Thursday, December 29, 2011

Chapter 5 - Sannyaasa Yoga [1-10]

1.
அர்ஜுந உவாச
ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோகம் ச சம்ஸஸி
யச்ச்ரேய ஏதயோர் ஏகம் தந்மே ப்ரூஹி ஸுநிச்சிதம்
அர்ஜுனன் சொன்னது
கிருஷ்ணா! கர்ம சந்ந்யாசத்தைப் பற்றி புகழ்கிறாய். பின்னர் மீண்டும் கர்ம யோகத்தில் ஈடுபடுவது குறித்து சொல்கிறாய். இந்த இரண்டில் எது சிறந்தது என்று நீ உறுதிபட கூறுவாயாக.

2.
ஸ்ரீ பகவான் உவாச
ஸந்ந்யாஸ: கர்மயோகச்ச நி: ஸ்ரேய ஸகரா வுபௌ
தயோஸ்து கர்ம ஸந்ந்யாஸாத் கர்மயோகோ விசிஷ்யதே
ஸ்ரீ பகவான் சொன்னது
ஸந்ந்யாஸமும், கர்ம யோகமும் - இரண்டுமே உயர்வானதொரு ஆனந்தத்தை நோக்கி வழி நடத்தும். ஆனால் இவை இரண்டிலும் கர்ம யோகமானது கர்ம ஸந்ந்யாஸத்தை விட உயர்வானதாகும்.


3.
ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி
நிர் த்வந்த்வோ ஹி மஹாபஹோ ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே
எவன் ஒருவன் எந்த த்வேஷமும், பற்றும் கொள்வதில்லையோ, அவனே நித்ய ஸந்ந்யாஸி என அறியப்படுகிறான். பலம் வாய்ந்த அர்ஜுனா! நேர்மறையான ஜோடிகளில் இருந்து விடுபட்டவனான ஒருவன் எளிதில் பந்தத்தில் இருந்து விடுபடுகிறான்.

4.
ஸாங்க்ய யோகௌ ப்ருதக்பாலா: ப்ரவதந்தி ந பண்டிதா:
ஏகம் அப்யாஸ்தித: ஸம்யக் உபயோர் விந்ததே ப(फ)லம்  
ஞானமும், கர்ம யோகமும் (செயல்களைச் செய்வது) வேறு எனவும், அவற்றைத் தனியாகவும் குழந்தைகள் தான் பார்ப்பார்கள் - அறிவாளிகள் அல்ல. எவன் ஒருவன் திடமாக இவை இரண்டிலும் எதாவது ஒன்றில் நிலை கொண்டுள்ளானோ, அவன் இந்த இரண்டின் பலன்களையும் பெறுகிறான்.


5.
யத் ஸாங்க்யை: ப்ராப்யதே ஸ்தாநம் தத் யோகைர் அபி கம்யதே
ஏகம் ஸாங்க்யம் ச யோகம் ச ய: பச்யதி ஸ பச்யதி
ஸாங்க்ய யோகத்தைக் கடைப் பிடிப்பவர்கள் எந்த இடத்தைப் பெறுகிறார்களோ, அதே இடத்தை கர்ம யோகிகளும் பெறுகிறார்கள்.  எவன் ஒருவன் ஞானத்தையும், கர்ம யோகத்தையும் ஒன்றாகக் காண்கிறானோ, அவனே (பிரம்மத்தை) கண்டவன்.

6.
ஸந்ந்யாஸஸ்து மஹாபாஹோ து:கம் ஆப்தும் அயோகத:
யோக யுக்தோ முநிர் ப்ரஹ்ம ந சிரேணாதி கச்சதி 
மகா பலம் பொருந்திய அர்ஜுனா! யோகம் என்ற ஒன்று இல்லாமல் ஸந்ந்யாஸம் பெறுவது கடினம். யோகத்தைக் கைவரப் பெற்றவன் பிரம்மத்தை நோக்கி முன்னேறுகிறான்.


7.
யோகயுக்தோ விசுத்தாத்மா விஜிதாத்மா ஜிதேந்த்ரிய:
ஸர்வ பூதாத்ம பூதாத்மா குர்வந்நபி ந லிப்யதே
எவன் (கர்ம) யோகத்தில் பற்று கொண்டுள்ளானோ, எவன் மனம் பவித்ரமாக இருக்கிறதோ, எவன் தன்னை வெற்றி கொண்டுள்ளானோ, எவன் தனது இந்திரியங்களை அடக்கி தன்னுள் இருக்கும் ஆத்மாவே எல்லா உயிர்களிலும் உள்ள ஆத்மா என உணர்நதுள்ளானோ, அவன் செயல்களைச் செய்தாலும் அதனால் அவன் கறைபடாதவனாவான். (அச்செயல்கள் அவனைக் கட்டுப்படுத்தாது.)

8.
நைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்
பச்யஞ் ஸ்ருண்வந் ஸ்ப்ருசஞ் ஜிக்ரந் நச்நந் க(ग)ச்சந் ஸ்வபஞ் ச்வஸந்
உண்மையை உணர்ந்த ஒரு ஞானி இவ்வாறு எண்ணுவான் - 'நான் ஒன்றும் செய்வது இல்லை'. காண்பது, கேட்பது, தொடுவது, முகர்வது, உண்பது, செல்வது, உறங்குவது, சுவாசிப்பது,

9.
ப்ரலபந் விஸ்ருஜந் க்(ग)ருஹ்ணந் நுந்மிஷந் நிமிஷந்நபி
இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்
பேசுவது, விட்டுத் தொலைப்பது, கவர்வது, கண்ணைத் திறப்பது, மூடுவது என்று சகல விஷயங்களிலும் புலன்கள் இந்த்ரியங்களுள்ளே இயங்குகின்றன என்று அவன் அறிவான்.

10.
ப்ரஹ்மண்யாதாய கர்மாணி ஸங்கம் த்யக்த்வா கரோதி ய:
லிப்யதே ந ஸ பாபேந பத்ம பத்ரம் இவாம்பஸா   
தாமரை இலையில் எப்படி நீர் ஒட்டுவதில்லையோ, அதைப் போல எவன் ஒருவன் தனது கடமைகளைச் செய்து, அவற்றின் மீதான பற்றைத் தொலைத்து, கடமையைப் பிரம்மத்திற்கு அர்ப்பணிப்பனோ அவனைப் பாவம் தீண்டாது.        

விசாரம்
ஆதி சங்கரர் தனது சிஷ்யர்களுடன் காசியில், கங்கையில் ஸ்நானம் செய்து விட்டு கோவிலுக்குப் போகும் போது சிவ பெருமான் ஒரு சண்டாள ரூபத்தில் அவர் முன் தோன்றுவார். ஆச்சாரியார் அதை அறியாமல் அந்த சண்டாளனை வழியை விட்டு விலகுமாறு சொல்லும் போது சிவன் அவரிடம், எதை விலகச் சொல்கிறாய் - இந்த உடலையா இல்லை அதனுள் இருக்கும் ஆத்மாவையா? உடல் என்றால் அது அழியக் கூடிய ஒன்று, நிரந்தரம் இல்லாத ஒன்று; ஆத்மா என்றால் அது எல்லோருக்கு உள்ளும் இருப்பது, உனக்குள் இருக்கும் ஆத்மா தான் எனக்குள்ளும், எல்லோருக்குள்ளும் இருக்கிறது.' என்று கூறுவார். ஆதி சங்கரரும் இந்த உண்மையை உணர்ந்து 'மணீஷ பஞ்சகம்' என்ற 5 ஸ்லோகத்தைப் பாடுவார். ஆத்ம ஞானத்தை உணர்த்துவது இது. ஆதி சங்கரர் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் அவர் முன்னே சிவனே தோன்றி ஞானத்தை உணர வைத்தார். நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு இது சாத்தியம் இல்லையே. நமக்கு சாத்தியமான ஒன்று கீதையில் கூறப்பட்டுள்ளது.

அர்ஜுனனுக்கு கர்ம யோகம் சிறந்ததா இல்லை கர்ம சந்ந்யாச யோகம் சிறந்ததா என்ற சந்தேகம் வருகிறது. ஸ்ரீ கிருஷ்ணரிடம் அதற்கு பதில் பெறுகிறான். பகவான் சொல்வது என்னவென்றால் இரண்டுமே ஆத்ம ஞானம் என்ற ஒன்றை நோக்கித் தான் ஒருவனைச் செலுத்துகின்றன. கர்ம யோகம் சிறந்ததாக இருந்தாலும் இரண்டிற்கும் இடையே எந்த வித்யாசமும் இல்லை. கர்ம யோகி ஆக இருப்பது முதல் நிலை. முன்பே பார்த்தோம் - யாருமே எப்பொழுதுமே, எதுவுமே செய்யாமல் சும்மா இருக்க முடிவதில்லை. எப்பொழுது ஒரு செயலைச் செய்பவன் மனத் தூய்மை பெற்று, பற்றில்லாமல் தனது செயல்களைச் செய்கிறானோ, அப்பொழுது அவன் மனம் அந்த பிரம்மத்தில் நிலை கொள்கிறது. அவன் மனம் பிரம்மத்தைக் குறித்தே சிந்தித்து, செயல்களைச் செய்யும் போது அவன் செயல்களைச் செய்தாலும் எதுவுமே செய்யாதவனாகவே ஆகிறான் - 'inaction in action'. தன்னைச் சுற்றி நடக்கும் எல்லா செயல்களுக்கும் அவன் வெறுமனே ஒரு பார்வையாளன் ஆகிறான். தனது எல்லாச் செயல்களையும் ஈஸ்வரார்ப்பணம் செய்து, பலன்களை விலக்கி, நிர்மலமான மனதுடன் தன்னை அந்த பிரம்மத்திற்கே சமர்ப்பிக்கின்றான். தனது எல்லா ஆசைகள், பற்றுகள், தான் என்ற எண்ணம் இவற்றை எல்லாம் தொலைக்கும் போது கர்ம சந்நியாச யோகி என்ற நிலையை அவன் அடைகிறான் - பிறப்பற்ற நிலையைப் பெறுகிறான். இந்த கர்ம சந்நியாச நிலையில் அவனுக்கு தன்னுள்ளே இருக்கும் ஆத்மாவே எல்லா உயிர்களிலும் - அது பசுவோ, நாயோ, செடியோ எல்லாவற்றிலும் ஆத்மாவாக இருப்பதை உணர்கிறான். இது தான் Self Realization. நித்திய ஆனந்த நிலையில் இருக்கும் இவனுக்கு எந்த விதமான சுகமோ, துக்கமோ, ஆசையோ, வருத்தமோ கிடையாது.














No comments:

Post a Comment