Wednesday, December 21, 2011

Chapter 4 - Gyaana Karma Sannyaasa Yoga [31 - 42]

31.
யஜ்ஞசிஷ்டாம்ருதபுஜோ யாந்தி ப்ரம்ஹ ஸநாதாநம் 
நாயம் லோகோ(அ)ஸ்த்ய யஜ்ஞஸ்ய குதோ(அ)ந்ய: குருஸத்தம
யஜ்ஞத்தில் படைக்கப்பட்டது போக அமிர்தம் போன்ற மீதியை (இன்னொரு அர்த்தம் நைவேத்யம் செய்யப்பட்டது) உண்பவன் அந்த பிரம்மத்தை அடைகிறான். யாகம் எதையுமே செய்யாதவன் இந்த இல் உலகிற்கே தகுதி இல்லாதவன். பின்னர் எப்படி அர்ஜுனா! அவனால் இன்னொரு உலகை அடைய முடியும்.

32.
ஏவம் பஹூவிதா யஜ்ஞா விததா ப்ரம்ஹணோ முகே
கர்மஜாந் வித்திதாந் ஸர்வாந் ஏவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே
இப்படியாக பல விதமான படையல்கள் அந்த பிரம்மத்தின் முன்னே பரப்பி வைக்கப் பட்டுள்ளன. இவை எல்லாமே கர்மம் என்ற ஒன்றினாலேயே தோன்றி உள்ளன. இதை அறிந்ததால் நீ விடு பெற முடியும்.

33.
ஸ்ரேயாந் திரவ்யமயாத் யஜ்ஞாஜ் ஜ்ஞாந யஜ்ஞ: பரந்தப
ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரி ஸமாப்யதே 
பரந்தபா! பொருட்களால் யஜ்ஞம் செய்வதைவிட ஞானத்தால் செய்வது சிறந்தது. அர்ஜுனா! எல்லா செயல்களும் முற்றிலுமாக ஞானத்திலேயே முற்று பெறுகின்றன.  

34.
தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்த்வ தர்சிந:
இந்த பிரம்மத்தை உணர்ந்த சான்றோர்களை சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதன் மூலமும், கேள்வி கேட்பதன் மூலமும், அவர்களுக்கு சேவை செய்வதன் மூலமும், அவர்கள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள்.

35.
யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹம் ஏவம் யாஸ்யஸி பாண்டவ
யேந பூதாந்ய சேஷாணி த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி
அர்ஜுனா! அதை அறிந்ததன் மூலம் நீ மீண்டும் இது போல கலங்கி இருக்க மாட்டாய். அதன் மூலம் நீ எல்லா உயிர்களையும் உன்னுள்ளும், என்னுள்ளும் காண்பாய்.

36.
அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம:
ஸர்வம் ஜ்ஞாநப்லவே நைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி
நீ பாபிகளிலும் மகாபாபியாக இருந்தாலும், இந்த ஞானத்தின் மூலம் நீ எல்லா பாவங்களையும் தொலைத்து விடலாம்.

37.
யதைதாம்ஸி ஸமித்தோ(அ)க்நிர் பஸ்மஸாத் குருதே(அ)ர்ஜுந
ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே ததா
அர்ஜுனா! அக்னியானது எப்படி ஸமித்துக்களை (யஜ்ஞத்தில் பயன்படும் ஸமித்துக்கள்) பஸ்பம் ஆக்குகிறதோ, அப்படியே ஞானம் ஆகிய அக்னி எல்லா செயல்களையும் பஸ்பம் ஆக்குகிறது.

38.
ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருசம் பவித்ரம் இஹ வித்யதே
தத் ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி
இந்த உலகில் ஞானத்தைப் போன்று வேறு பவித்ரமான பொருள் ஒன்றில்லை.யோகத்தில் எவன் தேர்ந்துள்ளானோ, அவன் தகுந்த சமயத்தில் அந்த ஞானத்தைப் பிரம்மத்தில் காண்பான்.

39.
ஸ்ரத்தாவாந்ல்லபதே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்ரிய:
ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஷாந்திமசிரேணாதி கச்சதி
எவன் ஒருவன் முழு ஷ்ரத்தையுடன், பக்தியுடன், புலன்களை அடக்கி இருக்கிறானோ அவன் இந்த ஞானத்தைப் பெறுகிறான். அந்த ஞானத்தை பெற்ற உடன் அவன் உடனே அந்த சித்தானந்த நிலையாகிய பரம சாந்தியைப் பெறுகிறான்.

40.
அஜ்ஞச் சாஸ்ரத் ததாநச்ச ஸம்சயாத்மா விநச்யதி
நாயம் லோகோ(அ)ஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்சயாத்மாந:    
அறிவீனர்கள், பக்தி இல்லாதவர்கள், சந்தேகம் கொண்டவர்கள், அழிவை நோக்கிச் செல்கிறார்கள். அவர்களுக்கு இந்த உலகும் இல்லை, மறு உலகும் இல்லை. இப்படி சந்தேகப்படுபவர்களுக்கு மனதில் எந்த சுகமும் இருப்பதில்லை.

41.
யோக ஸந்ந்யஸ்த கர்மாணம் ஜ்ஞாந ஸஞ்சிந்ந ஸம்சயம்
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநஞ்ஜய
அர்ஜுனா! எவன் ஒருவன் யோகத்தினால் கடமையில் இருந்து சந்ந்யாசம் (விடு) பெறுகிறானோ, எவனது சந்தேகங்கள் ஞானத்தினால் அழிக்கப்பட்டு விட்டதோ, எவன் தன்னை தானே வெற்றி கொள்கிறானோ - அவனைச் செயல்கள் கட்டுபடுத்துவதில்லை.

42.
தஸ்மாத் அஜ்ஞாந ஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஜ்ஞாநாஸிந ஆத்மந:
சித்த்வைநம் ஸம்சயம் யோகம் ஆதிஷ்டோத்திஷ்ட பாரத
அர்ஜுனா! ஆகையால் பிரம்மத்தைப் பற்றிய ஞானம் என்ற வாளைக் கொண்டு, உன் மனதில் உள்ள அறியாமையால் விளைந்த உனது சந்தேகங்களை வெட்டி, யோகத்தில் சரண் அடை. எழுச்சி பெறு.

இதி ஸ்ரீமத் பகவத் கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோக சாஸ்த்ரே ஸ்ரீ க்ரிஷ்ணார்ஜுந ஸம்வாதே ஜ்ஞாநகர்மஸந்ந்யாஸயோகோ நாம சதுர்தோ (அ)த்யாய:  
       
விசாரம்
பாகத புராணத்தில் அஜமிளா என்ற ஒரு பாத்திரம் வரும். பிராமண குலத்தில் பிறந்தவன் தான் இவன். ஒரு சமயம் தாசி ஒருத்தியைக் கண்டு, அவளை மோஹித்து தனது நித்ய கர்மாக்களை மறந்து அவளுடனே சிற்றின்பத்தில் மூழ்கி இருப்பான். அவனது காலம் முடியும் நேரம் வரும் போது எம தூதர்கள் வருவார்கள். அவன் அச்சமயத்தில் நாராயணன் என்ற பெயர் கொண்ட தனது பிள்ளையை அழைப்பான். உடனே வைகுண்டத்தில் இருந்து விஷ்ணு தூதர்கள் வந்து அவனை எம தூதர்களிடம் இருந்து மீட்பார்கள். அச்சமயத்தில் அவனுக்கு ஞானம் வரும் - நாராயணா என்ற நாமத்தை உச்சரித்ததற்கே இந்த பலன் என்றால் முழுவதும் ஈஸ்வர உபாசனை செய்தால் எப்படிப்பட்ட பலன் கிடைத்திருக்கும் என்று எண்ணிப் பார்த்து, பின்னர் காசி சென்று தவம் செய்து மோக்ஷம் பெறுவான். அவன் முன்பு செய்த நற் செயல்கள் அவனுக்கு தகுந்த நேரத்தில் ஞானத்தைக் கொடுத்தது. மகா பாபி ஆக இருந்தும் அதைப் போக்கி அவனுக்கு மோக்ஷம் கிடைத்தது.

நமக்கும் இப்படித் தான். யாகத்தில் சமர்பிக்கப்படும் ஸமித்துக் கட்டைகள் எப்படி நெருப்பில் பஸ்பம் ஆகிறதோ அப்படியே மனதில் இந்த ஞானம் உதித்த க்ஷணத்தில் நமது கர்மாக்கள் எரிந்து விடுகின்றன. முன்பே பார்த்தோம் - தான் என்ற எண்ணம் மனதில் அழிந்தால் தான் கர்ம பலனில் இருந்து விடு பெற முடியும். மனதில் ஞானம் வரும் போது தான் கர்ம சந்ந்யாசம் அடையலாம்.

இந்த ஞானம் பெறுவதற்கு மனதில் சிரத்தையும், பக்தியும் அவசியம். மனதில் பூரண நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். குமாரில பட்டரை இங்கே குறிப்பிட வேண்டியது வருகிறது. அவரை பௌத்தர்கள் மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிய போது, தான் கற்ற வேத சாஸ்திரம் உண்மையானால் தன்னைக் காப்பாற்றும் என்று கூறினார். அவர் மனதில் அந்த இம்மியளவு சந்தேகம் இருந்ததால் தான் அவர் உயிர் பிழைத்தும் கண் பார்வை போயிற்று.  

வெறும் ஏட்டறிவு ஞானத்தைக் கொடுக்காது. பஜ கோவிந்தத்தில் ஆச்சார்யாள் சொல்ற மாதிரி வெறும் இலக்கண அறிவு இறுதியில் பயன் படாது. ஒருவன் முதலில் தன்னைக் கட்டுப்படுத்தியவனாகவும், பக்தி மற்றும் நம்பிக்கையுடன் இருக்கும் போது தான் அந்த ஆத்ம ஞானம் அவனுள் வரும். அப்படி நம்பிக்கை இல்லாமல் இருந்தால் அழிவு தான் வரும். கற்று உணர்ந்த குருவிடம் பணிவுடன், இந்த நம்பிக்கை, பக்தியுடன் கற்றால் தான் அந்த ஆத்ம ஞானம் பெற்று கர்மத்தில் இருந்து விடு பட முடியும்.

2 comments:

  1. அஜாமிளன் கதை அருமையாக இருக்கு.

    //இந்த ஞானம் பெறுவதற்கு மனதில் சிரத்தையும், பக்தியும் அவசியம். //

    ஆம்,சிரத்தை இல்லை என்றால் எந்த காரியம் செய்தாலும் பலன் இருக்காது.

    நல்ல பதிவு.

    ReplyDelete