ ஜந:
ஸ யத் ப்ரமாணம் குருதே லோகஸ் தத் அநுவர்த்ததே
சான்றோன் எதைச் செய்கிறானோ, அதையே மற்றவர்களும் செய்வார்கள். அவன் எதை தகுதியாக நிர்ணயிக்கின்றானோ, அதையே உலகமும் பின்பற்றும்.  

22.
ந மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந 
நா நவாப்தம் அவாப்தவ்யம் வர்த்த ஏவ ச கர்மணி
அர்ஜுனா! இந்த மூவுலகில் நான் செய்வதற்கு என்று எதுவுமே இல்லை, அடையாமல் உள்ளது என்று எதையும் அடைய வேண்டியதில்லை. இருந்தும் நான் என்னைக் கடமையில் ஈடுபடுத்திக் கொள்கிறேன்.

23.
யதி ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்ய தந்த்ரித: 
மம வர்த்மாநு வர்தந்தே மநுஷ்யா: பார்த்த ஸர்வச:
அர்ஜுனா! நான் தளராமல் என்னைக் கடமையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாமா? அப்பொழுது தானே மக்கள் எல்லா வழியிலும் என் பாதையைப் பின்பற்றுவார்கள்.

24.
உத்ஸீதேயுர் இமே லோகா ந குர்யாம் கர்ம சேதஹம்
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாம் உபஹந்யாம் இமா: பிரஜா:   
நான் கடமையைச் செய்யவில்லை என்றால், இந்த உலகங்கள் அழிந்து விடும். வர்ணக் குழப்பம் ஏற்படும், உயிர்கள் அழிந்து விடும். 

25.
ஸக்தா: கர்மண்ய வித்வாம்ஸோ யதா குர்வந்தி பாரத
குர்யாத் வித்வாம் ஸ்ததா(அ)ஸக்தச் சிகீர்ஷூர் லோக சங்க்ரஹம் 
பாரதா! அறிவீனர்கள் கடமையின் மீது பற்று கொண்டு செயல்படுகிறார்கள். அதனால் சான்றோர் லோக க்ஷேமத்தை மனதில் கொண்டு பற்றில்லாமல் செயல் பட வேண்டும்.

26.
ந புத்தி பேதம் ஜநயேத் அஜ்ஞாநாம் கர்ம ஸங்கிநாம்
ஜோஷயேத் ஸர்வ கர்மாணி வித்வாந் யுக்த: ஸமாசரந்
எந்த சான்றோனும், கடமையில் பற்று கொண்டு அஞ்ஞானத்தில் உள்ளவர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்கட்டும். அவன் அவர்களை எல்லாச் செயல்களிலும் ஈடுபடுத்தி, அவனே அவற்றை பக்தியோடு நிறைவேற்ற வேண்டும்.

27.
ப்ரக்ருதே: க்ரியமாணாநி கு(ग)ணை: கர்மாணி ஸர்வச:
அஹங்கார விமூடாத்மா கர்தாஹம் இதி மந்யதே
பிரக்ருதி என்ற ஒன்றின் குணங்களைக் கொண்டே எல்லாச் செயல்களும் நடைபெறுகின்றன, எவன் ஒருவன் மனது 'தான்' என்ற ஒன்றால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதோ, அவன் 'தான்' தான் செய்தோம் என்று எண்ணிக் கொள்கிறான். 

28.
தத்த்வவித்து மஹா பாஹோ குண கர்ம விபாகயோ:
குணா குணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே
பெருந் தோள்களைக் கொண்ட அர்ஜுனா! எவன் ஒருவன் குணங்களின் விபாகம் (பிரிவுகள்) மற்றும் அதன் செயல்களைத் தெரிந்து கொண்டுள்ளானோ, அந்த குணங்கள் என்ற குணமே, குணங்கள் என்ற இந்திரியங்களிடையே உழலுகின்றன என்ற உண்மையை அறிந்துள்ளானோ - அவன் எதிலும் பற்று வைப்பதில்லை.  

29.
பிரக்ருதேர் குண ஸம்மூடா: சஜ்ஜந்தே குண கர்மஸு 
தாந் அக்ருத்ஸ்ந விதோ மந்தாந் க்ருத்ஸ்ந விந்ந விசாலயேத்
பிரக்ருதி (இயற்கை) என்ற ஒன்றின் குணங்களால் மூழ்கடிக்கப் பட்டவர்கள், குணங்களின் செயல்கள் மீது பற்று கொண்டுள்ளார்கள். பூர்ண ஞானம் கொண்ட ஒருவன், முழுமையான ஞானம் பெறாத ஒரு மூடனை தடுமாற வைக்கக் கூடாது. 

30.
மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்யாத்ம சேதஸா
நிராசீர் நிர்மமோ பூத்வா யுத்யஸ்வ விகதஜ்வர:
எல்லாக் கடமைகளையும் என்னிடம் விட்டு விட்டு, மனதை பிரம்மத்தில் செலுத்தி, நிராசை, தான் என்ற எண்ணம், மனக் குழப்பம் இல்லாமல் நீ சண்டை இடு. 

விசாரம்
மனுஷ குணம் மற்றவர்களை follow செய்து, அவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே செய்ய ஆசைப் படுவது. அது நல்லதா, கெட்டதா என்று பகுத்தறியும் புத்தி எல்லாருக்கும் இருப்பதில்லை. எனவே சான்றோர்களுக்கு ஒரு முக்கிய கடமை உள்ளது - lead by example. இங்கிருந்து தான் கிருஷ்ணர் தன்னை ஒரு பரமாத்மாவாக நிலை நிறுத்த ஆரம்பிக்கின்றார். அவர் செய்வதற்கு / அடைவதற்கு என்று ஒன்று இவ்வுலகில் எதுவுமே இல்லை - ஏனென்றால் அனைத்தின் கர்த்தாவும் அவர் தானே. அதற்காக அவர் சும்மா இருந்தால், மற்றவர்களும் அப்படியே இருந்து விடுவார்களே. உலகில் செயல்கள் சரியாக
நடக்கவில்லை என்றால் உலகமே அழிந்து விடுமே. அதனால் அவரும் இங்கே ஒரு leader ஆக இருந்து தான் கடமையைச் செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறார். 

எல்லோருமே கடமையின் பலன்கள் மீது ஆசை கொண்டே செயல்கள் புரிந்தால் லோக க்ஷேமம் எப்படி கிடைக்கும். அதனால் சான்றோரின் அடுத்த கடமை நிஷ்காம்யமாக இந்த செயல்களைச் செய்வது. எல்லோருக்கும் எல்லா ஞானமும் இருப்பதில்லை. ஞானம் கொண்ட ஒருவன், அஞ்ஞானத்தில் உள்ளவர்களை மேலும் குழப்பாமல், அவர்களுக்காகவும் பக்தியுடன் செயல் புரிய வேண்டும்.

பிரக்ருதி என்ற ஒன்றின் குணங்களாலேயே இந்த உலகின் இயக்கமே அமைந்துள்ளது. இந்த குணங்கள் மூன்று வகைப்பட்டது - சத்வம், தமஸ் மற்றும் ரஜஸ். எவன் ஒருவன் இந்த பிரக்ருதியின் குணங்கள் என்ற ஒன்றாலேயே இந்த உலகின் குணங்கள் (செயல்கள்) நடைபெறுகின்றன என்ற உண்மையை அறிந்துள்ளனோ அவனே நிஷ்காம்யமாகச் செய்யும் பக்குவத்தை அடைகிறான். ஆனால் இதை உணராத ஒருவன் தன்னால் தான் எல்லா செயல்களும் நடைபெறுகின்றன என்ற தற்பெருமை கொள்கிறான். 

கிருஷ்ணர் தன்னை பரமாத்மாவாக காட்டி, எல்லாச் செயல்களையும் தன்னிடம் சமர்ப்பித்து, ஆசை எதுவும் இல்லாமல், தான் என்ற எண்ணம் இல்லாமல் அர்ஜுனனை ஆத்மா என்ற ஒன்றில் ஒன்றி இங்கே போரிடச் சொல்கிறார். அர்ஜுனன் சாதாரண மனிதன் தானே, அவனுக்கு பல கேள்விகள் எழுகின்றன. அவனது எல்லா சந்தேகங்களையும் போக்கி இதே அறிவுரையை 18 ம் அத்யாயத்திலும் கூறுகிறார். அந்த கேள்விகள் என்ன என்று அடுத்துப் பார்ப்போம். 

ஸ்மார்த்த தர்மத்தில் ஒரு செயலை ஆரம்பிக்க பரமேஸ்வரனின் அநுக்ரஹம் தேவை. அதனால் ஆரம்பத்தில் 'மமோபாக்த சமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்' என்று அந்த பரமேஸ்வரனின் ப்ரீதியை/ அனுக்ரஹத்தைக் கேட்கிறோம். கடைசியாக சொல்வது 'காயேன வாசா' ஸ்லோகத்தை. அதன் ரெண்டாவது வரியில் வருவது 'நாராயணாயேதி சமர்ப்பயாமி'. அந்தக் காரியம் நல்லபடியாக முடிந்ததற்கு நாராயணனுக்கு நன்றி சொல்லி 'சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து'  என்று சொல்லி அந்த செயலின் பலனை கிருஷ்ணருக்கே (அல்லது இஷ்ட தெய்வத்திற்கு) அர்ப்பணம் செயகிறோம். இதன் பரிபூர்ண அர்த்தம் நாம் அந்த பூஜையின் பலனின் மீது ஆசை வைக்கவில்லை, நிஷ்காம்யமாக செய்கிறோம் என்பதற்காகத் தான். இதை மனதில் கொள்ள ஆரம்பித்தால் நாளடைவில் எல்லாச் செயலுமே (ஈஸ்வர உபாசனையோ/மற்றதோ) நிஷ்காம்யமாகச் செய்யும் பக்குவம் வரும். 
   

Monday, October 17, 2011

Chapter 3 - Karma Yoga [11-20]

11.
தேவாந் பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:
பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத 
இதன் மூலம் நீ தேவர்களுக்கு படைக்க, அவர்களும் உன்னை ரக்ஷிக்கட்டும். இப்படி பரஸ்பரம் ஒருவரை ஒருவர் திருப்தி செய்து நீ உயர்ந்த நிலையை அடைவாய். (இங்கே யஜ்ஞத்தில் செய்யப்படும் ஆஹுதியை குறிக்கிறது).

12.
இஷ்டாந் போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞ பாவிதா:
தைர் தத்தாந் அப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:
யஜ்ஞத்தினால் திருப்தி செய்யப்பட்ட தேவர்களும், உனக்கு வேண்டிய போகங்களை அளிப்பார்கள். ஆகையினால் எவன் ஒருவன் யஜ்ஞத்தில் எதையும் சமர்ப்பிக்காமல், இறைவன் அளித்த போகங்களை மட்டும் அனுபவிக்கின்றானோ, அவன் திருடன் ஆகிறான்.

13.
யஜ்ஞ சிச்டாசிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வ கில்பிஷை:
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்ம காரணாத்
யஜ்ஞத்தில் படைக்கப்பட்டதில் மீதி உள்ளதை உண்ணும் புண்ணிய ஆத்மாக்கள் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் தான் மட்டுமே உண்பதற்காக உணவைச் சமைக்கும் பாபிகள், பாவத்தையே உண்கிறார்கள். 

14.
அந்தாத் பவந்தி பூதாநி பர்ஜந்யாத் அந்ந ஸம்பவ:    
யஜ்ஞாத் பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ:
உணவில் இருந்து உயிர்கள் வருகிறது; உணவு மழையினால் படைக்கப்படுகிறது; மழை யஜ்ஞத்தில் இருந்து உருவாகிறது; யஜ்ஞம் கர்மத்தினால் உருவாகிறது.

15.
கர்ம ப்ரஹ்மோத் பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷர ஸமுத்பவம்
தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம் 
கர்மா ப்ரஹ்மத்தில் இருந்து வருகிறது என்பதை அறிந்து கொள். ப்ரஹ்மம் அழிக்க முடியாத ஒன்றில் இருந்து வருகிறது. அதனால் அனைத்திலும் வியாபித்திருக்கும் ப்ரஹ்மம் எப்பொழுதும் யஜ்ஞத்தில் உறைகிறது.

16.
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்த்தயதீஹ ய:
அகாயுர் இந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி
அர்ஜுனா! இப்படிச் சுழலும் சக்கரத்தைப் புரிந்து கொள்ளாமல், எவன் ஒருவன் பாவப்பட்ட வாழ்கை வாழ்ந்து, இந்த்ரியங்களிலேயே மோஹித்து இருப்பானோ அவன் வீணான வாழ்கை வாழ்கிறான்.

17.
யஸ்த்வாத்மரதிர் ஏவ ஸ்யாத் ஆத்ம த்ருப்தச்ச மாநவ:
ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ் தஸ்ய கார்யம் ந வித்யதே
ஆனால் எவன் ஒருவன் ஆத்மாவில் மட்டுமே சந்தோஷித்து, அதிலேயே திருப்திப் பட்டு, அதில் மட்டுமே மனச் சாந்தி கொள்கிறானோ - அவனுக்கு வேறு எந்த காரியமும் இல்லை.

18.
நைவ தஸ்ய க்ருதே நார்தோ நாக்ருதே நேஹ கச்சந
ந சாஸ்ய ஸர்வ பூதேஷு கச்சித் அர்த வ்யபாச்ரய:
அவனுக்கு எது நடை பெறுகிறது, எது நடை பெறவில்லை என்பதில் எந்த ஒரு பற்றும் இல்லை. அதைப் போல அவன் எந்த ஒரு பொருளின் மீதும் சார்ந்து இல்லை.  

19.
தஸ்மாத் அஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர 
அஸக்தோ ஹ்யாசரந் கர்ம பரமாப்நோதி பூருஷ:
அதனால் எந்த ஒரு பற்றும் இல்லாமல் நீ செய்ய வேண்டிய உனது கடமைகளைச் செய்ய வேண்டும். கடமைகளைப் பற்று இல்லாமல் செய்வதன் மூலம் நீ பரமாத்மாவை அடைய முடியும்.

20.
கர்மணைவ ஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜநகாதய:  
லோக ஸங்க்ரஹம் ஏவாபி ஸம்பச்யந் கர்த்தும் அர்ஹஸி
ஜனகர் மற்றும் பலர் தங்களின் கடமைகளின் மூலம் மட்டுமே ஸித்தி அடைந்தார்கள். மக்களைக் காக்கும் அவசியத்திற்காவது நீ கடமைகளைச் செய்ய வேண்டும்.

விசாரம்
யஜ்ஞத்தில் நாம் ஆஹுதி படைத்து அதன் மூலம் பெரிய பலன்களை அடைய ஆசைப்படுகிறோம். இது ஒரு மாதிரியான symbiotic relationship -  நான் உனக்கு இதைச் செய்கிறேன், பதிலுக்கு நீ எனக்கு இதைச் செய் என்ற ஒரு expectation நம் மனதில் கொண்டு இதைச் செய்கிறோம். இதுவாவது பரவாயில்லை. இன்னும் சிலர் எதையும் இறைவனுக்குப் படைக்காமல் எல்லா போகங்களையும் அனுபவிக்கின்றார்கள். அவர்கள் திருடர்களே அன்றி வேறு எவராக முடியும். இந்த காலத்தில் யஜ்ஞம் என்று அக்னியைக் கொண்டு தினமும் பண்ண முடிவதில்லை தான். அக்னிஹோத்ரமாக செய்தால் தான் யஜ்ஞம் என்றில்லை. முடிந்த அளவு உணவு சமைத்தப் பின்னர் பகவானுக்கு நிவேதனம் செய்து விட்டு பின்னர் மீதத்தைச் சாப்பிடலாம். தைத்திரிய உபநிஷத்தில் வரும் 'அதிதி தேவோ பவ' என்பதை ஏற்று அதிதி சம்ஸ்காரம் செய்யலாம். அதிதி சம்ஸ்காரம் என்பது க்ரிஹஸ்தாஸ்ரமத்தில் இருப்பவருடைய முக்கியமான கடமையாகும்.

இப்படி கடமையை ஒழுங்காகச் செய்வதன் மூலம், யஜ்ஞம் ஒழுங்காக நடந்து, அதன் மூலம் மழை ஒழுங்காகப் பெய்து, தானிய விளைச்சல் நன்றாக இருந்து, அதன் மூலம் உயிர்களின் ஸ்ருஷ்டி நடக்கிறது. அழிவில்லாத ஒன்றில் இருந்து வரும் ப்ரஹ்மம் இப்படி செய்யப் படும் யஜ்ஞத்தில் இருக்கிறது. இந்த நியதியைப் புரிந்து கொள்ளாமல் வெறும் இந்திரிய சுகங்களில் மட்டுமே மூழ்கி இருக்கும் ஒருவனால் இந்த உலகிற்கு என்ன பயன்.

கடமை என்ற ஒன்று செய்யாமல் எவராலுமே இருக்க முடியாது என்று முன்பு பார்த்தோம். இந்த உலகில் ஏதாவது கர்மா செய்யத் தான் வேண்டி உள்ளது.  அதற்காக எந்த ஒரு ethics உம் இல்லாமல் செய்வது கடமை ஆகாது. நாம் செய்வது தர்ம வழியிலான கடமையாக இருக்க வேண்டும். காமம், அர்த்தம் இந்த ரெண்டிற்காகவும் நாம் காரியங்களைச் செய்கிறோம். காமம் என்பது ஆசையைக் குறிக்கிறது, அர்த்தம் என்பது இங்கே security என்ற பொருளில் வருகிறது. நம்முடைய secured life க்கு தேவையானது என்று பொருள் கொள்ளலாம். மற்ற உயிர்களிடம் இல்லாத ஒன்று மனுஷ ஜென்மத்திற்கு உண்டு - common sense. இந்த அறிவைக் கொண்டு நாம் நமது செயல்களைப் பகுத்தறிய வேண்டும். மற்றவர்கள் நமக்கு எதைச் செய்தால் நாம் விரும்ப மாட்டோமோ, அந்த ஒன்றை நாம் மற்றவர்களுக்குச் செய்யாமல் இருப்பதே தர்மம். இந்த தர்ம வழியில் நமது செயல்களை செய்தால் அதுவே உத்தமம். 

இப்படி கர்மத்தை நிஷ்காம்யமாகச் செய்து மனதை ப்ரஹ்மத்தில் மட்டுமே லயிக்க வைத்திருந்தால் மட்டுமே அவன் அந்த ப்ரஹ்மத்தில் ஒன்றாகக் கலக்க முடியும். கிருஷ்ணர் இப்படி நிஷ்காம்யமாக இருந்தவர்களில் ஜனகரை உதாரணம் காட்டுகிறார். மிதிலாபுரி தீ பிடித்து எரிந்த போது ஜனகர் மனம் கலங்காது - எதுவுமே தன்னுடையது இல்லை என்ற உணர்வோடு வருந்தாமல் இருந்தாராம். அதற்காக மக்களை காப்பாற்றாமல் விடவில்லை. கிருஷ்ணரும் இங்கே அர்ஜுனனை மக்களை காக்க வேண்டியாவது போரில் ஈடுபடச் சொல்கிறார்.

Monday, October 10, 2011

Chapter 3 - Karma Yoga [1-10]


1.
அர்ஜுந உவாச:
ஜ்யாயஸீ சேத் கர்மணஸ்தே மதா புத்திர் ஜனார்தந
தத் கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேசவ
அர்ஜுனன் சொன்னது:
கிருஷ்ணா! நீ கர்மத்தை விட ஞானமே உயர்ந்தது என்று நினைத்தால் பின் ஏன் கேசவா! நீ என்னை இந்த கொடிய செயலில் ஈடுபடச் சொல்கிறாய்?

2.
வ்யாமிஸ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே
ததேகம் வத நிச்சித்ய யேந ஸ்ரேயோ(அ)ஹமாப்நுயாம்
குழப்புவது போல இருக்கும் உனது இந்த வார்த்தைகள் எனது சிந்தையை மேலும் குழப்பி விட்டது. எதன் மூலம் நான் உறுதியாக பேரானந்தத்தை அடைய முடியுமோ அந்த வழியை நீ கூறு

3.
ஸ்ரீ பகவான் உவாச:
லோகே(அ)ஸ்மின் த்விவிதா நிஷ்டா புரா ப்ரேரக்தா மயாநக 
ஜ்ஞாந யோகேந ஸாங்யாநாம் கர்ம யோகேந யோகிநாம் 
ஸ்ரீ பகவான் சொன்னது:
பாவம் இல்லாதவனே! முன்பே நான் கூறியதைப் போல இந்த உலகில் இரு வழியிலான பாதைகள் உள்ளன - ஸாங்க்யம் அறிந்த ஞான வழி, கர்மம் என்ற யோகிகளின் வழி.

4.
ந கர்மணாம் அநாரம்பாந் நைஷ்கர்ம்யம் புருஷோ(அ)ஷ்நுதே 
ந ச ஸந்ந்யஸா நாதேவ ஸித்திம் ஸமதி கச்சதி
எந்தச் செயலும் செய்யாமல் இருப்பதால் ஒருவன் செயலற்ற நிலையை அடைவதில்லை. அது போலவே வெறுமனே பற்றுகளைத் துறப்பதால் ஒருவன் ஸமாதி நிலையை அடைவதில்லை.

5.
ந ஹி கச்சித் க்ஷணம் அபி ஜாது திஷ்டத்ய கர்மக்ருத்
கார்யதே ஹ்யவச: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:
எவருமே எந்த ஒரு நொடியும் செயல்களைச் செய்யாமல் இருந்து விட முடியாது. ஏன் என்றால் இந்த இயற்கையின் குணத்தினால் எல்லோருமே வேறு வழி இல்லாமல் செயல் பட வேண்டி உள்ளது.

6.
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்
இந்த்ரியார்தாந் விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே 
எவன் ஒருவன் வெளியே செயல் உறுப்புகளை எல்லாம் அடக்கி, மனதின் உள்ளே ஆசைகளை உருவாக்கும் பொருட்களை நினைத்தே அமர்ந்து உள்ளானோ - அந்த குழப்பமான புரிதலைக் கொண்ட அவன் ஒரு மூடன், பொய் ஒழுக்கம் கொண்டவன்.

7.
யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதே(அ)ர்ஜுந 
கர்மேந்த்ரியை: கர்ம யோகம் அஸக்த: ஸ விசிஷ்யதே 
எவன் ஒருவன் இந்த்ரியங்களை மனதில் அடக்கி, கர்ம யோகத்தில் தனது செயல் உறுப்புகளால் பற்று இல்லாமல் தன்னை ஈடுபடுத்திக் கொள்வானோ - அர்ஜுனா! அவனே சிறந்தவன் ஆவான்.

8.
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
சரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத் அகர்மண:
உனக்கு விதிக்கப்பட்ட கர்மத்தை நீ செய். செயல் செயலின்மையை விடச் சிறந்தது. உனது செயலின்மையால் உனது உடலைக் கூட உன்னால் பேண முடியாது.

9.
யஜ்ஞார்தாத் கர்மணோ(அ)ந்யத்ர லோகோ(அ)யம் கர்ம பந்தந:
ததர்தம் கர்ம கௌந்தேய முக்த ஸங்க: ஸமாசர
இந்த உலகம் யஜ்னத்தில் சமர்பிக்கப் படும் சமர்பணங்களைத் தவிர பிற செயல்களாலும் கட்டுப்பட்டுள்ளது. அதனால் குந்தியின் பிள்ளையே! செயலை யஜ்னத்தில் செய்யப்படும் சமர்ப்பணம் ஆக மட்டும் கருதி, பற்றில்லாமல் செய். 

10.
ஸஹயஜ்ஞா: பிரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச பிரஜாபதி:
அநேந பிரஸவிஷ்யத்வம் ஏஷ வோ(அ)ஸ்த்விஷ்டகாம துக்
பிரஜாபதியான இந்த உலகைப் படைத்தவர், ஆரம்பத்தில் மானுட ஜென்மத்தை யக்ஞ சமர்ப்பணம் என்ற ஒன்றோடு படைக்கும் போது 'இதன் மூலம் நீங்கள் பல்கிப் பெருகுவீர்கள், இது வேண்டியதை அளிக்கும் காமதேனுவாக இருக்கும்' என்று கூறிப் படைத்தார்.

விசாரம்
மூன்றாவது அத்தியாயத்தின் பெயர் கர்ம யோகம். இதன் ஸ்ரேஷ்டம் என்னவென்றால் இதைப் பாராயணம் செய்பவர்கள் அவர்களின் சுய பாவங்களைத் தொலைப்பதொடு, அவர்களின் பித்ருக்கள் செய்த பாவங்களையும் தொலைப்பராம். மகாளய பக்ஷத்தில் இந்தப் அத்தியாயத்தைப் பாராயணம் செய்தல் இன்னும் பலன்.

வாழ்க்கையில் ரெண்டு விதமான பாதைகள் உண்டு - ப்ரவ்ருத்தி என்ற கர்ம மார்க்கம், நிவ்ருத்தி என்ற ஞான மார்க்கம். ஞான மார்க்கம் கர்ம மார்க்கத்தை விட உயர்ந்தது. அர்ஜுனன் மாதிரியே நமக்கும் இந்த சந்தேகம் வரும். அப்படி ஒரு வேளை ஞான மார்க்கம் தான் பெரிது என்றால் எதற்காக கர்ம மார்க்கத்தை  கடைப்பிடிக்க வேண்டும்? ஞான மார்க்கம் மட்டும் தான் என்றால் கிருஷ்ணருக்கும் பதினெட்டு அத்தியாயம் உபதேசிக்க வேண்டி இருந்துருக்காது :) நேரே அதை மட்டும் சொல்லி இருக்கலாம் இல்லையா? எல்லாருக்குமே அர்ஜுனன் இந்த நிலையில் இருப்பது மாதிரி நேரடியாக ஞான மார்க்கத்தை உபதேசம் பெற்றால் புரிந்து கொள்ளும் சக்தி கிடையாது. எதையுமே படிப் படியாகத் தானே கற்றுக் கொள்ள முடியும். 

நாம் வாய் வார்த்தையாக சும்மா இருக்கிறோம் என்று சொன்னாலும், உண்மையில் நாம் எதாவது ஒரு செயலைச் செய்து கொண்டு தான் இருக்கிறோம், இல்லை என்றால் இந்த சரீரத்தை வளர்க்க முடியாது. வெறுமனே சாப்பிட்டு, தூங்கினாலும் அதுவும் ஒரு செயல் தானே. எதுவுமே வேண்டாம் என்று எல்லோராலும் சட் என்று சன்யாசம் வாங்கி விட முடியாது. க்ருஹஸ்தாஸ்ரமம் என்ற ஒன்றின் பின்னே வானப்ரஸ்தம் என்ற ஒன்று, அதன் பின்னர் தான் சந்யாசம். இந்த வானப்ரஸ்தம் ஒரு transition period மாதிரி - ஆசைகளை குறைத்துக் கொண்டு, காட்டில் இருக்கப் பழகிக் கொண்டு அப்புறம் சன்யாசம் வாங்குவது. இல்லை என்றால் இவனை மாதிரி தான் ஆகும்:   
ஒருத்தன் சம்சாரி - மனைவி குழந்தைகள் எல்லாம் உண்டு. ஏதோ ஒரு கோவமோ, வெறுப்போ, சம்சாரம் வேண்டாம், சன்யாசம் வாங்குகிறேன் என்று குருவைத் தேடி போகிறான். அவரைக் கண்டு பிடித்து தீக்ஷை வாங்கும் சமயம். தீக்ஷை நடு குளமோ, ஆற்றிலோ கொடுப்பார்கள். அங்கே நீர் தெளிவாக இருக்கும். கரைப் பகுதியில் கொஞ்சம் சேறாக இருக்கும் இல்லையா. இவனுக்கு ஒரு குழப்பம் - அடடா! நம்ம குழந்தைகளுக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கலியே, பேரன், பேத்திகளோட விளையாடலியே அப்படின்னு ஒரு ஆசை அந்த சமயத்தில் வருகிறது. சரி திரும்ப வீட்டிற்குப் போகலாம் என்றால் மனைவியோடு போட்ட சண்டை நினைவு வந்து ஏன் போகணும் என்று தோன்றுகிறது. இந்த dilemma வோட ஆத்துல ஒரு கால், சேற்றுல ஒரு கால்னு இருக்கக் கூடாது. மனசு முழுக்க ஆசையை வெச்சுண்டு, நான் மூச்சை அடக்கறேன், தியானம் பண்றேன்னு சொல்றதுல பலன் இல்லை. அப்படி பண்றவன் ஒரு hypochrite. 

அர்ஜுனன் மாதிரி நம்ம எல்லாருக்கும் உடனடியாக பண்றதுக்கு சில/பல கடமைகள் இருக்கு. அந்த கடமைகள் எல்லாவற்றையும் செய்யற கர்ம யோகம் தான் முதல் படி. எல்லாச் செயல்களையும் ஒரு யாகம் மாதிரி செய்யறது தான் கர்ம யோகம். யாகம் பண்ற போது நாம் அதில் சமர்ப்பிக்கின்ற ஆஹுதி மேல நாம் ஆசைப்படுவதில்லை தானே?  ஏன் - அதை விட ஒரு பெரிய பலனை அந்த யாகத்தில் எதிர்பார்கிறோம். அதனால தான் வேதங்களும் கர்ம காண்டத்தில் ஆரம்பிக்கின்றது. அதை ஒழுங்காச் செய்தால், அதுக்கு அடுத்தப் படி கர்ம சந்நியாச யோகம் - அந்த கடமைகளைப் பற்று இல்லாமல் நிஷ்காம்யமாகச் செய்யறது. அதுலேர்ந்து பக்தி யோகம். பக்தி என்ற ஒன்றை cultivate பண்ண சத்வ குணத்தை வளர்த்துக்கனும், அந்த ஈஸ்வரனோட மேன்மை, பெருமை என்னவென்று தெரிந்து கொள்ளனும், இந்த உடல்/மனம் பற்றின உண்மைகளைத் தெரிந்து கொண்டு ஆத்மஞானம் பெற்றால் அப்பொழுது நாம் நம்முடைய எல்லா தர்மங்களையும், செயல்களையும் விட்டு விட்டு அந்த ஈஸ்வரனோட பாதத்தில் சரணாகதி அடைந்தால் நமக்கு மோக்ஷம் என்ற பதவி கிடைக்கும். இது தான் அடுத்து வரப் போற அத்தியாயங்களின் சாராம்சம்.

Tuesday, October 4, 2011

Chapter 2 - Saankhya Yoga [62-72]

62.
த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ் தேஷு பஜாயதே
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோ (அ)பிஜாயதே 
இந்த விஷயங்களைக் குறித்து ஒருவன் நினைக்கும் போது, அவற்றின் மீதான பற்று அவனுக்கு ஏற்படுகிறது. அந்தப் பற்றில் இருந்து ஆசை பிறக்கிறது. ஆசையினால் அவனுக்கு கோபம் வருகிறது.

63.
க்ரோதாத் பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம:
ஸ்ம்ருதி பிரம்சாத் புத்தி நாசோ புத்தி நாசாத் பிரணஷ்யதி
கோபத்தினால் மனதில் ஒரு மயக்கம் உண்டாகிறது. அந்த மயக்கத்தினால் 
நினைவு தப்புகிறது. அப்படி நினைவு தவறுவதால் அவனிடம் புத்தி நாசம் ஏற்பட்டு நல்லது, கெட்டதை பகுத்தறியும் தன்மை விலகிப் போகிறது. பகுத்தறியும் தன்மை விலகும் போது அவன் அழிகிறான்.

64.
ராக த்வேஷ விமுக்தைஸ்து விஷயாந் இந்த்ரியைச் சரந்
ஆத்ம வச்யைர் விதேயாத்மா ப்ரஸாதம் அதி கச்சதி
ஆனால் தன்னை அடக்கிய ஒருவன், இந்த விஷயங்கள் மத்தியில் இருக்கும் போதும் தனது புலன்களை அடக்கி, பற்றோ, வெறுப்போ இல்லாமல் அமைதியை அடைகிறான்.

65.
ப்ரஸாதே சர்வ து:க்காநாம் ஹாநிர் அஸ்யோ பஜாயதே
ப்ரசந்ந சேதஸோ ஹ்யாஷு புத்தி: பர்ய வதிஷ்டதே
அந்த அமைதியில் அவனின் எல்லா துக்கங்களும் அழிகின்றன. அமைதியான மனதில் புத்தி நிலை கொண்டு ஸ்திரமாக இருக்கும்.

66.
நாஸ்தி புத்திர் அயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா 
ந சாபாவயத: சாந்திர் அசாந்தஸ்ய குத: ஸுகம்  
நிலை கொள்ளாத ஒருவனுக்கு ஆத்மத்தைக் குறித்த எந்த ஒரு ஞானமும் ஏற்படுவதில்லை. அவனால் எந்த ஒரு தியானமும் செய்ய முடியாது. தியானம் செய்ய முடியாதவர்களுக்கு எந்த அமைதியும் ஏற்படாது. அமைதி இல்லாத ஒருவனுக்கு எப்படி சந்தோசம் ஏற்படும்,

67.
இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோ(அ)நுவிதீயதே
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர் நாவம் இவாம்பஸி 
சூறாவளியில் காற்று எப்படி நீரில் ஒரு படகை தடுமாற வைக்கிறதோ, அது போல அலை பாயும் இந்திரியங்களைப் பின் தொடரும் மனமானது அதன் பகுத்தறிவையும் அலைக்கழித்து விடுகிறது. 

68.
தஸ்மாத் யஸ்ய மஹா பாஹோ நிக்ரு ஹீதாநி ஸ்ர்வச:
இந்த்ரியாண் இந்த்ரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா பிரதிஷ்டிதா 
மஹா வல்லமை கொண்ட அர்ஜுனா! எவன் ஒருவன் இந்திரியங்களில் இருந்து புலன் அடக்கம் பெற்றுள்ளானோ, அவனின் அறிவு நிலையாக இருக்கும்.

69.
யா நிசா ஸர்வபூதானாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிசா பச்யதோ முநே:
எல்லா உயிர்களுக்கும் இரவாக இருக்கும் போது, இந்தப் புலனடக்கம் பெற்றவன் விழிப்புடன் இருப்பான். எல்லா உயிர்களும் பகலில் விழித்து இருக்கும் போது, இந்த ஞானிகளுக்கு இரவாக இருக்கும்.

70.
ஆபூர்யமாணம் அசல பிரதிஷ்டம் ஸமுத்ரம் ஆப: ப்ரவிசந்தி யத்வத்
தத்வத் காமா யாம் ப்ரவிசந்தி ஸர்வே ஸ சாந்திம்ஆப்நோதி ந காமகாமீ
சமுத்திரத்தில் நதி சேரும் போதும் அந்த சமுத்திரம் மாற்றம் இல்லாமல் இருப்பது போல, எவன் ஒருவனுள்ளே ஆசைகள் எல்லா திசைகளில் இருந்தும் நெருக்கினாலும், அவன் அசைந்து கொடுக்காமல் நிலையாக இருப்பானோ, அவனே மன அமைதியைப் பெறுகிறான். ஆனால் மனம் முழுக்க ஆசைகளைக் கொண்டவன் அந்த அமைதியைப் பெறுவது இல்லை.

71.
விஹாய காமாந்ய: ஸர்வாந் புமாம்ச்சரதி நி: ஸ்ப்ருஹ:
நிர்மமோ நிரஹங்கார: ஸ சாந்திம் அதி கச்சதி
எல்லா ஆசைகளையும் துறந்து, எந்த ஏக்கமும் இல்லாமல், தான், தனது என்ற உணர்வு இல்லாமல் இருக்கும் அவனே அமைதியை அடைகிறான்.

72.
ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி
ஸ்தித்வாஸ் யாமந்த காலே(அ)பி பிரம்ம நிர்வாணம் ருச்சதி
ப்ருதாவின் புத்திரனே! இது தான் பிரம்ம நிலை. இந்த நிலையில் எவருமே மயங்குவதில்லை. இதிலே நிலை கொண்ட பின்னர், ஜீவனின் இறுதியிலும் ஒருவன் பிரம்மத்தில் (ஆத்மாவில்) கலக்கிறான். 

ஹரி ஓம் தத் ஸத்:
ஹரியே பரம்பொருள் - அதுவே உண்மை 

இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே ஸாங்க்ய யோகோ நாம த்விதீயோத்யாய:  
இது ஸ்ரீமத் பகவத் கீதை, உபநிஷத், பிரம்மத்தைப் (ஆத்மாவைப்) பற்றிய கல்வி, யோக சாஸ்திரம் (வாழ்க்கையில் செல்ல வேண்டிய பாதையை குறிக்கும் நூல்), ஸ்ரீ கிருஷ்ணர் - அர்ஜுனன் இடையே நடந்த உரையாடல், ஸாங்க்ய  யோகம் என்ற இரண்டாம் அத்தியாயம்.

விசாரம்
முன்பே பார்த்தோம் - குந்தியின் இன்னொரு பெயர் ப்ருதா. பின்னர் குந்திபோஜனுக்கு தத்து கொடுக்கப்பட்டதால் அவளின் பெயர் குந்தி ஆனது. அவளின் பிள்ளையானதால், அர்ஜுனனுக்கு பார்த்தன் என்ற பெயர். ஸ்ரீ கிருஷ்ணர் குந்தியை அத்தை என்றே அழைப்பார். பிறப்பில் அவளும் வசுதேவரின் சஹோதரி தானே. அது போல அர்ஜுனனை பிரியமாக அழைப்பதும் பார்த்தா, கௌந்தேயா என்று தான். அப்படி பார்த்தனுக்கு சாரதியாக இருந்ததால் தான் கிருஷ்ணருக்கு பார்த்தசாரதி என்ற பெயர். பக்தன் ஒருவனின் பெயரால் அவருக்கு இந்த நாமம்.

69 ம் ஸ்லோகத்தின் உள்ளார்த்தம் -ஆசைகளைக் கொண்டு அஞ்ஞானத்தில் இருப்பவர்கள் அஞ்ஞானிகள். அவர்கள் விழிப்புடன் இருக்கும் நேரம் (பகல்) என்றால் சுக போகத்தில் இருக்கும் நேரம். அந்த சமயத்தில் ஞானிகள் எப்படி இருப்பார்கள்? ஆத்ம விசாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுக போகத்தைக் கண்டு கொள்ளாமல் கண் மூடி (இரவில்) இருப்பார்கள். அதே சமயம் ஞானிகள் பிரம்மத்தைக் காணும் போது (பகல்), அஞ்ஞானிகள் அதைப் பார்க்க முடியாமல் கண் மூடியவர்களாக (இரவு) இருக்கிறார்கள்.

நாம் நமது அன்றாட வாழ்வில் சந்திக்கும் மிகச் சாதாரண சூழ்நிலை இங்கே விவரிக்கப் பட்டுள்ளது. எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி, மதிப்புள்ளதோ, மதிப்பு இல்லாததோ, உயிர் உள்ளதோ, இல்லாததோ முதலில் அது நமக்கு கிடைப்பதற்கு முன்னால் நமக்கு அதன் மீது ஒரு ஈர்ப்பு வருகிறது. அதை அடக்க முடியாத போது அந்த ஈர்ப்பு அந்த பொருள் மீது ஒரு வெறி கொள்ள வைக்கிறது. அது நியாயமான வெறி என்றால் ஓரளவுக்கு சரி எனலாம். இல்லாத போது, நியாயமாக இருந்தாலுமே கிடைக்காத போது நமக்கு அந்த வெறி கோபமாக மாறுகிறது, கோபம் வந்தவுடன் மனதில் ஒரு குழப்பம் வந்து, நல்லதா, கெட்டதா என பிரித்து அறியும் முதிர்ச்சி தொலைகிறது. இந்த கோபம் அழிவுக்கு காரணம் ஆகிறது. அப்படி இல்லாமல் இந்த ஆசை ஏற்படாமல் முதலிலேயே அடக்கி விட்டால் இந்த chain reaction ஏற்படாமல் அழிவு வராமல் போகும் இல்லையா? நம்மில் எதனை பேர் க்ஷண நேர கோபத்தில் வாழ்கையை அழித்துக் கொண்டுள்ளோம்.

இந்த ஆசைகளை அடக்குவதினால் நமது இந்திரியங்களும் அடங்குகின்றன. அலை பாயாத மனம் இருக்கும் போது தியானம் செய்ய முடிகிறது. தியானம் நிர்வாணத்திற்கு (மன அமைதிக்கு) கொண்டு செல்கிறது. இப்படி சாந்தி நிலையை அடைந்தால் மனதில் எப்படி ஏக்கம் தோன்றும்? இந்த உன்னத நிலையே பிரம்ம நிலை.  அப்படி பிரம்ம நிலையை அடைந்த ஒருவன் அவனின் ஜீவித காலம் முடிந்த பின்னர் அந்த பிரம்மத்திலேயே ஒன்றாகிறான். ஜீவாத்மாவாக இருந்த அவன் இந்த சித் எனப்படுகிற நிலையை அடையும் போது அவனுள்ளே ஒரு ஆனந்தம் ஏற்படுகிறது. எந்த ஒரு material comfort ம் கொடுக்க முடியாத பேரானந்த நிலை. இப்படி பரமாத்மாவோடு இரண்டறக் கலப்பது தானே நமது அத்வைதத்தின் சாரம்.