Monday, December 5, 2011

Chapter 4 - Gyaana Karma Sannyaasa Yoga [11-20]

11.
யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்
மம வர்த்மாநுவர்தந்தே மனுஷ்யா: பார்த ஸர்வச: 
எந்த வழியில் மக்கள் என்னை அணுகினாலும், அப்பொழுதும் நான் அவர்களுக்கு அநுக்ரஹிப்பேன். அர்ஜுனா! என் பாதையை எல்லா வழியிலும் மக்கள் தொடர்கிறார்கள்.

12.
காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர் பவதி கர்மஜா
இந்த உலகில், தங்கள் செயலில் வெற்றி பெற விரும்புபவர்கள், இறைவனுக்கு படையல் இடுகிறார்கள். ஏனென்றால் வெற்றி என்பது மனிதர்களுக்கு செயலின் மூலமே விரைவில் கிடைக்கின்றது.

13.
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்ய கர்தாரம் அவ்யயம்
குணம் மற்றும் செயலைப் பொருத்து - அதன் அடிப்படையில் நான்கு வித வர்ணங்களும் என்னால் படைக்கப்பட்டன. நான் தான் அதன் கர்த்தா என்றாலும், என்னை நீ செயல் புரியாதவனாகவும், அழிக்க முடியாதவனாகவுமே அறிந்து கொள்.

14.
ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்ம ப(फ)லே ஸ்ப்ருஹா:  
இதி மாம் யோ(அ)பி ஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே
செயல்கள் என்னைக் கட்டுப்படுத்தாது. அதைப் போல எனக்கு அந்த செயல்களின் பலன்களிலும் பற்று இல்லை. என்னை இவ்வாறு அறிந்தவனும் அவ்வாறே செயல்களால் கட்டுப்படாதவன் ஆகிறான்.

15.
ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி:
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம்
இதை அறிந்தே பண்டைய காலத்தில் மோக்ஷத்தை விரும்பியவர்களும், கடமையைச் செய்தார்கள். ஆகையால் நீயும் பண்டைய காலத்தின் முன்னோர்கள் போல உன் கடமையைச் செய்.

16.
கிம் கர்ம கிமகர்மேதி கவயோ(அ)ப்யத்ர மோஹிதா:
தத்தே கர்ம பிரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே(அ)சுபாத்
எது செயல்? எது செயலின்மை? இதைக் குறித்து அறிவாளிகளும் குழம்பிப் போய் உள்ளார்கள். ஆகையால் நான் உனக்கு அந்த செயல்/செயலின்மை குறித்த விளக்கத்தைச் சொல்லிக் கொடுக்கிறேன். இதை அறிவதன் மூலம் நீ சம்சாரச் சுழலாகிய ஜனனம்/மரணம் என்ற கொடுமையில் இருந்து விடுதலை பெறலாம்.

17.
கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:
அகர்மணச்ச போத்தவ்யம் க(ग)ஹநா கர்மணோ க(ग)தி:
சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செயலின் உண்மையான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறே செய்யக் கூடாத செயல் பற்றியும், செயலின்மையைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். செயலைப் பற்றிய அர்த்தத்தை புரிந்து கொள்வது மிகவும் கடினமே.

18.
கர்மண்யகர்ம ய: பச்யேத் அகர்மணி ச கர்ம ய:
ஸ புத்திமாந் மனுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்ந கர்மக்ருத்
எவன் ஒருவன் செயலில் செயலின்மையைக் காண்கிறானோ, செயலின்மையில் செயலைக் காண்கிறானோ, அவனே மனிதர்களில் சிறந்தவன், யோகி, எல்லாச் செயல்களையும் செய்பவன்.

19.
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா(भा): காம ஸங்கல்ப வர்ஜிதா:
ஜ்ஞாநாக்நி தக்த கர்மாணம் தமாஹூ: பண்டிதம் புதா: 
எவன் ஒருவனது செயல்கள் ஆசை மற்றும் சுயநலம் இன்றி உள்ளதோ, எவனது செயல்கள் ஞானம் என்ற அக்னியால் புடம் போடப்பட்டுளதோ - அவனையே சான்றோர்கள் பண்டிதன் என்பார்கள்.


20.
த்யக்த்வா கர்ம ப(फ)லா ஸங்கம் நித்ய த்ருப்தோ நிராச்ரய:  
கர்மண்ய பிப்ர வ்ருத்தோ(அ)பி நைவ கிஞ்சித் கரோதி ஸ:
கடமையின் பலன் மீது உள்ள பற்றை விட்டவன், எப்பொழுதும் திருப்தியுடன், எதன் மீதும் சார்ந்து இல்லாமல் இருப்பவன், செயலில் ஈடுபட்டிருந்தாலும் அவன் எதுவும் செய்யாதவனாகிறான்.

விசாரம்
ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதைப் போன்று இந்த செயல்/செயலின்மையைப் புரிந்து கொள்வது கொஞ்சம் குழப்பமானது தான்.
எவன் ஒருவன் பற்றில்லாமல் தன் காரியங்களைச் செய்கிறானோ (நிஷ்காம்ய கர்மா), எவன் அந்த செயல்களின் பலன்கள் மீது ஒரு பற்றில்லாமல் இருக்கிறானோ, அவனுடைய மனதில் தான் தான் அந்த செயல்களின் கர்த்தா என்ற எண்ணம் தொலைந்து விடுகிறது. இந்த 'தான்' தான் அவனுக்கு லௌகீக பற்றை ஏற்படுத்தி தடுமாற வைக்கிறது. இந்த எண்ணம் தொலைந்தால், எந்த ஒரு செயலுமே செயலற்றதாகி விடும். இது தான் 'செயலில் செயலின்மை' - Inaction in action.
எவன் ஒருவன் வெறுமனே உட்கார்ந்திருந்து, தான் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, தான் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டே இருப்பானோ அவன் நித்யமும் செயலற்ற (பலனற்ற) ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கிறான். இது தான் 'செயலின்மையான செயல்' - Action in Inaction.

இந்த வித்தியாசத்தை முதலில் புரிந்து கொண்டால், பகவான் சொன்னது இங்கே புரியும். ஆரம்பத்தில் நாம் எல்லோருமே இரண்டாவது ஆக சொன்னதைப் போன்றே தான் (Self) என்ற எண்ணத்தால் குழம்பி உள்ளோம். தான் என்ற சிந்தனை என்று தொலைகிறதோ அன்று தான் முதலில் சொன்ன நிலையை அடைய முடியும். நம்முடைய போஜனத்திலேயே இந்த 'தான்' concept இருக்கிறது. ஆரம்பத்தில் சாம்பாரும் அதில் உள்ள தானும் (காயும்) சாப்பிடுகிறோம். எப்படி தான் உள்ள சாம்பார் குழம்பி உள்ளதோ அப்படியே நாமும் உள்ளோம். அடுத்தது ரசம் - தான் (காய்) இல்லாமல் தெளிவாக உள்ளது. இதனால் தான்  சாப்பிடும் காயை 'தான்' என்கிறோமோ என்னவோ? :)

ஸ்ரீ கிருஷ்ணர் நிஷ்காம்யமாக கடமையைச் செய்வதற்கு தன்னையே உதாரணம் காட்டுகிறார். குணம் மற்றும் செய்யும் செயல்களை வைத்து நான்கு வர்ணங்களை பரம்பொருளாகிய அவர் படைத்துள்ளார். ஆனால் இந்த செயலை தான் தான் செய்தோம் என்ற எண்ணம் அவருக்கு இருப்பதில்லை. அதைப் போலவே இந்த செயல்களின் பலன்கள் மேலும் அவருக்கு விருப்பம் இல்லை.  அவரை நன்கு அறிந்தவர்களும், அவரைப் போன்றே இந்த தான் என்ற எண்ணத்தில் சிறைப்பட மாட்டார்கள். ஆதி காலத்தில் இதை அறிந்தவர்கள் இருந்தார்கள். நாளாவட்டத்தில் தர்மத்தில் குறைபாடு அடைய அடைய, இந்த எண்ணங்களும் குறைந்தது. இந்த ஞானத்தை எவர் அடைகிறார்களோ, அவர்களே யோகிகள், உத்தமர்கள்.
 (இந்த வர்ணங்கள் தற்காலத்திய ஜாதி முறை போல பிறப்பினால் வருவதல்ல. ஒருவனுடைய குணம் மற்றும் செயல்களே அதன் காரணி. மனித மனம் இந்த குணங்களைப் பொறுத்தே வேறுபடுகின்றன. இது ஒரு விதமான social division of labor.).

P .S.
இன்று கார்த்திகை மாச சுக்ல பக்ஷ ஏகாதசி - கீதா ஜெயந்தி. முன்பே குறிப்பிட்ட மாதிரி 
http://srinivasgopalan.blogspot.com/2011/06/bhagavath-gita-introduction.html
ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்ததை சஞ்சயன் மூலமாக உலகிற்கு தெரிந்த நாள். இன்று பகவத் கீதை பாராயணம் செய்தால் ஸ்ரேஷ்டம். இந்த நாள் குருவாயூர் ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

2 comments:

  1. //இதனால் thaan சாப்பிடும் காயை 'தான்' என்கிறோமோ என்னவோ? :)//

    அருமை.

    இன்று கைசிக ஏகாதசி. கைசிக புராணத்தை பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன்.

    ReplyDelete
  2. கைசிக புராணம் பத்தி எழுதறதுக்கு இன்னும் நிறைய படிக்கணும். இப்போதைக்கு இந்த சுட்டி
    http://anudinam.org/2011/12/06/today6th-of-december-2011-kaisika-ekadasi-and-geetha-jayanthi/

    பின்னர் பக்தி யோகத்தில் இதைப் பற்றி விளக்கி எழுதுகிறேன். Simply put , பக்திக்கு குலம் முக்கியம் இல்லை என்பது தான் இதன் தாத்பர்யம்.

    SG

    ReplyDelete