Monday, October 10, 2011

Chapter 3 - Karma Yoga [1-10]


1.
அர்ஜுந உவாச:
ஜ்யாயஸீ சேத் கர்மணஸ்தே மதா புத்திர் ஜனார்தந
தத் கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேசவ
அர்ஜுனன் சொன்னது:
கிருஷ்ணா! நீ கர்மத்தை விட ஞானமே உயர்ந்தது என்று நினைத்தால் பின் ஏன் கேசவா! நீ என்னை இந்த கொடிய செயலில் ஈடுபடச் சொல்கிறாய்?

2.
வ்யாமிஸ்ரேணேவ வாக்யேந புத்திம் மோஹயஸீவ மே
ததேகம் வத நிச்சித்ய யேந ஸ்ரேயோ(அ)ஹமாப்நுயாம்
குழப்புவது போல இருக்கும் உனது இந்த வார்த்தைகள் எனது சிந்தையை மேலும் குழப்பி விட்டது. எதன் மூலம் நான் உறுதியாக பேரானந்தத்தை அடைய முடியுமோ அந்த வழியை நீ கூறு

3.
ஸ்ரீ பகவான் உவாச:
லோகே(அ)ஸ்மின் த்விவிதா நிஷ்டா புரா ப்ரேரக்தா மயாநக 
ஜ்ஞாந யோகேந ஸாங்யாநாம் கர்ம யோகேந யோகிநாம் 
ஸ்ரீ பகவான் சொன்னது:
பாவம் இல்லாதவனே! முன்பே நான் கூறியதைப் போல இந்த உலகில் இரு வழியிலான பாதைகள் உள்ளன - ஸாங்க்யம் அறிந்த ஞான வழி, கர்மம் என்ற யோகிகளின் வழி.

4.
ந கர்மணாம் அநாரம்பாந் நைஷ்கர்ம்யம் புருஷோ(அ)ஷ்நுதே 
ந ச ஸந்ந்யஸா நாதேவ ஸித்திம் ஸமதி கச்சதி
எந்தச் செயலும் செய்யாமல் இருப்பதால் ஒருவன் செயலற்ற நிலையை அடைவதில்லை. அது போலவே வெறுமனே பற்றுகளைத் துறப்பதால் ஒருவன் ஸமாதி நிலையை அடைவதில்லை.

5.
ந ஹி கச்சித் க்ஷணம் அபி ஜாது திஷ்டத்ய கர்மக்ருத்
கார்யதே ஹ்யவச: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:
எவருமே எந்த ஒரு நொடியும் செயல்களைச் செய்யாமல் இருந்து விட முடியாது. ஏன் என்றால் இந்த இயற்கையின் குணத்தினால் எல்லோருமே வேறு வழி இல்லாமல் செயல் பட வேண்டி உள்ளது.

6.
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்
இந்த்ரியார்தாந் விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே 
எவன் ஒருவன் வெளியே செயல் உறுப்புகளை எல்லாம் அடக்கி, மனதின் உள்ளே ஆசைகளை உருவாக்கும் பொருட்களை நினைத்தே அமர்ந்து உள்ளானோ - அந்த குழப்பமான புரிதலைக் கொண்ட அவன் ஒரு மூடன், பொய் ஒழுக்கம் கொண்டவன்.

7.
யஸ்த்விந்த்ரியாணி மநஸா நியம்யாரபதே(அ)ர்ஜுந 
கர்மேந்த்ரியை: கர்ம யோகம் அஸக்த: ஸ விசிஷ்யதே 
எவன் ஒருவன் இந்த்ரியங்களை மனதில் அடக்கி, கர்ம யோகத்தில் தனது செயல் உறுப்புகளால் பற்று இல்லாமல் தன்னை ஈடுபடுத்திக் கொள்வானோ - அர்ஜுனா! அவனே சிறந்தவன் ஆவான்.

8.
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
சரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத் அகர்மண:
உனக்கு விதிக்கப்பட்ட கர்மத்தை நீ செய். செயல் செயலின்மையை விடச் சிறந்தது. உனது செயலின்மையால் உனது உடலைக் கூட உன்னால் பேண முடியாது.

9.
யஜ்ஞார்தாத் கர்மணோ(அ)ந்யத்ர லோகோ(அ)யம் கர்ம பந்தந:
ததர்தம் கர்ம கௌந்தேய முக்த ஸங்க: ஸமாசர
இந்த உலகம் யஜ்னத்தில் சமர்பிக்கப் படும் சமர்பணங்களைத் தவிர பிற செயல்களாலும் கட்டுப்பட்டுள்ளது. அதனால் குந்தியின் பிள்ளையே! செயலை யஜ்னத்தில் செய்யப்படும் சமர்ப்பணம் ஆக மட்டும் கருதி, பற்றில்லாமல் செய். 

10.
ஸஹயஜ்ஞா: பிரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச பிரஜாபதி:
அநேந பிரஸவிஷ்யத்வம் ஏஷ வோ(அ)ஸ்த்விஷ்டகாம துக்
பிரஜாபதியான இந்த உலகைப் படைத்தவர், ஆரம்பத்தில் மானுட ஜென்மத்தை யக்ஞ சமர்ப்பணம் என்ற ஒன்றோடு படைக்கும் போது 'இதன் மூலம் நீங்கள் பல்கிப் பெருகுவீர்கள், இது வேண்டியதை அளிக்கும் காமதேனுவாக இருக்கும்' என்று கூறிப் படைத்தார்.

விசாரம்
மூன்றாவது அத்தியாயத்தின் பெயர் கர்ம யோகம். இதன் ஸ்ரேஷ்டம் என்னவென்றால் இதைப் பாராயணம் செய்பவர்கள் அவர்களின் சுய பாவங்களைத் தொலைப்பதொடு, அவர்களின் பித்ருக்கள் செய்த பாவங்களையும் தொலைப்பராம். மகாளய பக்ஷத்தில் இந்தப் அத்தியாயத்தைப் பாராயணம் செய்தல் இன்னும் பலன்.

வாழ்க்கையில் ரெண்டு விதமான பாதைகள் உண்டு - ப்ரவ்ருத்தி என்ற கர்ம மார்க்கம், நிவ்ருத்தி என்ற ஞான மார்க்கம். ஞான மார்க்கம் கர்ம மார்க்கத்தை விட உயர்ந்தது. அர்ஜுனன் மாதிரியே நமக்கும் இந்த சந்தேகம் வரும். அப்படி ஒரு வேளை ஞான மார்க்கம் தான் பெரிது என்றால் எதற்காக கர்ம மார்க்கத்தை  கடைப்பிடிக்க வேண்டும்? ஞான மார்க்கம் மட்டும் தான் என்றால் கிருஷ்ணருக்கும் பதினெட்டு அத்தியாயம் உபதேசிக்க வேண்டி இருந்துருக்காது :) நேரே அதை மட்டும் சொல்லி இருக்கலாம் இல்லையா? எல்லாருக்குமே அர்ஜுனன் இந்த நிலையில் இருப்பது மாதிரி நேரடியாக ஞான மார்க்கத்தை உபதேசம் பெற்றால் புரிந்து கொள்ளும் சக்தி கிடையாது. எதையுமே படிப் படியாகத் தானே கற்றுக் கொள்ள முடியும். 

நாம் வாய் வார்த்தையாக சும்மா இருக்கிறோம் என்று சொன்னாலும், உண்மையில் நாம் எதாவது ஒரு செயலைச் செய்து கொண்டு தான் இருக்கிறோம், இல்லை என்றால் இந்த சரீரத்தை வளர்க்க முடியாது. வெறுமனே சாப்பிட்டு, தூங்கினாலும் அதுவும் ஒரு செயல் தானே. எதுவுமே வேண்டாம் என்று எல்லோராலும் சட் என்று சன்யாசம் வாங்கி விட முடியாது. க்ருஹஸ்தாஸ்ரமம் என்ற ஒன்றின் பின்னே வானப்ரஸ்தம் என்ற ஒன்று, அதன் பின்னர் தான் சந்யாசம். இந்த வானப்ரஸ்தம் ஒரு transition period மாதிரி - ஆசைகளை குறைத்துக் கொண்டு, காட்டில் இருக்கப் பழகிக் கொண்டு அப்புறம் சன்யாசம் வாங்குவது. இல்லை என்றால் இவனை மாதிரி தான் ஆகும்:   
ஒருத்தன் சம்சாரி - மனைவி குழந்தைகள் எல்லாம் உண்டு. ஏதோ ஒரு கோவமோ, வெறுப்போ, சம்சாரம் வேண்டாம், சன்யாசம் வாங்குகிறேன் என்று குருவைத் தேடி போகிறான். அவரைக் கண்டு பிடித்து தீக்ஷை வாங்கும் சமயம். தீக்ஷை நடு குளமோ, ஆற்றிலோ கொடுப்பார்கள். அங்கே நீர் தெளிவாக இருக்கும். கரைப் பகுதியில் கொஞ்சம் சேறாக இருக்கும் இல்லையா. இவனுக்கு ஒரு குழப்பம் - அடடா! நம்ம குழந்தைகளுக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கலியே, பேரன், பேத்திகளோட விளையாடலியே அப்படின்னு ஒரு ஆசை அந்த சமயத்தில் வருகிறது. சரி திரும்ப வீட்டிற்குப் போகலாம் என்றால் மனைவியோடு போட்ட சண்டை நினைவு வந்து ஏன் போகணும் என்று தோன்றுகிறது. இந்த dilemma வோட ஆத்துல ஒரு கால், சேற்றுல ஒரு கால்னு இருக்கக் கூடாது. மனசு முழுக்க ஆசையை வெச்சுண்டு, நான் மூச்சை அடக்கறேன், தியானம் பண்றேன்னு சொல்றதுல பலன் இல்லை. அப்படி பண்றவன் ஒரு hypochrite. 

அர்ஜுனன் மாதிரி நம்ம எல்லாருக்கும் உடனடியாக பண்றதுக்கு சில/பல கடமைகள் இருக்கு. அந்த கடமைகள் எல்லாவற்றையும் செய்யற கர்ம யோகம் தான் முதல் படி. எல்லாச் செயல்களையும் ஒரு யாகம் மாதிரி செய்யறது தான் கர்ம யோகம். யாகம் பண்ற போது நாம் அதில் சமர்ப்பிக்கின்ற ஆஹுதி மேல நாம் ஆசைப்படுவதில்லை தானே?  ஏன் - அதை விட ஒரு பெரிய பலனை அந்த யாகத்தில் எதிர்பார்கிறோம். அதனால தான் வேதங்களும் கர்ம காண்டத்தில் ஆரம்பிக்கின்றது. அதை ஒழுங்காச் செய்தால், அதுக்கு அடுத்தப் படி கர்ம சந்நியாச யோகம் - அந்த கடமைகளைப் பற்று இல்லாமல் நிஷ்காம்யமாகச் செய்யறது. அதுலேர்ந்து பக்தி யோகம். பக்தி என்ற ஒன்றை cultivate பண்ண சத்வ குணத்தை வளர்த்துக்கனும், அந்த ஈஸ்வரனோட மேன்மை, பெருமை என்னவென்று தெரிந்து கொள்ளனும், இந்த உடல்/மனம் பற்றின உண்மைகளைத் தெரிந்து கொண்டு ஆத்மஞானம் பெற்றால் அப்பொழுது நாம் நம்முடைய எல்லா தர்மங்களையும், செயல்களையும் விட்டு விட்டு அந்த ஈஸ்வரனோட பாதத்தில் சரணாகதி அடைந்தால் நமக்கு மோக்ஷம் என்ற பதவி கிடைக்கும். இது தான் அடுத்து வரப் போற அத்தியாயங்களின் சாராம்சம்.

2 comments:

 1. நன்றி ஸ்ரீநிவாசகோபாலன் என் பக்கத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கு.

  உங்க பதிவுகள் மிக அருமையாக இருக்கு.
  இன்றைய கர்ம யோகம் பற்றிய உங்களோட விளக்கம் சிறப்பாக இருக்கு.

  அடுத்து நீங்க கொடுக்கப்போகிர அத்தியாயங்களை படிக்க காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. மாமி
  முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாங்கோ.

  ReplyDelete