11.
தேவாந் பாவயதாநேந தே தேவா பாவயந்து வ:
பரஸ்பரம் பாவயந்த: ஸ்ரேய: பரமவாப்ஸ்யத
இதன் மூலம் நீ தேவர்களுக்கு படைக்க, அவர்களும் உன்னை ரக்ஷிக்கட்டும். இப்படி பரஸ்பரம் ஒருவரை ஒருவர் திருப்தி செய்து நீ உயர்ந்த நிலையை அடைவாய். (இங்கே யஜ்ஞத்தில் செய்யப்படும் ஆஹுதியை குறிக்கிறது).
12.
இஷ்டாந் போகாந்ஹி வோ தேவா தாஸ்யந்தே யஜ்ஞ பாவிதா:
தைர் தத்தாந் அப்ரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேந ஏவ ஸ:
யஜ்ஞத்தினால் திருப்தி செய்யப்பட்ட தேவர்களும், உனக்கு வேண்டிய போகங்களை அளிப்பார்கள். ஆகையினால் எவன் ஒருவன் யஜ்ஞத்தில் எதையும் சமர்ப்பிக்காமல், இறைவன் அளித்த போகங்களை மட்டும் அனுபவிக்கின்றானோ, அவன் திருடன் ஆகிறான்.
13.
யஜ்ஞ சிச்டாசிந: ஸந்தோ முச்யந்தே ஸர்வ கில்பிஷை:
புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்ம காரணாத்
யஜ்ஞத்தில் படைக்கப்பட்டதில் மீதி உள்ளதை உண்ணும் புண்ணிய ஆத்மாக்கள் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள். ஆனால் தான் மட்டுமே உண்பதற்காக உணவைச் சமைக்கும் பாபிகள், பாவத்தையே உண்கிறார்கள்.
14.
அந்தாத் பவந்தி பூதாநி பர்ஜந்யாத் அந்ந ஸம்பவ:
யஜ்ஞாத் பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்ம ஸமுத்பவ:
உணவில் இருந்து உயிர்கள் வருகிறது; உணவு மழையினால் படைக்கப்படுகிறது; மழை யஜ்ஞத்தில் இருந்து உருவாகிறது; யஜ்ஞம் கர்மத்தினால் உருவாகிறது.
15.
கர்ம ப்ரஹ்மோத் பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷர ஸமுத்பவம்
தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்
கர்மா ப்ரஹ்மத்தில் இருந்து வருகிறது என்பதை அறிந்து கொள். ப்ரஹ்மம் அழிக்க முடியாத ஒன்றில் இருந்து வருகிறது. அதனால் அனைத்திலும் வியாபித்திருக்கும் ப்ரஹ்மம் எப்பொழுதும் யஜ்ஞத்தில் உறைகிறது.
16.
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்த்தயதீஹ ய:
அகாயுர் இந்த்ரியாராமோ மோகம் பார்த ஸ ஜீவதி
அர்ஜுனா! இப்படிச் சுழலும் சக்கரத்தைப் புரிந்து கொள்ளாமல், எவன் ஒருவன் பாவப்பட்ட வாழ்கை வாழ்ந்து, இந்த்ரியங்களிலேயே மோஹித்து இருப்பானோ அவன் வீணான வாழ்கை வாழ்கிறான்.
17.
யஸ்த்வாத்மரதிர் ஏவ ஸ்யாத் ஆத்ம த்ருப்தச்ச மாநவ:
ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ் தஸ்ய கார்யம் ந வித்யதே
ஆனால் எவன் ஒருவன் ஆத்மாவில் மட்டுமே சந்தோஷித்து, அதிலேயே திருப்திப் பட்டு, அதில் மட்டுமே மனச் சாந்தி கொள்கிறானோ - அவனுக்கு வேறு எந்த காரியமும் இல்லை.
18.
நைவ தஸ்ய க்ருதே நார்தோ நாக்ருதே நேஹ கச்சந
ந சாஸ்ய ஸர்வ பூதேஷு கச்சித் அர்த வ்யபாச்ரய:
அவனுக்கு எது நடை பெறுகிறது, எது நடை பெறவில்லை என்பதில் எந்த ஒரு பற்றும் இல்லை. அதைப் போல அவன் எந்த ஒரு பொருளின் மீதும் சார்ந்து இல்லை.
19.
தஸ்மாத் அஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர
அஸக்தோ ஹ்யாசரந் கர்ம பரமாப்நோதி பூருஷ:
அதனால் எந்த ஒரு பற்றும் இல்லாமல் நீ செய்ய வேண்டிய உனது கடமைகளைச் செய்ய வேண்டும். கடமைகளைப் பற்று இல்லாமல் செய்வதன் மூலம் நீ பரமாத்மாவை அடைய முடியும்.
20.
கர்மணைவ ஹி ஸம்ஸித்திம் ஆஸ்திதா ஜநகாதய:
லோக ஸங்க்ரஹம் ஏவாபி ஸம்பச்யந் கர்த்தும் அர்ஹஸி
ஜனகர் மற்றும் பலர் தங்களின் கடமைகளின் மூலம் மட்டுமே ஸித்தி அடைந்தார்கள். மக்களைக் காக்கும் அவசியத்திற்காவது நீ கடமைகளைச் செய்ய வேண்டும்.
விசாரம்
யஜ்ஞத்தில் நாம் ஆஹுதி படைத்து அதன் மூலம் பெரிய பலன்களை அடைய ஆசைப்படுகிறோம். இது ஒரு மாதிரியான symbiotic relationship - நான் உனக்கு இதைச் செய்கிறேன், பதிலுக்கு நீ எனக்கு இதைச் செய் என்ற ஒரு expectation நம் மனதில் கொண்டு இதைச் செய்கிறோம். இதுவாவது பரவாயில்லை. இன்னும் சிலர் எதையும் இறைவனுக்குப் படைக்காமல் எல்லா போகங்களையும் அனுபவிக்கின்றார்கள். அவர்கள் திருடர்களே அன்றி வேறு எவராக முடியும். இந்த காலத்தில் யஜ்ஞம் என்று அக்னியைக் கொண்டு தினமும் பண்ண முடிவதில்லை தான். அக்னிஹோத்ரமாக செய்தால் தான் யஜ்ஞம் என்றில்லை. முடிந்த அளவு உணவு சமைத்தப் பின்னர் பகவானுக்கு நிவேதனம் செய்து விட்டு பின்னர் மீதத்தைச் சாப்பிடலாம். தைத்திரிய உபநிஷத்தில் வரும் 'அதிதி தேவோ பவ' என்பதை ஏற்று அதிதி சம்ஸ்காரம் செய்யலாம். அதிதி சம்ஸ்காரம் என்பது க்ரிஹஸ்தாஸ்ரமத்தில் இருப்பவருடைய முக்கியமான கடமையாகும்.
இப்படி கடமையை ஒழுங்காகச் செய்வதன் மூலம், யஜ்ஞம் ஒழுங்காக நடந்து, அதன் மூலம் மழை ஒழுங்காகப் பெய்து, தானிய விளைச்சல் நன்றாக இருந்து, அதன் மூலம் உயிர்களின் ஸ்ருஷ்டி நடக்கிறது. அழிவில்லாத ஒன்றில் இருந்து வரும் ப்ரஹ்மம் இப்படி செய்யப் படும் யஜ்ஞத்தில் இருக்கிறது. இந்த நியதியைப் புரிந்து கொள்ளாமல் வெறும் இந்திரிய சுகங்களில் மட்டுமே மூழ்கி இருக்கும் ஒருவனால் இந்த உலகிற்கு என்ன பயன்.
கடமை என்ற ஒன்று செய்யாமல் எவராலுமே இருக்க முடியாது என்று முன்பு பார்த்தோம். இந்த உலகில் ஏதாவது கர்மா செய்யத் தான் வேண்டி உள்ளது. அதற்காக எந்த ஒரு ethics உம் இல்லாமல் செய்வது கடமை ஆகாது. நாம் செய்வது தர்ம வழியிலான கடமையாக இருக்க வேண்டும். காமம், அர்த்தம் இந்த ரெண்டிற்காகவும் நாம் காரியங்களைச் செய்கிறோம். காமம் என்பது ஆசையைக் குறிக்கிறது, அர்த்தம் என்பது இங்கே security என்ற பொருளில் வருகிறது. நம்முடைய secured life க்கு தேவையானது என்று பொருள் கொள்ளலாம். மற்ற உயிர்களிடம் இல்லாத ஒன்று மனுஷ ஜென்மத்திற்கு உண்டு - common sense. இந்த அறிவைக் கொண்டு நாம் நமது செயல்களைப் பகுத்தறிய வேண்டும். மற்றவர்கள் நமக்கு எதைச் செய்தால் நாம் விரும்ப மாட்டோமோ, அந்த ஒன்றை நாம் மற்றவர்களுக்குச் செய்யாமல் இருப்பதே தர்மம். இந்த தர்ம வழியில் நமது செயல்களை செய்தால் அதுவே உத்தமம்.
இப்படி கர்மத்தை நிஷ்காம்யமாகச் செய்து மனதை ப்ரஹ்மத்தில் மட்டுமே லயிக்க வைத்திருந்தால் மட்டுமே அவன் அந்த ப்ரஹ்மத்தில் ஒன்றாகக் கலக்க முடியும். கிருஷ்ணர் இப்படி நிஷ்காம்யமாக இருந்தவர்களில் ஜனகரை உதாரணம் காட்டுகிறார். மிதிலாபுரி தீ பிடித்து எரிந்த போது ஜனகர் மனம் கலங்காது - எதுவுமே தன்னுடையது இல்லை என்ற உணர்வோடு வருந்தாமல் இருந்தாராம். அதற்காக மக்களை காப்பாற்றாமல் விடவில்லை. கிருஷ்ணரும் இங்கே அர்ஜுனனை மக்களை காக்க வேண்டியாவது போரில் ஈடுபடச் சொல்கிறார்.
விசாரம்.எளிமையாக புரியும் விதத்தில் இருக்கு.
ReplyDelete//மற்றவர்கள் நமக்கு எதைச் செய்தால் நாம் விரும்ப மாட்டோமோ, அந்த ஒன்றை நாம் மற்றவர்களுக்குச் செய்யாமல் இருப்பதே தர்மம். //
தர்மத்திற்கு விளக்கம் அருமை.
வருகைக்கு நன்றி மாமி.
ReplyDeleteஸ்ரீநிவாச கோபாலன்,தங்களின் பகவத்கீதை பதிவுகளைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன் நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கவும்.(http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_18.html)
ReplyDelete