Tuesday, October 4, 2011

Chapter 2 - Saankhya Yoga [62-72]

62.
த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ் தேஷு பஜாயதே
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோ (அ)பிஜாயதே 
இந்த விஷயங்களைக் குறித்து ஒருவன் நினைக்கும் போது, அவற்றின் மீதான பற்று அவனுக்கு ஏற்படுகிறது. அந்தப் பற்றில் இருந்து ஆசை பிறக்கிறது. ஆசையினால் அவனுக்கு கோபம் வருகிறது.

63.
க்ரோதாத் பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம:
ஸ்ம்ருதி பிரம்சாத் புத்தி நாசோ புத்தி நாசாத் பிரணஷ்யதி
கோபத்தினால் மனதில் ஒரு மயக்கம் உண்டாகிறது. அந்த மயக்கத்தினால் 
நினைவு தப்புகிறது. அப்படி நினைவு தவறுவதால் அவனிடம் புத்தி நாசம் ஏற்பட்டு நல்லது, கெட்டதை பகுத்தறியும் தன்மை விலகிப் போகிறது. பகுத்தறியும் தன்மை விலகும் போது அவன் அழிகிறான்.

64.
ராக த்வேஷ விமுக்தைஸ்து விஷயாந் இந்த்ரியைச் சரந்
ஆத்ம வச்யைர் விதேயாத்மா ப்ரஸாதம் அதி கச்சதி
ஆனால் தன்னை அடக்கிய ஒருவன், இந்த விஷயங்கள் மத்தியில் இருக்கும் போதும் தனது புலன்களை அடக்கி, பற்றோ, வெறுப்போ இல்லாமல் அமைதியை அடைகிறான்.

65.
ப்ரஸாதே சர்வ து:க்காநாம் ஹாநிர் அஸ்யோ பஜாயதே
ப்ரசந்ந சேதஸோ ஹ்யாஷு புத்தி: பர்ய வதிஷ்டதே
அந்த அமைதியில் அவனின் எல்லா துக்கங்களும் அழிகின்றன. அமைதியான மனதில் புத்தி நிலை கொண்டு ஸ்திரமாக இருக்கும்.

66.
நாஸ்தி புத்திர் அயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா 
ந சாபாவயத: சாந்திர் அசாந்தஸ்ய குத: ஸுகம்  
நிலை கொள்ளாத ஒருவனுக்கு ஆத்மத்தைக் குறித்த எந்த ஒரு ஞானமும் ஏற்படுவதில்லை. அவனால் எந்த ஒரு தியானமும் செய்ய முடியாது. தியானம் செய்ய முடியாதவர்களுக்கு எந்த அமைதியும் ஏற்படாது. அமைதி இல்லாத ஒருவனுக்கு எப்படி சந்தோசம் ஏற்படும்,

67.
இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோ(அ)நுவிதீயதே
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர் நாவம் இவாம்பஸி 
சூறாவளியில் காற்று எப்படி நீரில் ஒரு படகை தடுமாற வைக்கிறதோ, அது போல அலை பாயும் இந்திரியங்களைப் பின் தொடரும் மனமானது அதன் பகுத்தறிவையும் அலைக்கழித்து விடுகிறது. 

68.
தஸ்மாத் யஸ்ய மஹா பாஹோ நிக்ரு ஹீதாநி ஸ்ர்வச:
இந்த்ரியாண் இந்த்ரியார்தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞா பிரதிஷ்டிதா 
மஹா வல்லமை கொண்ட அர்ஜுனா! எவன் ஒருவன் இந்திரியங்களில் இருந்து புலன் அடக்கம் பெற்றுள்ளானோ, அவனின் அறிவு நிலையாக இருக்கும்.

69.
யா நிசா ஸர்வபூதானாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிசா பச்யதோ முநே:
எல்லா உயிர்களுக்கும் இரவாக இருக்கும் போது, இந்தப் புலனடக்கம் பெற்றவன் விழிப்புடன் இருப்பான். எல்லா உயிர்களும் பகலில் விழித்து இருக்கும் போது, இந்த ஞானிகளுக்கு இரவாக இருக்கும்.

70.
ஆபூர்யமாணம் அசல பிரதிஷ்டம் ஸமுத்ரம் ஆப: ப்ரவிசந்தி யத்வத்
தத்வத் காமா யாம் ப்ரவிசந்தி ஸர்வே ஸ சாந்திம்ஆப்நோதி ந காமகாமீ
சமுத்திரத்தில் நதி சேரும் போதும் அந்த சமுத்திரம் மாற்றம் இல்லாமல் இருப்பது போல, எவன் ஒருவனுள்ளே ஆசைகள் எல்லா திசைகளில் இருந்தும் நெருக்கினாலும், அவன் அசைந்து கொடுக்காமல் நிலையாக இருப்பானோ, அவனே மன அமைதியைப் பெறுகிறான். ஆனால் மனம் முழுக்க ஆசைகளைக் கொண்டவன் அந்த அமைதியைப் பெறுவது இல்லை.

71.
விஹாய காமாந்ய: ஸர்வாந் புமாம்ச்சரதி நி: ஸ்ப்ருஹ:
நிர்மமோ நிரஹங்கார: ஸ சாந்திம் அதி கச்சதி
எல்லா ஆசைகளையும் துறந்து, எந்த ஏக்கமும் இல்லாமல், தான், தனது என்ற உணர்வு இல்லாமல் இருக்கும் அவனே அமைதியை அடைகிறான்.

72.
ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி
ஸ்தித்வாஸ் யாமந்த காலே(அ)பி பிரம்ம நிர்வாணம் ருச்சதி
ப்ருதாவின் புத்திரனே! இது தான் பிரம்ம நிலை. இந்த நிலையில் எவருமே மயங்குவதில்லை. இதிலே நிலை கொண்ட பின்னர், ஜீவனின் இறுதியிலும் ஒருவன் பிரம்மத்தில் (ஆத்மாவில்) கலக்கிறான். 

ஹரி ஓம் தத் ஸத்:
ஹரியே பரம்பொருள் - அதுவே உண்மை 

இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே ஸாங்க்ய யோகோ நாம த்விதீயோத்யாய:  
இது ஸ்ரீமத் பகவத் கீதை, உபநிஷத், பிரம்மத்தைப் (ஆத்மாவைப்) பற்றிய கல்வி, யோக சாஸ்திரம் (வாழ்க்கையில் செல்ல வேண்டிய பாதையை குறிக்கும் நூல்), ஸ்ரீ கிருஷ்ணர் - அர்ஜுனன் இடையே நடந்த உரையாடல், ஸாங்க்ய  யோகம் என்ற இரண்டாம் அத்தியாயம்.

விசாரம்
முன்பே பார்த்தோம் - குந்தியின் இன்னொரு பெயர் ப்ருதா. பின்னர் குந்திபோஜனுக்கு தத்து கொடுக்கப்பட்டதால் அவளின் பெயர் குந்தி ஆனது. அவளின் பிள்ளையானதால், அர்ஜுனனுக்கு பார்த்தன் என்ற பெயர். ஸ்ரீ கிருஷ்ணர் குந்தியை அத்தை என்றே அழைப்பார். பிறப்பில் அவளும் வசுதேவரின் சஹோதரி தானே. அது போல அர்ஜுனனை பிரியமாக அழைப்பதும் பார்த்தா, கௌந்தேயா என்று தான். அப்படி பார்த்தனுக்கு சாரதியாக இருந்ததால் தான் கிருஷ்ணருக்கு பார்த்தசாரதி என்ற பெயர். பக்தன் ஒருவனின் பெயரால் அவருக்கு இந்த நாமம்.

69 ம் ஸ்லோகத்தின் உள்ளார்த்தம் -ஆசைகளைக் கொண்டு அஞ்ஞானத்தில் இருப்பவர்கள் அஞ்ஞானிகள். அவர்கள் விழிப்புடன் இருக்கும் நேரம் (பகல்) என்றால் சுக போகத்தில் இருக்கும் நேரம். அந்த சமயத்தில் ஞானிகள் எப்படி இருப்பார்கள்? ஆத்ம விசாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சுக போகத்தைக் கண்டு கொள்ளாமல் கண் மூடி (இரவில்) இருப்பார்கள். அதே சமயம் ஞானிகள் பிரம்மத்தைக் காணும் போது (பகல்), அஞ்ஞானிகள் அதைப் பார்க்க முடியாமல் கண் மூடியவர்களாக (இரவு) இருக்கிறார்கள்.

நாம் நமது அன்றாட வாழ்வில் சந்திக்கும் மிகச் சாதாரண சூழ்நிலை இங்கே விவரிக்கப் பட்டுள்ளது. எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி, மதிப்புள்ளதோ, மதிப்பு இல்லாததோ, உயிர் உள்ளதோ, இல்லாததோ முதலில் அது நமக்கு கிடைப்பதற்கு முன்னால் நமக்கு அதன் மீது ஒரு ஈர்ப்பு வருகிறது. அதை அடக்க முடியாத போது அந்த ஈர்ப்பு அந்த பொருள் மீது ஒரு வெறி கொள்ள வைக்கிறது. அது நியாயமான வெறி என்றால் ஓரளவுக்கு சரி எனலாம். இல்லாத போது, நியாயமாக இருந்தாலுமே கிடைக்காத போது நமக்கு அந்த வெறி கோபமாக மாறுகிறது, கோபம் வந்தவுடன் மனதில் ஒரு குழப்பம் வந்து, நல்லதா, கெட்டதா என பிரித்து அறியும் முதிர்ச்சி தொலைகிறது. இந்த கோபம் அழிவுக்கு காரணம் ஆகிறது. அப்படி இல்லாமல் இந்த ஆசை ஏற்படாமல் முதலிலேயே அடக்கி விட்டால் இந்த chain reaction ஏற்படாமல் அழிவு வராமல் போகும் இல்லையா? நம்மில் எதனை பேர் க்ஷண நேர கோபத்தில் வாழ்கையை அழித்துக் கொண்டுள்ளோம்.

இந்த ஆசைகளை அடக்குவதினால் நமது இந்திரியங்களும் அடங்குகின்றன. அலை பாயாத மனம் இருக்கும் போது தியானம் செய்ய முடிகிறது. தியானம் நிர்வாணத்திற்கு (மன அமைதிக்கு) கொண்டு செல்கிறது. இப்படி சாந்தி நிலையை அடைந்தால் மனதில் எப்படி ஏக்கம் தோன்றும்? இந்த உன்னத நிலையே பிரம்ம நிலை.  அப்படி பிரம்ம நிலையை அடைந்த ஒருவன் அவனின் ஜீவித காலம் முடிந்த பின்னர் அந்த பிரம்மத்திலேயே ஒன்றாகிறான். ஜீவாத்மாவாக இருந்த அவன் இந்த சித் எனப்படுகிற நிலையை அடையும் போது அவனுள்ளே ஒரு ஆனந்தம் ஏற்படுகிறது. எந்த ஒரு material comfort ம் கொடுக்க முடியாத பேரானந்த நிலை. இப்படி பரமாத்மாவோடு இரண்டறக் கலப்பது தானே நமது அத்வைதத்தின் சாரம்.    

No comments:

Post a Comment